Monday, January 23, 2023

புத்தகமே எழுதலாம்...


அவர் இயக்கிய அந்த ஒரே ஒரு படம் போதும் அவர் பேர் சொல்ல. இந்தியாவிலேயே மிக அதிக வசூல் ரிகார்ட் இன்றுவரை.

படம் ‘Sholay’ அவர் Ramesh Sippy. இன்று பிறந்த நாள்!
முதல் ரெண்டு வாரம் கூட்டமே இல்லை. பத்திரிகைகள் உதட்டைப் பிதுக்கின. க்ளைமாக்ஸை திரும்ப எடுத்து அமிதாப்பை பிழைக்க வைக்கலாமான்னு அவர் யோசிக்க... பார்த்தவர் வாய்மொழி வழி புகழில் அள்ளத் தொடங்கிய கூட்டம் நிற்கவேயில்லை. மராத்தா மந்திர் தியேட்டரில் ஐந்து வருடத்துக்கு மேல் ஓடிற்று..
அப்பா பெரிய புரட்யூஸராயிருந்தும் ஏழு வருஷம் அஸிஸ்டண்ட் டைரக்டராக இருந்தபின்னரே இயக்குனரானார்.
ஹேம மாலினி, ராஜேஷ் கன்னா, ஷம்மி கபூர் காம்பினேஷனில் இயக்கிய முதல் படமே (‘Andaz’) ஹிட்! அடுத்து ஹேமமாலின் தர்மேந்திரா சஞ்சீவ் குமாருடன் ‘Seeta Aur Geeta’. அதைவிட பெரிய ஹிட். அடுத்து Sholay. அதிரடி ஹிட்.
அப்புறம் நிறைய... குறிப்பாக 'Shakti'. லேசாய்'தங்கப் பதக்கம்' ஜாடை. திலிப் குமார், அமிதாப் இணைத்து memorable movie கொடுத்தார். ஷாருக்கானை இயக்கிய படம் ‘Zamaana Deewana’.
இன்னொரு படம். அது பெரிய ஹிட் ஆகவில்லை ஆனால் கமல் நடிப்பு அற்புதமாக இருக்கும். ‘Saagar’. தான் காதலிக்கும் டிம்பிள் நேசிப்பது ரிஷி கபூரை என்றறிந்ததும் அதை அப்படியே ஜாலி நட்பாக முகத்தில் பிரதிபலிப்பாரே கமல், அந்த சீன் கமல் மட்டுமே அத்தனை அழகாகச் செய்ய முடியுமென்று அறிந்திருந்தார் போலும்.
‘ஷோலே’ படத்தை பற்றி தனியாக ஒரு புத்தகமே எழுதலாம். அதற்கு 'வெற்றித் திரைப்படம் எடுப்பது எப்படி?' என்று தலைப்பு வைக்கலாம். பிரம்மாண்டமான படங்களை எடுத்து வெற்றி பெறுவதற்கு வித்திட்ட படம் அது.

>><<

Sunday, January 22, 2023

ஆசானுக்கு ஆசான்...



நம்ம எல்லாருக்கும் ஆசான் அவர் என்று ஆசான் சார்லி சாப்ளினே புகழும் ஒருவர் உண்டு. ஆரம்ப சினிமாவின் பேரன்பர்.

D W Griffith... (1875 - 1948) இன்று பிறந்த நாள்!
எழுதிக் கொண்டு போய் கொடுத்த கதையை நிராகரித்து விட்டார் தயாரிப்பாளர். இருந்தாலும் மனம் தளராமல் கிடைத்த சின்ன சின்ன ரோல்களில் நடித்துக்கொண்டு காத்திருந்தார் வாய்ப்புக்காக. வந்தது. டைரக்டர் ஆனார். முதல் ஐந்து வருடத்தில் கிட்டத்தட்ட 400 (மௌனப்)படங்களை தயாரித்தார். பெரும்பாலும் 12 நிமிட படங்கள்.
இன்றைக்கு திரையில் பயன்படுத்தப்படும் ஏராளம் உத்திகளுக்கு அன்றைக்கு வித்திட்டவரும் சத்திட்டவரும் இவரே. முக்கியமாக க்ளோஸப். மற்றொன்று fade in, fade out உபயோகித்து செக்வன்ஸ் பிரிப்பது. அப்புறம் கிராஸ் கட்டிங்: வேறு வேறு இடங்களில் எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட் செய்து ஒரே நேரத்தில் நடப்பதாக காட்டுவது. Flashback இவரது இன்வென்ஷன்.
கதையைச் சொல்லும் குரல் பின்னால் ஒலித்துக் கொண்டு இருந்ததை மாற்றி இசைக்கு இடம் பெற்றுத் தந்தார்.
1910 இல் இவர் தயாரித்த ‘In Old California’ என்ற சிறிய படம் தான் ஹாலிவுட்டில் தயாரான முதல் படம். ‘Lights! Camera! Action!’ முதன் முதலில் சொல்லப்பட்டது அப்போது தான்!
United Artists கம்பெனி பிறந்தது. சார்லி சாப்ளின் முதலானோருடன் சேர்ந்து ஆரம்பித்தார் அதை.
வரலாறு காணாத வசூல் என்பார்களே, வரலாறு கண்ட முதல் ஏகப்பட்ட வசூல் படம் இவருடைய ‘The Birth of a Nation’. அடுத்த பிரபல படம் ‘Intolerance.’ பிரம்மாண்ட செட்டுகள். அப்போதே 3000 துணை நடிகர்கள்! மற்றொரு முக்கியமானது இவரது முதல் பேசும் படம் ‘Abraham Lincoln’.
பெரிய பட்ஜெட்டாக போடுவார்... அதனாலேயே பின்னர் பெரிய நஷ்டம் அடைந்தார்.
>><<

Saturday, January 21, 2023

மூன்று முறை...


