Saturday, December 14, 2013

மெல்ல ஒரு கோபம்...


அன்புடன் ஒரு நிமிடம் - 51 

சாயங்காலம் கடைக்குப் போன இடத்தில் இப்படி ஒரு வம்பு வெடிக்கும் என்று அபிஜித்  எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் அதைவிட அதிர்ச்சி அளித்தது அப்போது தாத்தா நடந்து கொண்ட விதம். அந்த வேளையில்போய் அவர் இப்படி...

அடுத்த நாள் ஃபங்க்ஷனுக்காக தைக்கக் கொடுத்திருந்த ஆடைகளை வாங்கக் கிளம்பிய அவர் அவனையும் அழைத்துப் போனார். இன்றைக்கு ஐந்து மணிக்கு டெலிவரி தருவதாக  சொல்லியிருந்த இடத்தில் இன்னும் வேலை முற்றுப் பெறவில்லைஎன்றால் எப்படி இருக்கும்? 

லேசாய் ஆரம்பித்த பேச்சு விவாதமாகி டெம்பரேச்சர் எகிறிவிட்டது. 

"முக்கியமான விசேஷம்னு படிச்சுப் படிச்சு சொல்லி தேதி டயம் எல்லாம் உறுதி பண்ணிட்டுப் போனேனே, அதுக்கு என்ன அர்த்தம்? பொறுப்பு கொஞ்சம் கூட இல்லாம இப்படி..."
தாத்தா சூடாகத்தான் கேட்டார் 

கடைக்காரரும், "அப்பவே நான் நாள் பத்தாது, ஆனா எப்படியாவது முடிச்சுத் தர்றேன்னு சொல்லித்தானே டேட் போட்டுக் கொடுத்தேன்? என்னை மீறி தாமதமானா என்ன பண்ண முடியும்?" என்று  குரலை உயர்த்திக் கேட்டார்.

"எப்படியாவது தர்றேன்னா தரணும் இல்லையா? இல்லேன்னா எப்படி எங்க உபயோகத்துக்குக் கிடைக்கும்? இப்படி பொறுப்பில்லாம நடந்துகொண்டா...?"

கடைக்காரர் அதற்கு சூடாக வார்த்தைகளை உதிர்க்க...  

அப்போதுதான் தாத்தா அந்த சூழ் நிலைக்கு சம்பந்தமில்லாத ஒரு காரியத்தை செய்தார். கோபமாக ஜேபியில் கையை விட்ட மாதிரி இருந்தது.  வெளிவந்ததோ ஒரு சாக்லட்.  பிரித்து அதை வாயில் போட்டுக் கொண்டார்.  இவனிடமும் ஒன்றை நீட்ட, அபிஜித் வாங்கிக் கொள்ளவில்லை 

வார்த்தைகள் வேகத்துடன் எழுந்து மோதிக் கொண்டிருக்க  இவர் சாக்லேட்டை வாயில் மென்றபடியே பேசினதைப் பார்த்து அபிஜித்துக்கு தாங்கவில்லை. 

நல்ல வேளை அவன் பயந்த மாதிரி பேச்சு முற்றி தகராறு பெரிதாகி விடவில்லை. இன்னும் ரெண்டு மணி நேரம் தருவதானால் தயார் பண்ணித் தர முடியுமென்று சொல்ல, இவர்கள் பக்கத்தில் கொஞ்சம் வேலைகளை முடித்துவிட்டு வாங்கி வரலாமென்று கிளம்பினர்.

அப்பால் வந்ததுமே அவரை நிறுத்தி அந்தக் கேள்வியைக் கேட்டான். "என்ன தாத்தா சாக்கலேட் சாப்பிட வேறே வேளை இல்லையா? உக்கிரமா ஒரு தகராறு நடக்கிறப்ப இப்படியா  பண்றது?"

"அதுவா? அந்த மாதிரி வேளைகளிலேதான் இப்படி பண்ணணும். My action was quite deliberate..."
விழித்தான்.

