Thursday, December 5, 2024

விஞ்ஞான வேடிக்கைகள் ...

கடிகாரம் செய்வது எப்படி என்கிற புத்தகத்துக்கு ஆர்டர் செய்திருந்தான் அந்த வாட்ச் மெக்கானிக் இளைஞன். பார்சலில் தவறுதலாக வந்ததோ

விஞ்ஞான வேடிக்கைகள் என்ற மேஜிக் புத்தகம். திருப்பி அனுப்பாமல் ஆர்வத்தில் அதைப் படித்தான். அதையே நன்றாகக் கற்று, மேஜிக் நிபுணர் ஆகி பின்னாளில் Father of Modern Magic என்ற புகழ் பெற்றார்.
Jean Eugene Robert Houdin...
இன்று பிறந்த நாள்!
வக்கீல் ஆஃபீஸில் குமாஸ்தாவாக இருந்தவர் சட்டம் படிப்பதைப் பற்றி சட்டை செய்யாமல் எப்பவும் ஏதாவது மிஷின்களை நோண்டிக் கொண்டு இருந்ததை பார்த்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார், வாட்ச் மேக்கர் வேலைக்கு தான் லாயக்கு என்று.
வாட்ச் மெக்கானிக் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது நடந்த மற்றொரு சம்பவம்… ஒரு முறை தப்பான உணவால் ஃபுட் பாய்சன் ஆகிவிட, வீட்டுக்கு விரைகையில் வழியில் விழுந்து கிடந்தார். எடுத்துச் சென்று காப்பாற்றினார் Torrini என்ற ஒரு மேஜிக் நிபுணர். இவர் குணம் ஆகி விட்டார். ஆனால் அவருக்கு ஆக்சிடென்ட். எனவே அவர் நடத்தவிருந்த மாஜிக் ஷோவுக்கு இவர் உதவி செய்ய வேண்டியதாயிற்று. மேடையேறினார் ராபர்ட்.
மின்சாரத்தை முதல் முதலில் மேஜிக்கில் உபயோகித்தவர் இவர்தான். பலசாலியான ஒரு பார்வையாளரை அழைப்பார். பாக்ஸ் ஒன்றைத் தூக்கச் சொல்லுவார். எளிதாக அவர் தூக்கியதும் இதோ போய்விட்டது உன் பலம் என்று கையை ஆட்டுகிறார். இப்ப அவரால் தூக்க முடியவில்லை. (எலெக்ட்ரோ மேக்னெடிஸம்!)
இன்னொரு முறை முயலும்போது அலறுகிறார். லேசாய் ஒரு ஷாக். (மின்சாரம்!)
'அந்தரத்தில் மிதக்கும் பையன்'தான் மந்திரத்தில் இவருக்கு பெயர் வாங்கித் தந்த முதல் முக்கிய அம்சம். ஒரு பையனை பிரம்பால் லேசாய் வருட அவன் குறுக்காக மிதக்க ஆரம்பிப்பான்.
அன்றாட உபயோகப் பொருட்களை வைத்துக் கொண்டு அருமையான மேஜிக்குகளை அற்புதமாகச் செய்து காட்டிய மறு கணமே அதன் ட்ரிக்குகளையும் அரங்கத்தினருக்கு அழகாக விளக்குவார்.
வாட்ச் மேக்கர் இல்லையா? எப்படி ஓடுகிறதென்றே 'கண்டுபிடிக்க முடியாத' கடிகாரம் ஒன்றைக் 'கண்டுபிடித்தார்'.

Tuesday, December 3, 2024

கடல் இவரது உடல் மொழி...

