Wednesday, August 30, 2023

அந்தப் பெண் ..

 


“ஆளுக்கு ஒரு பேய் கதை எழுத வேண்டும். உன்னால் முடியுமா?” பிரபல கவிஞர் பைரன் கேட்கிறார் அந்த சின்னப் பெண்ணை. காதலனுடன் ஓடி வந்திருந்த அந்த அந்தப் பதினெட்டு வயது பெண்ணை. 1816 -இன் மழை நாளொன்றில் சுவிட்சர்லாந்தில். யோசித்து யோசித்து பார்க்கிறாள். மறுநாள் இரவு கனவொன்று. இன்ஸ்பயர் ஆகி எழுந்து எழுத ஆரம்பிக்கிறாள். உலகின் முதல் சயின்ஸ் ஃபிக் ஷன் எனப்படும் Frankenstein கதை பிறக்கிறது. எழுதியவர் பெண்ணென்றால் நம்பவில்லை. 'கணவர்தான் எழுதியிருப்பார்!' என்றார்கள்.

அந்தப் பெண் .. Mary Shelley... (1797-1851) இன்று பிறந்த நாள்!
சாதாரண கதையா அது? ரொம்ப ரகசியமாக ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிதான் ஃப்ராங்கென்ஸ்டீன். சடலத்துக்கு உயிர்கொடுக்கும் மாய ஒளிக்கற்றையைக் கண்டுபிடித்தவர் அற்புதமான ஒரு மனிதனை உருவாக்க எண்ணுகிறார். என்ன, எடுத்துக்கொண்ட உடலுக்கு மூளைப் பகுதி சேதமுற்றிருக்கிறது. வேறொரு நல் மூளையைக் கொண்டுவந்து விட்டாலும் மாறிப்போய் விடுகிறது. எழுந்து கொண்டது மனிதனல்ல, மான்ஸ்டர். தப்பாய்ப் போனவனை தடுப்பதற்குள் தப்பி விடுகிறான். அதிர வைக்கிறது அவரையும் அவனது கொடூரங்கள். எப்படி ஒழிக்கிறார்கள் என்பது கதை. கடவுளின் படைப்பை எதிர்க்கும் மனிதச் செயலின் விளைவு நாசம்தான் என்பது மெசேஜ்.
பிரபல Boris Karloff தான் முதல் ஃப்ராங்கென்ஸ்டீன் மான்ஸ்டர். அசத்தி (அச்சுறுத்தி) விட்டார் மனிதர்!
எதைவிட எது பெட்டர் என்று விவாதிக்கிற அளவுக்கு ஏகப்பட்ட ஃப்ராங்கென்ஸ்டீன் திரைப்படங்கள் வந்துவிட்டன. அமுதசுரபி மாதிரி ஒரு அடிப்படை லைன் கொடுத்துவிட்டாரா, அடியொற்றி வந்த புதினங்களும் அனேகம். தமிழில் கூட இந்த பாணியில் நான் வணங்கும் தெய்வம் என்று வந்ததாய் ஒரு ஞாபகம்.
மேரி ஷெல்லியின் வாழ்க்கையோ? பிறந்ததுமே மரித்து விட்ட தாய்.. கடன் சுமையில் அப்பா.. சித்தி கொடுமை..என்று சுத்திச் சுத்தி சோகம். காதலித்தவரும் வேறொருத்தியின் கணவர். பிறந்த குழந்தைகளில் பிழைத்தது ஒன்றே. 24 வயதில் நீரில் மூழ்கி கணவர் மரணம்... ஆனால் எழுத்தாளராக மட்டும் வாழ்வில் வெற்றி. எழுதிய ‘கடைசி மனிதன்’ நாவலும் பின் நாட்களில் பிரபலமாகிப் போனது.
Elle Fanning நடித்து 2017 இல் படமாக வந்த இவரின் கதைக்கு (‘Mary Shelley’) அமோக விமரிசனம்!

Friday, August 25, 2023

யார்க்கும் கிட்டாத குரல்...


அவர் பாடலைக் கேட்டதுமே சொல்லிவிடலாம்: கிட்டாதப்பா இந்த மாதிரி ஒரு குரல்!

S G கிட்டப்பா… இன்று பிறந்தநாள்! (1906 - 1933)
‘காமி சத்யபாமா… கதவைத் திறவாய்!’ ஒரு பிரபல பாடல். ‘திறவாய்… திறவாய்..’ என்று அவர் வாய் திறந்து பாடும்போது வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்போம்.
ஏற்றம் இறக்கம் எதிலும் சற்றும் மடங்காமல், அற்றம் எதிலும் அடங்காமல்… கம்பீர கந்தர்வ குரல்!
பத்தாது பத்தாது என்று கேட்கும் பாடல்களைப் பாடி மகிழ்வித்தவர் பத்தாவது மகனாக செங்கோட்டையில் பிறந்து ஐந்து வயதிலேயே மேடையேறியவர்.. பள்ளியில் படிக்காத இளமை, ஆனால் ஒரு முறை கேட்டாலே அப்படியே ஒப்புவித்துவிடும் வல்லமை!
இங்கே இவர் நாடக மேடையில் அட்டகாசமாகப் பாடி, பாடகர் நட்சத்திரமாக பவனி வருகையில், அங்கே இலங்கையில் அவர், கே.பி.சுந்தராம்பாள், நாடகங்களில் பாடிக் கலக்கிக் கொண்டிருக்க, ‘அவர் பாட்டுக்கு உம் பாட்டு நிற்காது,’ என மற்றவர்கள் சிலர் இருவரையும் உசுப்பி மோத விட்டதில் இருவருமே சேர்ந்து பாடி வென்று காட்டினர். பிறந்த நட்பு காதலாகியது அறிந்த வரலாறு.
பிற மாநில வித்வான்கள் வந்திருந்து கேட்டு அதிசயித்து அந்த மேடையிலேயே அவரைப் பாராட்டி மாலை அணிவித்து மகிழ்ந்தனர். நாடக மேடையோடு நின்று விட்டது இந்த பாடக மேதையின் பாட்டு.
27 வயதுக்குள் இசையுலகை அலங்கரித்துவிட்டு இறைவனடி எய்தியது நமக்கு இழப்புத்தான்.

