ஸ்டைலான ஒரு ஹீரோவாக அறிமுகமானார். ஸ்டைலான ஒரு ஹீரோவாகவே கடைசிவரை நடித்து விடைபெற்றுக் கொண்டார். ஹீரோவாக வரும் பொழுது என்ன அகலம் இருந்தாரோ அதே அகலம் கடைசிப் படம் வரை இருந்தார், அப்படி ஒரு ever slim ஹீரோ!
தேவ் ஆனந்த்… Sept 26. நூறாவது பிறந்தநாள்!
திலீப், தேவ், ராஜ்.. 50-களின் டாப் த்ரீ. ஹாண்ட்சம் ஹீரோவாக அவர்களைத் தாண்டி நீடித்தவர் இவரே. வெளியான மொத்த ஹிந்தி படங்களின் விகிதத்தில் வைத்துப் பார்த்தால் மிக அதிகமான படங்களில் ஹீரோவாக நடித்தவர் இவரே. கிட்டத்தட்ட நடித்த அத்தனை படங்களிலும்.
படம் flop ஆகும், ஆனால் அடுத்த படத்திற்கு அரை மைலுக்கு கியூ நிற்கும். அதுதான் தேவ் ஆனந்தின் தேயாத charisma.
எந்த அசோக் குமாரைப் பார்த்து நடிக்க ஆசைப்பட்டாரோ அவரே இவரை ஹீரோ ஆக்கினார். 30 -களின் கனவுக்கன்னி தேவிகா ராணியின் பாம்பே டாக்கீஸ் அந்தப் படத்தை தயாரித்தார்கள். தேவ், பிரான் இருவரும் இதில்தான் பிரபலம் ஆனார்கள். கிஷோர் தன் முதல் பாடலையும் லதாவுடனான தன் முதல் டூயட்டையும் பாடியதும்!#
நான் படம் எடுத்தால் நீ ஹீரோ என்று குருதத்தும் நான் படம் எடுத்தால் நீதான் டைரக்டர் என்று# தேவும் Gentlemen Agreement செய்துகொண்டார்கள் பிரபலமாகாதபோது. ‘C. I. D.’, ‘Baazi’ எடுத்தார்கள் பிரபலமானபோது. ரெண்டுமே சூபர்ஹிட்.
அண்ணனும் தம்பியும் பெரிய டைரக்டர்கள். அண்ணன் சேதன் ஆனந்த் #க்ளாஸ் படங்கள் எடுப்பவர். அதில் அதிகம் நடிக்கவில்லை. தம்பி விஜய் ஆனந்தோ மாஸ் டைரக்டர். ‘Jewel Thief’ ‘Johny Mera Naam’ என்று இயக்கி பாப் ஸ்டார் அண்ணனை டாப் ஸ்டார் ஆக்கியவர். சின்ன வயதிலேயே ‘Nau Do Gyarah’ கதையை எழுதி டைரக்ட் செய்து அசத்தியவர். மேடையில் ஒருத்தியும் கீழே ஒருத்தியுமாக ஆடும் வித்தியாசமான டான்ஸ் நம்பர் ஒன்றை அதில் தந்திருந்தார் விஜய். கவரப்பட்டு பின்னாட்களில் ‘Jewel Thief’-இலும் வைத்தார்கள் அதே மாதிரி ஒன்றை .
50-களில் மதுபாலா.. 60-களில் வஹிதா.. 70 களில் ஹேமமாலினி.. அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம். வயதான பின்னரும் வழுவாத அந்தக் கிராப்.. ஒரு ஹீரோயின் இழுத்துப் பார்த்தாராம் டோபாவா என்று.
எந்தப் பார்ட்டிக்கும் எட்டிப் பார்க்க மாட்டார். தான் உண்டு தன் நடிப்பு உண்டு. ஒரு புது நடிகர் பிரபலமாகி வருவதைப் பற்றிக் கேட்டபோது, 20 வருஷம் கழித்து அவரை பற்றிச் சொல்லு, அப்போதும் அவர் ஃபீல்டில் இருந்தால், என்றாராம், decadesக்கு உச்சத்தில் இருந்த இவர்.
ஹீரோ தாடியை ஒட்டிக் கொண்டு கிழவனாக வந்து ஹீரோயினை ஏமாற்றுவது எத்தனையோ படங்களில் வந்தாயிற்று. ஆனால் அதை அமர்க்களமாக முதலில் செய்து நூட்டனுடன் லூட்டி அடித்த அந்த ‘Paying Guest’ தான் அதில் best.
