Friday, August 29, 2014

அதுவும் இனிமை...



னிமையைப் போக்குகின்றன எண்ணங்கள்.
எண்ணங்கள் சூழ நான் 
அமர்ந்திருக்கும்போது
எந்த இடமும் தெரிவதில்லை தனிமையாக.
கவலைக் கிரணங்களை அவை 
கொண்டிருந்தாலும் அதன் 
திவலைகளை அள்ளித் தெளித்தபடியே என்
தனிமையை விசிறுகின்றன.
பெரும் தீயாக எழும் துக்கமும்
அடங்கிப் போகிறது ஒரு கட்டத்தில்.
என் எண்ணங்களுடன் நான்
பேசுகிறேன்.
எங்கிருந்தாவது எடுத்து ஓர்
இனிமைச் சாயம் அவற்றின் மேல்
பூச முயலுகிறேன்.
ஏதோ ஒரு பாட்டை அவை முணுமுணுக்க
எப்படியோ தெளிந்து போகிறேன்.

>0<


(படம்- நன்றி:கூகிள்)

Wednesday, August 27, 2014

காற்றின் திசைக்கு...

அன்புடன் ஒரு நிமிடம் - 63

அவர்கள் பேசிக் கொண்டிருந்த  விஷயம் அப்படியொன்றும் தலையைப் பிய்க்கிற பிரசினை இல்லை. என்றாலும் வாசு எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தது வந்திருந்த அவர் மைத்துனர் பாஸ்கருக்கு ஆச்சரியம்... தவிர எந்த தலைபோகிற சங்கதியானாலும் லேசில் பதற்றம் அடைகிறவர் அல்லவே அவர்?
ஆபீஸ் விஷயமாக அந்தப் பகுதிக்கு வந்திருந்த பாஸ்கர் அப்படியே அவரையும் பார்த்து சில வீட்டுப் பிரசினைகளை கேட்டுவிட்டுப் போகலாம் என்று நுழைந்தான்.
சற்றே கவனித்தபோது சுவரில் மாட்டியிருந்த மின் விசிறியின் சுழற்சிக் கேற்றபடி இடமும் வலமுமாக அவர் நடப்பது புரிந்தது.
காற்றுக்காகத்தான் அப்படி என்றால் ஏன் கஷ்டப்பட்டு அப்படி நடக்கணும்? அதை ஒரே திசையில் வீசச் செய்ய ஓர் ஸ்விட்ச் இருக்கும்போது? , அது வேலை செய்யவில்லை போலும்... இதைக்கூட சரி செய்யாமல் என்ன வீட்டைப் பராமரிக்கிறார் இவர்?
பேச்சு ஒரு முடிவுக்கு வந்ததும் சொன்னான். "எனக்கு இன்னும் அரை மணி போல அவகாசம் இருக்கு. இந்த ஸ்விட்ச்சை சரி பண்ணிடறேனே?"
"அது ரிப்பேர்னு யார் உனக்குச் சொன்னது?"
"ஐயோ அது சரியா வேலை செய்யாததால் தானே நீங்க இப்படி குறுக்கும் நெடுக்குமா...?"
"அப்படீன்னு நீயா  நினைத்துக் கொண்டாய், அவ்வளவுதான!"  என்றவர் அதை ஓரிடத்தில் வீசுமாறு நிறுத்தினார்.
"Oh,it works! அப்புறம் ஏன்  நாம இருக்கிற திசைக்கு அதை ஃபிக்ஸ் பண்ணாமல் ...?"
"அப்படி எதையுமே  நமக்காக மாற்றிப் பழகக் கூடாது என்பதால் தான்! எதனுடைய, யாருடைய பொசிஷனையும்! எப்பவுமே நாம நினைக்கிறபடி விஷயங்கள் நடப்பதற்காக மற்றவங்களை நாம நினைக்கிற நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம். அதில் நமக்கு வெற்றிக் களிப்பு ஏற்படற அளவுக்கு விரக்தியும் ஏமாற்றமும் சோர்வும் வர சான்ஸ் இருக்கு இல்லையா?  தேவையான இடங்களில் மற்றவர்களின் நிலைக்குத் தகுந்தாற்போல நம்மை அசைக்க கற்றுக் கொள்வது மிக மிக முக்கியம் மட்டுமல்ல, வெற்றி பெறும் சந்தர்ப்பங்களையும் அதிகரிக்க வைக்கும். ஆக அதை எனக்கு நானே நினைவூட்டிக் கொள்ளத்தான் இதைப்போன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஒரு பயிற்சியாக எடுத்துக் கொள்கிறேன்அது தக்க தருணத்தில் என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் நான் வளைந்து கொடுக்க உதவும்."
(’அமுதம்’  2014 ஜனவரி இதழில் வெளியானது)