மூன்று முறை மரணம் நெருங்கிற்று அந்தச் சிறுவனை. ஒரு முறை கார் மோதியது. மற்றொரு முறை குதிரையிலிருந்து தவறி விழுந்தான். ஒரு பூகம்பத்தின்போது, தொங்கிக் கொண்டிருந்த மூன்றாம் மாடியறையிலிருந்து மீட்கப்பட்டான்.
இப்படி உயிர் பிழைத்த அந்தச் சிறுவன்தான் பின்னாளில் உலகெங்கும் உள்ள இளைஞர்களுக்கு உடல் கட்டமைப்பில் நாட்டம் வரக் காரணமாயிருந்த க்ரேட் ஹீரோ.
ஸ்டீவ் ரீவ்ஸ் நடித்த என்று பெரிதாக போஸ்டரில் போட்டு விளம்பரம் வரும், 1950 களில்! ஆஜானுபாகுவான என்றால் இப்படீன்னு காட்டுகிற நடிகர். புஜபல பராக்கிரமத்தால் ஜெயிக்கிற வாள்சண்டைப் படங்கள்.
Steve Reeves… இன்று பிறந்த நாள்!
மார்பு 52''க்கு அகன்று உடம்பு 6' 1” க்கு உயர்ந்தவர். அள்ளிய கோப்பைகளிலும் படிப்படியாக உயர்ந்தார். 1946-இல் Mr. Pacific Coast, 1947-இல் Mr. America, 1948-இல் Mr. World, 1950-இல் Mr. Universe!
மிலிடரியில் இருந்தபோது செய்த ட்ரக் லோடிங் வேலையும் ஜிம் பயிற்சியும் மிகவும் உதவியிருந்தது கட்டான உடலமைப்புக்கு. 400பவுண்ட் எடையை ஜஸ்ட் நுனி விரல்களால் இடுப்பு வரை உயர்த்துவார் அனாயாசமாக. வாரம் 3 முறை பயிற்சி செய்து வாழ்நாள் முழுக்க உடலைக் கச்சிதமாக வைத்திருந்தவர்.
ஹீரோவாகலாம் என்று ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்தவரை முதலில் யாரும் கண்டுகொள்ளவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய வேடங்கள்.
15 பவுண்ட் எடை குறைக்கச் சொன்னார் சிசில் பி டிமிலி. அந்தப் பிரசினையில் இழந்த படம் 'ஸாம்சன் அன் டிலைலா' ரொம்ப நாளாச்சு, அடுத்த சரியான ரோல் கிடைக்க.
அதான் 'ஹெர்குலிஸ்'! அந்த ஒரே படத்தில் உலக அளவில் ஸ்டார்! அடுத்து ‘Hercules Unchained.’ 25 நாடுகளில் வசூல் மன்னர். ஐரோப்பாவிலேயே அதிக சம்பள ஹீரோவானார். இவரது படமொன்று இரண்டு வருடமாக ஒரு தியேட்டரில் 24 மணி நேரமும் திரையிடப்பட்டு ஓடியதாம்.
கச்சிதமான உடலமைப்புக்கு காலாகாலத்துக்கு ரோல் மாடலாக இருந்தவர். கணக்கில்லா ரசிகர்கள். எங்கே சென்றாலும் ஆரவாரம். ஜம்மென்று ஜிம்முக்குப் போக ஆரம்பித்தனர் வாலிபர்கள். இன்றைக்கும் இருக்கிறது ரசிகர் மன்றம்.
வரிசையாக வந்தன... ‘Goliath and the Barbarians’, ‘The Thief of Baghdad’, ‘The Last Days of Pompeii’...
குதிரையில் துரத்தும் காட்சிகளுக்கு டூப் வேண்டாம், பிரமாதமாக ஓட்டுவார். Sylvester Stallone, Arnold Schwarzenegger-க்கு ரோல் மாடல் இவர்தான்.
‘The Last Days of Pompeii’ ஷூட்டிங்கில்.. ஓட்டிய ரதம் தடம் புரண்டு மரத்தில் மோத, தோள் பட்டை இடம் பெயர்ந்தது.
ஹெர்குலிஸ் படத்தில் செயினை உடைத்துக்கொண்டு எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சி. செயின் இரும்பு இல்லை, மரம்தான். என்றாலும் அடித்தால் காயம் பலமா இருக்குமே? அடிப்பது மாதிரி இழுத்தார். டைரக்டர் சொல்கிறார், பலமா அடிய்யா என்று.
காயம் படுமே சார்? - இவர்.
பட்டால்தான்யா அவங்களுக்கு சம்பளம்! என்று கத்தினாராம் அவர்.

>><<