அன்புடன் ஒரு நிமிடம் - 65
மாமா வீட்டில் நுழைந்தவுடனேயே அத்தையின் புலம்பல் கிஷோரைத் தாக்கிற்று.
“ஏம்பா நீயாவது இவருக்கு கொஞ்சம் சொல்லக்கூடாதா? அடுத்த வாரம் பூஜா ஹாஸ்டலிலிருந்து வர்றா. பதினஞ்சு நாள் லீவு. புவனும் கம்பெனியில் லீவு போட்டிட்டு அதே நாள் வர்றான். பிள்ளைங்க வர்ற நேரத்தில பாரு வீட்டை இன்னும் சரி பண்ணாமல் அப்படியே போட்டிருக்காரு. பாத்ரூம் குழாயில தண்ணி சரியா வரலே. இன்வெர்டர் பேட்டரியில் சார்ஜ் இறங்கி போச்சு. கார் ஸ்டார்ட் ஆகலே. அவங்க ரெண்டு பேர் அறையும் உட்காரக்க்கூட இடமில்லாமல் பழைய புஸ்தகமும் துணியுமா அடைந்து கிடக்குது...”
ராகவ்வை நோக்கி இவன் பார்வை திரும்ப...
அலட்டவே இல்லை அவர். “அதெல்லாம் பார்த்துக்கலாம்டா. இன்னும் ஒரு வாரம் இருக்கே.”
ஒரு வாரமும் அவர் ஒரு துரும்பையும் அசைக்கவில்லை என்பது அடுத்த வாரம் சென்றபோது தெரிந்தது.
வீடு அமளி துமளிப் பட்டுக்கொண்டிருந்தது. பிள்ளைகள் வந்திருந்தார்கள்.
பிளம்பர் ஒரு பக்கம் குழாயை சரி செய்ய, பூஜா காரை பழுது பார்க்க எடுத்துப் போக, புவனுடன் சேர்ந்து மாமா அறைகளை சுத்தம் பண்ணிக்கொண்டிருந்தார்.
வேகம் வேகமாக வேலை நடந்ததில் எல்லா விஷயங்களும் இரண்டு நாட்களில் சரியாகி விட்டாலும் கையிலிருந்த நாட்களைக் கோட்டை விட்டு விட்டு இவர் இப்படி நிலைமையை மோசமாக்கியிருக்க வேண்டாமே என்று தோன்றிற்று.
இப்போது சொன்னால் நன்றாயிராது.
பிள்ளைகள் கிளம்பின பிற்பாடு ஒரு நாள் அவரிடம் கடிந்து கொண்டான் கிஷோர். “...ஏன் இப்படி வீணாக சிரமத்தை அதிகரித்துக் கொள்ளணும்?”
அவரோ சிரித்தார். “சிரமத்தை அதிகரித்ததாக யார் சொன்னது? எனக்கு மட்டும் தெரியாதா என்ன? வேண்டுமென்றேதான் பிள்ளைகள் வரும்வரை வேலைகளைத் தள்ளிக் கொண்டு போனேன்.அவங்க வரும் முன் எல்லாவற்றையும் சரி செய்து வைத்துவிட்டால் வீட்டிலுள்ள கஷ்டங்களையும் பிரசினைகளையும் பற்றி அவங்க தெரிந்துகொள்ள வாய்ப்பே இல்லாம போயிடும் இல்லையா?”
“சரி அதற்காக? இப்ப அவங்களும் சேர்ந்து ரெண்டு நாள் ஓடியாடி வேலை செய்து... லீவில் ரெண்டு நாள் வேஸ்ட் ஆனதே!”
“வேஸ்ட் அல்ல அது. ரெண்டே நாளில் அத்தனை பிரசினைகளையும் சரி செய்து வேலைகளை முடித்துவிடலாம் என்கிற நேரடி அனுபவ பயிற்சி அல்லவா கிடைச்சிருக்கு? இது அவங்களுக்கு எப்பவும் கை கொடுக்கும் இல்லையா?”
“ஷ்யூர்!” என்றான் கிஷோர்.
(’அமுதம்’ ஜனவரி 2014 இதழில் வெளியானது.)
><><><
(படம் - நன்றி: கூகிள்)