தமிழ் திரையின் முதல் கனவுக்கன்னி.அவர். படங்களின் டி ஆர் பி யை எகிற வைக்கிற ராஜகுமாரியாக இருந்தார் டி ஆர் ராஜகுமாரி. கூடவே எகிற வைத்தது ரசிகர்களின் எச் ஆரையும். (ஹார்ட் ரேட்)
டி ஆர் ராஜகுமாரி… இன்று பிறந்த நாள்!
மூன்று வருடம் ஓடிய ஹரிதாஸ் படத்தில் தனி முத்திரையைப் பதித்தார். ரசிகர்களை ரொம்ப இம்சித்த ரம்பாவாக ... ‘மன்மத லீலையை வெல்ல முடியாத’ நாயகன் எம் கே டி யின் ‘பாராமுகம் கொண்ட மதிவதன நீள் விழி’ ரம்பாவாக... ( இந்த இடத்தில் நிறுத்தி "ரம்பா!" "ஸ்வாமி!" )
‘வாழப் பிறந்தவள்’ படத்தை முதலாவதாக தயாரித்தவர் வாழ்க்கையில் கடைசிவரை துணை தேடிக் கொள்ளவில்லை. தன் சினி கரீயரை குடும்பத்துக்கு என ஒதுக்கிவிட்டார். கட்டிய தியேட்டரின் பெயர் 'ராஜகுமாரி'
‘பவளக்கொடி’யில் பவளக்கொடியாக டி ஆர் மகாலிங்கத்துடன்.. ‘வனசுந்தரி’யில் வனசுந்தரியாக பி யூ சின்னப்பாவுடன்.. 'பணக்காரி'யில் பணக்காரியாக எம் ஜி ஆருடன்.. ‘தங்கப்பதுமை’யில் மாயமோகினியாக சிவாஜியுடன்…
‘சந்திரலேகா’ என்றால் போதுமே, மேற்கொண்டு சொன்னால் போரடிக்கும் உங்களுக்கு. அந்த முதல் பிரமாண்ட தமிழ் படத்தில் டாப் பில்லிங் அவருக்குத்தான்.
‘மனோகரா’வின் வசந்தசேனையை மறக்க முடியுமா? (போதும்.)
நாயகியாக… வில்லியாக.. பின் அம்மாவாக… ‘நீ பாடும் போது உமா பாடற மாதிரியே இருக்கு. பாடும்மா.. மறுபடியும் இந்த வீட்டில் ஆனந்தம் மலரட்டும்’னு வாஞ்சையுடன், அடைக்கலம் தேடி வந்த அந்த வஞ்சியிடம் (தேவிகா) சொல்லும் பரிவு! ‘வானம்பாடி’ அவருடைய மென்மையான நடிப்பை கானம் பாடியது.
எல்லாவற்றுக்கும் மேலாக அந்தப் படம்.. 'பாசம்'
‘காணாமல் போன பணத்துக்காக கைதான உன் சின்ன மகனின் நிலைக்கு காரணமான உன் காணாமல் போன மூத்த மகன் நான் தான்!’ என்று மகன் (எம் ஜி ஆர்) வந்து சொல்லும் அந்த காட்சி. ‘கோபியா நீ.. கோபி!” என்று பரவசத்துடன் புருவம் உயர்த்தி மகிழ்வுறுவதும் மறுநிமிடமே ‘யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்கிற நீயா இப்படி திருடனா வந்திருக்கே? என் முகத்திலே முழிக்காதே’ன்னு விரட்டுவதும் மறு நிமிடமே ஓடிச்சென்று அவன் கைகளைப் பற்றுவதும்.. கலங்கும் தாய் உள்ளத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுவார் முகம் மாறாத குரல் மீறாத தன் மிகையற்ற நடிப்பில்.
போதுமே!
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!