"இந்த மாதிரி சமயத்தில நாம கோபம்கிற  பூதத்தின் பிடியில் சிக்கிடக் கூடாதுங்கறதுதான் ஆக முக்கியம்.  எதிர்த்துப் பேசி நம்மோட நியாயத்தை நிலை நிறுத்த வேண்டியதுதான், ஆனால் அதில் கோபம் நம் கண்ணை மறைச்சு வேறேதிலேயோ கொண்டு விட்டிடக் கூடாது நம்மை. அதான் இந்த சாக்லேட். அத்தனை கொந்தளிப்பான மன நிலையிலும் அந்த சாக்லேட்டின் சுவையை நாம உணர முடியுதுங்கிறதை  கவனிக்கிறப்ப, நாம் நிலை தவற மாட்டோம். இந்த சண்டை சச்சரவு நம்ம வாழ்க்கையின் எதோ ஒரு சிறு பகுதிதான்னும் நம்மோட எந்த மற்ற சந்தோஷத்தையும் இது தொட்டுப் பார்க்கவோ கட்டுப்படுத்தவோ போறதில்லைன்னும் நமக்கு ஞாபகப் படுத்திக்கறோம்." 

இதன் பின்னால் இத்தனை ஆழமான காரணமா? அதிசயித்து அவன் நிற்க சாத்வீகன் சொன்னார், "இன்னொரு பக்கம் வேறொரு நன்மையையும் இதில் விளையும்...."

"என்ன அது?"

"இப்படி செய்யறப்ப அனேகமா மற்றவர் கொஞ்சம் இறங்கி வந்துதான் ஆகணும்!"

"அதெப்படி நிச்சயமா சொல்றீங்க?"

"புரியலே உனக்கு?  அவங்க யோசிப்பாங்க இல்லையா? சாக்கலேட் சாப்பிட்டுட்டு நிற்கிறவனை எப்படி எரிச்சலூட்ட முடியும்?"

"அதுவும் சரிதான்!"

(அமுதம் செப்டம்பர் 2013 இதழில் வெளியானது)

<<<>>>
(படம்-  நன்றி: கூகிள்) 

Wednesday, December 4, 2013

புதுச் சட்டை

 


''டேய் பாலு, என்னடா பண்றே அங்கே? ஒரு பேபி சட்டைக்கு காஜா போட இவ்வளவு நேரமா?'' கத்திய டெய்லர் ஷண்முகம், ''சே! புதுசா வர்ற பசங்களை வேலைக்கு சேர்த்துக்கிட்டா இப்படித்தான்!'' என்று எரிச்சல் பட்டார்.

''நான் அன்னிக்கே சொன்னேனே இவன் சரியில்லேன்னு... அவனுக்கு தோணற மாதிரி வேலை செய்யறான். நேத்து நாலு சட்டைக்கு அரை மணி நேரத்தில பட்டன் தைச்சு, காஜா போட்டுட்டான். இன்னிக்கு ஒரு சின்ன சட்டையை வெச்சு இழு இழுன்னு இழுத்துட்டு இருக்கான். ஊஹூம், இவன் தேற மாட்டான்.'' என்று அலுத்துக் கொண்டான் சண்முகத்தின் உதவியாளன் கிருஷ்ணன்.


''சரி, சரி! அதை நீ வாங்கி முடிச்சுடு. பாலு, கொடுடா அதை கிருஷ்ணன் கிட்டே.'' என்று இரைந்தார் சண்முகம்.


''வேணாங்க முதலாளி, இதோ முடிச்சிடறேன்,'' என்று இறைஞ்சிய பாலு, கொஞ்ச நேரத்தில் ஒரு வழியாக வேலையை முடித்துக் கொடுக்க, காத்திருந்த வாடிக்கையாளர் வாங்கிகொண்டு விரைந்தார்.


அவர் போனதும் சண்முகம் இவனிடம், ''ஏண்டா இந்த சின்ன வேலைக்கே இத்தனை நேரம் எடுத்துக்கிட்டா நாளைக்கு நீயெல்லாம் எப்படிடா பெரிய டெய்லரா வரப்போறே?'' என்று அதட்டினார்.


''அது வந்துங்க... இதைச் சின்ன வேலையா நான் நினைக்கலீங்க. ஆறு மாச குழந்தைக்கான சட்டை இது. குழந்தை சட்டையை எப்பவும் வாயிலேதான் கொண்டு போகும். இல்லீங்களா? அப்ப பட்டன் கழன்று அதன் வாய்க்குள்ளே போயிடக்கூடாது இல்லையா? அதான் பட்டனை நல்ல அழுத்தித் தைச்சு காஜாவையும் ஸ்ட்ராங்காப் போட்டேன். அதான் கொஞ்சம் கூடுதலா நேரமாயிட்டுது. மன்னிச்சுக்குங்க'' என்றான் பாலு.