‘பெண்ணாயிருப்பது பெரும் சிரமமான காரியம், ஏனெனில் அதன் முக்கிய வேலை ஆண்களை கையாளுவது என்பதால்.’
சொன்னவர் Joseph Conrad.
எத்தனையோ எழுத்தாளர்களின் ஆதர்ச எழுத்தாளரான ஹெமிங்வேயின் ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர் இவர். இன்று பிறந்தநாள்!
கடல் தான் இவரது உடல் மொழி. எழுதிய கதைகளில் கடல் கதைகளே பிரதானம். 20 வருட வணிகக் கப்பல் பயண அனுபவம் இவர் எழுத்துக்கு நிறையவே 'திரை' அமைத்தது.
புனைவிலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி படித்தவர்கள் மறக்க முடியாத நாவல் ‘Lord Jim.’ கோழைத்தனத்தால் தன் கப்பலைக் கைவிட்ட ஜிம்மின் கதை. தன்னை நிலை நிறுத்த அவனது துடிப்பும் முயற்சிகளும் விரிந்து பரவும் நாவலில்! பிரபல Peter O'Toole நடித்தார் Lord Jimஆக, பிரபல Richard Brooks டைரக்‌ஷனில்.
ஆல்பிரட் ஹிட்ச்காக் 1936இல் படமாக்கிய இவரது நாவல் தான் ‘Sabotage.’ 1924இல் மறைந்த இவரது 'Heart of Darkness' நாவல் இந்த 2021ல் படம் ஆகிக்கொண்டிருக்கிறது.
சஸ்பென்ஸாக விட்டு மறைந்தார் சஸ்பென்ஸ் என்ற தன் கடைசி நாவலை.
ஆங்கிலத்தில் இத்தனை கதைகளைப் படைத்தவருக்கு இருபது வயதுவரை ஆங்கிலம் தெரியாதாம்.
‘சக மனிதர்களின் குறைபாடுகளின்பால் அக்கறையோ அனுதாபமோ இல்லாதவரை ஒரு எழுத்தாளர் என்று கொள்ள முடியாது,’ என்பவரின் இதர வார்த்தைகள்:
‘மற்றவரை ஒத்துக் கொள்ள வைக்க முயல்கிறவர் சரியான வாதத்தை விட சரியான வார்த்தையையே நம்ப வேண்டும். உணர்வின் சக்தியைவிட ஒலியின் சக்தி அதிகம்.’
‘அடுத்தவர்களின் பலவீனத்திலிருந்து தற்செயலாக எழுவதே பலம் என்பது.’
‘நாம் கனவு காண்பது போல, நாம் வாழ்வதும் தனியாகவே.’
'கேடு விளைவிக்கும் அபூர்வ சக்திகள் எங்கோ இருப்பதாக நம்பவேண்டாம், சகல வகை கெடுதலையும் செய்யும் சக்தியை மனிதர்களே நிறைய வைத்திருக்கிறார்கள்.'
‘எதிர் கொள்வது, எது வந்தாலும் எதிர் கொள்வது: அதுவொன்றே முன்னேறிச் செல்ல ஒரே வழி . எதிர் கொள்ளுங்கள்!’
‘கடல் என்றுமே ஒரு நண்பராக இருந்ததில்லை. மிஞ்சி மிஞ்சி போனால் மனிதனின் அலைபாயும் மனதுக்கு ஒரு துணையாக.’
‘மனிதரின் கற்பனையில்தான் சத்தியம் ஒவ்வொன்றும் சக்தி வாய்ந்த, மறுக்க முடியாத உருவம் பெறுகிறது. கற்பனைதான் வாழ்க்கைக்கும் சரி, கலைக்கும் சரி மாபெரும் அதிபதி.’
‘ஒவ்வொரு புல்லின் இதழுக்கும் மண்ணில் ஓர் இடமுண்டு. தன் பலத்தை அதிலிருந்துதான் எடுத்துக் கொள்கிறது. அதுபோலவே மனிதனும் தன் வாழ்க்கையையும் நம்பிக்கையையும் தான் வேரூன்றியிருக்கும் மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கிறான்.’

Friday, November 29, 2024

முதல் படத்திலேயே...


