அன்புடன் ஒரு நிமிடம் -50
பிரமாதமான மதிப்பெண்களுடன் பிளஸ் டூ முடித்திருந்த பையனையும் அழைத்துக்கொண்டு இவரைப் பார்க்க வந்திருந்தார் சண்முகம்.
“வாங்க, வாங்க,” வரவேற்றார் சாத்வீகன், “எத்தனை மதிப்பெண்?”
ஊகத்துக்கு வெகு மேலே சொன்னதும் அவன் கையைக் குலுக்கி தன் மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் அள்ளி வழங்கினார். ஆனால்...
குழப்ப ரேகைகள் கொப்பளிக்கிற முகம் இருவருக்கும் பொதுவாக இருந்தது.
ஏன் ஏன் ஏன்? இவருக்கு ஆச்சரியம்.
“அதிசயிக்கிற மார்க் எடுத்திருக்கிறான் பையன். கேட்கிற காலேஜில் நினைக்கிற கோர்சில் கூப்பிட்டுக் கொடுப்பார்கள் அட்மிஷன். அப்புறம் என்ன முகத்திலே ஏதோ வாட்டம்?”
“அதான் பிரசினை.” அப்பா விளக்கினார். “எந்த படிப்பை செலக்ட் செய்யறது? அதான் இப்ப முன்னால நிற்கிற மில்லியன் டாலர் கேள்வி!”
“ஓஹோ?”
“ஆமா. முன்னெப்போதையும் விட இப்ப எத்தனையோ அதிகமில்லையா தேர்ந்தெடுக்க? சயன்டிஸ்ட், ஆர்ச்சிடெக்ட், சாப்ட்வேர் என்ஜினீயர்னு தொடங்கி முப்பது நாற்பது அவென்யூ இவன் பிரவேசிக்க காத்திருக்கு.”
“ஓஹோ?”
“அதான் சரியானதை செலக்ட் பண்ணவேணுமேன்னு ஒரே டென்ஷனா இருக்கு. ஒவ்வொரு கெரியெர் பத்தியும் புத்தகங்களிலேயும் இண்டர்நெட்டிலேயுமாக மேய்ந்து ஏகப்பட்ட விவரம் சேகரிச்சு... அப்புறம் வெவ்வேறு துறைகளில் எனக்குத் தெரிஞ்ச வி.ஐ.பிக்களை பார்த்துப் பேசி...”
“ஓஹோ?”
“அத்தோடு விடுவேனா? சில இண்டஸ்ட்ரீஸ், சில கம்பெனிகள் அப்படீன்னு இவனை அழைச்சிட்டுப் போய்க் காட்டிடினேன். நேரடியாப் பார்க்கிறப்ப சில ஐடியாக்கள் கிடைக்குமில்லையா?”
“ஓஹோ? கடைசியில் எதைத் தேர்ந்தெடுத்தீங்க?”
“அதான் இன்னும் முடியலே. என்ன ஷார்ட் லிஸ்ட் பண்ணினாலும் பத்துக்கு குறைய மாட்டேங்குது. அதில எதைன்னு... ஓ, nerve-racking! அவன் புத்திசாலித்தனத்துக்கும் வாங்கியிருக்கிற மார்க்குக்கும் ஏற்ற மாதிரி ஒண்ணை நான் எப்படி செலக்ட் பண்ணப்போறேன்னே தெரியலே! .....என்ன சிரிக்கிறீங்க?”
“நியாயமாப் பார்த்தா மற்றவர்களை விட உங்க பையனுக்குத்தான் சாய்ஸ் ஈஸியா இருக்கணும். நேர்மாறா இருக்கிறப்ப சிரிக்காமல் வருத்தப்படவா முடியும்?”
“என்ன சொல்றீங்க?”
“உங்களோட லட்சியம் அல்லது இலக்கு என்ன? அவன் எந்தத் துறையில் பிரவேசித்தாலும் அதில் அவன் பிரகாசிக்கணும் அப்படிங்கறதுதானே?”
“எக்ஸாட்லி!”
