Wednesday, October 30, 2013

நல்லதா நாலு வார்த்தை - 21



'நம்மைத் தவிர யாரும்
தர இயலாது

நமக்குச்சிறந்த

அறிவுரை
.'

- Cicero
('Nobody can give you wiser advice than yourself')
<>
'அஞ்சும் விஷயங்களை விட
ஆசைப்படுவனவற்றிலேயே

ஆபத்து அதிகம்
.'

-John C. Collins
('There is often less danger in the things
we fear than in the things we desire.')
<>
'உன்னை விட்டுக் கொடுக்காதே
நீ மட்டுமே உனக்கிருப்பது
.'

- Janis Joplin
('Don't compromise yourself. You're all you've got.')
<>
 'மற்றவர் செய்ய இயலாததை
செய்வது திறமை
.
திறமையினால் செய்ய இயலாததை

செய்வது மேதைமை
.'

-Will Henry
("To do what others cannot do is talent.
To do what others cannot do is genius.')
<>
'விளக்கம் தந்து கொண்டிருக்காதீர்கள்.
விசுவாச நண்பர்களுக்கு அது தேவையில்லை

விரோதிகள் அதை நம்புவதில்லை
...'

- Elbert Hubbard
('Never explain. Your friends do not need it and
your enemies will not believe it anyway.')
<>
'இலக்கு அதேதான்: வாழ்க்கை;
விலையும் அதேதான்: வாழ்க்கை
''

- James Agee
('The goal is the same: life itself; and
the price is the same: life itself.)

<>
'முதலிலெழும் ஆசையை
மூழ்கடிப்பது எளிது, தொடர்ந்து

முளைக்கும் மற்றவற்றை

மகிழ்விப்பதை விட
!'

-La Rochefoucauld
('It is very much easier to extinguish a first
desire than to satisfy those which follow it.')
<<<>>>

(படம்- நன்றி: ராமலக்ஷ்மி ராஜன்.)

Sunday, October 27, 2013

பறவைகள் ஏன் அதிகாலையில் பாடுகின்றன?


ம்.. அவசரம் அவசரம்...
நான் பாடி முடிக்க வேண்டும்.
ஆம்.
மனிதர்கள் விழித்துக்கொண்டு விடுமுன்
நான் முடித்தாக வேண்டும்
இந்தக் காலைக் கச்சேரியை.
அவர்கள் விழித்துவிட்டால்
சந்தோஷமாய்ப் பாடும் என்னைக் கண்டு விட்டால்
உடனே என்னைத் தங்கள்
சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் அவர்களுக்கு.
ஆம்.
சந்தோஷமான எதையும் அவர்களுக்குச்
சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
சொந்தமாக்கிக் கொண்டுவிட்டபின்
எப்படி அதனிடம்
சந்தோஷம் இருக்க முடியும்
என்றறிய மாட்டார்.
 
( 02-04-1987 குமுதத்தில் வெளியான என் கவிதை )
<<<>>>

Thursday, October 24, 2013

அங்கே நடந்தது...

 
அன்புடன் ஒரு நிமிடம் - 48

ன்னங்க, அரசு எப்படி இருக்கான்? தாத்தாவிடம் போனதில் நல்ல முன்னேற்றம் வந்திருக்குமே? அசகாய சூரர் ஆயிற்றே குழந்தைகள் சைக்காலஜியில்?” ஆவலுடன் கேட்டாள் ஜனனி.
 
வாசுவின் எரிச்சல் அவர் கையிலிருந்த பையைத் தூக்கிப் போட்டதிலேயே தெரிந்தது.சுத்த வேஸ்ட்! நாளைக்கே அவனை அனுப்பி வைக்க சொல்லிட்டேன்!
 
ஜனனி முகத்தில் அதிர்ச்சி. என்ன ஆச்சு? இந்தப் பையன் சரியா படிக்க மாட்டேங்கறான், ரெண்டு மாசம் அப்பாவிடம் அனுப்பி வைத்தால்தான் உருப்படுவான்னு நீங்கதானே ஊரில் கொண்டு போய் விட்டீங்க? ஒரு வாரம் கூட ஆகலே. இப்ப நீங்க அங்கே போனதே அனாவசியம். பொறுப்பை நம்பிக்கையோட  ஒப்படைச்சா அலட்டாம இருக்கணும்.
 
சொல்லுவே! நல்லவேளை இப்பவே போய்ப் பார்த்தேன். அங்கே என்ன நடக்குது?”
 
