Friday, December 20, 2019

அதிர்ஷ்ட சக்கரம்...

மாமாவின் குதிரை வண்டிக் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அவர். வண்டியின் எதிர்காலம் சக்கரத்திலும் சக்கரத்தின் எதிர்காலம் ரப்பரிலும் இருக்கிறது என்றும் கண்டுகொண்டார் அவர். ஓசைப்படாமல் ஒரு பேடண்ட் வாங்கிக் கொண்டார் ரப்பர் டயருக்கு.   நடத்த ஆரம்பித்த தன் குதிரை வண்டிக் கம்பெனியை 20000 டாலருக்கு விற்று டயர் கம்பெனி தொடங்கினார். உருள ஆரம்பித்தது எதிர்காலம். உயரத்தில் கொண்டு சேர்த்தே ஓய்ந்தது.

ஓடிவந்து பார்த்த ஹென்றி ஃபோர்ட் ஒரு ஜயண்ட்  சைஸ் ஆர்டர் கொடுக்க சுழன்றது அதிர்ஷ்டச் சக்கரம். 

ரிம்மோடு சேர்த்து கழற்றும் டயரை இவர் கண்டு பிடித்தாரோ, ஸ்பேர் டயர் பிறந்ததோ.. ட்ரிம்மாக வளர்ந்தது Firestone Tyre கம்பெனி.

ரப்பர் விலை உயர்ந்தபோது தளராமல் கண்ட தீர்வு: சொந்த ரப்பர் ப்ளாண்டேஷன்.

1967 இல் அமெரிக்காவின் மாபெரும் பிசினஸ்மேன்…

64 வது வயதில் தன் டயர் கம்பெனியிலிருந்து ரிடயரானார்.

Harvey Firestone.. இன்று பிறந்தநாள்!

Thursday, December 19, 2019

அப்பாவிடம் வாங்கிய 500 டாலர்..


அப்பாவிடம் வாங்கிய 500 டாலரில் ‘Firelight’ என்றொரு படத்தை எடுத்தார் அந்த இளைஞர். இப்ப அவரது லேட்டஸ்ட் படம் (Ready Player One) மூணே வார வசூல் 500 மில்லியன் டாலர். 
Steven Spielberg... இந்தமாதம் பிறந்த நாள்!
‘Jaws’ -ல் வாயைப்பிளந்து கொண்டு வந்த சுறாமீனை வாயைப் பிளந்து கொண்டு பார்த்தோம்.E.T.- யில் கை நீட்டிய அந்த U.F.O -வோடு கை குலுக்கினோம். Jurassic Park -ல் உலாவினோம். எங்கெங்கோ அழைத்துப் போனார் நம்மை.
காமெடி கார்ட்டூன் படமும் (Tin Tin) எடுப்பார். வரலாறும் (Lincoln) எடுப்பார். ஒரு motivation கிடைக்கணும் அந்த சப்ஜெக்டில், உடனே எடுக்கத் தொடங்கி விடுவேன் படத்தை என்பார்
அந்தக் காலத்தில் அனைவரையும் சீட் நுனியில் உட்கார வைத்ததே, Detective Columbo டி வி செரீஸ்? அது இவர் இயக்கியதுதான்.... 21 வயது பையனா என்னை டைரக்ட் பண்ணுவதுன்னு ஆதங்கப்பட்ட நடிகை Joan Crawford நாலைந்து ஸீனில் இவர் திறமையைப் பார்த்துவிட்டு புரொட்யூஸருக்கு நன்றி சொன்னாராம்.
எத்தனையோ ஜனரஞ்சக ஹிட் கொடுத்தாலும், 32 ஆஸ்காரை அவர் படங்கள் வாங்கிக்கொண்டாலும், இயக்குநருக்கான ஆஸ்கார் இவருக்குக் கிடைத்ததென்னவோ ரெண்டாம் உலகப்போரை வைத்து எடுத்த ரெண்டு படங்களுக்குத்தான். ‘Saving Private Ryan’ & எல்லா நல்லபட list-லும் இடம் பெறும் ‘Schindler’s List’
பத்து பில்லியனைத் தாண்டிவிட்டது அவரது படங்களின் கலெக்‌ஷன். அவரது மதிப்பும் மூன்றரை பில்லியனை! Universal Theme Park - இன் ஒவ்வொரு டிக்கட் காசிலிருந்தும் ஒரு துளி அவருக்குப் போகிறதாம்.
><><

