1979 இல் வந்த படம்... அதன் பின் அதே மாதிரி கதை நிறைய வந்துவிட்டனதான். என்றாலும்...
வேலைப் பிரியமரான கிரேமர் பிரமோஷன் ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது மனைவி ஜோனா அவனைப் பிரிந்து செல்ல தயாராக இருக்கிறாள். அப்பாவை வெறுக்கும் மகனை அவன் பொறுப்பிலேயே விட்டுவிட்டு! வீட்டையும் மகனையும் கவனிப்பதில்லையாம் அவன்!
அம்மாவும் ஆகி, திணறும் கணவன் வேறு வழியில்லாமல் சாதாரண வேலைக்கு இறங்குகிறான். கொஞ்சம் கொஞ்சமாய் மகனின் இதயத்தில் இடம் பிடிக்கிறான்.
இப்போது அவள் வருகிறாள் மகனைக் கேட்டு. வழக்கில் அவன் பக்க நியாயங்கள் வெளிப்பட்டாலும் முடிவு அவளுக்கு சாதகமாக. அப்பீலுக்கு போகலாம்தான், ஆனால் சின்ன பையன் தலையில் தேர்ந்தெடுக்கும் பெரிய சுமை விழுமே என்று விட்டுக் கொடுக்கிறான்.
பையனை அழைத்து போக மறுநாள் காலை வருகிறாள் ஜோனா. அவள் விட்டுப் பிரிந்த முதல் நாள் தயாரித்த அதே காலை டிபன். அப்பாவும் மகனுமாக தயாரிக்கிறார்கள். தன்னைவிட அவனிடமே பையன் ஹோம்லியாக இருப்பதைச் சொல்லி விட்டு வெளியேறுகிறாள் தனியே.
கிரேமராக நடித்தவருக்கு எப்படியோ, நமக்கு ‘Kramer Vs Kramer’ மறக்க முடியாத படம். அவருக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆஸ்கார் வாங்கித் தந்தது ஆயிற்றே?
Dustin Hoffman... இன்று பிறந்த நாள்.
‘என்னாலே தானே அம்மா பிரிந்து போனாள்?’ என்று கேட்கும் மகளிடம் பொறுமையாக, ‘உன் அம்மாவை அவளாக இருக்க விடாமல் என் விருப்பப்படி அவளை மாறச் செய்தேன். அவளைக் கவனிக்கவோ கேட்கவோ எனக்கு நேரமில்லை. முடிந்தவரை முயன்று பார்த்துவிட்டுத்தான் அகன்றாள். உனக்காகத்தான் இன்னும் சில நாள் இருந்தாள்..’ என்று அரவணைக்கும் காட்சியில் பையனின் & நம் இதயம் தொடுவார். ஆஸ்காரையும்!
ஆரம்பப் படங்களில் ஒன்றான ‘The Graduate’ படத்திலேயே எல்லோரையும் தன்னைக் கவனிக்க வைத்தவர். 1967 இன் நம்பர் ஒன் வசூல் படம் அது.
'Midnight Cowboy' படத்தின் ஹீரோ ரோலை அவர் கைப்பற்றிய விதமே அலாதி. காஸ்டிங் டைரக்டரை இவர் ஒரு தெருமுனையில் சந்திப்பதாக ஏற்பாடு. கந்தல் ஆடையும் கிழிந்த கோட்டும் பிய்ந்த ஷூவும் அணிந்து வர்றவர் போகிறவரிடம் காசு கேட்டுக்கொண்டிருந்த ஹாஃப்மேனை அடையாளம் கண்டுபிடிக்கவே கொஞ்ச நேரம் ஆயிற்று அவருக்கு. அந்த மாதிரியான ஒரு ரோல் அது.
இளைஞராக இருந்த போதும் சரி வயதானவரான போதும் சரி, பிரதான காரெக்டர்களில் பிரமாதமாகப் பண்ணியவர். ‘Kung Fu Panda’ வில் Shifu வின் வாய்ஸ் இவருதான்.
வாங்கிய மற்றொரு ஆஸ்கார் Tom Cruise உடன் நடித்த 'Rain Man'-க்காக.
கூட உட்கார்ந்து திரைக்கதை எழுதுவார் ஆனால் திரையில் பேர் போட்டுக்கொள்ள பிரியப் பட்டதில்லை.
தமாஷான ஒரு Quote? ‘வெற்றி அடைஞ்சதில ஒரு சந்தோஷம் என்னன்னா சாவதைப் பற்றிய பயம் போயிடுச்சு. ஸ்டார் ஆயிட்டீங்கன்னா, ஏற்கனவே நீங்க செத்துப் போயாச்சு. பாடம் பண்ணியாச்சு.’
><><><
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!