அங்கே என்ன நடக்குது?”
 
நேத்திக்கு நடந்ததை சொல்றேன். விடிகாலையில அவனை அழைச்சுட்டு போய் ஓடையில மீன் பிடிக்க கத்துக் கொடுத்திட்டிருக்கார்.  ரெண்டு மணி நேரம்! என்னென்ன மீன் எப்படி எப்படி இருக்கும், என்ன வித்தியாசம் எட்ஸெட்ரா எட்ஸெட்ரா! அதான் பாடம் நடக்குது! சாயங்காலம் என்னடான்னா  ரெண்டு பேருமா பக்கத்து பலசரக்குக் கடைக்குப் போய் அங்கேயிருந்த நியூஸ்பேப்பரில கவர் செய்து கொடுத்துட்டிருக்கிறாங்க. இந்த ரெண்டு அசடுகளையும் நல்ல உபயோகிச்சிட்டிருக்கான் அவன்!
அப்புறம் நைட்ல பார்த்தால் தாத்தாவும் பேரனும் சைக்கிளை எடுத்திட்டு பக்கத்து கிராமத்தில் நடக்கிற தோல் பாவை நிழற்கூத்துக்கு கிளம்பிட்டாங்க!
 
எல்லாத்தையும் பார்த்துட்டு எப்படித்தான் உங்களால சும்மாயிருக்க முடிஞ்சதோ?”
 
பல்லைக் கடிச்சிட்டுத்தான்! நாளைக்கே அவனை அனுப்பி வைக்க சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
 
இப்ப திருப்தியாச்சா?”
 
ரொம்பவே!
 
அவரிடம் உங்க கிலேசங்களை எல்லாம் பத்தி சொல்லி விளக்கம் கேட்கலே?”
 
விவரமில்லாம செய்யறார், அவருக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான், அதானே விளக்கம்?”
 
கேட்டிருந்தா சரியான பதில் சொல்லியிருப்பார்.
 
ஏன் அப்படி சொல்றே?”
 
 “ஏன்னா இப்பதான் போனில என்கிட்ட சொன்னார்.
 
என்ன சொன்னார்?”
 
 “ஒரு பையன் வாழ்வில் அறிவு பூர்வமா முன்னேறணுமானால் அவனிடம் இன்ஸ்டில் செய்ய வேண்டிய அடிப்படை விஷயங்கள் மூணே மூணுதான்! அதைத்தான் நாம் ஏற்படுத்தறதில்லே. அதை ஏற்படுத்தத்தான் அவர் சிரமம் எடுத்துக்கறார்.
 
ஓஹோ?”
முதலாவது ஆர்வம். Curiosity.  அது இருந்தால் எதையும் சிறப்பா கத்துக்க வைக்கும். மீன் பிடிக்க அழைச்சுட்டுப் போனது அதுக்கு ஒரு உதாரணம். ஒரு மீனைச்சுத்தி எத்தனை ருசிகரமான விஷயங்கள் இருக்கு பார்னு அவனுக்குக் காட்ட! அதே போல சில விஷயங்களைப் பார்க்கவெச்சு அவனுக்குள்ளே ஒரு ஆர்வ விதையை ஊன்றத்தான் அது அவசியமாகிறது. ரெண்டாவது  அதிசயிக்கிற இயல்பு. A sense of Wonder! அதுக்காகத் தான் அத்தனை தொலைவு அழைச்சுட்டுப் போனார். அந்தத் தோல் பாவை நிழற்கூத்து! மின்சாரமோ கம்ப்யூட்டரோ இல்லாமல் அந்தக் காலத்திலேயே மனிதர்கள் நிகழ்த்தியிருந்த ஓர் கலையின் அபூர்வ வெளிப்பாடுகள் அவன் மனதில் ஓர் அதிசயிக்கிற உணர்வை ஏற்படுத்தலாம். ஏற்படுத்தும். இதுபோல அதிசயிக்க வைக்கிற ஏராளம் விஷயங்களை அவன் ஆர்வமுடன் கற்றுக் கொள்ளத் தூண்டவே இது.  இனி மூணாவதாவும்  முக்கியமாவும் கடமை உணர்வு. தான் படித்து முன்னேறுவதும் மற்றவர்களுக்கும் உலகத்துக்கும் உபயோகமா காரியங்களை சாதிக்க வேண்டுவதும் தன் கடமை என்று அவன் உணரவே அந்த உதவி! பிளாஸ்டிக்கைத் தவிர்த்து சுற்று சூழலைத் தூய்மைப் படுத்தவும், அதே சமயம் சகமனிதருக்கு உதவவும் எண்ணங்கள் மனதில் உருவாகவே அவனை அழைத்துக்கொண்டுபோய் அந்த கடைக்காரனுக்கு பேப்பர் பைகள் செய்து கொடுத்தாங்க. இந்த மூன்று குணங்களும் கொண்டு அவன் மனசில் ஒரு அடித்தளம் அமைத்து விட்டால் போதும்! மற்றதெல்லாம் அவன் தானே உருவாக்கிக் கொண்டு விடுவான். ஆக, அவன் உருப்படணும்னுதானே அங்கே அனுப்பினீங்க. உருப்படியான விஷயங்களைத்தான் அவர் செய்து கொடுக்கிறார். நீங்கதான் அதை புரிஞ்சிக்காம...
 