சண்முகத்தின் முகம் சட்டென்று கனிந்தது. அவன் முதுகில் அன்புடன் தட்டிக் கொடுத்து சொன்னார். ''நிச்சயம் ரொம்பப் பெரிய ஆளா வருவேடா.''

(ஆனந்த விகடன் 2005 தீபாவளி மலரில் வெளியானது)

Sunday, November 24, 2013

நல்லதாக நாலு வார்த்தை... 23


திருப்தி,

வறியோரை 

செல்வராக்குகிறது

அதிருப்தி,

செல்வரை

வறியோராக்குகிறது.’

-Benjamin Franklin
('Content makes poor men rich;
discontentment makes rich men poor.')
 
<> 
 
'வீழாதிருப்பதல்ல நம் பெருமை; 

வீழும்போதெல்லாம் எழுவதே.' 

-Confucius
('Our greatest glory is not in never falling,
but in getting up every time we do.')

<> 

'திட்டமிட்ட பெருஞ்செயல்களை விட 

செய்திட்ட   சிறு செயல்கள் 

மேலானவை.'

- Peter Marshall 
('Small deeds done are better than great deeds planned.') 

<> 

'தான் விரும்பும் விஷயங்களை

வாழ்க்கையிலிருந்து பெற்றுக்கொள்ளத் 

தவிர்க்க முடியாத முதல் படி, 

தனக்கென்ன வேண்டுமென்பதை

தீர்மானிப்பது.'

- Ben Stein
('The indispensable first step to getting the things
you want out of life is this: decide what you want.')



'உங்கள் திட்டம்

ஒரு வருடத்துக்கானதெனில்

நெல்லைப் பயிரிடுங்கள்,

பத்து வருடமெனில்

மரங்களை நடுங்கள்,

நூறு வருடத்துக்கா?

மனிதர்களுக்கு

கல்வி பயிற்றுவியுங்கள்!'

- Kuan-Tzu
('If your plan is for one year, plant rice;
For ten years, plant trees;
For a hundred years, educate men.')

<>

'உன் தற்போதைய சூழ்நிலை

நீ அடையக் கூடிய இடத்தைத் 

தீர்மானிப்பதில்லை.

நீ தொடங்குகிற இடத்தை மட்டுமே  

தீர்மானிக்கிறது.'

- Nido Qubein
('Your present circumstances don't determine where
you can go; they merely determine where you start.')

<>

'பகிர்ந்தால்

துன்பம்

பாதியாகிறது;

இன்பமோ

இரட்டிப்பாகிறது!'

- Proverb
('Shared joy is a double joy;
shared sorrow is half a sorrow.')

<<<>>> 
 

Tuesday, November 19, 2013

அந்த இரண்டு...

 
அன்புடன் ஒரு நிமிடம் -50 
 
பிரமாதமான மதிப்பெண்களுடன் பிளஸ் டூ முடித்திருந்த பையனையும் அழைத்துக்கொண்டு இவரைப் பார்க்க வந்திருந்தார் சண்முகம்.
 
வாங்க, வாங்க,” வரவேற்றார் சாத்வீகன், “எத்தனை மதிப்பெண்?”
ஊகத்துக்கு வெகு மேலே சொன்னதும் அவன் கையைக் குலுக்கி தன் மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் அள்ளி வழங்கினார். ஆனால்...
 
குழப்ப ரேகைகள் கொப்பளிக்கிற முகம் இருவருக்கும் பொதுவாக இருந்தது.
ஏன் ஏன் ஏன்? இவருக்கு ஆச்சரியம்.
 
அதிசயிக்கிற மார்க் எடுத்திருக்கிறான் பையன். கேட்கிற காலேஜில் நினைக்கிற கோர்சில் கூப்பிட்டுக் கொடுப்பார்கள் அட்மிஷன். அப்புறம் என்ன முகத்திலே ஏதோ வாட்டம்?”
 
அதான் பிரசினை. அப்பா விளக்கினார். எந்த படிப்பை செலக்ட் செய்யறது? அதான் இப்ப முன்னால நிற்கிற மில்லியன் டாலர் கேள்வி!
 
ஓஹோ?”
 
