Friday, March 6, 2020

மேடையிலும் திரையிலும் மேதை..

மேடையிலும் சரி திரையிலும் சரி புகழோடு அரை சதம் வருடம் நீடிப்பதென்பது லேசா? ஆனால் Rex Harrison-க்கு அது லேசே லேசே! ரெக்ஸ் என்றால் லத்தீனில் கிங் என்று அர்த்தம். நடிப்பில் கிங் தான். மெல்லிய ரோல்களில் மில்லியன்களைக் கவர்ந்தவர். ஸர் பட்டம் கிடைத்தது 1989 -இல்.
உடனே நினைவுக்கு வருவது ‘My Fair Lady’ தான். நாடகத்தில் புரஃபசர் ஹிக்கின்ஸ் வேடத்தில் நடித்தபோது அதி சிறந்த Tony அவார்ட் வாங்கியவர் படத்தில் நடித்தபோது அதி சிறந்த திரை அவார்டான ஆஸ்கார் வாங்கினார். ஒரே வேடத்திற்கு இந்த ரெண்டு அவார்டையும் வாங்கியவர் வெகு சிலரே. இவர்தான் சரி என்று கேரி கிரான்ட் மறுத்துவிட்டார் வாய்ப்பை. இவர் எடுத்துக்கொண்ட சிரமங்கள்! முக்கால் வருட கால்ஷீட்டுக்கு ரெண்டு வருடம் அந்த காரக்டருடன் வாழ்ந்தார். வசன பாடல்களில் இடையிடையே மியூசிக் அதிரும், கொஞ்சம் பிசகினாலும் வார்த்தையை வாத்தியங்கள் அடித்துக் கொண்டு போய்விடும். டைக்கு அடியில் ஒரு மைக்ரோபோனை வைத்துக்கொண்டு... சவாலே சமாளிதான்!
மற்றொரு பிரபல பாத்திரம் 'கிளியோபட்ரா' படத்தில் சீஸர்! இந்திப் படம் ஒன்றிலும் முக்கிய வேடம் ஏற்று நடித்தது பலருக்கு மறந்திருக்கும். ‘Shalimar’. தர்மேந்திரா ஜீனத் நடிக்க, ஆர் டி பர்மன் இசையில் அது ஒரு ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் நாவல்.
1930 இல் மாபெரும் விளையாட்டு/ஆட்டம் என்ற படத்துடன் தன் விளையாட்டைத்/ஆட்டத்தைத் தொடங்கினார். நுணுக்கமான நடிப்பில் மன்னன். ஷாலிமாரில் ஒரு confrontation சீனில் விழிகளை மட்டும் இந்தப் பக்கமிருந்து அந்தப்பக்கம் ஓட்டுவாரே, அது!
மைக்கேலஞ்சேலோவின் வரலாற்றை 'The Agony and the Ecstasy’ என்று படமாக்கும்போது அவர் விரும்பியது டைட்டில்ரோல்; என்றாலும் Pope Julius II ஆக சார்ல்டன் ஹெஸ்டனுடன் 'சபாஷ் சரியான போட்டி!' (ஹெஸ்டனின் உயரத்தை சமாளிக்க ஷூவை ரெண்டு இஞ்ச் உயர்த்திக் கொண்டாராம்.)
பாடிய பாடல் ஆஸ்கார் பரிசு வாங்கிற்று, Dr Dolittle படத்தில். மிருகங்களுடன் பேசும் டாக்டர் வேடத்தில் வெளுத்து வாங்கினார். யூனிட்டோடு பழகியதில் கிளி 'கட்' சொல்ல பழகிவிட்டது!.
Quote?
'காமிராவை நம்பவும் ஓர் நட்பாக நினைக்கவும் நாட்களாகும், ஆனால் அதன் பிறகே நல்ல நடிகராக முடியும்.'

Tuesday, March 3, 2020

மனதுக்குள் அடித்த மணி...

கோதுமையைத் தீட்ட இத்தனை கஷ்டப் படறாங்களே? தோன்றிற்று அந்த 12 வயதுப் பையனுக்கு. அதற்கொரு மெஷினைச் செய்து அந்த மில்லுக்குக் கொடுத்துவிட்டான் அந்த 1857 இல்.

