Monday, May 1, 2023

படத்தின் ஜீவன்...


நகரத்திலேயே பெரிய பணக்காரர் அவர். தன் பிரம்மாண்ட புதிய கடையை தொடங்குகிறார். ‘There is many a slip between the cup and the lip,’ என்று சொல்லும் நண்பரைச் சிரிக்கிறார், ‘எல்லாம் மனிதன் கையில்தான்,’ என்று. "அடுத்த வருடமே பெரிய பங்களா வாங்குவேன், உங்களையெல்லாம் காரில் ஏற்றிக் கொண்டு ..." என்று பெருமையுடன் மனைவியிடம் சொல்லும் கணமே இடிந்து விழுகிறது வீடு. பூகம்பம்! அவரும் அன்பு மனைவியும் மூன்று மக்களும் ஆளுக்கொரு திசையில் சிதறடிக்கப்படுகிறார்கள். மூத்த மகனைத் தேடிச் சென்ற இடத்தில் விடுதிக் காரனைத் தாக்கியதில் ஜெயிலுக்கு போகிறார். குடும்பத்தைப் பறிகொடுத்து குமுறும் உள்ளத்துடன் அலையும் அந்த 'வக்த்' படத்தின் லாலா கேதாரிநாத் வேடத்துக்கு அவரைவிட வேறு யாரால் அத்தனை பரிதாபத்தை ஊட்ட முடியும்? Ineffable!

பால்ராஜ் சஹானி... குண சித்திர நடிகர். இன்று பிறந்த நாள்!
‘Waqt’ அவருக்கு ஒரு மைல்கல். ”Yeh Meri Zohra Jabeen…” என்று மனைவியை வர்ணித்துப் பாடும் அழகாகட்டும், மகனைத் துன்புறுத்தியதை அறிந்ததும் வில்லன் ஜீவனிடம் காட்டும் ஆத்திரமாகட்டும், பீச் ஓரமாக கடலையைக் கொறித்தபடி விரக்தியுடன் நடப்பதாகட்டும்... ‘எல்லாமே காலத்தின் கையில்!’ என்று சொல்லும் படத்தின் ஜீவனை தன் கையில் அழகாகத் தாங்கி கொண்டிருப்பார்.
கல்லூரி ஆசிரியராகவும் லண்டனில் பி.பி.ஸி. அறிவிப்பாளராகவும் பணிபுரிந்தவர்... நாடக நடிகராக இருந்ததால் சினிமாவில் சிரமமின்றி சிறப்பாக…
சலில் சௌத்ரியின் கதையைத் தழுவி பிமல் ராய் எடுத்த கலைப் படம் 'Do Bigha Zamin' தான் பேர் சொன்ன அவரது முதல் பிரபல படம். கேன்ஸ் ஃபெஸ்டிவலில் சர்வதேச அவார்ட் வாங்கிய முதல் இந்தியப் படம். இந்தப் படத்திற்காக கொல்கத்தா தெருக்களில் ரிக் ஷா இழுத்துப் பழகுகிற அளவுக்கு நடிப்பில் ஈடுபாடு!
அடுத்து பேசப்பட்ட படம் 'Seema'. குழந்தையின் தலையை வருடியபடி அமைதியாக அமர்ந்து அவர் பாடும் சங்கர் ஜெய்கிஷனின் “Tu Pyaar Ka Saagar Ho..” நினைவுக்கு வருமே? அப்புறம் ‘Kabuliwala’ ரவீந்திரநாத் தாகூரின் கதை அது. நேஷனல் அவார்டும் ஃபிலிம் ஃபேர் மூன்று அவார்டும் வாங்கிய ‘Garm Hava’ மற்றொரு மிக முக்கியமான படம்.
'என் தங்கை' ஹிந்தி ரீமேக்கில் (‘Chhoti Bahen’) எம்ஜிஆர் வேடத்தில் நடித்த பால்ராஜ் நிறைய எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலும். தேவ் ஆனந்த் நடித்து குருதத் இயக்கிய ‘Baazi’ படத்தின் திரைக்கதையும் கூட.

>><<>><<

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல நடிகர்.... பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தும் நன்று.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!