Saturday, October 21, 2023

ஜாலி நடிகர்... ஸ்வீட் நடிகர்...


ஜாலி நடிகர்... ஸ்வீட் நடிகர்... ஐம்பது, அறுபதுகளில் கொட்டகைகளை அதிரச் செய்தவர். இளசுகளின் அபிமான கதாநாயகன். ஜாலியாகப் பொழுது போக்கலாம் என்று வருபவர்களுக்கு ஏமாற்றம் இல்லாத திரைக்கதை. சூப்பர் ஹிட் பாட்டுகள். பெரும்பாலும் சங்கர் ஜெய்கிஷன்.

Shammi Kapoor… இன்று பிறந்த நாள்!
புகழ்பெற்ற சகோதரர்களில் நடுவர். மூத்தவர் ராஜ்கபூர். இளையவர் சஷிகபூர். மாபெரும் நடிகர் பிரித்விராஜ் கபூரின் மகன். என்றாலும் எடுத்த எடுப்பிலேயே கதாநாயகனாக ஆகி விடவில்லை. அப்பாவின் Prithvi Theatres -இல் நாலு வருடம் துணை நடிகராக வேலை செய்தார்.
‘உன்னைப் போல் பார்த்ததில்லை’ (Tumsa Nahin Dekha) படத்தில் ஹீரோவாக வரும் வரை யாரும் இவரைப் பெரிய ஹீரோ போல் பார்க்கவில்லை. மீசையை அகற்றிவிட்டு, ஹேர் ஸ்டைலை மாற்றி விட்டு டான்ஸிங் ஹீரோவாக வந்த ஷம்மி கபூரை புருவம் உயர்த்தி பார்த்தார்கள் ரசிகர்கள். இன்ஸ்டன்ட் ஸ்டார். அடுத்து ஆஷா பரேக்குடன் ‘மனதைக் கொடுத்துப் பார்' (Dil Dekha Dekho) வந்து அமர்க்களப்படுத்தி பாலிவுட்டின் எல்விஸ் பிரஸ்லி ஆக்கியது.
“யா…..ஹூ!” என்று பனிமலையில் குதித்தாடும் ‘Junglee’ இவரை வசூல் நடிகர் ஆக்கியது. ஷம்மி கபூர் ஹீரோ, சங்கர் ஜெய்கிஷன் பாட்டு என்று அது ஒரு இசையும் காதலும் இசைந்த வசந்த காலம்! 'Professor', 'Singapore', 'Janwar', 'Rajkumar'...
தற்கொலை செய்து கொள்ளப் போன பெண்ணை காப்பாற்றி அவள் விரும்பிய மாமா மகளுடன் சேர்த்து வைக்கப் பாடுபடுகிறான், கைவிடப்பட்ட குழந்தைகளை காப்பாற்றி வளர்க்கும் அவன் என்று அழகாகத் தொடங்கும் ‘Brahmachari’ படத்திற்குத்தான் Filmfare அவார்டு வாங்கினார். “Main Gavun Tum So Jao..” பாடலையும் “Dil Ke Jarokhe…” பாடலையும் மறக்க முடியுமா? இது தமிழில் ‘எங்க மாமா’ வாக வந்தபோது சிவாஜி நடித்தார். அதற்குமுன் சிவாஜியின் 'நிச்சயதாம்பூலம்' 'Pyar Kiya To Darna Kya' ஆனபோது ஷம்மி நடித்தார்.
சக்கை போடு போட்ட மற்றொரு படம் விஜய் ஆனந்த் டைரக்ஷனில் நடித்த Teesri Manzil. ஆர். டி. பர்மனின் “Ha Ha Ha Aajao…” பாடலுக்கு ஹோட்டல் ஸ்டேஜில் சுழன்றாடுவாரே அது! டான்ஸ் இவரது forte. தன் movements தானே அமைத்துக் கொள்ளுமளவு தேர்ச்சி. கழுத்தை ஒரு பக்கம் சாய்த்து தலையை ஒரு ட்விஸ்ட் கொடுப்பார் பாருங்கள், தனி ஸ்டைல்!
வருடங்கள் சென்றதும் சீனியர் ரோல்களுக்கு வசமாக தன் கலை வாசத்தை மாற்றிக் கொண்டார். இவரது இடத்தைப் பெற்றுக் கொண்ட ராஜேஷ் கன்னாவுடன் இவர் நடித்த Ramesh Sippy யின் ‘Andaz’ படத்தில் இவர் ஹீரோயின் ஹேமா மாலினி. அதில்தான் அவர்கள் ஆடும் அந்த சூபர் ஹிட்... “Dil Usse Do Jo Jaan...”
‘Junglee’ யில் தன் ஹீரோயினாக நடித்த சாய்ரா பானுவுக்கே அப்பாவாக நடித்தார் ‘Zameer’ படத்தில்.
தெரியாதது இவர் ஒரு இயக்குனரும் கூட. ‘Manoranjan’ (சஞ்சீவ் குமார், ஜீனத்) ‘BundalBaaz’(ராஜேஷ் கன்னா)
ரொம்ப ஹை டெக் இவர். அது வந்த காலத்திலிருந்தே இன்டர்நெட்டை பிடித்துக் கொண்டவர். I U C I (Internet Users Community of India) வை நிறுவியவர்.
நடித்த ஒரே தமிழ்ப்படம் ‘அமரன்.’
கடைசி சில வருடங்கள் நோயுற்று dialysis வாழ்வின் பகுதி ஆனபோதும் துளி உற்சாகம் குறையாமல் வாழ்ந்தவர்.
ஹீரோவாக நடித்த ‘வண்ண இரவுகள்' (Rangeen Raton) படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க வந்த கீதா பாலிக்கும் இவருக்கும் இடையே மலர்ந்த காதல் கல்யாணத்தில் முடிந்த போது அவர் இவரை விட பெரிய ஸ்டார். பத்தே வருடத்தில் கீதா பாலி காலமாகி விட்டதில் தாங்க முடியாத துயரம் இவருக்கு.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!