வயது 18 இல் முதல் படத்திலேயே வாங்கினார் ஆஸ்கார் நாமினேஷன்.
Cathy Moriarty…. இன்று பிறந்த நாள்!
அழகிப்போட்டியில் பங்கு கொண்டு ஜெயித்தவரை, வா, ராபர்ட் டி நீரோவுடன் நடிக்கலாமென்று அழைத்து வந்தார் நடிகர் ஜோ பெஸ்கி.
‘Raging Bull’ என்ற அந்தப் படம் De Niro வுக்கும் விசேஷமான படம். Jake La Motta என்ற நிஜ பாக்ஸருடைய கதை. தத்ரூபமாக இருப்பதற்காக அந்த பாக்ஸரருடனேயே பலநூறுமுறை ட்ரெய்னிங் எடுத்துக் கொண்டார். 27 கிலோ வெயிட் ஏற்றிக்கொண்டார். எந்த அளவுக்கு ஈடுபாடென்றால் அந்த சமயத்தில் நியூயார்க்கில் நடந்த மூன்று பாக்ஸிங் ஃபைட்டில் கலந்து கொண்டு ரெண்டு பந்தயத்தில் ஜெயித்தார். கடைசியில் அவர் முன் வரிசையில் அமர்ந்திருக்க இவர் ஆஸ்கார் அவார்ட் வாங்கினார்.
டைரக்டர் Martin Scorsese ஸ்போர்ட்ஸ் பக்கமே தலை வைத்துப் படுக்காதவர்! அவருக்கும் சவாலான படம். சாதித்தார். கடைசி பாக்சிங் ஃபைட்டை ஷாட் எடிட் பண்ணுவதற்கு மண்டையை உடைத்துக் கொண்ட மார்டினுக்கு வழிகாட்டியது எது தெரியுமா? ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’ மர்டர் சீன்! ஒவ்வொரு punchக்கும் சத்தம் எடுத்தது எங்கேயிருந்து? தக்காளியில் இருந்தும் தர்பூசணியில் இருந்தும்…
2007 இல் மாபெரும் படங்களில் நாலாவது இடத்தை அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் கொடுத்தது .
Cathy -யிடம் வருவோம். … அடுத்த வருடமே கார் ஆக்ஸிடெண்டில் செத்துப் பிழைத்து ஆறு வருடம் கட்டாய ஓய்வு! பின், வரிசையாக தோல்விப் படங்கள். மறுபடி மார்க்கெட்டைப் பிடித்தது ‘Soapdish’இல் ஸ்ட்ராங் உமனாக. அப்புறம் திடம் கொண்ட பெண்ணாகவே படம் கொண்டார். பெரும்பாலும்! அவரை மனதில் வைத்தே எழுதிய கதைகள்!
எதிர்பார்த்த முதல் கல்யாணம் நடக்காதது சுவாரசியமான கதை. மணக்கவிருந்த Richard Palmer இவரோடு சேர்ந்து பீட்சா ஹோட்டல்களை நடத்திக் கொண்டிருந்தார். மற்றொரு ஹோட்டலில் அவரை சந்தித்த தன்னைவிட 14 வருடம் மூத்தவரான பிரபல நடிகை Raquel Welch-ஐப் பார்த்து மனம் பறிகொடுத்து அவரை கல்யாணம் செய்து கொண்டு விட்டார். அந்த மற்றொரு ஹோட்டல் ஓனர் வேறு யாரும் இல்லை, இவருடன் மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்த Robert De Niro வே தான். அலட்டவே இல்லை. பிசினஸ் பார்ட்னர்ஷிப் இன்றும் நீடிக்கிறது.
மூன்று குழந்தைகளில் இரண்டு twins. நடித்த படங்கள் பலவற்றை இவர் பார்த்ததே இல்லை.
ஒரு நடிகைக்கு வருகிற கஷ்டங்களை பாருங்கள்.. ‘Raging Bull’ இல் நடிக்கும் போது தலைமுடிக்கு மக்காச்சோள ஸிரப் பயன்படுத்தியிருந்தார். வெளிப்புற ஷூட்டிங்கில் தேனீக்களின் தொல்லை தாங்க முடியவில்லையாம்.