Sunday, August 9, 2026

ஓவியரும் கூட....


‘உங்களை மிக அழகானவராக கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை, ஏனெனில் நீங்கள் மிக அழகானவர்.’
சொன்னவர் யார்?
மூமின்ஸ் என்ற காமிக்ஸ் ஸ்ட்ரிப்ஸ் மூலமாக பூமியில் பிரபலமான நபர் அவர். (Moomins)
பின்லாந்தின் முன்னணி பெண் எழுத்தாளர்களில் ஒருவர். புகழ்பெற்ற ஓவியரும் கூட.
குடும்பத்தில் அத்தனை பேரும் கலைஞர்களாக இருக்கும் போது அதில் வளரும் ஒருத்தி மிகச்சிறந்த படைப்பாளியாக மாறக் கேட்கணுமா?
குழந்தைகளுக்கு எழுதுவதிலும் பெரியவர்களுக்கு எழுதுவதிலும் வல்லவர்.
Tove Jansson. இன்று பிறந்தநாள்!
இன்னும் சொன்னவை சுவையானவை:
‘நீண்ட பிரயாணம் மேற்கொள்ள வேண்டும் நீங்கள், வீடு எத்தனை அற்புதமானது என்பதை கண்டுகொள்ள.’
‘ஒருவன் எல்லாவற்றையும் தானே கண்டுபிடித்தாக வேண்டும்; தானே அதிலிருந்து விடுபட வேண்டும்.’
‘யாரையேனும் அளவுக்கதிகமாக பிரமித்தால் சுதந்திரமாக இருக்கவே முடியாது.’
‘எல்லா விஷயங்களுமே மிகவும் நிச்சயமற்று இருக்கின்றன; அதுவேதான் என்னில் மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்துகிறது.’
‘பாலத்தில் படுத்துக்கொண்டு வெள்ளம் பாய்வதைக் கவனியுங்கள்; சிவப்பு பூட்ஸ்களை அணிந்துகொண்டு ஈர நிலத்தில் சிரமப்பட்டு ஓடுங்கள்; அல்லது மாடியில் உருண்டபடி கூரையில் மழை விழுவதை கேளுங்கள். தனக்குத்தானே அனுபவிப்பது ரொம்ப சுலபம்!'
‘உள்ளபடியே கடவுள் உதவுகிறார், ஆனால் நீ சொந்தமாக ஒரு முயற்சியாவது செய்த பிறகு தான்.’
‘மொத்தத்தில் இவ்வளவுதான் விஷயம்: ஒரு போதும் களைப்படையாதீர்கள், உற்சாகத்தை இழந்து விடாதீர்கள், வெறுமே இருந்துவிடாதீர்கள் - விலைமதிப்பற்ற உங்கள் ஆர்வத்தை இழந்து உங்களை சாக விட்டுவிடாதீர்கள். அவ்வளவுதான், விஷயம் ரொம்ப சிம்பிள்.’

கடவுளின் செல்ல சப்ஜெக்ட்...


விஞ்ஞானம் கடவுளின் செல்ல சப்ஜெக்ட்! உள்ளே செல்லச் செல்ல சுவாரசியம் விரிந்துகொண்டே போகும்...
இப்ப பாருங்க… ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன்... எல்லாம் வாயுக்கள். தெரியும். எல்லா வாயுவும் மாலிக்யூல்களால் ஆனது. அறிவோம். ஒரு கப் ஹைட்ரஜனை அள்ளிக் கொண்டால் அதில் ஆயிரக் கணக்கில் ஹைட்ரஜன் மாலிக்யூல்கள் இருக்கும். ஆமா, சரிதான். போலவே ஒரு கப் நைட்ரஜனை அள்ளிக் கொண்டால் அதில் ஆயிரக்கணக்கில் நைட்ரஜன் மாலிக்யூல்கள். இந்த ரெண்டு கணக்கும் எக்ஸாட்லி ஒரே நம்பராக இருக்கும்னு நினைச்சுப் பார்த்திருப்பீங்களா? ஒண்ணாதான் இருக்கும். ஒரே கன அளவுள்ள எந்த வாயுவை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரே எண்ணிக்கை மாலிக்யூல்கள்தாம் இருக்கும் (ஒரே வெப்பம் & அழுத்தத்தில்) அது தான் 'ஆவாகாட்ரோ' விதி. ஆரோ அது? அவருதாங்க அதைக் கண்டு பிடிச்சது.. 200 வருஷம் முன்னாடியே…
Amedeo Avogadro... இன்று பிறந்த நாள்!
படித்தது முதலில் சட்டம். ஆர்வத்தில் நுழைந்தது விஞ்ஞானம். வாழ்ந்த காலத்தில் உரிய பாராட்டு வழங்கப் படாதவர்களில் ஒருவர்.