ஆமா. முன்னெப்போதையும் விட இப்ப எத்தனையோ அதிகமில்லையா தேர்ந்தெடுக்க? சயன்டிஸ்ட், ஆர்ச்சிடெக்ட், சாப்ட்வேர் என்ஜினீயர்னு தொடங்கி முப்பது நாற்பது அவென்யூ இவன் பிரவேசிக்க காத்திருக்கு.
 
ஓஹோ?”
 
அதான் சரியானதை செலக்ட் பண்ணவேணுமேன்னு ஒரே டென்ஷனா இருக்கு. ஒவ்வொரு கெரியெர் பத்தியும் புத்தகங்களிலேயும் இண்டர்நெட்டிலேயுமாக மேய்ந்து ஏகப்பட்ட விவரம் சேகரிச்சு... அப்புறம் வெவ்வேறு துறைகளில் எனக்குத் தெரிஞ்ச வி.ஐ.பிக்களை பார்த்துப் பேசி...
 
ஓஹோ?”
 
அத்தோடு விடுவேனா? சில இண்டஸ்ட்ரீஸ், சில கம்பெனிகள் அப்படீன்னு இவனை அழைச்சிட்டுப் போய்க் காட்டிடினேன். நேரடியாப் பார்க்கிறப்ப சில ஐடியாக்கள் கிடைக்குமில்லையா?”
 
ஓஹோ? கடைசியில் எதைத் தேர்ந்தெடுத்தீங்க?”
 
அதான் இன்னும் முடியலே. என்ன ஷார்ட் லிஸ்ட் பண்ணினாலும் பத்துக்கு குறைய மாட்டேங்குது. அதில எதைன்னு... ஓ, nerve-racking! அவன் புத்திசாலித்தனத்துக்கும் வாங்கியிருக்கிற மார்க்குக்கும் ஏற்ற மாதிரி ஒண்ணை நான் எப்படி செலக்ட் பண்ணப்போறேன்னே தெரியலே! .....என்ன சிரிக்கிறீங்க?”
 
நியாயமாப் பார்த்தா மற்றவர்களை விட உங்க பையனுக்குத்தான் சாய்ஸ் ஈஸியா இருக்கணும். நேர்மாறா இருக்கிறப்ப சிரிக்காமல் வருத்தப்படவா முடியும்?”
 
என்ன சொல்றீங்க?”
 
உங்களோட லட்சியம் அல்லது இலக்கு என்ன? அவன் எந்தத் துறையில் பிரவேசித்தாலும் அதில் அவன் பிரகாசிக்கணும் அப்படிங்கறதுதானே?”
 
எக்ஸாட்லி!
 
அபிநந்தன், உங்க மகன், எந்தப் படிப்பிலும் சேருவதற்கான அடிப்படை தகுதி அதிகமாவே கொண்டவன் என்கிறதில் உங்களுக்கு சந்தேகம் இல்லையே?”
 
கொஞ்சமும்!
 
அபி, உட்கார். என்றார். நான் சொல்றதைக் கவனி. நீ நன்றாகப் படித்து கலர்ஃபுல் ஆக வெளிவந்து எந்தத் துறையில் சேர்ந்தாலும் சரி, அங்கே நீ மனிதர்களுடனும் கருவிகளுடனும்தான் உறவாட வேண்டியிருக்கும் என்பது நிச்சயமாக நமக்கு நன்கு தெரிந்த ஒன்று! கருவிகளை சரியாகக் கையாள, பயன்படுத்த உன் புத்தியை நீ சரியான முறையில் பிரமாதமாக பிரயோகிக்க வேணும். அதேபோல் மனிதர்களுடன் சரியாக பழகி, அவர்களுக்கு வேண்டியதை செய்ய உன் இதயத்தை சரியான முறையில் பிரயோகிக்க வேணும். ஆக எந்த கெரியெரில் சென்றாலும் சரி, நீ அதில் சிறந்து விளங்க உனக்குத் தேவையானது கூர் மதியும் நல்லிதயமும் தாம்! அது ரெண்டும் இருந்தா எது உனக்கு ஏற்றதுன்னு பார்க்க வேண்டியதில்லே, எதையுமே உனக்கு ஏற்றதாக்கிவிடும். அந்த ரெண்டையும் எப்பவும் கொண்டிருக்கிற வரைக்கும்  உன் முன்னேற்றம் பத்தி துளி கவலை வேண்டியதில்லை.
 