(படம் - நன்றி: கூகிள்)
><><><><

Tuesday, August 19, 2014

அவள் -6


30.
எப்படிக் கொண்டாடுவது
உன் பிறந்த நாளை,
தினமும் அல்லவா
பிறந்து கொண்டிருக்கிறாய் நீ
என் மனதில்!

31.
உன்னிடம்
அறிந்து கொண்டேன்
சின்ன எழுத்து அழகுக்கும்
பெரிய எழுத்து அழகுக்குமான
வித்தியாசம்.

32
உன்
அழகுக்கில்லை
கடந்த காலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
என்று தனியே.

33.
பளிச்சிடுகிறது
உன் முகம்
அதில்
பிரதிபலிக்கிறது
என் மனம்.

34.
தள்ளிச் செல்லச் செல்ல
என் மிக அருகாமையில்
நீ.

35.
சற்றே திரும்பிப் பார்
தத்தித் தத்தி உன் பின்னால்
நடந்து வருகிறது
என் இதயம்.

36.
உன் எண்ணங்களும்
என் எண்ணங்களும்
கை கோர்த்தபடி
நம் முன்னால்!

><><><>< 
(படம்- நன்றி:கூகிள்)


Sunday, August 17, 2014

நல்லதாய் நாலு வார்த்தை... 35


நல்அறிவுரையை விட 
நல்லதோர் அச்சம்
நன் மதிப்பு வாய்ந்தது 
ஓர் மனிதனுக்கு.’
- E.W.Howe
(‘A good scare is worth more to a man 
than good advice.’)
<> 

பட்டங்கள் உயர எழுவது
காற்றை எதிர்த்து நின்று;
காற்றோடு சென்றல்ல.’
- Winston Churchill
(‘Kites rise highest against the wind, 
not with it.’)
<> 

அனுபவம் என்பது 
நமக்கு என்ன நடக்கிறது 
என்பதல்ல. 
நமக்கு நடப்பதை வைத்து
நாம் என்ன செய்கிறோம் 
என்பதே.’
- Aldous Huxley
(‘Experience is not what happens to you; it’s 
what you do with what happens to you.’)
<> 

விவேகமாய் அதை உபயோகிப்பவருக்கு,
விரிந்து கொடுக்கிறது நேரம்.’
- Leonardo da Vinci
(‘Time stays long enough for anyone 
who will use it.’)
<> 

வானத்தின் இடைவெட்டு ஒன்றை 
வாழ்க்கைக்கு மேலாக எப்போதும்
வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்!'
- Marcel Proust
('Always try to keep a patch of sky above your life.')
<> 

சின்ன வயதில் நாம் 
சிரமங்களின் மீது பாய்கிறோம்.
வயதான காலத்தில் 
சிரமங்கள் நம் மீது 
பாய்கின்றன.’
- Josh Billings
(‘In youth we run into difficulties. 
In old age difficulties run into us.)
<>

தடைகளே இல்லாத பாதையை 
கண்டுபிடிக்கக் கூடுமானால்
அனேகமாக அது நம்மை 
எங்கேயும் கொண்டுபோய்ச் சேர்க்காது.’
- Frank Clark
(‘If you can find a path with no obstacles, 
it probably doesn’t lead anywhere.’)


<<<>>> 

(படம்- நன்றி : கூகிள்)

Wednesday, August 13, 2014

முடிகிற இடத்தில்...

