Tuesday, August 6, 2013

சந்தோஷ வியப்பு...





அன்புடன் ஒரு நிமிடம் – 40

 

முகமே சொல்லிற்று முன்கதைச் சுருக்கத்தை. மூன்று நாளாகியும் சரியாக பேசவில்லை ஜனனி. சென்னைக்குப் போய் வந்த நாளிலிருந்தே!  வாசுவுக்கு வேலை ஓடவில்லை. என்னவோ அவர் செய்தது பிடிக்கவில்லை. கேட்டுவிட வேண்டியதுதான்.

கேட்டார்.

“பின்னே என்ன நீங்க? ஒவ்வொரு தடவை சென்னைக்கு போகும்போதும் நான் படிச்சு படிச்சு சொல்லி அனுப்பறேன். அப்புறமும் இப்படிப் பண்ணிவிட்டு வந்தா எப்படி? அவன் என்ன நினைப்பான்?”

“இதுக்கு நீ சொல்லாமலே இருந்திருக்கலாம்.”

“புரியலியா? எதுதான் உங்களுக்கு உடனே புரிஞ்சது? மாசத்தில ஒரு தடவையாவது உங்க வேலையா சென்னைக்குப் போறீங்க. ஒவ்வொரு தடவையும் அங்கே உங்க சின்னத் தம்பி முருகேஷ் வீட்டில தங்கறீங்க. அவன் வீடு தொலைவா அம்பத்தூர்ல இருக்கு. ரெண்டே ரூம்ல சின்ன வீடு. அவங்களே அஞ்சு பேர். ராத்திரி தூங்க சோபாவிலதான் சரியணும். வெந்நீர் போட ஒரு ஹீட்டர்? வேர்வையைப் போக்க ஒரு கூலர்? நேரம் போக்க ஒரு டிவி? ஒண்ணும் கிடையாது. வேலைக்குப் போய்வந்தா அவன் ட்யூஷன், இலக்கிய கூட்டம்னு றெக்கை கட்டி பறந்துட்டே இருப்பான், நின்னு பேச நேரமில்லாம. அவன் மனைவி எம்பிராய்டரி, கைவினைப்பொருள் செய்யறதுன்னு சதா ஓடிட்டிருப்பாள். ஒரு சின்ன பைக்தான் வெச்சிருக்கான். உங்களை அங்கே இங்கே அழைச்சிட்டுப் போகிறதுக்கு வசதி அறவே இல்லை.”

“உண்மைதான்!”

“உங்களுக்கே தெரியுதில்லே? அதே சமயம் உங்க பெரிய தம்பி ப்ரேம் பக்கத்தில நுங்கம்பாக்கத்தில இருக்கிறான். விஸ்தாரமான பெரிய வீடு. நீங்க போனால் தங்க ஏசி ரூம்.  ஹீட்டர். எல்.இ.டி டிவி.. ரெண்டு கார். அவனும் எப்பவும் பிரீயா தான் இருப்பான், அரட்டைக்கு அரட்டை. இல்லே அவனே எங்கே வேணா அழைச்சிட்டு போவான். இத்தனை வசதி இருந்தும் நீங்க அங்கே தங்கலேன்னா எப்படி?”

“அதான் அங்கே தங்கலே!” என்றவரை வியப்புடன் பார்த்தாள்.

“புரியலியே?”

“எதுதான் உனக்கு உடனே புரிஞ்சது?” சிரித்தார்.  “முருகேஷ் வீட்டில வசதி கம்மிதான். ஆனா அந்த வட்டத்துக்குள்ளே அவங்க இயங்கறதைப் பார்த்தா சந்தோஷமான வியப்பா இருக்கும். அவனும் அவளும் பிள்ளைகளும் எப்பவும் சுறுசுறுப்பா ஓடியாடி விஷயங்களைச் செய்கிறதைப் பார்க்கிறபோது உடனே அந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும். நாமும் அதுபோல இருக்கத் தோணும்.. ஊருக்கு வந்ததும் அப்படி இருப்பேன். ப்ரேம் வீட்டில எல்லா வசதியும் இருக்குதுதான். ஆனா அங்கே நாம சும்மாதான் இருக்கணும். எல்லாமே கேட்டதும் கைக்கு வந்துரும்.. பணத்தையும் சரி, நேரத்தையும் சரி அவங்க வீணடிக்கிறதைப் பார்த்தால் கவலையான வியப்பா இருக்கும். அது என்னையும் பாதித்து விடலாம் இல்லையா? அதான் நான் அதை தவிர்த்து விடறேன்.”
பதிலில்லை.