அவர் சொன்னதன் ஆழ்ந்த பொருளை அவர்கள் யோசித்துக்  கொண்டிருக்கையில் அவர் இவரிடம் சொன்னார், “அழைச்சுட்டுப் போங்க, அவனுக்கு எது பிடிக்குதோ அந்த படிப்பில் சேரட்டும். அந்த ரெண்டை மட்டும் அவன் எப்பவும் கொண்டிருக்க உங்களால் முடிஞ்ச உதவியை செய்யுங்க.

('அமுதம்' ஜூலை  2013 இதழில் வெளியானது)
<<<>>>
(படம் - நன்றி:கூகிள்) 

 

Sunday, November 17, 2013

தீபம்.

 
<*> <*> <*>

ளியில்
ஒளிந்திருக்கும் பெரு
வெளியில் சஞ்சரிக்கிறேன் .
எங்கும் பிரகாசமாக.
எல்லாம் ஒன்றாக.
எதுவும் மகிழ்ச்சியாக.

கார்த்திகை திருநாள் மனதின்
கார்மேகம் கனிந்து
உள்ளுக்குள்ளும்
பொழிகிறது மழை.

தீபங்களின் நடுவே
தீவாக நின்று துதிப்பது
வேறெதிலும் கிடைத்திராத
தீராத சந்தோஷம்.

தீபத்தால் ஆராதனை
செய்கிறோம். இன்று
தீபத்தை ஆராதிக்கிறோம்.

 
<*> <*> <*>
(மீள் பதிவு)
 
(படம் - நன்றி:கூகிள்) 

Thursday, November 14, 2013

நல்லதா நாலு வார்த்தை - 22


'உலகம் நாளை

உடைந்து சிதறுமென 

அறிய நேர்ந்தாலும் நடுவேன் என் 

ஆப்பிள் மரத்தை.'

-Martin Luther

('Even if I knew that tomorrow the world would

go to pieces, I would still plant my apple tree.')

<> 

'என்ன செய்ய வேண்டும் அதை 

என்பது மட்டும் தெரிந்தால்  

இந்நேரமே மிக நந்நேரம்!'

- Emerson

('This time is a very good one if we

but know what to do with it.') 

<> 

'பறவைக்கு ஓர் கூடு

சிலந்திக்கு ஓர் வலை

மனிதனுக்கு நட்பு.'

<> 

-William Blake 

('The bird a nest, the spider a web, man friendship.')

<> 

‘கற்றுக் கொள்ளாதவருக்கு 

முதுமை குளிர் காலம்;

கற்றுக் கொண்டவருக்கு 

அது அறுவடைக் காலம்!

- Proverb

('Old age, to the unlearned, is winter;

to the learned, it is harvest time.')

<>

‘அவனிடம் இருப்பதுவோ 

அவன் செய்வதுவோ அல்ல 

ஒரு மனிதனின் மதிப்பை உரைப்பது

அவன் எப்படி இருக்கிறான் என்பதே!’

 - Henri Amiel

('It is not what he has, or even what he does

which expresses the worth of a man, but what he is.') 

<> 

 ‘பாராட்டு என்பது

அதைப் பெறும் தகுதியை 

ஒருவனுக்கு

ஏற்படுத்தும் கருவி.'

-Franklin Jones 

('Praise is a device for making a man deserve it.')

<> 

'நண்பர்கள்

உருவாக்கப் படுவதில்லை 

உணர்ந்து கொள்ளப் படுகிறார்கள்!'

 - Carl Rakosi

('Friends are not made, but recognized.')

 <<<>>> 
 
(படம்- நன்றி: கூகிள்)

 

Monday, November 11, 2013

காரணம் நான் உன்...


ன்புள்ள சுந்தர்,


நீ சினிமா வாய்ப்புத் தேடி சென்னைக்கு சென்றிருப்பதாக பழநி சொல்லித் தெரிந்து கொண்டேன். வெகு விரைவிலேயே மிகப் பெரிய டைரக்டராக வருவேன் என்று நீ சபதம் செய்திருப்பதாகவும் அவன் சொன்னான்.


வகுப்பை கட் அடித்துவிட்டு நீ எழுதும் கவிதைகளைப் பார்க்க நேர்ந்த போதே உனக்குள் ஒரு கவிஞன் இருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டேன்.