அன்புடன் ஒரு நிமிடம் - 62


"எனக்கு உங்களை ஒண்ணு கேட்கணுமே தாத்தா ?''வீடு வந்து சேர்ந்ததுமே விழி விரியக் கேட்டான் அபிஜித்.   சாத்வீகனும் அவனுமாக அவரது நண்பர்கள் இருவரின் வீடுகளுக்குப் போய் திரும்பியிருந்தனர்,
"தாராளமா."
"இப்ப நாம ரெண்டு இடத்துக்குப் போனோம் இல்லையா?"
"ஆமா, முதல்ல ராஜதுரை வீடு.   அப்புறம் பத்மநாபன். ரெண்டு பேருமே சின்ன வயசில  என்னோடு படிச்சவங்கநெருங்கின நண்பர்கள்."
"ஓஹோ? முதல் வீட்டில என்ன கேட்டீங்க?"
"அவன் பிசினஸ் பத்திஅதில் உள்ள கஷ்டம் எல்லாம் சொன்னான்சமீபத்தில் உண்டான நஷ்டம் பற்றி குறிப்பா சில விஷயங்களை சொல்லி விளக்கினான்எப்படி சரிப்படுத்தி கொண்டு போறதுன்னே தெரியலேன்னு வருத்தப்பட்டான்."
"நீங்க என்ன பண்ணினீங்க?"
"எனக்குத் தெரிந்த சில வழிகளை... பொதுவா வியாபாரத்தில் வரும் வரும் சிக்கல்களை சமாளிக்கத் தோதான வழிமுறைகளை எடுத்துச் சொன்னேன்"
"சரி. அப்புறம் அடுத்த நண்பர் வீட்டுக்கு போனோம். அவரிடம் என்ன கேட்டீங்க?"
"பத்மநாபனும் அதே லைன் தானே? எப்படி போயிட்டிருக்கு பிசினஸ்னுதான்."
"என்ன சொன்னார்?"
"சொல்லி வெச்ச மாதிரி அங்கேயும் அதே கதை! அவன் கஷ்டங்கள்கொஞ்ச நாள் முன்னாள் ஏற்பட்ட நஷ்டங்கள் எல்லாம் சொன்னான். எப்படி சமாளிக்கப் போறேன்னே தெரியலேன்னு ரொம்ப வருத்தப்பட்டு பேசினான்...."
"நீங்க என்ன பண்ணினீங்க?"
"எல்லாம் நல்லபடியா வரும்னேன். வேறே எதும் பேசலே,"
."ஏன்  தாத்தா  ஏன்?" அபிஜித் குரல் உயர்த்தினான், "முதலாமவருக்கு வழிமுறைகள் எல்லாம் சொல்லி அட்வைஸ் கொடுத்தவர்  அடுத்த நண்பரிடம் மட்டும் வாயை மூடிக்கொண்டது ஏன்?"
"சிம்பிள். ராஜதுரையிடம்  தனக்கு வேண்டியவர்கள் சொல்லும் நல்ல அறிவுரைகளை, ஐடியாக்களை அலசிப் பார்த்து தீர்மானித்து அதை செய்து பார்க்கும்  குணம் உண்டு.  அதனால் அவனுக்கு என் ஐடியாக்களை சொன்னேன். அவன் அதை விரும்பக் கூடியவன். பத்மநாபனோ வேறே மாதிரி. வேண்டியவரோ மற்றவரோ யார் எதை சொன்னாலும் பொருட்படுத்தாமல்  எந்த ஒரு விஷயத்தையும் ன்போக்கில் தீர்மானித்து செய்பவன். தன்னைவிட அறிந்தவர் யாருமில்லை என்றெண்ணும் ரகம்..   ஆகவே அங்கே என் ஐடியாக்களைக்  கொட்டி என்ன பிரயோஜனம்? அது மட்டுமல்ல, தனக்கு நேரம் சரியில்லாததால் ஒவ்வொருத்தராக வந்து அறிவுரை சொல்கிறார்கள் என்று எரிச்சல்தான் ஏற்படும் அவனுக்கு. அதான் அங்கே நான் வாய் திறக்கவில்லை.."
<<>> 
(’அமுதம்’ டிசம்பர் 2013 இதழில் வெளியானது)


(படம் - நன்றி : கூகிள்)