நடிப்பதில் அவருக்கு துளி ஆர்வம் இல்லை. ஸ்டூடியோ லேபரட்டரியில் அசிஸ்டன்டாக தான்பாட்டுக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவரை பிடித்து தள்ளாத குறையாக கேமரா முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். புக் செய்திருந்த ஹீரா நடிகருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால். நடிக்க வேண்டியதோ பிரபல நடிகை தேவிகா ராணியுடன். தயங்கித் தயங்கி நடித்து முடித்தவர் லேபரட்டரியில் வந்து ரஷ் பார்த்தபோது அவருக்கே ஆச்சரியம்! அட, நன்றாகவே நடித்திருக்கிறோமே? அவருடனேயே அடுத்த படம் நடித்தபோது அந்த ‘அச்சுத் கன்யா’ உச்சத்துக்குக் கொண்டு போனது அவரை.
அசோக் குமார்… இன்று பிறந்த நாள்!
தாதா மோனி (சகோதர ரத்தினம்) என்று அன்போடு அழைக்கப்பட்டவர். இயல்பாக நடிக்கும் வெகு சில நடிகர்களில் ஒருவர்.
அவருக்கு நீங்கள் எந்த பட்டம் கொடுக்க நினைத்தாலும் அது பொருந்தும். பெஸ்ட் ஹீரோ... பெஸ்ட் வில்லன்... பெஸ்ட் ஃபாதர் காரக்டர்.... பெஸ்ட் காமெடி நடிகர்....
மள மளவென்று தேவிகா ராணியுடன் பல படங்கள்... அடுத்து லீலா சிட்னிஸுடன் வரிசையாக… மீனா குமாரியுடன் பதினேழு... நளினி ஜெய்வந்துடன் நாலைந்து... 1940 களின் அசைக்க முடியாத நாயகனாக.
நாயகன் இமேஜை உடைத்து ஆன்டி ஹீரோவாக முதலில் கலக்கியதும் அசோக் குமார்தான்.... படம்: ‘Kismet’. கண்ட அபார வெற்றியில் அது தெலுங்கிலும் தமிழிலும் (பிரேம பாசம்) ரீமேக்.. அடுத்து வந்த ‘Mahal’ சூபர் ஹிட் சஸ்பென்ஸ் படம்.. “Aayega.. Aanewala..” பாடலைப் பாடி லதா மிகப் பிரபலமானது இந்தப்படத்தில் தான்.
பிச்சுவாப் பக்கிரி ஷேக் முக்தார், ஜெயிலில் இருந்து தப்பிய பிரதீப் குமாருடன் சுற்றிக் கொண்டிருக்கும் போது பின்னால் சத்தமில்லாமல் வேவு பார்த்துக் கொண்டிருப்பார் அசோக் குமார். சி.ஐ.டி என்று நினைக்கும்போது சீஃப் வில்லனாக வெளிப்பட்டு நம்மைத் திகைக்க வைப்பார் ‘Ustadon Ki Udtad’ படத்தில். (‘வல்லவனுக்கு வல்லவன்’)
‘பாசமலர்’ ஹிந்தியில் ‘ராக்கி'யான போது சிவாஜி ரோலில் இவர். கிடைத்தது Filmfare அவார்ட். ‘க்ரஹஸ்தி' தமிழில் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ ஆனபோது இவர் ரோலில் சிவாஜி.
‘நானும் ஒரு பெண்’ இந்தியில் (‘Main Hun Ladkhi’) ரங்கராவ் ரோலை அதே கனிவுடன் அழகாக பண்ணியிருப்பார். இவரின் மாஸ்டர்பீஸ் ‘Jewel Thief’ பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
‘Mamta’ ‘Intaqaum’ ‘Kanoon’ ‘Bhai Bhai’ ‘Chitralekha’ ‘Bheegi Raat’....மறக்க முடியாத படங்கள். மறக்க முடியாத நடிப்பு.
இவர் ஊக்குவித்து பின்னால் மிகப் பிரபலமானவர்களில் மூன்று பேர் முக்கியமானவர்கள். ஷக்தி சமந்தா. இயக்கிய ‘Howrah Bridge’ அசோக் குமாரை ஸ்டைலிஷ் ஹீரோவாக்கியது. 2. பி.ஆர்.சோப்ரா. இவரை இயக்கிய ‘Gumrah’ அமோகமான பெயரை வாங்கித் தந்தது. 3.ரிஷிகேஷ் முகர்ஜி. இவரை இயக்கிய ‘Ashirvad’ படத்தில்தான் நேஷனல் அவார்டு கிடைத்தது இவருக்கு. (அதில் இவர் பாடிய ‘Rail Gadi...’ தான் திரையுலகின் முதல் rap song!)
பாம்பே டாக்கீஸ் தயாரிப்பாளர்களில் இவரும் இருந்த போது இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் தேவ் ஆனந்த். படம் ’Ziddi’ அதே படத்தில் அறிமுகமான மற்றொரு பிரபலர் பிரான்.
1987 -லிருந்து தன் பிறந்த நாளை கொண்டாடுவதை நிறுத்திவிட்டார். தம்பி கிஷோரின் மறைவு நாளாக அது ஆனதால்.
ஹோமியோபதி படித்திருந்த இவர், நோயுற்று காலை எடுக்கவிருந்த ஓர் இளம் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறாராம்.
பலரின் ஃபேவரிட் ஆக சிலர் இருப்பார்கள். இவர் எவ்ரி ஒன்ஸ் ஃபேவரிட்!
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!