“அபிநந்தன், உங்க மகன், எந்தப் படிப்பிலும் சேருவதற்கான அடிப்படை தகுதி அதிகமாவே கொண்டவன் என்கிறதில் உங்களுக்கு சந்தேகம் இல்லையே?”
“கொஞ்சமும்!”
“அபி, உட்கார்.” என்றார். “நான் சொல்றதைக் கவனி. நீ நன்றாகப் படித்து கலர்ஃபுல் ஆக வெளிவந்து எந்தத் துறையில் சேர்ந்தாலும் சரி, அங்கே நீ மனிதர்களுடனும் கருவிகளுடனும்தான் உறவாட வேண்டியிருக்கும் என்பது நிச்சயமாக நமக்கு நன்கு தெரிந்த ஒன்று! கருவிகளை சரியாகக் கையாள, பயன்படுத்த உன் புத்தியை நீ சரியான முறையில் பிரமாதமாக பிரயோகிக்க வேணும். அதேபோல் மனிதர்களுடன் சரியாக பழகி, அவர்களுக்கு வேண்டியதை செய்ய உன் இதயத்தை சரியான முறையில் பிரயோகிக்க வேணும். ஆக எந்த கெரியெரில் சென்றாலும் சரி, நீ அதில் சிறந்து விளங்க உனக்குத் தேவையானது கூர் மதியும் நல்லிதயமும் தாம்! அது ரெண்டும் இருந்தா எது உனக்கு ஏற்றதுன்னு பார்க்க வேண்டியதில்லே, எதையுமே உனக்கு ஏற்றதாக்கிவிடும். அந்த ரெண்டையும் எப்பவும் கொண்டிருக்கிற வரைக்கும் உன் முன்னேற்றம் பத்தி துளி கவலை வேண்டியதில்லை.”
அவர் சொன்னதன் ஆழ்ந்த பொருளை அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கையில் அவர் இவரிடம் சொன்னார், “அழைச்சுட்டுப் போங்க, அவனுக்கு எது பிடிக்குதோ அந்த படிப்பில் சேரட்டும். அந்த ரெண்டை மட்டும் அவன் எப்பவும் கொண்டிருக்க உங்களால் முடிஞ்ச உதவியை செய்யுங்க.”
('அமுதம்' ஜூலை 2013 இதழில் வெளியானது)
<<<>>>
(படம் - நன்றி:கூகிள்)
9 comments:
அருமை ..... மிக அருமையான அட்வைஸ்.
//எந்த கெரியெரில் சென்றாலும் சரி, நீ அதில் சிறந்து விளங்க உனக்குத் தேவையானது கூர் மதியும் நல்லிதயமும் தாம்! அது ரெண்டும் இருந்தா எது உனக்கு ஏற்றதுன்னு பார்க்க வேண்டியதில்லே, எதையுமே உனக்கு ஏற்றதாக்கிவிடும். அந்த ரெண்டையும் எப்பவும் கொண்டிருக்கிற வரைக்கும் உன் முன்னேற்றம் பத்தி துளி கவலை வேண்டியதில்லை.”//
சூப்பரான வரிகள். ;)))))
//('அமுதம்' ஜூலை 2013 இதழில் வெளியானது)//
மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அவனுக்கு எது பிடிக்குதோ அந்த படிப்பில் சேரட்டும்..
அமுதமயமான யோசனை..பாராட்டுக்கள்..!
நல்லதொரு யோசனை....
வாழ்த்துக்கள்...
சரியான அட்வைஸ்
கல்வி, பொருளாதாரம் பற்றி மட்டும் யோசிக்காம மனிதனா வாழவும் நினைக்க வேண்டும். நல்ல கருத்துக்களை கொண்ட சிறுகதை.
// எந்தத் துறையில் சேர்ந்தாலும் சரி, அங்கே நீ மனிதர்களுடனும் கருவிகளுடனும்தான் உறவாட வேண்டியிருக்கும் என்பது நிச்சயமாக நமக்கு நன்கு தெரிந்த ஒன்று! //
நாட்டு நடப்பை சரியாகச் சொன்னீர்கள். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.
மிகச் சிறந்த அறிவுரை...
கூர் மதி, நல்லிதயம். .
அற்புதமாகச் சொல்லி விட்டீர்கள்!
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!