Saturday, October 14, 2023

ரெகார்ட்! ரெகார்ட்!...

 1950-களில் இசை ரசிகர்களின் காதுகளைக் குளிர்வித்தவர்... அந்தப்பக்கம் அமெரிக்காவில் எல்விஸ் ப்ரெஸ்லி அமோக வரவேற்புடன் எழுந்தபோது இந்தப் பக்கம் பிரிட்டனில் இவர்... 25 கோடி ரெக்கார்டுகள் விற்று ரெக்கார்ட் படைத்தவர்.

Cliff Richard... இன்று பிறந்தநாள்... இனிய வாழ்த்துக்கள்!
நினைவிருக்கிறதா அந்தப் பாடல்? “We are all Going on a Summer Holiday…” பஸ் ஒட்டியபடியே பாடிக் கொண்டு வருவாரே, இங்கேயும் சக்கைப் போடு போட்ட அந்த ‘Summer Holiday’ படத்தில்? அப்புறம் ‘The Young Ones’ படத்தில் title song? அது ஒன் மில்லியன் விற்றது...
உலக அளவில் அதிக அளவில் Top 10 இல் இடம் பெற்றவை Cliff பாடல்களே. 65 முறை! அதில் பதினாலு முதலிடம். எந்தளவுக்கு டாப் ஸ்டார் என்றால் ஆனானப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் படங்களையே பின்னுக்குத் தள்ளிவிட்டன இவர் படங்கள் 1962, 63-இல். மேலே மேலே என்று இவரை எடுத்துச் செல்ல, ‘Take Me High’ தான் கடைசிப் படம்.
பீட்டில்ஸ் பாடல்கள் வந்து பீட் செய்தது வரை முதல் சீட் இவருடையதாக இருந்தது. பீட்டில் ஜான் லெனனுக்கு இவர்தான் பிடித்த பாடகர். இவரது ஆதர்ச பாடகர் எல்விஸ்.
நம்ம லக்னோவில் தான் பிறந்தார். தந்தை,தாய் வாழ்ந்தது இங்கேதான்.
நிழலாக உடன்வந்த ‘The Shadows’ 1961-இல் பிரிய நேர்ந்தபோது இவர் பாடிய தனிப்பாட்டு “When the Girl in Your Arms Is the Girl in Your Heart…” ஆனால் இவர் ஹார்ட்டில் எந்த பெண்ணும் இல்லை போலும், திருமணம் பண்ணவில்லை.
ஸர் பட்டம் பெற்றது 1995 இல்.
Still singing strong.... இன்றைக்கும் அதே இளமைத் துடிப்புடன் இவர் குரல்... 1979 இல் பாடி U.K. -இல் முதலிடம் பெற்று ஐந்து மில்லியன் விற்ற “We Don't Talk Any More…” பாடலை ஒரு நன்கொடைக்காக சமீபத்தில் வீட்டில் இருந்தே பாடியிருப்பது, அதே துடிப்புடன்.... இந்த மாத இறுதியில் பாடவிருக்கிற பாடல் "Music...The Air That I Breathe..."

Friday, October 13, 2023

எவ்ரிஒன்ஸ் ஃபேவரிட்!


