509
நானும் என் கவிதைகளும்
இந்த இரவு முழுதும்
விழித்துக்கொண்டு.
510
அதரங்களின் அழகை
அதிகரிக்கும் கண்களா,
கண்களின் அழகை
அதிகரிக்கும் அதரங்களா?
511
கொண்டுவர முடியவில்லை,
நீ வார்க்கும் தோசையின்
விரியும் ஓசையை
என் கவிதையில்.
512
நாம் சந்தித்தபோதிருந்த
குளம் வற்றிவிட்டது..
மனம் இன்னும் நிரம்பியே.
513
உன் கண்ணின் ஒளியில்
என் முன்னே வழி.
514
குறுஞ்சிரிப்பே அதரங்களில்!
மீதியை கண்களே செய்துவிடுவதால்.
515
இன்னும் முடியவில்லை
சந்தித்த கணம்.
516
அழகான பூ எது
நதி எது, தெரியாது.
ஆனால் உலகிலேயே அழகான
புன்னகை உன்னுடையது.
517
நுணுக்கமாய் ஓர் மூளை அணு அசைய,
ஏதோ வயதில் மனதில் பதிந்த
எதுவோ ஓர் அழகுத் தடம்
இவள்தான் இவள்தான் என்று கூவ,
வேறு மறுத்த மனம்.
518
புன்னகையில் வளைந்து
மேலேறும் இதழ்க் கடையில்
உருவாகும் அதரப் படகு.
><><><
3 comments:
அழகு... ரசித்தேன்...
எதைச் சொல்ல எதை விட.... அனைத்துமே சிறப்பு.
திண்டுக்கல் தனபாலன்; வெங்கட் நாகராஜ்: நன்றி, மகிழ்வோடு.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!