16 வயதில் ஒரு பேசும் பொம்மையைச் செய்ய முயன்றான். அதற்கு ஒரு தொண்டைக் குழாய் அமைத்து காற்றை விதமாகச் செலுத்தி நாலைந்து வார்த்தைகள் பேச வைத்துவிட்டான்.

 பேசும், கேட்கும் சக்தி இல்லாத அம்மாவும் மனைவியும்! அந்த சோகம் ஆழப் பதிந்து மனதை உந்தி விரட்டியது. எப்படியாவது ஒரு பேசும் கருவி கண்டு பிடிச்சிரணும்! அதான் லட்சியம். அதில் உக்கிரமாக உழன்றதில் இடறி விழுந்த கருவிதான் டெலிஃபோன்.

மணியடித்தது யாருக்கென்று ஊகித்திருப்பீர்கள். அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல். இன்று பிறந்த நாள்!

வார்த்தைகளை ஒலிக் கதிராக மாற்றி செலினியம் தகட்டில் செலுத்தினால் அது தூரத்திலிருக்கும் மற்றொரு தகட்டில் அப்படியே வெளிப்படுத்த, பேட்டரியுடன் கூடிய ஸ்பீக்கரில் அது ஒலித்த வித்தைதான் அவர் சிந்தையில் உதித்த விந்தை.

தவிர கண்டுபிடித்தது மெட்டல் டிடக்டர்.. பேச்சை பதிவு செய்யும் Graphophone.. கேள்வியை அளக்கும் ஆடியோ மீட்டர்.

பஞ்ச்:  கையில் ஆளுக்கொரு ஃபோனை வைத்துக் கொண்டு அலையறோம். ஆனால் கண்டுபிடித்த கிரஹாம்பெல்லோ தன் அறைக்குள் நுழைய விட்டதில்லை வேலை நடக்காது என்று.

Thursday, February 6, 2020

மௌஸுக்கு ஒரு மவுசு!


கம்ப்யூட்டருக்கும் மனிதருக்கும் இடையே புகுந்த 'எலி' இவருடையது. 
இன்றைக்கு நாம் விரல் அசைவில் முழு உலகத்துடனும் தொடர்பு கொண்டு தகவல் பரிமாறிக்கொண்டு மொத்த அறிவால் யோசிக்கத் தலைப்பட்டுள்ளோம் என்றால் காரணமானவர்களில் முக்கியமானவர் இவர்.
Douglas Engelbart. (1925 - 2013) Jan. 30 பிறந்த நாள்.
பெருகி வரும் உலகப் பிரசினைகளைச் சமாளிக்க, தீர்வு காண ஒரு கூட்டுச் சிந்தனை வேண்டும் என்று மனித குலத்துக்காக கனவு கண்டார் இவர். இறங்கினார் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு. வருடம் 1950.
சும்மா மனிதனின் வேலையைக் குறைப்பதை மட்டும் தன் வேலையாக வைத்திருந்த, உறங்கிக் கொண்டிருந்த, கம்ப்யூட்டரை உசுப்பினார். நமக்கும் அதற்கும் நேரடி தொடர்பை உண்டாக்க முயன்றார்.
பஞ்ச் கார்டிலிருந்து கம்ப்யூட்டர்களை விடுவித்து, இப்ப நீங்க இதை எத்தனையாவது விண்டோவிலிருந்து படிக்கிறீங்க, இந்த லெவலுக்கு கொண்டுபோனதிலும் சரி, யூஸர் இண்டர்ஃபேஸையும் நெட்வொர்க்கையும் நம் உலவு களமாக்கியதிலும் சரி, இவர் பங்கு கணிசம். mouse-ஐ நம் கையில் கொடுத்தார்.
கருவிகளின் திறனை அதிகரிப்பதற்காக கருவிகளின் திறனை அதிகரிப்பதில் மனிதர்கள் தம் நேரத்தைச் செலவிட்டால் நம் முன்னேற்றம் ஜெட் வேகமெடுக்கும் என்ற இவர் கம்ப்யூட்டர் சயின்ஸில் வழங்கப் படுவதில் ஆகப்பெரிய அவார்டான A M Turing Award வாங்கியது 1997 இல்.
><><><