நடிப்பதில் அவருக்கு துளி ஆர்வம் இல்லை. ஸ்டூடியோ லேபரட்டரியில் அசிஸ்டன்டாக தான்பாட்டுக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவரை பிடித்து தள்ளாத குறையாக கேமரா முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். புக் செய்திருந்த ஹீரா நடிகருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால். நடிக்க வேண்டியதோ பிரபல நடிகை தேவிகா ராணியுடன். தயங்கித் தயங்கி நடித்து முடித்தவர் லேபரட்டரியில் வந்து ரஷ் பார்த்தபோது அவருக்கே ஆச்சரியம்! அட, நன்றாகவே நடித்திருக்கிறோமே? அவருடனேயே அடுத்த படம் நடித்தபோது அந்த ‘அச்சுத் கன்யா’ உச்சத்துக்குக் கொண்டு போனது அவரை.
அசோக் குமார்… இன்று பிறந்த நாள்!
தாதா மோனி (சகோதர ரத்தினம்) என்று அன்போடு அழைக்கப்பட்டவர். இயல்பாக நடிக்கும் வெகு சில நடிகர்களில் ஒருவர்.
அவருக்கு நீங்கள் எந்த பட்டம் கொடுக்க நினைத்தாலும் அது பொருந்தும். பெஸ்ட் ஹீரோ... பெஸ்ட் வில்லன்... பெஸ்ட் ஃபாதர் காரக்டர்.... பெஸ்ட் காமெடி நடிகர்....
மள மளவென்று தேவிகா ராணியுடன் பல படங்கள்... அடுத்து லீலா சிட்னிஸுடன் வரிசையாக… மீனா குமாரியுடன் பதினேழு... நளினி ஜெய்வந்துடன் நாலைந்து... 1940 களின் அசைக்க முடியாத நாயகனாக.
நாயகன் இமேஜை உடைத்து ஆன்டி ஹீரோவாக முதலில் கலக்கியதும் அசோக் குமார்தான்.... படம்: ‘Kismet’. கண்ட அபார வெற்றியில் அது தெலுங்கிலும் தமிழிலும் (பிரேம பாசம்) ரீமேக்.. அடுத்து வந்த ‘Mahal’ சூபர் ஹிட் சஸ்பென்ஸ் படம்.. “Aayega.. Aanewala..” பாடலைப் பாடி லதா மிகப் பிரபலமானது இந்தப்படத்தில் தான்.
பிச்சுவாப் பக்கிரி ஷேக் முக்தார், ஜெயிலில் இருந்து தப்பிய பிரதீப் குமாருடன் சுற்றிக் கொண்டிருக்கும் போது பின்னால் சத்தமில்லாமல் வேவு பார்த்துக் கொண்டிருப்பார் அசோக் குமார். சி.ஐ.டி என்று நினைக்கும்போது சீஃப் வில்லனாக வெளிப்பட்டு நம்மைத் திகைக்க வைப்பார் ‘Ustadon Ki Udtad’ படத்தில். (‘வல்லவனுக்கு வல்லவன்’)
‘பாசமலர்’ ஹிந்தியில் ‘ராக்கி'யான போது சிவாஜி ரோலில் இவர். கிடைத்தது Filmfare அவார்ட். ‘க்ரஹஸ்தி' தமிழில் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ ஆனபோது இவர் ரோலில் சிவாஜி.
‘நானும் ஒரு பெண்’ இந்தியில் (‘Main Hun Ladkhi’) ரங்கராவ் ரோலை அதே கனிவுடன் அழகாக பண்ணியிருப்பார். இவரின் மாஸ்டர்பீஸ் ‘Jewel Thief’ பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
‘Mamta’ ‘Intaqaum’ ‘Kanoon’ ‘Bhai Bhai’ ‘Chitralekha’ ‘Bheegi Raat’....மறக்க முடியாத படங்கள். மறக்க முடியாத நடிப்பு.
இவர் ஊக்குவித்து பின்னால் மிகப் பிரபலமானவர்களில் மூன்று பேர் முக்கியமானவர்கள். ஷக்தி சமந்தா. இயக்கிய ‘Howrah Bridge’ அசோக் குமாரை ஸ்டைலிஷ் ஹீரோவாக்கியது. 2. பி.ஆர்.சோப்ரா. இவரை இயக்கிய ‘Gumrah’ அமோகமான பெயரை வாங்கித் தந்தது. 3.ரிஷிகேஷ் முகர்ஜி. இவரை இயக்கிய ‘Ashirvad’ படத்தில்தான் நேஷனல் அவார்டு கிடைத்தது இவருக்கு. (அதில் இவர் பாடிய ‘Rail Gadi...’ தான் திரையுலகின் முதல் rap song!)
பாம்பே டாக்கீஸ் தயாரிப்பாளர்களில் இவரும் இருந்த போது இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் தேவ் ஆனந்த். படம் ’Ziddi’ அதே படத்தில் அறிமுகமான மற்றொரு பிரபலர் பிரான்.
1987 -லிருந்து தன் பிறந்த நாளை கொண்டாடுவதை நிறுத்திவிட்டார். தம்பி கிஷோரின் மறைவு நாளாக அது ஆனதால்.
ஹோமியோபதி படித்திருந்த இவர், நோயுற்று காலை எடுக்கவிருந்த ஓர் இளம் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறாராம்.
பலரின் ஃபேவரிட் ஆக சிலர் இருப்பார்கள். இவர் எவ்ரி ஒன்ஸ் ஃபேவரிட்!

