Monday, May 8, 2023

நிஜத்திலும் ஹீரோ...


 ‘Jab We Met’ படத்தின் கடைசிக் காட்சி. படுத்திருக்கும் தாத்தா, பேத்தி கரீனா கபூரின் ரெட்டைக் குழந்தைகளிடம் சொல்வார், “உங்கம்மாவும் அப்பாவும் எங்கிட்ட திரும்பத் திரும்ப பொய் சொன்னாங்க, ஆனா அவங்க காதலைக் கண்ணிலிருந்தே கண்டு பிடிச்சிட்டேன் நான்!” அந்தத் தாத்தா யாரென்று தெரிகிறதா?

இந்தியாவின் சூபர்மேன்... மல்யுத்தத்தில் ஒருபோதும் தோற்காத ரெக்கார்டை கொண்டவர்… சினிமாவின் நிஜ ஹீரோ.
டயலாகில் அல்லாது நிஜமாகவே ஏராளம் பஞ்ச் விட்ட தாராசிங்!
May 6. பிறந்த நாள்.
203 கிலோ ஆன, ஆனானப்பட்ட கிங்காங்கை அசால்ட்டாக தலைக்குமேல் தூக்கிச் சுழற்றி வீசியவர். அந்த ஃபைட்டில், கிங் சைடில் கிங் சைஸுக்கு பெட் கட்டினவங்க அதிகம். ஆனால் கடைசியில் அவர் உதவிக்கு ரெஃப்ரீயை நோக்கிக் கத்த வேண்டியதாயிற்று.
அந்த நாட்களில் தாராசிங் Vs கிங் காங் என்றாலே போதும், எள் போட்டால் லெவலுக்கு கூட்டம் களைகட்டிவிடும். (நம்ம ஊரில் அந்த மல் யுத்தங்களை நடத்தியதில் ஒருவர் சின்ன அண்ணாமலை.)
பயில்வானி என்ற பல நூறாண்டு பழமை வாய்ந்த கலையைப் பயின்று வந்தவரை வெல்வாரில்லை. வந்தாரா, வென்றாரா, சென்றாரா என்றிருப்பார். (‘தாரா’ என்ற வார்த்தைக்கு ராஜா என்றல்லவா அர்த்தம்?)
இந்த 53 இஞ்ச் நெஞ்சுக்கு ஆறடி ரெண்டு அங்குல உயர 'வின்னர் ஃபார்எவர்' வந்தது விவசாய குடும்பத்தில் இருந்து. இந்தியா சாம்பியன்.. காமன்வெல்த் சாம்பியன்.. கடைசியில் உலகச் சாம்பியன், 1968 இல் அமெரிக்க வீரரை (Lou Thesz) வென்று!
தயாரிப்பாளர்கள் அழைக்க மேடையிலிருந்து திரைக்கு... அத்தனை பாட்டுக்களும் ஹிட்டான (Laxmikant Pyarelal) ’புயல் வந்தது' (‘Aaya Toofan’) போன்ற படங்களின் மூலம் புயலாக வந்தார். மும்தாஜுடன் ஹீரோவாக ராஜேஷ் கன்னா அதிகபட்சம் 10 படங்களில் நடித்திருப்பார், ஆனால் 16 படங்களில் அவருடன் ஹீரோவாக நடித்தவர் இவர். செகண்ட் லெவல் படங்களில் ஃபர்ஸ்ட் லெவல் சம்பளம் வாங்கினார்கள் அவரும் மும்தாஜும்.
ஹெர்குலிஸ் ஃபிகர் எப்படி இருக்கும் என்று கேட்டால் தாராளமாக சொல்லிவிடலாம் தாராசிங் மாதிரி இருக்கும் என்று . Incidentally அவர் Hercules ஆகவும் நடித்தார். Anand படத்தில் தகராறு பண்ணும் பசங்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற ராஜேஷ் கன்னா அழைத்து வருவாரே அது தாராசிங்கைத்தான்!
பிரபல 'ராமாயணா' டிவி தொடரில் இவர் ஹனுமானாக வந்தது அனுமானிக்க முடியாத புகழ் தந்தது.
தம்பி ரந்தாவாவும் ஒரு மல்யுத்தர் & நடிகர். ‘ஜானி மேரா நாம்’ அல்லது ‘ராஜா’வில் பார்த்திருப்பீர்களே இவரை?
கால் நூற்றாண்டுக்கு மல்யுத்த மேடைகளின் ராஜாவாக வலம் வந்தவர் 1983-இல் அவார்ட் வாங்கிய கையோடு மேடைக்கு குட்பை சொன்னார்.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!