Thursday, August 24, 2023

பலே ஐயா!

 


அது யாரய்யா அசட்டு அப்பாவியா என்றால் அதுதான் டி. எஸ். பாலையா!

வேறு யாரய்யா முகத்தில் டன் டன்னாக அசடு வழிய விடுவதில் வல்லவர்?
அந்தக் காதலிக்க நேரமில்லை விஸ்வநாதனாக வேறு யாரையாவது நம்மால் நினைக்க முடியுமா பாலையாவைத் தவிர? வெறும் ரீயாக்‌ஷனை வைத்துக்கொண்டே ஐந்து நிமிடம் அந்தக் காட்சியை ஹாஸ்யத்தின் உச்சத்துக்குக் கொண்டுபோய் விடுவாரே நாகேஷ் கதை சொல்லும்போது!
பாலையா அந்த கேரக்டருக்கு கொடுத்த பாலிஷ் நமக்கு ஒரு பிளஸண்ட் சர்ப்ரைஸ்! ஹீரோக்கள் அவரை ஏமாற்றுவதான கதையை, அவர் ஏமாறுவதான கதையாக மாற்றும் அளவுக்கு அட்டகாசமாக அவர் நடிப்பு!
எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி படத்தில் அறிமுகமான இவர், வில்லனுக்கும் காமெடியனுக்கும் இடையிலான ஒரு வகை காரக்டரை திரைக்கு சுவாரசியமாக அறிமுகப்படுத்தினார்.
'இன்னிக்கு வெள்ளிக் கிழமை, வாளைத் தொடமாட்டேன்'னு மதுரை வீரனிடம் காட்டும் பொய் மிடுக்கும் சரி, பிள்ளைகளின் பாமா விஜய ஸ்டார் மோகத்தைக் கண்டிக்கும் மெய் மிடுக்கும் சரி என்னவொரு ரேஞ்ச் அஃப் ஆக்டிங்!
கொலைப் பழியை ஏவிஎம் ராஜன் மீது சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு, தன் மனைவி மகளைப் பறிகொடுத்தபின் மனம் திருந்தும் கேரக்டர், கே எஸ் கோபாலகிருஷ்ணனின் ‘என்னதான் முடிவு?’ படத்தில். பழிவாங்கத் துடிக்கும் ராஜன் முன்னால், ‘உன் கையால் சாகத்தான் காத்திருந்தேன்,’ என்று அமைதியாக வந்து நிற்கும் க்ளைமாக்ஸில் மன்னிப்பை ஆடியன்ஸிடமிருந்தும் வாங்கிவிடுவார்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் குழந்தையை வேலைக்காரி குழந்தையாகவும் அவள் குழந்தையைத் தன் குழந்தையாகவும் பார்க்க வேண்டிய சூழ்நிலை அம்மா எம் வி ராஜம்மாவுக்கு. அவரது பிடிவாதம் பிடித்த கணவராக அமர்க்களப் படுத்தியிருப்பார். எல். வி. பிரசாத்தின் ‘தாயில்லாப் பிள்ளை’யில்.
ஜெயகாந்தன் கதையில் நடித்தது ‘யாருக்காக அழுதான்?’ படத்தில். குடிகாரனின் பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு அப்பாவி நாகேஷ் மீது பழியைப் போட்டுவிட்டு உள்ளுக்குள் வதைபடும் அந்த கேரக்டருக்கு 100 சதம் உயிர் கொடுத்திருப்பார்.
பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவும் முடியாமல், நடந்ததை சொல்லவும் முடியாமல் பரிதவிக்கும் கேரக்டர் என்றால் இவருக்கு பீட்சா சாப்பிடுற மாதிரி. இவருக்காகவே எழுதப்பட்டதோ என்று சில சமயம் தோன்றும். ‘ஊட்டி வரை உறவு.’
துளி பிசிறு இல்லாமல் கான்ட்ராஸ்ட் காட்டுவதில் மன்னர். சபையில் காட்டிய கர்வத்துக்கு சற்றும் குறையாமல், ‘சற்று முன்பு ஒரு தேவகானம் கேட்டதே?’ என்று பிரமிப்பை உதிர்த்தபடி தன் செருக்குச் சட்டையைக் கழற்றிப் போடும் அந்த நயம்! (திருவிளையாடல்)

Aug. 23 பிறந்தநாள்!