Friday, October 27, 2023

கவிதை இலக்கியத்தை முன்னெடுத்து...


 ‘எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காவிடில் எந்த ஏமாற்றமும் இல்லை.’

இந்த சுந்தர மேற்கோளுக்குச் சொந்தக்காரர் Sylvia Plath. அமெரிக்க எழுத்தாளர். இன்று பிறந்த நாள்!
ஆங்கிலக் கவிதை இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் ஒருவர். முதல் கவிதை பிரசுரமான போது வயது எட்டு.
கவிதைத் தொகுதிக்கு புலிட்சர் பரிசு கிடைத்தது, ஆனால் மறைந்து 19 வருடங்களுக்குப் பிறகு. எழுதிய ஒரே நாவல் சற்றே சுயசரிதை கலந்தது... ‘மணி ஜாடி’.
மணந்து கொண்டதும் ஒரு கவிஞரையே. Ted Hughes. சொந்தக்கதை சோகமானது. ஆறு வருடமே மண வாழ்க்கை. கணவரின் பிரிவில் கடுமையான மன அழுத்தம். மறு வருடமே மறைந்தார். 30 வயதே ஆகியிருந்தது.
2003 இல் இவர் கதை திரைப்படமானபோது நடித்தவர் Gwyneth Paltrow.
ஜீனியஸ்... மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்பட்ட ஒருவர் எத்தனையோ பிரில்லியண்டாக எழுதியிருக்கிறார். கவிதை இலக்கியத்துக்கு அவரது காண்ட்ரிபியூஷன் பெரியது, அது காலம் கடந்தே உணரப்பட்டது என்பது கண்ணில் நீரை வரவழைக்கிறது.
சொன்ன இன்னும் சில...
‘எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் கடந்த காலத்தைப் பற்றிய வருத்தமும், இந்த நேரத்தைப் பாதிக்காமல் இப்பொழுதில் வளமாக வாழ்வதுதான் ஆகச் சிரமமான விஷயம் உலகில்.’
‘மௌனம் என்னை மன அழுத்தத்தில்ஆழ்த்தியது. அது மௌனத்தின் மௌனம் அல்ல. என்னுடைய மௌனம்.’
‘உங்களுக்கான ஓர் ஆக்கபூர்வமான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும், மற்றவர்கள் உங்களுக்கெனத் தயாராக வைத்திருக்கும் ஒன்றைத் தருமுன்.’
‘படைப்புத் திறனின் மோசமான எதிரி சுய சந்தேகமே.’
‘இளம் பருவத்தின் மின்னொளிக்கும் மன முதிர்வின் பிரகாசத்துக்கும் இடையே நான் பாலம் அமைக்க வேண்டும்.’
‘உங்கள் இதயத்தை முழுவதாக ஒருவருக்கு அளிக்கிறீர்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ளாவிடினும் உங்களால் அதை திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது. அது போனது போனதுதான்.’
‘ஆண் யாரென்றால் எதிர்காலத்தில் போய்த் தைக்கும் ஓர் அம்பு. பெண் யாரென்றால் அந்த அம்பு புறப்படும் இடம்.'
'அடிபட்டு, தோற்கடிக்கப்பட்டு நானொரு நாள் என் இடத்துக்கு ஊர்ந்து செல்லக்கூடும். ஆனால் அது என் நொறுங்கிப்போன இதயத்திலிருந்து கதைகளையும், துயரத்திலிருந்து அழகையும் என்னால் உண்டாக்க முடிவது வரை நடக்காது.'
<><><>

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!