'வானில் பறக்கும் மேகத்துக்குத் தெரியுமா, அதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மயிலின் ஏக்கம்?' என்ற உன் கவிதையை நான் எத்தனை முறை திரும்பத் திரும்பப் படித்து மகிழ்ந்திருக்கிறேன் தெரியுமா?


பொதுத் தேர்வைப் பற்றிக் கூடக் கவலைப் படாமல் ராத்திரியெல்லாம் கண் விழித்து ஒரு நாடகம் எழுதினாயே, நினைவிருக்கிறதா? அதைப் படித்த போதே உனக்குள் ஒரு கதாசிரியனும் இருக்கிறான் என்று தெரிந்துகொண்டேன்.


ஒரு பணக்காரப் பெண் ஏழை வாலிபனைக் காதலித்து அந்தக் காதலுக்காக தன்னுடைய எல்லா சுகங்களையும் இழந்து, கடைசியில் அவனையே கல்யாணமும் செய்து கொள்கிறாள் என்ற அந்தக் கதை சினிமாவாக எடுக்கப்பட்டால் தமிழ்த் திரையுலகை ஒரு புதிய பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது.


உன் அக்காவின் கல்யாணம், அம்மாவின் தீராத நோய், குடும்பத்தின் பொருளாதார நலிவு என்கிற மாதிரி சின்ன சின்னப் பிரசினைகளைப் பற்றியெல்லாம் அனாவசியமாக நீ அலட்டிக்கொள்ளாதே! அதை எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார். அதைவிட அவருக்கு வேறென்ன வேலை? நீ உன் பி.இ. படிப்புக்கான வேலையில் சேர்ந்துவிட்டாயானால் உனக்கான ஆஸ்கர் பரிசை நீ வாங்குவது எப்போது?


இப்படியெல்லாம் எழுதி உன்னை உற்சாகப் படுத்த வேண்டும் என்று எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்படி செய்ய முடியவில்லையே! காரணம் நான்...


உன் அன்புள்ள,

அப்பா.

<<<>>>
(13-02-2005 விகடனில் பிரசுரமானது. )

<<>>
(படம் - நன்றி: கூகிள்)

Friday, November 8, 2013

அன்பு அருகிருந்தும்...

 
அன்புடன் ஒரு நிமிடம் - 49
 
னக்கு ஒரு விஷயம் புரியவே இல்லே மாமா, சிலருக்கு சில உதவிகள் தேவைப்படுது. அதை செய்யறவங்களோ அல்லது அதை நிறைவேத்தற வழிகளோ அவங்க அருகிலேயே அவெய்லபிலா இருப்பாங்க. ஆனா அந்த உதவிகள் கிடைக்காமலேயே அவங்க கஷ்டப்படறாங்க...
 
சிரித்தார் ராகவ்.
 
இருவரும் விரைந்து கொண்டிருந்த பைக் அதற்குள் அந்த வீட்டை அடைந்தது. காலிங் பெல்லை அழுத்தினார். , இதானே உங்க ஒண்ணு விட்ட தம்பி வீடு? ஒண்டிக்கட்டையா தனியே வசிக்கிறார்? என்ன விஷயமா பார்க்க வந்திருக்கோம்?”
 
உள்ளே வந்து பாரு.
 
வரவேற்ற முருகேசனிடம் வந்த விஷயத்தை... ஒரு சின்ன விஷயம். உன்னோட உதவி வேணும் முருகேஷ்!
 
செய்யறேன், சொல்லுங்கண்ணா
 
என்னன்னா... அவளுக்கு இப்ப நிறைய நேரம் கிடைக்குது. அதை உருப்படியா உபயோகிக்கலாம்னு ஒரு ஐடியா.
 
ஆமா, நான் கூட சொல்லலாம்னு நினைச்சேன். இப்பல்லாம் வீட்டிலிருந்தே செய்யற மாதிரி நிறைய...
 
கேடரிங் சேர்வீஸ் ஆரம்பிக்கலாம்னு ஒரு ஐடியா.
 
பேஷ்! இப்பத்திய காலத்துக்கு ரொம்ப பொருத்தமான பிஸினஸ். அப்புறம் என்ன யோசனை? ஆரம்பிச்சுட வேண்டியதுதானே?
 