வாசு போனை எடுத்தார்,
பேரனை அனுப்ப வேண்டாம் என்று தாத்தாவைக் கேட்டுக்கொள்ள.     
 
('அமுதம்' ஜூலை 2013 இதழில் வெளியானது)
<<<>>>
(படம்: நன்றி: கூகிள் )
 
 

Monday, October 21, 2013

நல்லதாக நாலு வார்த்தை... 20

'அழுவதற்கு வாழ்க்கை
 நூறு காரணம் வழங்கினால்
வாழ்க்கைக்குக் காட்டுங்கள்,
புன்னகைக்க உங்களிடம்
ஆயிரம் காரணம் உண்டென்று.'
- Anonymous
('When life gives you a hundred reasons to cry

show life that you have a thousand reasons to smile.')
<> 

'சுடர்விடும் பொறுமையே
நம்பிக்கை.'

-Tertullian
('Hope is patience with the lamp lit.')
<> 


'சிறப்பான சாதனைகள்
சிறுசிறு செயல்களால்
செய்யப்பட்டவை.'

- Lao Tzu
('Great acts are made up of small deeds.')
 <>

'மதிப்பற்ற தினம்
என்றேதுமில்லை
எவர் வாழ்விலும்!'
- Alexander Woollcott
('There is no such thing in anyone's
life as an unimportant day.')
<> 

'எடுத்துக் கொண்டு விட்டதற்கு
இணையாகவேனும்
கொடுத்துவிடல் வேண்டும்
இவ்வுலகுக்கு
ஒவ்வொரு மனிதரும்.'
- Albert Einstein
('It is every man's obligation to put back into the
world at least the equivalent of what he takes out of it.')
<> 

'கவலை, நாளையின் துன்பத்தைக்
கவர்வதில்லை ஒருபோதும்;
இந்நாளின் பலத்தையே
இழக்கச் செய்கிறதது!'
- A.J.Cronin
('Worry never robs tomorrow of its sorrow;
it only saps today of its strength.')
<><><>

Thursday, October 17, 2013

காரணம் வேறு...

 
அன்புடன் ஒரு நிமிடம் - 47

 
நீங்க என்ன சொன்னாலும் சரி, இந்த விஷயத்தில் ரகு செய்ததை நான் சரின்னு சொல்லப் போறதில்லே!” கிஷோர் முகத்தில் ஆத்திர ரேகைகள்.
 
நீ இன்னும் விஷயத்தையே சொல்லலியே?” என்றார் ராகவ்.
 
சொன்னான். பின்னே என்ன மாமா, எப்பன்னாலும் நான்தான் அவனுக்கு போன் பண்ண வேண்டியிருக்கு, அல்லது நேரில போய் சொல்ல வேண்டியிருக்கு. அவன் அடிக்கடி செல்லும் ரயில் டைம் மாறினதிலேர்ந்து அவங்கப்பாவோட ஆஸ்த்மா வியாதிக்கு புதுசா வந்திருக்கிற இயற்கை சிகிச்சை மாதிரி பெரிய விஷயம் வரை! ஆனா எனக்கு அவன்கிட்டேயிருந்து சாதாரணமா ரெண்டு வார்த்தை பேசக்கூட ஒரு கால் வராது. எப்பவுமே இப்படித்தான். இதை எப்படி நான் ஏத்துக்கறது?  வெளியில நாங்க ரெண்டு பேரும் நல்ல அன்னியோன்னியமான நண்பர்கள்னு பேரு....
 