Tuesday, October 10, 2023

தொடர்ந்து மூன்று வருடம் ..

 1931. அந்த நடிகையின் முதல் ‘பேசும்’ படம் அது. ‘The Sin of Madelon Claudet.’ பிரிவ்யூ போட்டு பார்த்ததில் உதட்டைப் பிதுக்கினார்களாம். ஸ்கிரிப்டை ரிப்பேர் பார்த்தாயிற்று. காட்சிகளை மாற்றி எடுக்கலாமென இறங்கினார்கள். ஆனால் அடுத்த படத்தில் அவர் நடிக்க கமிட் ஆகிவிட்டது. இடையிடையே வந்து நடித்துக் கொடுக்க அவர்கள் சம்மதிக்கவில்லை. சோரவில்லை. அதை முடித்துவிட்டு வந்து இதில் நடித்தார். அந்த வருட ஆஸ்காரை வாங்கினார்.

Helen Hayes... இன்று பிறந்தநாள். (1900 - 93)

30, 40 களின் பிரபல நடிகை... திரையிலும் மேடையிலும்! நடித்த நாடகம் ஒன்று (Victoria Regina) தொடர்ந்து மூன்று வருடம் நடந்தது. Tony, Emmy, Grammy, Oscar என்று எல்லா அவார்டுகளையும் வாங்கிக்கொண்டவர்.
நடித்த மற்றொரு படம் ஹெமிங்வேயின் ‘A Farewell to Arms.’ மிகப் பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்ட நாவல். சுகம், துக்கம் இரு முடிவுகளும் வைத்து எடுக்கப்பட்டு ஊருக்கு தகுந்த மாதிரி திரையிட்டார்கள்.
அடுத்த ஆஸ்காரை 38 ஆண்டுகளுக்குப் பின் 'Airport' படத்துக்காக வாங்கினார், சிறந்த துணை நடிகையாக. அகதா கிறிஸ்டியின் மிஸ் மார்பிளாக நடித்தது 1985 இல் டி.வி.க்காக. (Murder with Mirrors)
1993 மார்ச் 17.. இரவு 8 மணிக்கு பிராட்வேயின் விளக்குகள் ஒரு நிமிடம் மங்கி மிளிர்ந்தனவாம், இவர் மறைவிற்கு அஞ்சலியாக.
Quotes? ‘நான் தேடும் சிந்தனைகளை புத்தகங்கள் அளிக்கின்றன. மருந்தும் பலமும் தருகின்றன. தைரியம் என்னை விட்டு நழுவும் போதெல்லாம் அவற்றைத் தேடிப் போகிறேன். அவை எனக்கு, ஏற்றுக்கொள்ளும் விவேகத்தையும் முயற்சியையும் மன விசாலத்தையும் கொடுக்கின்றன.’
‘ஓய்வெடுத்தால் துருப் பிடித்துப் போய்விடுவீர்கள்.’
‘பெற்றோரிடமிருந்து அன்பையும் சிரிப்பையும் எப்படி ஒவ்வொரு அடியாக முன்வைத்து போவது என்பதையும் கற்றுக் கொள்கிறோம். ஆனால் புத்தகங்களை திறக்கும்போது உங்களுக்கு சிறகுகள் இருப்பதைக் கண்டு பிடிக்கிறீர்கள்.'
‘10 இலிருந்து 70 வரைதான் வாழ்க்கையில் கஷ்டமான வருடங்கள்.’
‘நம்முடைய ஹீரோக்களைப் பற்றி பேசி மகிழ்கிறோம், நாமும் யாரோ ஒருவருக்கு விசேஷமானவர்தான் என்பதை மறந்து.’