Thursday, August 29, 2019

அங்கும் இங்கும்.. (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 134

"ஒரு பக்கம் மட்டுமே கேட்டு ஒரு முடிவுக்கு வர்றது, அவங்க எத்தனை வேண்டியவங்களா இருக்கட்டும், ரிஸ்க்தான் இல்லையா?" என்றார் வாசு.
"என்ன நடந்திச்சு? யார் அது?" என்றாள் ஜனனி.
"ஒருத்தரில்லை, ரெண்டுபேர்.  சொல்றேன். முதல்ல நம்ம சேகர். கொஞ்ச நாளாவே சொல்லிட்டிருந்தான்... அவன் வீட்டு முன் போர்ஷனை வாடகைக்கு விட்டால் கொஞ்சம் சேமிப்பாகும்னு எவ்வளவோ முயற்சி பண்ணியும் சரியான ஆட்கள் கிடைக்கலேன்னு... காரணம் வர்ற எந்தக் குடும்பத்தையுமே மைதிலிக்கு பிடிக்கலேன்னு... நானும் வேலை மெனக்கெட்டு அவனுக்கு பல யோசனைகளை சொல்லியிருக்கேன். நேத்து மைதிலியோடு அதைப்பத்திப் பேச சந்தர்ப்பம் கிடைச்சப்பதான் தெரிஞ்சது நடந்ததே வேறேன்னு.’
”என்ன சொன்னாள்?”
”அவளுக்கு  ஒண்ணும் பிடிக்காம போகலியாம். துணைக்கு ஒரு குடும்பம் இருந்தால் நல்லதுன்னு நினைக்கிறாள் அவள். ஆனா சேகர்தான் அதை கௌரவக் குறைச்சல்னு நினைச்சு அதையும் இதையும் சொல்லி தள்ளிப் போடறானாம். தயங்கறானாம். என்னத்தை சொல்ல?”
”அடுத்ததை!” என்றாள்.
அவளை முறைத்துவிட்டு தொடர்ந்தார்.
”அடுத்தது நம்ம கண்ணன்.. ஊரிலிருக்கிற அவங்க அப்பா அம்மாவை உன்னோட  இங்கேயே வெச்சுக்கலாமே, உதவியா இருக்குமேன்னு கேக்கிறப்பல்லாம், இங்கே எங்களுக்கு எந்த உதவியும் தேவையில்லை, வந்தால் அவங்களையும் சேர்த்து கவனிச்சுக்க நம்மால முடியாது, அவங்க அங்கேயே இருந்துக்கறதுதான் சரிப்பட்டு வரும்னு எப்பவும் சொல்வான். நானும் அதை நம்பினேன். நேத்து அவங்கப்பாவை ஊரிலே பார்த்தப்பதான் தெரிஞ்சது விஷயம். இவன் கூப்பிட்டுட்டுதான் இருக்கானாம் வற்புறுத்தி. அவங்கதான் டவுன் நமக்கு ஒத்துவராதுன்னு வரலையாம். வீணா ஜம்பத்துக்கு என்கிட்ட அப்படி சொல்லியிருக்கான்... அதான் சொன்னேன்.  எத்தனை பழகினவங்களாயிருக்கட்டும். அவங்க சொல்றதை அப்படியே நம்பிவிடக் கூடாது... ஒரு விஷயத்தை சொல்றது அவங்க விருப்பப்படியோ அல்லது சுய நல நோக்கத்திலோதான். இந்த பாயிண்டைத் தெரிஞ்சுக்க  எனக்கு இத்தனை நாளாயிருக்கு.”
”அதாவது, தப்பான பாயிண்டை!”
”என்னசொல்றே நீ?”
”பின்னே என்ன சொல்றது... சேகர் சொன்னது பொய்யாக இருக்கலாம். தன் ஈகோவுக்காகவோ இமேஜுக்காகவோ அப்படி ஒரு சப்பைக்கட்டு கட்டியிருக்கலாம். அதே சமயம் கண்ணன் மேட்டரை எடுத்திக்கிட்டா அவங்கப்பா சொன்ன மாதிரி தான் நடந்திருக்கணும்னு எப்படி தீர்மானிக்கப் போச்சு? கண்ணன் சொன்னது உண்மைதான். மகனை விட்டுக் கொடுக்காமல் அவங்க பேசியிருக்காங்க. என்ன இருந்தாலும் பெத்தவங்க இல்லையா... மூணாம் மனுஷனான உங்ககிட்டே எப்படி மகனை விட்டுக் கொடுப்பாங்க? மைதிலிக்கு நீங்க சித்தப்பா. அதனால அவள் மனசிலிருக்கிறதை மறைக்காம சொல்லிட்டா. இல்லேன்னா அவளும் தன் கணவனை விட்டுக் கொடுத்துப் பேசியிருக்க மாட்டாங்கன்னுதான் நினைக்கிறேன்.”
”நீ என்ன சொல்ல வர்றே, நான் இப்ப கண்டுபிடிச்சது..”
”இப்படி எதையும் கண்டு பிடிக்காதீங்கன்னுதான்..”
><><
('அமுதம்' டிச.2015 இதழில் வெளியானது)