கொஞ்ச நேரம் இவரிடம் அமைதி. பார்த்தீங்களா? உங்களுக்கே என்ன சொல்றதுன்னு தெரியலே!
 
அதெல்லாம் இல்லே, ஒரு சின்ன சந்தேகம். கேக்கலாமாண்ணுதான்... என்றார், நீ ஓரொரு முறை போன் செய்து அவனுக்கு உதவியான, தேவையான விஷயங்களை சொல்லுகிறே... நல்ல விஷயம்.! சரி, பொதுவா அவனுக்கு எப்பல்லாம் போன் செய்யறே?”
 
ஒவ்வொரு தடவை இப்படி ஏதாச்சும் விஷயம் படித்தாலோ கேள்விப்பட்டாலோ, உடனே!
 
மற்றபடி வாரத்துக்கு ரெண்டு நாள் அப்படி இப்படின்னு ரெகுலரா பேசறதில்லையா?’
 
முதல்லே அதுக்கு டைம் இல்லே. அதான் எந்த விஷயம் அவனுக்கு தேவைப்படும்னு தோணினாலும் நானே...
 
நான் கேட்டது வேறே! சாதாரணமா அவனைக் கூப்பிட்டு நீ பேசறது பத்தி.
 
மாமா, உங்களுக்கே தெரியும் நான் எத்தனை பிசின்னு... ஆனா நான் ஒவ்வொரு தடவை போன் செய்யும்போதும் என்கிட்டேர்ந்து அவனுக்கொரு உருப்படியான தகவல் போய்க்கொண்டுதான் இருக்கு தெரியுமா?”
 
அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். நீ சாதாரணமா அவனைக் கூப்பிட்டு பேசிக் கொண்டிருக்கிறதில்லை. அப்புறம் அவனிடமிருந்து மட்டும் அப்படி ஒன்றை எதிர்பார்க்கிறது என்ன நியாயம்?”
 
அவனுக்கு புரியவில்லை அந்தக் கேள்வி.
 
...நீ ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு விஷயத்தை அவனுக்கு சொல்றதுக்காக மட்டுமே அவனுக்கு போன் செய்கிறே. ஆக, அந்த விஷயத்தில் நீ முதலில் திருப்தி அடைவது அதை சொல்லுவதிலிருந்துதான்! தட் மீன்ஸ் அப்படி சொல்லுவதில் உள்ள அந்த உன் ஆர்வம், பெருமை, அதனால் உன் மேல் உனக்கு சுய மதிப்பு அதிகரித்தல்! அதெல்லாம் காரணமாக இருக்கலாம் இல்லையா? அதற்குமேல் அவன் உன்னிடம் அடிக்கடி பேசணும்னு ஏன் எதிர்பார்த்திட்டு?...
 
சரி, அதே காரணத்துக்காக அவனும் எனக்கு போன் பண்ணலாமில்லையா?
 
அந்த பெருமையிலோ, சுயமதிப்பை அளவிடறதிலோ அவனுக்கு ஆர்வம் இல்லாமலிருக்கலாம் இல்லையா?”
 
பொட்டிலடிச்சாப்பில சொல்லிப்பிட்டீங்க...  
 
 “…மற்றபடி உன்னைப்போல அவனும் பிஸியாக இருக்கிறதால போன் பண்ணத் தோன்றியிருக்காது அவ்வளவுதான்!
 
பொருத்தமான  பதில் கிடைத்த திருப்தியில் அவன் எழுந்தாலும்... ஒரு சின்ன ஏமாற்ற ரேகை முகத்தில் ஓடிற்று.
 
இரு,” என்றார், இதையும் கேட்டுப் போ! உன் ஏமாற்றம் எனக்குப் புரியுது. இப்படி அடிக்கடி நீ உதவிகரமா பேசணும், மறந்து விட்டுவிடக் கூடாது அப்படீங்கிறதுக்காகவாவது உனக்கு அவன் இடையிடையே போன் செய்யலாம்தான். ஆனா ஒரு விஷயம் கவனிச்சியா? உன்மேல அவனுக்கு அப்படி ஒரு நம்பிக்கை! தான் பேசிக்கொண்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்கு முக்கியமானது எதுவானாலும் மறக்காம சொல்லிடுவே நீ அப்படீன்னு! அந்த நம்பிக்கை! அது உனக்கு இன்னும் பெருமையான விஷயம் இல்லையா?”
 