ஆமா ஆமா, வேண்டியதுதான்! ஆர்டர் கேன்வாஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். என்ன ஒரு இதுன்னா... அவளோட சமையல் எப்படி, வரவேற்பு எப்படி இருக்கும்னு கொஞ்சம் அஸெஸ் பண்ணிப் பார்க்க வேண்டியிருக்கு. சொல்லப்போனா ஒருபக்கம் அதை தினமும் சாப்பிட்டுப் பார்த்து ஓகே செய்யறது ஒரு முக்கிய அம்சமா படுது. அதை நீ செஞ்சு தந்தால் நல்ல ஹெல்பா இருக்கும்.
 
அப்படியா?”
 
ஆமா தினம் பண்ற டிபன், சாப்பாடு எல்லாம் ஒரு செட் அப்படியே உனக்கு வந்துரும். நீ சாப்பிட்டுப் பார்த்து அப்பப்ப ஏதாச்சும் திருத்தம், இம்ப்ரூவ்மெண்ட் தேவைப்பட்டா சொல்லணும்... இப்ப நீ ஹோட்டலிலே தானே சாப்பிடறே? அதுக்குப் பதில் நான் அனுப்பறதை சாப்பிடறே. நிச்சயமா அதைவிட இது உன்னை அதிகம் பாதிச்சுடாது இல்லையா?”
 
அதுக்கென்ன சந்தோஷமா செஞ்சுடறேன். கரும்பு தின்னக் கசக்குமா ரக வேலை இது. அப்புறம் எனக்கென்ன பிரசினை? சொல்லப்போனா இது எனக்கும்தான் ஒரு உதவி...
 
 
திரும்பி பைக்கில் வரும்போது கேட்டான். சொல்லவே இல்லையே மாமா? கேட்டரிங் செர்வீஸா? பலே, நல்ல பிஸினஸ்!
 
ஆரு பண்ணப் போகிறாங்க பிஸினஸ் எல்லாம்? எல்லாம் அளப்பு!
 
விழித்தான். அப்ப அவரிடம் சொன்னதெல்லாம்...
 
வேறே என்ன பண்றது? வருஷக்கணக்கா ஒட்டல்லேயே சாப்பிட்டுட்டு இருக்கான் இவன். ஆனால் பி.பி. சர்க்கரைன்னு நிறைய நோய்களை வெச்சிருக்கிறவன். வயசும் ஆச்சு. எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தாச்ச்சு எங்களோடவே சாப்பிடுன்னு. கேக்கலே. நாங்க என்ன கேக்கிறது, அவனே உரிமையோடு வந்து சாப்பிடலாம். வறட்டு கௌரவமா, ஈகோவா... ஏதோ ஒண்ணு தடுக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டோம். அதான் .யோசிச்சு... அதை விரட்டி அடிக்க இப்படி ஒரு ஐடியா...
 
அப்ப அதுக்காக ஒரு பிஸினஸ் நடத்தணுமே? எப்படி?”
 
ஏன் நடத்தணும்? அதெல்லாம் அவனுக்கு எங்கே தெரியப்போகுது? அங்கே இங்கே அனுப்பறோம்னு சொல்லிக்குவேன். ரியலி அவனுக்கு மட்டும் தான் இந்த கேடரிங் சர்வீஸ்.
 
புரிஞ்சது.
 
கொஞ்ச முந்தி கேட்ட உன் கேள்விக்கும் விடை கிடைச்சிருக்குமே? சிலருக்கு கடவுள் பக்கத்திலேயே சில அனுகூலங்களை வெச்சிருந்தும் அவங்களோட தேவையற்ற, அபரிமிதமான தன்னுணர்வு குறுக்கே நின்னு அது கிடைக்காம ஆகிவிடுது. சுய விமரிசன சிந்தனை இல்லாத வரைக்கும் அவங்க அதைக் கண்டுகொண்டு தங்கள் வாழ்வை சரிப்படுத்திக்கறதில்லே. என்ன பண்றது, சமயத்தில அந்த விஷயத்துக்கும் சேர்த்து நாமதான் அவங்களுக்கு உதவி செய்ய வேண்டியிருக்கு, இப்ப இவனுக்காக நாங்க இப்படி ஒரு பொய்யான செட் அப் செய்யற மாதிரி.
 
('அமுதம்' ஜூலை  2013 இதழில் வெளியானது) 
 
 <<<<>>>>
 
(படம் - நன்றி: கூகிள்)