“…இருந்தாலும் இப்ப நீ சொல்றதை யோசிக்கிறப்ப... அவன் தப்பா நினைச்சுக்குவானோ? இனிமேல் அங்கேயே போய்த் தங்கிடறேன்.”

“வேணாங்க, உங்க வழக்கத்தை மாற்றவேண்டாம். கேட்டால் நான் ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கறேன்.”

('அமுதம்' ஏப்ரல் 2013 இதழில் வெளியானது.)

<<>> 
 (படம்- நன்றி: கூகிள்)

Tuesday, July 16, 2013

நல்லதா நாலு வார்த்தை... 12


‘வாழ்வினூடே

வழி நடக்காதீர்,

வாழ்வினூடே

வளர்ந்திடுவீர்!’

-Eric Butterworth

(‘Don’t go through life, grow through life.’)

<>

‘விரும்புவதை செய்வதல்ல,

செய்ய வேண்டியதை

விரும்புவதே

அளிக்கிறது வாழ்க்கைக்கு

அளவிலா பேறு.’

-Goethe

(‘It is not doing the thing we like to do, but liking

the thing we have to do, that makes life blessed.’)

<>

‘எதிலும் கவலை கொள்கிறவருக்கு

என்ன ஒரு சௌகரியம் எனில்,

நினைத்தது சரிதானென்ற

நிரூபணமோ,

சந்தோஷ அதிர்ச்சியோ

கிடைத்தபடியே இருக்கும்!’

- George Will

(‘The nice part about being a pessimist is that you are constantly

being either proven right or pleasantly surprised.’)

<>

‘அனைத்தையும்

சரிப்படுத்துவதல்ல நம் வேலை;

அனைத்தையும்

சரியாகப் பார்ப்பது!

- Eric Butterworth

(‘Our job is not to set things right but to see them right.’)

<>


‘கண்டுகொண்ட அழகு

தொலைவதில்லை,

கடவுளின் வண்ணங்கள்  

மறைவதில்லை.’

- John Greenleaf Whittier

(‘Beauty seen is never lost,

God’s colours all are fast.’)

<>

‘பொறுமையின்மை ஓர்

நற்குணம்,

அதை நாம் நம்மிடம்

பிரயோகிக்கும் வரையில்.’

- Rod McKuen

(‘Impatience can be  a virtue, if you practise it on yourself.')

<>

‘உலகின் பொய்யர்களில்

மிக மோசம்,

சில சமயம், 

நம் பயங்களே.’

-Rudyard Kipling

(‘Of all the liars in the world, sometimes

the worst are your own fears.’)

<<<<>>>>

(படம்- நன்றி: கூகிள்)

Wednesday, July 10, 2013

வீட்டுக்குள் வீடு


அன்புடன் ஒரு நிமிடம் – 39

“எப்ப எனக்கு மாத சம்பளம் போடறதாயிருக்கே கிஷோர்? ஒரு ஐயாயிரமாவது போட்டுக் கொடு.”

“எதுக்கு மாமா?”

“உங்க சின்ன சின்ன பிரசினைகளை எல்லாம் தீர்த்து வைக்கறதுக்குத்தான்!” என்றார் ராகவ்.

“ஓ, புகார்ப் பட்டியல் நீட்டிவிட்டாளா யாழினி?”

“ஒண்ணே ஒண்ணு!”

“என்ன அந்த ஒண்ணு?”

 “ஒண்ணுமில்லே, அஞ்சரை மணிக்கு ஆபீஸ் வேலை முடிஞ்சாலும் நீ வீட்டிலேயே இருக்கிறதில்லேங்கிறது அவள் குற்றச்சாட்டு!”

“அவ அபாண்டமா பொய் சொல்றா மாமா! நம்பாதீங்க.”

“அப்ப நீ என்ன சொல்றே?.”

“சொல்றதென்ன? நீங்களே வந்து பாருங்க. அஞ்சே முக்காலுக்கு நான் வீட்டில் ஆஜர். அப்புறம் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகர்றதே இல்லை.”

