அன்புடன் ஒரு நிமிடம் - 128
வந்ததும் வராததுமாக கேட்டார் ராகவ். "ஏம்மா கிஷோர் மீது உனக்கு ஏதாச்சும் மனத்தாங்கல்...?"
"ஏன் கேட்கறீங்க? அவர் ஏதாச்சும் சொன்னாரா? " யாழினியின் குரலில் யாதொரு ஆச்சரியமும் இல்லாததைக் கவனித்தார். டீ போட ஆரம்பித்தாள் அவருக்கு.
"ம்..என்னமோ அப்படியொரு எண்ணம் அவனுக்கு. நேரடியா விஷயத்துக்கு வர்றேன். போன மாசம் உனக்காக ஒரு வாஷிங் மெஷினும் கூடவே ஒரு டிரையரும் சர்ப்ரைஸா வாங்கிகொண்டு வந்து கொடுத்தானில்லையா? நீ என்ன பண்ணினே? வாஷிங் மெஷினை மட்டும் வைத்துக் கொண்டு மற்றதை உன்னோட அக்காவுக்குக் கொடுத்திட்டே, இப்ப வேண்டாம்னு. அதில அவனுக்கு வருத்தம். உனக்குக் கஷ்டம் குறையணுமேன்னு அல்லவா அவன் ஆசையோடு... ?”
”அது வந்து..”
”அதை விடு, அதுக்கு முன்னாடி ஒரு முறை உனக்கு ஒரு டிஷ் வாஷர் வாங்கிகொண்டு வந்தப்ப நீ என்ன பண்ணினே... அது இப்ப வேணாம்னு சொல்லி அவன் தங்கைக்கு ப்ரசண்ட் பண்ணிட்டே.”
”ஆமா, பண்ணினேன்...” டீயை எடுத்து மேஜையில் வைத்தாள்.
”இப்படி அவன் உன் வேலை சௌகரியத்துக்கு என்ன வாங்கிக் கொடுத்தாலும் நீ அதை முழுமையா பயன் படுத்திக்கலைன்னு அவனுக்கு ரொம்பவே கவலை. மனசில உனக்கு அவன் மேலான வருத்தம் ஏதும் இருக்குமோன்னு தோணறதில என்ன ஆச்சரியம்?”
‘டீயை முதல்ல சாப்பிடுங்க,” என்றவள் சிரித்தபடி விளக்கினாள். ”எனக்கு வேலை சிரமமே இருக்கக் கூடாதுன்னு அவர் பார்த்துப் பார்த்து வாங்கித் தர்றாருதான். ஆனா முழுக்க முழுக்க எனக்கு வேலையே இல்லாம போயிட்டா எப்படி...எனக்கும் ஏதாச்சும் உடற்பயிற்சி வேண்டாமா? இல்லேன்னா நான் சோம்பேறியாகி விடுவேன்... இந்த சின்ன வயசில், என்னால முடிகிற காலத்தில் நான் என்னால் முடிந்த அளவுக்கு வேலைகளை செய்து என்னைப் பழக்கிக் கொண்டால்தானே வயதான காலத்தில் நல்லது? உங்களுக்கே தெரியும், இப்பல்லாம் முன்னே மாதிரி கூட்டுக் குடும்பம் சான்ஸ் இல்லையே... நாளைக்கு நாமேதான் நம்மைப் பார்த்துக்கணும்கிற நிலை வந்தால் உதவுமில்லையா? அவர் வாங்கித்தந்த எல்லாத்தையும் பயன்படுத்தாம இப்படி சுருக்கிகொண்டது எனக்கு கைக்கு தேவையான அளவு வேலை கொடுக்குது. அதனால்தான்...”
அவளுடைய காரணத்தைக் கேட்டதும் அமைதியானார். ”நல்ல நோக்கம்தான். அப்ப அதை அவனிடமே சொல்லியிருக்கலாமே?”
”அவருக்கு என் கஷ்டம்தான் பிரதானம். இந்தக் கோணத்தில் அவரால பார்க்கமுடியாது. சம்மதிக்க மாட்டார். அதான் காரணம்லாம் சொல்லிட்டிருக்கலை. எப்படியும் உங்ககிட்டே சொல்லுவார், கேட்பீங்க, சொல்லலாம், நீங்க அவருக்கு பக்குவமா எடுத்து சொல்வீங்கன்னு...நீங்க சொன்னால் சரின்னு சொல்லிடுவார்னு இருந்தேன்.”
”அவன் கொடுத்த வேலையை செய்ய வந்தால் நீ அதே வேலையைத் திருப்பிக் கொடுத்திட்டியே...” சிரித்தபடி சொன்னார்.
><><
('அமுதம்' செப். 2015 இதழில் வெளியானது)
3 comments:
//அவருக்கு என் கஷ்டம்தான் பிரதானம். இந்தக் கோணத்தில் அவரால பார்க்கமுடியாது.//
உண்மை.
அருமையான காரணம்.
ஆஹா... அருமை.
கோமதி அரசு; கரந்தை ஜெயகுமார்; வெங்கட் நாகராஜ்: மகிழ்ச்சி, நன்றி
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!