தற்கொலை செய்ய இருந்தவனைத் தடுத்து இன்ஷூர் பண்ணச் செய்துவிட்டு அவனை கொலை செய்ய முயல்கிறான் ஒரு கயவன். ‘Funtoosh’ -இல் அப்பாவியாக இவர்! முழு நீள காமெடி அது. என்றால், #தெரிந்தோ தெரியாமலோ போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்ட தங்கையைத் திசை திருப்பத் துடிக்கும் அண்ணனாக, “Phoolon Ka Taron Ka…” என்று உருக்கமாக பாடியது ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’வில்.
நந்தா, கல்பனா, ஸிமி மூவரையும் இவர் காதலிக்கும் ‘Teen Devian’ படத்துக்கு ‘Dev and His Teen Devian’ என்று Punபட விளம்பரம் செய்தார்கள். வில்லனாக ஜாலம் புரிந்த்து ‘Jaal’ படத்தில். “Yeh Raat Yeh Chandni…” என்று பாட, கீதா பாலி உருகிப் பின்னால் ஓட.... ‘He hates fire but loves firebrand!’ என்று இந்தப் படத்துக்கு விளம்பரம் செய்தார்களோ என்றொரு ஞாபகம்.
50, 60 களில் யாருக்குமே பாடாத கிஷோர் இவருக்கு மட்டும் பாடினார். கிஷோருக்கு தேவ் பின்னணி பாடுகிறாரா என்று கிஷோர் படத்தில் வியக்கும் அளவுக்கு அப்படி பொருந்திப் போனது குரல். அவரின் yodeling கூட இவருக்கு கச்சிதமாக.. (“Yeh Dil Na Hota…”)
மாஸ் ஹீரோ என்றே மாறாத விலாசம் இருந்தபோது ஆர்.கே.நாராயணனின் கிளாஸிக் நாவலை படமாக்கி கேரக்டரும் பண்ண முடியும் என்று காட்டினார். ஆங்கிலத்திலும் தயாரிக்கப்பட்ட, ஆஸ்கார் வரை போன படம் அது.
தன்னை வால்மீகியாக வரித்து மகான் ஆக்கிவிட்ட கிராமத்து மக்களுக்காக மழைவேண்டி, 12 நாள் கட்டாய உண்ணாவிரதம் இருக்க நேர்கையில்… சூழ்ந்திருக்கும் கூட்டம் இவர் மீது நம்பிக்கையுடன் வானத்தை பார்த்திருக்க, உட்காரவும் முடியாமல் ஓடிப் போகவும் முடியாமல், நம்பிக்கையும் இல்லாமல் கைவிடவும் முடியாமல்… பதைபதைப்புடனும் எதிர்பார்ப்புடனும் சோர்ந்து அமர்ந்திருக்கும் அந்தக் காட்சி நினைவுக்கு வருகிறதா? (‘அவன் இருந்தால் மழை பெய்யும்…’ ‘அவங்க என்ன நம்பறாங்க, நான் அந்த நம்பிக்கையை நம்பறேன்!’) ரொம்ப வித்தியாசமான தேவ் ஆனந்த்தைக் காண்பித்தார் ‘The Guide’-இல். A.J.Cronin நாவலான ‘The Citadel’-ஐத் தழுவி வந்த ‘Tere Mere Sapne’-இலும் செமத்தியான நடிப்பு.
ரெண்டு முறை ஃபிலிம் ஃபேர் அவார்டு கிடைத்தது: ‘Kala Pani’ ‘The Guide’... பத்மபூஷன் 2001 இல்.
தலையை சுருக்கமாக ஆட்டியபடியே டயலாக்கை நீளமாக பேசுவது unique style என்றால் டபுள் உயர, பட்டன் இட்ட காலர் டிரேட் மார்க். “Likha Hai Teri…” என்று ‘Teen Deviyan’ -இல் வாயில் சோளப்பொரியுடன் ஹீரோயினின் துப்பட்டா முனையைப் பாக்கெட்டில் செருகியபடி ஸ்டைலாக நடந்து கொண்டே பாடுவது அவரது ஸிக்னேச்சர் ஸ்டைல்.
நடித்த காதல் கதைகளை போலவே வாழ்க்கையிலும்! ஜோடியாக நடித்த பிரபல ஸுரையாவும் இவரும் காதலித்தார்கள். என்ன, படத்தைப் போல சுப முடிவு ஏற்படவில்லை. விலகிக் கொண்டார்கள்.
‘Johny Mera Naam’.. அந்த 20 நிமிட க்ளைமாக்ஸ் காட்சி! தானே அழைத்து வந்த போலீஸை ஜீவன் அழைத்து வந்ததாக பிரேம் நாத்தை நம்பச் செய்யும் சாகசங்களில் இவர் காட்டும் துடிப்பு 25 வயது நடிகர்களுக்கே மிகச் சிரமம்.
