“ஆளுக்கு ஒரு பேய் கதை எழுத வேண்டும். உன்னால் முடியுமா?” பிரபல கவிஞர் பைரன் கேட்கிறார் அந்த சின்னப் பெண்ணை. காதலனுடன் ஓடி வந்திருந்த அந்த அந்தப் பதினெட்டு வயது பெண்ணை. 1816 -இன் மழை நாளொன்றில் சுவிட்சர்லாந்தில். யோசித்து யோசித்து பார்க்கிறாள். மறுநாள் இரவு கனவொன்று. இன்ஸ்பயர் ஆகி எழுந்து எழுத ஆரம்பிக்கிறாள். உலகின் முதல் சயின்ஸ் ஃபிக் ஷன் எனப்படும் Frankenstein கதை பிறக்கிறது. எழுதியவர் பெண்ணென்றால் நம்பவில்லை. 'கணவர்தான் எழுதியிருப்பார்!' என்றார்கள்.
சாதாரண கதையா அது? ரொம்ப ரகசியமாக ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிதான் ஃப்ராங்கென்ஸ்டீன். சடலத்துக்கு உயிர்கொடுக்கும் மாய ஒளிக்கற்றையைக் கண்டுபிடித்தவர் அற்புதமான ஒரு மனிதனை உருவாக்க எண்ணுகிறார். என்ன, எடுத்துக்கொண்ட உடலுக்கு மூளைப் பகுதி சேதமுற்றிருக்கிறது. வேறொரு நல் மூளையைக் கொண்டுவந்து விட்டாலும் மாறிப்போய் விடுகிறது. எழுந்து கொண்டது மனிதனல்ல, மான்ஸ்டர். தப்பாய்ப் போனவனை தடுப்பதற்குள் தப்பி விடுகிறான். அதிர வைக்கிறது அவரையும் அவனது கொடூரங்கள். எப்படி ஒழிக்கிறார்கள் என்பது கதை. கடவுளின் படைப்பை எதிர்க்கும் மனிதச் செயலின் விளைவு நாசம்தான் என்பது மெசேஜ்.
பிரபல Boris Karloff தான் முதல் ஃப்ராங்கென்ஸ்டீன் மான்ஸ்டர். அசத்தி (அச்சுறுத்தி) விட்டார் மனிதர்!
எதைவிட எது பெட்டர் என்று விவாதிக்கிற அளவுக்கு ஏகப்பட்ட ஃப்ராங்கென்ஸ்டீன் திரைப்படங்கள் வந்துவிட்டன. அமுதசுரபி மாதிரி ஒரு அடிப்படை லைன் கொடுத்துவிட்டாரா, அடியொற்றி வந்த புதினங்களும் அனேகம். தமிழில் கூட இந்த பாணியில் நான் வணங்கும் தெய்வம் என்று வந்ததாய் ஒரு ஞாபகம்.
மேரி ஷெல்லியின் வாழ்க்கையோ? பிறந்ததுமே மரித்து விட்ட தாய்.. கடன் சுமையில் அப்பா.. சித்தி கொடுமை..என்று சுத்திச் சுத்தி சோகம். காதலித்தவரும் வேறொருத்தியின் கணவர். பிறந்த குழந்தைகளில் பிழைத்தது ஒன்றே. 24 வயதில் நீரில் மூழ்கி கணவர் மரணம்... ஆனால் எழுத்தாளராக மட்டும் வாழ்வில் வெற்றி. எழுதிய ‘கடைசி மனிதன்’ நாவலும் பின் நாட்களில் பிரபலமாகிப் போனது.
Elle Fanning நடித்து 2017 இல் படமாக வந்த இவரின் கதைக்கு (‘Mary Shelley’) அமோக விமரிசனம்!
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!