Sunday, May 24, 2020

என் இதயம் அடித்துக் கொள்கிறது...

அப்பா அறுபதுகளின் பிரபல மியூசிக் டைரக்டர். அற்புதமான பாடல்களை அந்தக்காலத்தில் வழங்கியவர். கண்ணைக் குளமாக்கும் ட்யூன்கள் முதல் காதல் சிலிர்க்கும் டியூன்கள் வரை நம் காதுக்குத் தந்தவர். ஒரு மகன் பிரபல நடிகர், தயாரிப்பாளர். அடுத்த மகன் அடியொற்றியது அப்பாவின் இசை வழியை. அவரைப்போலவே பிரபல மியூசிக் டைரக்டர்... தெரிந்திருக்கும் யார் என்று. ரோஷன்.. ராகேஷ் ரோஷன்.. ராஜேஷ் ரோஷன்.
Rajesh Roshan.. மே 24. பிறந்த நாள்.
மலையாளத்தில் லட்சுமி நாயகியாக நடித்த முதல் படம் ‘சட்டைக்காரி’. சக்கைப்போடு போட்டது. மாஸ்டர் தேவராஜன் தான் மியூசிக். அற்புதமான ட்யூன்கள். ஆங்கில பாடலொன்றுடன். அது இந்தியில் அதே லட்சுமியுடன் ‘Julie’ ஆனபோது அதி அற்புத ட்யூன்களைக் கொடுத்தார் ராஜேஷ் ரோஷன். அந்த ஆங்கிலப் பாடலைச் செல்லும்போதே மை ஹார்ட் இஸ் பீட்டிங்.. “My heart is beating…” பாடல்தான் அது. கிஷோர் பாடும் “Dil Kiya Kare..” புதுவிதமான பீட்ஸுடன் பீடு நடை போடும். அந்த வருட ஃபில்ம் ஃபேர் அவார்ட்!
ஆர். டி. பர்மனை ‘Chote Nawab’இல் அறிமுகப்படுத்திய பிரபல காமெடி நடிகர் மெஹ்மூத் தான் இவரையும் அறிமுகப்படுத்தினார் தன் ‘Kunwara Baap’ -இல். அந்த டைடில் ஸாங்… ‘நான்தான் குதிரை.. இதுதான் வண்டி..’யில் ஏறியவர் சென்றது வெகு தூரம். never looked back. படத்தின் கடைசியில் வரும் சோகப் பாட்டு, (“Aare Aaja Nindiya..”) நௌஷத், சங்கர் ஜெய்கிஷன் ரேஞ்சுக்கு இருந்தது.
Loot Maar, Mr Natwarlal, Kala Pathar, Des Parades… என்று ஆரம்பித்து வெற்றிப் பாடல்கள். My Fair Lady ஸ்டைலில் தேவ் ஆனந்த் எடுத்த பாடல் படத்தில் (‘Man Pasand’) தென்றலில் மிதக்கும் பாடல்களின் அனுபவம்...
முக்கிய திருப்பம்... ராகேஷ் ரோஷனின் மகன் ஒரு கதா நாயகனாக உருவெடுத்தார். Hrithik Roshan! லாஞ்சிங் படமான ‘Kaho Na Pyar Hai’ யில் சித்தப்பா போட்டுக் கொடுத்தார் சத்தான எட்டு ட்யூன்களை. அடுத்த பிலிம்பேர் அவார்ட்! விரைந்தோடி ரசிகர்கள் வாங்கியது ஒரு கோடி இசைத்தட்டுகள்.
பின் (முன்?) குறிப்பு: ”Jo Wadha Kiya Woh Nibhana Padega..” 1963 ஆம் வருடம் பிலிம்பேர் அவார்ட் வாங்கிய Binaca Geet Mala வில் பலப்பல வாரம் முதல் பாடலாக பவனி வந்த ‘தாஜ்மஹால்’ படப் பாடல் நினவிருக்கா? அப்பா ரோஷனுடைய அனேக முத்துக்களில் ஒன்று!

Wednesday, May 20, 2020

நானே நானாக...