“அப்படீங்கறே?”

“ஆமா. எப்ப வேணா எப்படி வேணா செக் பண்ணிக்கலாம் நீங்க!”

“ஆல்ரைட். நான் கன்ஃபர்ம் பண்ணி விட்டுப் பேசறேன்.”

அடுத்தவாரம் ஆரம்பித்தார்.  திங்கள்கிழமை மாலை சரியாக ஆறு மணிக்கு லேண்ட் லைனில் கூப்பிட்டார்.

“வந்துட்டேன் மாமா. பத்து நிமிஷம் ஆச்சு. காபி சாப்பிட்டுட்டு இப்பதான் நெட்ல உட்கார்ந்தேனாக்கும். ஓகே தானே?”

“சரிப்பா.”

செவ்வாய்க் கிழமை ஏழு மணிக்கு அழைத்தார். அவனே எடுத்தான்.

“ஆஜர்.”

“எப்ப வந்தே? என்ன பண்றே?”

சொன்னான். “அதே அஞ்சே முக்கால். ஃபிரண்ட் திலீப் வந்தான், பேசிட்டிருக்கேன். யாழினி இதோ காபி எடுத்து வந்திட்டிருக்கா. கூப்பிடவா? அவளையே கேட்கிறீங்களா?”

புதன் எட்டு மணிக்கு ஒரு திடீர் விசிட் அடித்தார். வீட்டில்தான் இருந்தான் ஸ்டார் மூவீஸ் சேனலில் ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டு.

வியாழன் ஒன்பதே காலுக்கு... “ஒரு சிறுகதை எழுதிட்டிருக்கேன், எழுதினவரை படிக்கிறேன், கேட்கிறீங்களா மாமா?”

வெள்ளி ஏழரைக்கும். “உள்ளேதான் இருக்கிறாங்க, அப்பவே வந்துட்டார் மாமா. செல்போனில் யார்கிட்டேயோ பேசிக்கொண்டிருக்கிறார்,” என்றாள் கதவைத் திறந்த யாழினி.

பத்து நாளாக நினைத்தபோது போன், திடீர் விசிட் என்று மாற்றி மாற்றி பரீட்சித்த போதும் பையன் வீட்டிலேயேதான் அகப்பட்டான்.

“தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டியதுதான் மாமா நீங்க.” என்று சிரித்தான் அடுத்து அவரை சந்தித்த போது. “யாழினிக்கு புத்தி சொல்லுங்க. எனக்கு நம்பிக்கையில்லை கேட்பாள்னு!”

“ஆமா, புத்தி சொல்ல வேண்டியதுதான்!” என்றார். “உனக்கு!”

“எனக்கு ஏன்?” அவள் சொன்னது அல்லவா தவறு என்று கேட்டது அவன் புருவம்.

“அவள் சரியாய்த்தான் சொல்லியிருக்கிறாள்.”

“அதெப்படி? நான் அஞ்சரைக்கே வீட்டுக்கு வந்துவிடறதை நீங்களே பல முறை கண்பர்ம் பண்ணிட்டீங்களே?”

“வீட்டுக்கு வந்து விடுகிறாய். ஆனால் யாழினியைப் பொறுத்தவரை நீ வீட்டுக்குள் வரவில்லை.”

“என்ன சொல்றீங்க?”

“புரியலையா?  வீட்டுக்குள் நீ உன் உலகம் என்று ஒன்றை கட்டிக்கொண்டு அதனுள் அல்லவா இருக்கிறாய்? வரும் நண்பனுடன் அரட்டை அடித்துக் கொண்டோ டிவியில் ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டோ செல்போனில் பேசிக்கொண்டோ இண்டர்நெட்டில் மூழ்கியோ கவிதை எழுதிக் கொண்டோ இருப்பதை எப்படி வீட்டில் இருப்பதாய் சொல்கிறாய்? அவளோடு நேரம் செலவிடுவதாய் நினைக்கிறாய்?”

அவனிடமிருந்து பதிலில்லை.

“யோசிக்கிறே, அது போதும்!” என்றார்.  
('அமுதம்' ஏப்ரல் 2013 இதழில் வெளியானது)

<<<>>>
(படம்- நன்றி: கூகிள்)