Tuesday, October 10, 2023

தொடர்ந்து மூன்று வருடம் ..

 1931. அந்த நடிகையின் முதல் ‘பேசும்’ படம் அது. ‘The Sin of Madelon Claudet.’ பிரிவ்யூ போட்டு பார்த்ததில் உதட்டைப் பிதுக்கினார்களாம். ஸ்கிரிப்டை ரிப்பேர் பார்த்தாயிற்று. காட்சிகளை மாற்றி எடுக்கலாமென இறங்கினார்கள். ஆனால் அடுத்த படத்தில் அவர் நடிக்க கமிட் ஆகிவிட்டது. இடையிடையே வந்து நடித்துக் கொடுக்க அவர்கள் சம்மதிக்கவில்லை. சோரவில்லை. அதை முடித்துவிட்டு வந்து இதில் நடித்தார். அந்த வருட ஆஸ்காரை வாங்கினார்.

Helen Hayes... இன்று பிறந்தநாள். (1900 - 93)

30, 40 களின் பிரபல நடிகை... திரையிலும் மேடையிலும்! நடித்த நாடகம் ஒன்று (Victoria Regina) தொடர்ந்து மூன்று வருடம் நடந்தது. Tony, Emmy, Grammy, Oscar என்று எல்லா அவார்டுகளையும் வாங்கிக்கொண்டவர்.
நடித்த மற்றொரு படம் ஹெமிங்வேயின் ‘A Farewell to Arms.’ மிகப் பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்ட நாவல். சுகம், துக்கம் இரு முடிவுகளும் வைத்து எடுக்கப்பட்டு ஊருக்கு தகுந்த மாதிரி திரையிட்டார்கள்.
அடுத்த ஆஸ்காரை 38 ஆண்டுகளுக்குப் பின் 'Airport' படத்துக்காக வாங்கினார், சிறந்த துணை நடிகையாக. அகதா கிறிஸ்டியின் மிஸ் மார்பிளாக நடித்தது 1985 இல் டி.வி.க்காக. (Murder with Mirrors)
1993 மார்ச் 17.. இரவு 8 மணிக்கு பிராட்வேயின் விளக்குகள் ஒரு நிமிடம் மங்கி மிளிர்ந்தனவாம், இவர் மறைவிற்கு அஞ்சலியாக.
Quotes? ‘நான் தேடும் சிந்தனைகளை புத்தகங்கள் அளிக்கின்றன. மருந்தும் பலமும் தருகின்றன. தைரியம் என்னை விட்டு நழுவும் போதெல்லாம் அவற்றைத் தேடிப் போகிறேன். அவை எனக்கு, ஏற்றுக்கொள்ளும் விவேகத்தையும் முயற்சியையும் மன விசாலத்தையும் கொடுக்கின்றன.’
‘ஓய்வெடுத்தால் துருப் பிடித்துப் போய்விடுவீர்கள்.’
‘பெற்றோரிடமிருந்து அன்பையும் சிரிப்பையும் எப்படி ஒவ்வொரு அடியாக முன்வைத்து போவது என்பதையும் கற்றுக் கொள்கிறோம். ஆனால் புத்தகங்களை திறக்கும்போது உங்களுக்கு சிறகுகள் இருப்பதைக் கண்டு பிடிக்கிறீர்கள்.'
‘10 இலிருந்து 70 வரைதான் வாழ்க்கையில் கஷ்டமான வருடங்கள்.’
‘நம்முடைய ஹீரோக்களைப் பற்றி பேசி மகிழ்கிறோம், நாமும் யாரோ ஒருவருக்கு விசேஷமானவர்தான் என்பதை மறந்து.’

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!