விபத்தில் அடிபட்டு தன் ஒரு காலில் கட்டுப்போட்டுக் கொண்டு வீல் சேரில் நாளை ஓட்டுகிறார் போட்டோகிராபர் ஜெஃப். அவ்வப்போது வந்து பார்க்கும் காதலியும் நர்சும்... நேரம் போகணுமே? அபார்ட்மெண்ட் ஜன்னலோரம் பைனாகுலரில் எதிர் ஜன்னல்களில் மற்றவர்கள் வாழ்க்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு உதிக்கிறது ஒரு விபரீத சந்தேகம். இடி மழையின் இடையே கேட்டதே ஒரு சின்ன அலறல், என்ன அது? நோயாளி மனைவியைக் கவனித்துக் கொண்டிருக்கும் அந்த வீட்டுக்காரன், தோர்வால்ட், நீளக் கத்தி ஒன்றை கழுவுகிறானே ஏன்? ஒரு பெரிய ட்ரங்கு பெட்டியை வீட்டிலிருந்து அவன் நகர்த்துவது எதற்காக இருக்கும்? சத்தமில்லாமல் மனைவியை காலி பண்ணி விட்டான் என்று சந்தேகம்! துப்பறியும் நண்பனிடம் சொன்னால், விசாரித்து, அவள் ஊருக்குப் போயிருப்பதாகத் தெரிகிறது என்கிறான்.
பக்கத்து வீட்டுக்காரர் நாயை யாரோ கொன்றுவிட ஜெஃப்புக்கு மட்டும் சந்தேகமே இல்லை அது அவன் தான் என்று. ‘உடலை புதைத்த இடத்தை நாய் தோண்ட ஆரம்பித்திருக்கும், அதான்!’ பொய்யாக ஒரு போன் கால் கொடுத்து அவனை வீட்டிலிருந்து அப்புறப்படுத்துகிறார். அந்த நேரத்தில் காதலி சுவர் ஏறி குதித்து அவன் வீட்டில் நுழைந்து ஆராய்கையில் அவன் வந்துவிடுகிறான். காதலியை காப்பாற்றணுமே? வேறு வழியின்றி போலீஸுக்கு போன் செய்கிறார் ஜெஃப். அவர்கள் வந்து அவளைப் பிடிக்க, விரல்களைப் பின்புறமாக வைத்து ஜெஃப்புக்கு சைகை காட்டுகிறாள் காதலி. விரலில் தோர்வால்டின் மனைவியின் கல்யாண மோதிரம். பார்த்துவிடுகிறான் தோர்வால்ட் இவர் பார்ப்பதை.
அடுத்து என்ன? ஜெஃப்பைத் தீர்த்துக்கட்ட இரவில் அவர் வீட்டில் நுழைகிறான் அவன். தன் காமிராவின் ஃபிளாஷ்களை அவன் முகத்தில் அடித்துத் தப்ப முயல்கிறார் வீல் சேர் ஜெஃப். முடியவில்லை. தள்ளி விடுகிறான் அவரை ஜன்னல் வழியே. சரியாக போலீஸ் வந்து சேர, மாட்டிக் கொள்கிறான். கொலை செய்ததை ஒப்புக் கொள்கிறான்.
கடைசி காட்சி: அதே ஜன்னல் ஓரம். அதே வீல்சேரில் ஜேம்ஸ். ‘இரண்டு காலிலும்’ கட்டுப் போட்டுக் கொண்டு!
ஹிட்ச்காக்கின் பிரபல ‘Rear Window’’வில் ஜெஃப் ஆக வந்து, அந்த வீல் செயரில் நம்மையும் நகர வைத்தவர்...
James Stewart.. மே 20. பிறந்த நாள்!
ஒரு மில்லியனில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 36 மில்லியன் குவித்தது. (ஏன் எல்லோரும் சினிமா எடுக்க ஓடுகிறார்கள் என்று புரிகிறதா?)
‘பின் ஜன்னல்' தவிர இவர் பின்னியெடுத்த படம், ‘என்னவொரு அற்புதம், வாழ்க்கை!’ (‘What A Wonderful Life’) துடிப்பான நடிப்பு!
ஹிட்ச்காக்கின் ‘Vertigo’விலும் ஹீரோ இவரே. உயரம் என்றால் துயரம் அவருக்கு அதில். ‘Rope’ என்ற ஒரே ஷாட் ஹிட்ச்காக் படத்திலும்!
கையில் அடுத்த வேலைக்கான கட்டிடக் கலை டிகிரியை வைத்திருந்தவர், ஆரம்பத்தில் கலக்கியது கௌபாய் படங்களில். ஒரே தொப்பியுடன் என்பது விசேஷம்.
1934 இல் ‘Art Trouble’ முதல் படத்தில் நடித்தபோது டைட்டிலில் பெயர் வரவில்லை. ஆனால் 32 வயதில் ஆஸ்கார் வாங்கி விட்டார். ‘The Philadelphia Story’ க்காக வாங்கிய அந்த ஆஸ்காரை அப்பாவின் இரும்பு கடையில் பார்க்க வைத்திருந்தார்.
இரண்டாம் உலகப்போர். அப்போது இவர் பிரபல நடிகர். அழைப்பு வரவே, குறைந்த 5 பவுண்டை நிறைய சாப்பிட்டு சரியாக்கிவிட்டு ஏர் ஃபோர்ஸில் சேர்ந்தார். அப்படி என்ன எழுதினாரோ தெரியவில்லை, அப்பா அப்போது கொடுத்த கடிதத்தை தப்பாமல் பாக்கெட்டில் வைத்திருந்தாராம் கடைசிவரை. பிரிகேடியர் ஜெனரல் ஆன ஒரே நடிகர்!
திலீப் குமாருக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு 40 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் இவருக்கு அளித்தது 50 திரை சாதனையாளர்களின் மூன்றாவது ரேங்க் என்றால், பிரிமியம் மேகஸின் அளித்தது மாபெரும் நடிகர்களில் ஒன்பதாவது இடம்.
Quote?
‘I don't act, I react….பாத்திரங்களுக்கு உள்ளேபோய் குழப்பம் ஏற்படுத்திக் கொள்வதில்லை நான். கொஞ்சம் கொஞ்சம் மாற்றி, நான் ஆகவே எல்லா படத்திலும் வருகிறேன்!’

