Tuesday, May 12, 2026

ஹாலிவுட்டின் சாவித்திரி...


நாலைந்து படம் நன்றாக நடித்து அதில் ஒன்றுக்கு ஆஸ்கார் அவார்டும் வாங்கினாலும், எதிர்பார்க்கப்படும் எந்த படோபடோபமும் அந்த நடிகையிடம் இல்லை. இமேஜ் பில்டிங் சுத்தம். நிருபர்களைக் கண்டால் ஓட்டம் (ஒரு முறை விமான விசிறியில் மாட்டிக் கொள்ளப் பார்த்தாராம்) பிராட்வே நாடக மேடைக்கு திரும்பினால் சரியான வரவேற்பு இல்லை. திரும்ப ஹாலிவுட்டுக்கு போனால் கிடைத்த படங்கள் ஓடவில்லை. ‘பாக்ஸ் ஆஃபீஸ் பாய்சன்’ என்றனர் வழக்கம்போல.
மனம் தளரவில்லை. மறுபடியும் மேடைக்கு வந்தார். நடித்த ‘The Philadelphia Story’ சூப்பர் ஹிட். அதன் ரைட்ஸ் வாங்கி, ரைட்டான டைரக்டரை அமர்த்தி, கேரி க்ராண்டையும் ஜேம்ஸ் ஸ்டீவர்டையும் போட்டு தானே தயாரித்தார் படமாக. அதுவும் சூப்பர் ஹிட். நட்சத்திரமானார்.
Katharine Hepburn.. (1907 - 2003) ஹாலிவுட்டின் சாவித்திரி… இன்று பிறந்த நாள்!
12 முறை, ஆமாம், 12 முறை நாமினேஷன் பெற்று (ஒரு தடவை கூட விழாவுக்கு போகவில்லை) அதில் ‘நான்கு முறை’ ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஒரே நடிகை. கின்னஸ் ரிகார்ட் அது.
ஸ்பென்சர் டிரேசியுடன் நல்ல ராசி. ஒன்பது படங்களில் ஜோடியாக. கடைசிப் படம் மிகப் பிரபலம். ‘Guess Who’s Coming to Dinner?’ மற்றொன்று ‘Adam’s Rib.’ கணவரை கொலை செய்ய முயன்றதாக அந்தப் பெண் மீது வழக்கு. போலீஸ் தரப்பில் வாதாடும் வக்கீல் பானர். ஆனால் அந்தப் பெண்ணுக்காக ஆஜராகிறார் பானரின் மனைவி அமெண்டா. இருவருக்கும் சரியான நடிப்பு போட்டி.
உறுதி கொண்ட பெண் காரக்டர்களை சித்தரிப்பதில் விற்பன்னரான காதரின், கேரி க்ராண்டுடன் நடித்த சிரியோ சிரி படத்தைப் பற்றி (‘Bringing up Baby’) வேறொரு நாளில் எழுதியிருந்தேன்.
எண்டர்டெய்ன்மெண்ட் வீக்லி 1999 இல் நடத்திய சிறந்த கிளாஸிக் நடிகை போட்டியில் மற்றொரு ஹெபர்னை (Audrey Hepburn) விளிம்பில் வென்றவர்.
‘எந்தக் கலை ஆனாலும் சரி அதில் உயரத்தில் இருப்பவர்கள் தாங்கள் மேலே இருப்பது தங்கள் திறமையினாலா அல்லது அதிர்ஷ்டத்தினாலா என்று ரகசியமாக வியந்து கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு நேரம் இருந்தால்,’ என்று நினைக்கும் இவர் சொல்வது, ‘கஷ்டப்படுவது எத்தனை சுவையானது என்பதைப் புரிந்து கொள்ளும் யோகம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.’
உற்சாகமூட்டும் இவர் வார்த்தைகள்: ‘சில சமயம் வாழ்க்கை கொடூரமான சோகமாக இருக்கலாம். எனக்கும் இருந்திருக்கிறது. ஆனால் உங்களுக்கு என்ன நேர்ந்தாலும் சற்றே நகைச்சுவையுடன் எதிர்கொள்ளுங்கள். இறுதியில் பார்த்தால் வாழ்வில் நீங்கள் சிரிக்க மறந்து விடக்கூடாது என்பதுதான் முக்கியம்.’
‘உங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்யுங்கள், குறைந்தபட்சம் ஒரே ஒரு நபராவது திருப்தியுடன் இருப்பார்.’
சொன்னாரே ஒன்று தமாஷாக: ‘Life is hard. After all, it kills you.’