Saturday, August 8, 2026

இதயம் தொடுவார்...


79 இல் வந்த படம்... அதன் பின் அதே மாதிரி கதை நிறைய வந்துவிட்டனதான். என்றாலும்...
வேலைப் பிரியரான கிரேமர் பிரமோஷன் ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது மனைவி ஜோனா அவனைப் பிரிந்து செல்ல தயாராக இருக்கிறாள். அப்பாவை வெறுக்கும் மகனை அவன் பொறுப்பிலேயே விட்டுவிட்டு! வீட்டையும் மகனையும் கவனிப்பதில்லையாம் அவன்!
அம்மாவும் ஆகி, திணறும் கணவன் வேறு வழியில்லாமல் சாதாரண வேலைக்கு இறங்குகிறான். கொஞ்சம் கொஞ்சமாய் மகனின் இதயத்தில் இடம் பிடிக்கிறான்.
இப்போது அவள் வருகிறாள் மகனைக் கேட்டு. வழக்கில் அவன் பக்க நியாயங்கள் வெளிப்பட்டாலும் முடிவு அவளுக்கு சாதகமாக. அப்பீலுக்கு போகலாம்தான், ஆனால் சின்ன பையன் தலையில் தேர்ந்தெடுக்கும் பெரிய சுமை விழுமே என்று விட்டுக் கொடுக்கிறான்.
பையனை அழைத்து போக மறுநாள் காலை வருகிறாள் ஜோனா. அவள் விட்டுப் பிரிந்த முதல் நாள் தயாரித்த அதே காலை டிபன். அப்பாவும் மகனுமாக தயாரிக்கிறார்கள். தன்னைவிட அவனிடமே பையன் ஹோம்லியாக இருப்பதைச் சொல்லி விட்டு வெளியேறுகிறாள் தனியே.
கிரேமராக நடித்தவருக்கு எப்படியோ, நமக்கு ‘Kramer Vs Kramer’ மறக்க முடியாத படம். அவருக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆஸ்கார் வாங்கித் தந்தது ஆயிற்றே?
Dustin Hoffman... Aug. 8 பிறந்த நாள்.
‘என்னாலே தானே அம்மா பிரிந்து போனாள்?’ என்று கேட்கும் மகளிடம் பொறுமையாக, ‘உன் அம்மாவை அவளாக இருக்க விடாமல் என் விருப்பப்படி அவளை மாறச் செய்தேன். அவளைக் கவனிக்கவோ கேட்கவோ எனக்கு நேரமில்லை. முடிந்தவரை முயன்று பார்த்துவிட்டுத்தான் அகன்றாள். உனக்காகத்தான் இன்னும் சில நாள் இருந்தாள்..’ என்று அரவணைக்கும் காட்சியில் பையனின் & நம் இதயம் தொடுவார். ஆஸ்காரையும்!
ஆரம்பப் படங்களில் ஒன்றான ‘The Graduate’ படத்திலேயே எல்லோரையும் தன்னைக் கவனிக்க வைத்தவர். 1967 இன் நம்பர் ஒன் வசூல் படம் அது.
'Midnight Cowboy' படத்தின் ஹீரோ ரோலை அவர் கைப்பற்றிய விதமே அலாதி. காஸ்டிங் டைரக்டரை இவர் ஒரு தெருமுனையில் சந்திப்பதாக ஏற்பாடு. கந்தல் ஆடையும் கிழிந்த கோட்டும் பிய்ந்த ஷூவும் அணிந்து வர்றவர் போகிறவரிடம் காசு கேட்டுக்கொண்டிருந்த ஹாஃப்மேனை அடையாளம் கண்டுபிடிக்கவே கொஞ்ச நேரம் ஆயிற்று அவருக்கு. அந்த மாதிரியான ஒரு ரோல் அது.
இளைஞராக இருந்த போதும் சரி வயதானவரான போதும் சரி, பிரதான காரெக்டர்களில் பிரமாதமாகப் பண்ணியவர். ‘Kung Fu Panda’ வில் Shifu வின் வாய்ஸ் இவருதான்.
வாங்கிய மற்றொரு ஆஸ்கார் Tom Cruise உடன் நடித்த 'Rain Man'-க்காக.
கூட உட்கார்ந்து திரைக்கதை எழுதுவார் ஆனால் திரையில் பேர் போட்டுக்கொள்ள பிரியப் பட்டதில்லை.
தமாஷான ஒரு Quote? ‘வெற்றி அடைஞ்சதில ஒரு சந்தோஷம் என்னன்னா சாவதைப் பற்றிய பயம் போயிடுச்சு. ஸ்டார் ஆயிட்டீங்கன்னா, ஏற்கனவே நீங்க செத்துப் போயாச்சு. பாடம் பண்ணியாச்சு.’