ஒரு மிகப் பிரபல நடிகையை இவர்தான் அறிமுகம் செய்தார். அறிவீர்கள் ஜீனத் அமன். அறிமுகித்த மற்றொருவர் டினா முனிம். ‘My Fair Lady’ ஸ்டைலில் வந்த ‘Man Pasand’ நல்ல ஒரு musical treat.
ரெண்டு படத்தில் இரட்டை வேடம் good and shady character ஆக. ‘Hum Dono’ ‘Banarasi Babu’ ஆக 35 படம் தயாரித்த இவரின் தயாரிப்பு நிறுவனம் ‘நவ் கேதன்’ மிக புகழ் பெற்றது. 70 களின் ஆரம்பத்தில் சீட்டுக்கட்டாக படங்கள் சரிந்த போதும் ஃபீனிக்ஸ் பறவையாய் திரும்ப வந்தார், ஹிட்ஸ் கொடுக்க.
மகனையும் ஹீரோவாக மலர வைக்க நினைத்தார். ஆனால் படம் படுத்து விட்டது. மகன் டைரக்டராகி விட்டார். அப்பாவின் பழைய படக் காட்சிகளோடு புதிய படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் Suneil Anand.
பாலிவுட்டின் கிரிகரி பெக் என்று அழைக்கப்பட்ட தேவ் ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்தார் ‘The Evil Within’ அங்கே ஓடவில்லை. இங்கே ரிலீசாகவில்லை.
சிவாஜிக்கு ‘புதிய பறவை’ மாதிரி இவருக்கு ‘ஜுவல் தீஃப்’. ஏமாற்றுபவர்களுடன் சேர்ந்து, ஏமாறுவது தெரியாமலேயே, ஏமாற்றுபவர்களைப் பிடிக்கத் துடிக்கும் ஏமாளியாக அந்த நடிப்பு astounding!
கதை?ஒரு பார்ட்டியில் ஓடிவந்து தன்னை உலுக்கி, ஏன் மறந்துட்டே அமர்? என்று ஒரு பெண் கேட்கும்போதுதான் வினய்க்கு தெரிகிறது, தன்னைப் போலவே உள்ள அமர் என்ற ஜுவல் தீஃப் பற்றி! அவனாய் நினைத்து இவனை அனைவரும் துரத்த... ஆரம்பமாகிறது 'அமர்'க்களம்! எந்தப் படத்திலும் இப்படி காட்சிக்குக் காட்சி வில்லனைத் தேடியிருக்க மாட்டார்கள் ரசிகர்கள். கடைசியில் அந்த 'திடுக்' உண்மையை நாயகி சொல்ல, நாயகனுக்கும் நமக்கும் சரியான அதிர்ச்சி.
ஹோட்டல் அறையில் தன் டூப்ளிகேட்டைத் தேடிவரும் தேவ் ஆனந்த் கையில் ரிவால்வருடன் வெளியில் வர எதிரே மற்றொரு தேவ் ஆனந்த், கையில் ரிவால்வருடன்! அடுத்த வினாடி புன்னகைக்கிறார். கண்ணாடி!
தேவ் ஆனந்தின் இந்தப் படத்தை ரெண்டே ஜோடி வார்த்தையில் சொன்னால் 'சூபர் ஸ்டைல்! சூபர் திகில்!' தவிர, கிளாமரும் இன்னிசையும் போனஸ்! ஹீரோ தேவ் ஆனந்த் அணிந்த மாடல் தொப்பி இளைஞர்களிடையே craze ஆகி அமோகமாக விற்றது.
“Aankhon Mein Kya Ji…” என்று அவருடன் மரத்தைச் சுற்றிப் பாடிய (அப்போது அவர் முகத்தில் கொப்பளிக்கும் குறும்பு!) ஆறே படத்தில் நடித்த கல்பனா கார்த்திகை, மணந்து கொண்டார்.
காதல் அசுரன்! டூயட்டோ ஸோலோவோ, சிதறாமல் சிதறும் மன்மத அம்புகள். “Are Yaar Meri…” அப்படின்னு படு நீளப் பல்லவியாக இருந்தாலும் சரி, “Uf Kitni Dandi…” அப்படின்னு கிசுகிசு பல்லவியாக இருந்தாலும் சரி, தேவ் ஆனந்துக்கு இரண்டுமே சாலப் பொருத்தம்!
வாவ்! ஆனந்த்.
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!