Friday, May 8, 2026

காதல் க(வி)தை...



கவிஞர் இருவரின் காதல் க(வி)தை..
இங்கே இளைஞன் ராபர்ட். எழுதியவற்றுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் தன் கவிதைகளுக்கு ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்திவிட முயன்று கொண்டிருக்கிறான். நல்ல ஒரு இடம் மெல்ல எழும் வேளை..
அங்கே எலிசபெத். 12 வயதிலேயே தன் கவிதைகளை எழுத ஆரம்பித்தவள். என்னவொரு சோகமெனில், குதிரையிலிருந்து தவறி விழுந்து முதுகில் அடி. டி.பி.யும் சேரவே, முழு நேர நோயாளியாக அறைக்குள்ளேயே வாசம். தண்ணீரில் மூழ்கி இறந்த தம்பியின் சோகம். எல்லாம் மறக்க எழுதினாள். மொழி நயம்! புதுமையான எண்ணங்கள்! துணிச்சலான கருத்துக்கள்! பிரபலமாகிவிட்டிருந்தாள். தன் தொகுப்பொன்றில் ராபர்டின் கவிதைகளைப் பற்றி குறிப்பிட...
நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார் ராபர்ட். அவள் கவிதைகளின் மீதான தன் ஹார்ட்டின்களையும் சேர்த்து. ‘என் இதயபூர்வமாக நேசிக்கிறேன் உங்கள் கவிதைகளை..’ என்று தொடங்கிற்று அது. தொடர்ந்தது நட்பு. 2 வருடத்தில் 600 கடிதங்கள்! அவளது நண்பர் (Kenyon) உதவியால் ஒரு கோடை நாளில் சந்தித்தார்கள். கல்யாணம் என்றாலே பிடிக்காத கண்டிப்பான அப்பாவின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவள். ரகசியமாகவே சந்திப்பு. காதலுக்கு இதைவிட கிரியா ஊக்கி உண்டா? மலர்ந்தது.
ஆற்றொணா துயரிலிருந்து தன்னை மீட்டவர் மேல் மாற்றொணா அன்பு. ஆனாலும் ஆயிரம் தயக்கம் எலிஸபெத் மனதில். அனுதாபத்தில் வந்த காதலா? நீடிக்குமா? அப்பால் வருந்த நேருமா? 6 வயது அதிகம் இல்லையா அவளுக்கு? அப்பாவின் ஆதரவில் இருக்கும் நோயாளியாயிற்றே நான்? ஆனால் ராபர்ட் திடம் தந்தார். காதலில் விளைந்த அவள் கவிதைகள் பல. அதிலொன்று பிற்பாடு காதல் இலக்கியமானது. “எப்படியெல்லாம் உன்னைக் காதலிக்கிறேன்? எண்ணப் போகிறேன் அந்த வழிகளை!...” 14 வரி ஸானட்.
அவளைக் கவனிக்கும் தாதி சாட்சியாக வர, ஒரு செப்டம்பர் 12 இல் ரகசியமாய் திருமணம் செய்து கொண்டனர். பாரிசில் தேனிலவு முடிந்த கையோடு டாக்டர்கள் ஏற்கெனவே சொல்லியபடி, (அப்பா செய்ய மறுத்தது) வெப்பமான இத்தாலிக்கு அழைத்துச் சென்று ஃப்ளாரன்ஸில் குடியமர்த்தினார் ராபர்ட். அப்பா கடைசி வரை பேசவேயில்லை.
மனைவியின் கவிதைகளுக்கு மவுசு ஏற்பட உழைத்தார் இவர். அவளும் அதுபோல். இருவர் எழுத்திலும் முன்னேற்றம். Wordsworth மறைந்தபோது அவைக் கவிஞர் இடத்துக்கு Tennyson, எலிஸபெத்துடன் போட்டியிட வேண்டியதாயிற்று. Aurora Leigh என்ற தன் மிகப் பெரும் கவிதை நாவலை அப்போதுதான் எழுதினார்.
ஆரோகணத்திலிருந்து அவரோகணத்துக்கு வந்த ஆரோக்கியம்… 1861. மணவாழ்வின் 15 வது வருடம்.. மெலிவுற்று நலிவுற்று கணவன் மடியிலேயே உயிர் விட்டார். ஆனந்தப் புன்னகையொன்று அவள் முகத்தில்.. ‘பியூட்டிஃபுல்!’ என்றொரு வார்த்தை உதடுகளில். கடைசி வார்த்தை!
Robert Browning and Elizabeth Barrett...