Tuesday, May 19, 2020

எத்தனை அற்புதம், வாழ்க்கை!


உலகம் சுற்ற வேண்டும் என்பதுதான் ஜார்ஜின் லட்சியம். ஆனால் தன் ஒரே கிராமத்தை விட்டு போக முடியாத நிலை. அப்பா விட்டுச்சென்ற வங்கியை நடத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் ஊரை விழுங்கி ஏப்பம் விடக் காத்திருக்கும் வட்டி கடைக்காரன் பாட்டர் கைக்குப் போய்விடும். பொறுப்பை ஏற்கிறான். என்ன துரதிர்ஷ்டம், பேங்க் பணத்தை அவர் மாமா தவறவிட அது பாட்டர் கைக்கு போய்விடுகிறது. பணத்தை வைத்தாக வேண்டும் பேங்கில், இல்லாவிடில் போலீஸ்தான்.
செத்துப் போவதுதான் ஒரே வழி என நினைக்கிறான். குடும்பமும் தன் இன்சூரன்ஸ் பணத்தை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கும் என்று பாலத்திலிருந்து ஆற்றில் குதிக்கிறான். அவனை அழைத்துப் போக வந்திருக்கும் தேவதை க்ளாரென்ஸ், அவன் உலகில் இல்லாவிடில் என்னவெல்லாம் ஆகியிருக்கும், ஆகும் என்று அவனுக்கு வரிசையாகக் காட்டுகிறது. எல்லாம் பாட்டர் கைக்குப் போய் அந்தக் கிராமமே குட்டிச் சுவராகிறது. அவன் குடும்பம் அல்லாடுகிறது. எல்லாம் பார்த்தவன் நான் வாழணும் வாழணும் என்று கத்துகிறான், பாலத்தின் மேலிருந்து. ஓடிவரும் போலீஸ் நண்பர் அவன் உதட்டிலிருக்கும் பழைய வடுவைக் காட்ட இன்னும் உயிரோடிருப்பதை அறிந்து வீட்டுக்கு ஓடுகிறான். ஊர்மக்கள் அனைவருமே அவன் வீட்டுக்கு வந்திருக்கின்றனர் அவரவருக்கு முடிந்த தொகையுடன், அவனைக் காப்பாற்ற. வாழ்க்கைக்குத் திரும்புகிறான். தேவதை தன் சிறகுகளை, பதவி உயர்வு, பெறுகிறது.
உலகின் தலை சிறந்த படங்களில் ஒன்றான ‘It’s a Wonderful Life (1946) படத்தின் இந்த அழகிய அதிசயக் கதையை தயாரித்து இயக்கியவர் உலகப் புகழ் பெற்ற இத்தாலிய அமெரிக்க இயக்குநர்.
Frank Capra… மே 18. பிறந்த நாள்!
ஆறு முறை நாமினேஷன் பெற்று மூன்று முறை பெஸ்ட் டைரக்டர் ஆஸ்கார் வாங்கியவர். (‘It Happened One Night’, ‘Mr Deeds Goes to Another Town’, ‘You Can’t Take It with You.’)
கேப்ராவுக்குப் பிடித்த படமும் இதுதான். ஜார்ஜ் பாத்திரத்தில் வெளுத்து வாங்கியவர், அவர் தான் நடிக்க வேண்டுமென்று கேப்ரா விரும்பிய ஜேம்ஸ் ஸ்டீவர்ட்.
இந்தக் கதையைத் தழுவி தமிழிலும் ஒரு படம் வந்தது 1954 இல். ‘முதல் தேதி.’ அந்த அசத்தலான ரோலில் உருக்கமான நடிப்பைத் தந்தவர்.. வேறு யார், சிவாஜிதான்.
இந்த 135 நிமிடப் படத்துக்கு உபயோகித்த ஃபிலிம் சுருள் 3,50,000 அடி...  போட்ட கிராமத்து ஸெட் பரப்பு 89 ஏக்கர்.
அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் No.1 All Time Inspirational Movie யாகத் தேர்ந்தெடுத்த இந்தப் படத்தைக் கதையாகமுதலில் எழுதிய Philip Stern, யாருமே பப்ளிஷ் செய்யத் தயாராக இல்லாததால் சின்ன புக் லெட் ஆக 200 பிரதி அடித்து கிறிஸ்துமஸ் வாழ்த்தாக அனுப்பி வைத்தாராம் நண்பர்களுக்கு.