அந்த ரேகையும் கழன்று கொண்டது.  
 
('அமுதம்' ஜூன் 2013 இதழில் வெளியானது)
<<<>>> 
(படம் - நன்றி: கூகிள் )
 

Tuesday, October 15, 2013

அன்றும் இன்றும்...


'அப்பா, அந்திச் சூரியன்
அப்புறம் எங்கே போகுது?'
'ரேடியோவின் உள்ளிருந்து
பாட்டு எப்படி வருது?'
'கமலாவின் அப்பா மட்டும் ஏன்
காலில செருப்பு இல்லாமல் போறாரு?'
மழலைச் சிறுவனாய்
அன்று அவன் கேட்ட போது
'போய்த் தூங்குடா.'
'ஸ்கூலுக்கு டயமாச்சு, புறப்படு.'
'போய் புஸ்தகம் எடுத்துப் படி.'
என்றேன் அப்பா.
இன்று
கம்ப்யூட்டரின் முன்னால்
கவிழ்ந்திருக்கும் மகனிடம்
'டபிள் கிளிக் எப்படி பண்றது?'
'ஈ மெயில் ஐ.டி. எங்கே கிடைக்கும்?'
'ஸீ டிரைவ்னா என்ன?'
என்று கேட்கும்போது
'போங்கப்பா நான் பிஸி.'
'உங்களுக்கு லேசில் புரியாது.'
'தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க?'
விரட்டத்தான் செய்வான், இயற்கை.
விசனப்பட என்ன இருக்கிறது?
<>
(21-12-2006  'குமுதம்' இதழில் வெளியான என் கவிதை.)
<<<>>>
 
(படம் - நன்றி: கூகிள்)
 

Friday, October 11, 2013

நல்லதா நாலு வார்த்தை... 19


 
'விழ்க்க முடிவதை
அறுக்காதீர் .'

-Joseph Joubert 

('Never cut what you can untie.')
 
<> 

'எப்பவேனும்தான் நமைப் பற்றி
எண்ணுகிறார் மற்றவர்
என்பதறிந்தால்,
என்ன எண்ணுவர் 
என்றெவரும் கவலை கொளார்.'

- Eleanor Roosevelt
('You wouldn't worry so much about what others
think of you if you realized how seldom they do.')

<> 

'ஆடம்பரம் என்பது... 
அடுத்தவர் வாங்குவது.'
 
- David White
('Luxuries are what other people buy.')

<> 
'விரும்பும் அத்தனை
விஷயங்களும் கிடைக்காவிடின்  
விரும்பாத எத்தனை
விஷயங்கள் கிடைக்காமல் உள்ளதென 
எண்ணிப் பாருங்கள்'

- Oscar Wilde
('If you don't get everything you want, think of
the things you don't get that you don't want.')
 <>

 'செல்லத் தகுந்த 
எந்த இடத்துக்கும் 
இல்லையொரு 
குறுக்கு வழி.'

-HelenKeller 
('There are no shortcuts to any place worth going.')
 <>

'எவரையும் நம்பிக்கை 
இழக்க செய்துவிடாதீர்,  
அவரிடம் இருப்பதெல்லாம்
அஃ தொன்றாகவே இருக்கலாம்.' 

- Anonymous 
('Never deprive someone of hope;
it may be all they have.')
 
<> 

'மனிதர்
ஆக முடியாத நிலைக்கான ஆறுதலை
ற்பனையும்,
அவர்கள்
ஆகியிருக்கிற நிலைக்கான ஆறுதலை
நகைச்சுவையும் 
அளிக்கின்றன.'

-Albert Camus
('Imagination consoles people for what they cannot be,
and humour for what they actually are.')
<> 

'அல்லல்களே
அறிமுகப் படுத்துகின்றன
நம்மை நமக்கு.' 

- Anonymous 
('Adversity introduces a man to himself.') 

<<<<>>>> 
(படம்- நன்றி; கூகிள்)

Monday, October 7, 2013

நேராத நேர விரயங்கள்....


 
அன்புடன் ஒரு நிமிடம் - 46 
 
வீட்டுக்குள் நுழையும்போதே கௌதம் கடுகடு முகத்தில் இருந்தார்.
 
போன விஷயம் எல்லாம் நல்லபடியா நடந்திச்சா?”
 
ஓ முடிச்சிட்டேன் ஒரு வழியா.
 