Thursday, May 7, 2026

கேட்டுக் கிறங்கி ...


ஹேம்லின் நகரத்தில் கெலிக்க முடியாத எலித்தொல்லை. எதுவும் பலிக்கவில்லை. என்னிடம் விடுங்கள் என்று வந்தார் அந்த பைப் வாசிப்பவர். 40000 ரூபாய் பேசுகிறார்கள். அவன் பைப் எடுத்து வாசிக்க, அத்தனை எலிகளும் கேட்டுக் கிறங்கி அவன் பின்னால் பைப் லைனாக அணிவகுத்தன. அப்படியே அழைத்து சென்று ஆற்றில் நடந்து எலிகளை மூழ்க வைத்தான். எலிகள்தான் எலிமினேட் ஆயாச்சே? 2000 தான் தருவேன் என்கிறார்கள். அவன் மறுபடியும் பைப்பை வாசிக்கிறான். கேட்டு மயங்கிய அந்த ஊர் குழந்தைகள் அவனைத் தொடர அழைத்துச் செல்கிறான் காட்டுக்கு...
‘The Pied Piper of Hamelin’ - பிரபலமானஇந்தக் கவிதையை எழுதியவர் ...
Robert Browning.. பிரசித்தி பெற்ற ஆங்கிலக் கவிஞர். இன்று பிறந்த நாள்.
நோய்வாய்ப்பட்ட அவருடைய பப்ளிஷர் நண்பர் மகன், நேரம் போகாமல் படம் வரைவதற்கு ஒரு கதை கேட்டபோது இவர் கவிதையாக சொன்னதுதான் இந்தக் கதை.
அப்பா வைத்திருந்த 7000 புத்தக லைப்ரரி ஆர்வத்தை கிளப்ப, சின்ன வயதிலேயே தீர்மானித்துவிட்டார் கவிஞராக வேண்டும் என்று.
கவிதாயினி Elizabeth Barrette மீதான காதல் ஒரு காவியக் கதை.
ஆழமான வரிகளை வரைந்தவர். சில இதோ...
‘எட்டுவதற்கு மேலாக இருக்க வேண்டும்
மனிதன் அடைவது;
சொர்க்கம் என்று ஒன்று இருப்பது வேறு எதற்காக?’
'பளிங்கு என்று இளமை நினைத்ததை,
பனித்துளி என்று கண்டுபிடிக்கிறது முதுமை!'
‘என் சூரியன் மறைவது,
மீண்டெழுவதற்கே.’
‘எளிய அழகு மட்டுமே உங்களுக்கு கிடைத்தது
வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றால்
கடவுள் உருவாக்கிய மிகச்சிறந்தது
உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று அர்த்தம்!’
‘அன்பு, அச்சம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை:
இவற்றால் ஆனதே மனிதம்.
இவையே அதன் அடையாளம், லயம், தன்மை.’
‘எவ்வளவு வருத்தமாக, எவ்வளவு மோசமாக
எவ்வளவு கிறுக்குத் தனமாக இருந்தது!
ஆனால் எப்படி அது இனிமையாக இருந்தது?’
><><><