அப்படியே கையலம்பிட்டு வா, சாப்பிடலாம்,” என்ற சாத்வீகனிடம், பசிக்கலேப்பா, கொஞ்ச நேரம் போகட்டுமே.” டி.வியில் உட்கார்ந்தார். ஏதோ ஒரு பழைய படம் ஓடிக்கொண்டிருக்க, கொஞ்சம் பார்க்கலாம் இதை!
 
சாப்பிடும்போது தான் கடுகடுவின் காரணம் சொன்னார். வள்ளிசா ஒண்ணரை மணி நேரம் வேஸ்ட் இன்னிக்கு!
 
அடடே என்னாச்சு, எங்கே போச்சு அந்த தொண்ணூறு மணித்துளிகள்?”
 
நம்ம பாலு இருக்கானே?”
 
உன்னோட பால்ய நண்பன்?”
 
அவன்தான். வழியில திடீர்னு பார்த்தேன். அட்மிஷனாம். மகனுக்கு. நீயும் வந்தா உதவியா இருக்கும்னு இழுத்துட்டு போயிட்டான். போய்ப் பேசிட்டு வந்ததில...
 
நேரம் காலியாயிட்டுது போல. த்சொ! த்சொ! என்று வருத்தம் காட்டினார், ஆருக்கும் தெரியறதில்லை நேரத்தோட அருமை.
 
அதான்!
 
இதை விளக்க உன்னை சில கேள்வி கேக்கறேன்.
 
கௌதம் உற்சாகமானார். அப்பா எதையும் அவர் பாணியில் அசத்தலாக சொல்வார்.
 
உன் சட்டையில இருக்கிற அஞ்சு பட்டனைப் போட எத்தனை நேரம் ஆகும்?”
 
என்ன ஒரு அரை நிமிஷம்...
 
உன் ஷூவைப் போட?”
 
ரெண்டு நிமிஷம்...
 
சுருக்கமா, வெளியே புறப்படறதானால்...?”
 
ஒரு இருபது நிமிஷம்போல ஆயிடும்.
 
டிராஃபிக்கில் சில சமயம் சிக்னலுக்காக நிக்கிறப்ப?’
 
அது ஆகும்... ஒரு சிக்னலுக்கு முப்பது செகண்டுன்னு பார்த்தால்கூட ஒரு நாளில் அரை மணி அதில் மட்டும்...
 
காண்டீனில் காபிக்காக காத்திருப்பதில்...?”
 
டோக்கன், காபி என்று தடவைக்கு கால் மணி.
 
இப்படி இந்த நேரம் எல்லாம் வேஸ்ட் ஆவதைத் தடுக்க வழியில்லையா?”
 
கௌதம் சிரிப்பை அடக்கிக்கொண்டார். எப்படிப்பா முடியும்? இதெல்லாம் தவிர்க்க முடியாத கால விரயங்கள்.
 
அப்படீன்னா அதெல்லாம் நினைச்சு வருத்தப் படறதில...
 
அர்த்தமில்லைன்னு உங்களுக்கே தெரியாதா?”
 
தெரியும். நல்லாவே தெரியும். இப்படி அனிச்சை செயல்களிலிருந்து ஆங்காங்கே அற்ப காரணங்களுக்காக நேருவது வரையில் அஞ்சும் பத்துமாக தினம் வேஸ்ட் ஆகிற அறுபது எழுபது நிமிஷங்களுக்காக நாம அலட்டறதில அர்த்தம் இல்லேன்னு நமக்கு நல்லாவே தெரியும்தானே?”
 
அப்புறம் எதுக்கு அந்த விவரம் எல்லாம் கணக்குப் போட்டுக்கொண்டு?”
 
இன்னும் உன்னை ஒரு கேள்வி கேட்கத்தான்!
 
?”
 
இப்படி தினம் ஒண்ணு,ரெண்டு மணி நேரம் கண்டபடி செலவாகிறதிலேயே நாம வருத்தப்படாதபோது ஒரு பையனின் படிப்புக்கு உதவி செய்யற விஷயத்துக்கு முக்கால் மணி நேரத்தை செலவிட்டதை வீண் என்று சொல்லலாமா?”
 
யோசித்த கௌதம் சொன்னார், இதை விளக்க நீங்க எடுத்துக்கொண்ட நேரம் வீணில்லை அப்பா!
 
('அமுதம்' ஜூன் 2013 இதழில் வெளியானது.)
<<<>>>
படம் - நன்றி: கூகிள் )