Thursday, April 20, 2023

பொன் மனம்...


மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கைகளைப் பூட்டி அறைகளில் அடைத்து வதைகளுடன் கூடிய வைத்தியம் பார்த்தது அவரை வதைத்தது. கதவுகளைத் திறந்து விட்டார். கலந்துபேசி ,அருகாமையில் ஒரு தோழமை கொடுத்து... என்று மனோ தத்துவத்தில் புதிய அத்தியாயங்களை எழுதினார்.

'Father of Modern Psychiatry' என்று அழைக்கப்பட்ட Phillipe Pinel... இன்று பிறந்த நாள்!
மன அழுத்தம், சமூகத் தாக்கம், ஏன் உடலளவிலான பாதிப்பு கூட மனதில் பிழைகளை பிறழ்வுகளை ஏற்படுத்தலாம் என்றிவர் சொன்னது நிறைய மாற்றங்களை உண்டாக்கியது. புரிந்து உணர்ந்து குணப்படுத்தும் வழிகளைப் புகுத்தினார். நம்ம டாக்டர் V S ராமச்சந்திரனின் பிரபல 'Phantoms in the Brain' அன்பர்கள் நினைவுக்கு வரலாம்..
படித்த மருத்துவப்படிப்பு பாரிஸில் அங்கீகரிக்கப்படாததால் பல வருடங்கள் எழுத்தாளராக கழிக்க நேர்ந்தது. மனநிலை பாதித்து தற்கொலை செய்துகொண்ட நண்பரின் மறைவு இவரை மனநல மருத்துவத்தில் இறங்க வைத்தது. இவர் வேலை பார்த்த மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று தேறி, அங்கேயே வேலைக்கு சேர்ந்திருந்த புஸின் என்பவரிடமிருந்து தயங்காமல் நிறைய கற்றுக்கொள்ளும் அளவு ஆர்வம்!

><><><

Monday, April 3, 2023

ஜோவாக, ஜோராக...

 “Que Sera, Sera... Whatever will be, will be..”

வீட்டில் பையனுடன் சேர்ந்து பாடகியான அம்மா ஜோ தினம் பாடும் பாட்டு அது. ஒருமுறை அப்பா பெஞ்சமினுடன் அவர்கள் வெளிநாடு சென்றபோது பையன் கடத்தப்பட்டு விடுகிறான். முயன்று அவன் இருக்கும் இடத்தை ஊகித்தால், அது ஒரு தூதரகம். நேரே போய் சோதனையிட முடியாது. அங்கே நடக்கும் ஒரு பார்ட்டிக்கு அழைப்பை எப்படியோ வாங்குகிறார்கள். பார்ட்டியில் ஜோவைப் பாடச் சொல்லவே, அவள் அந்தப் பாடலைச் சத்தமாகப் பாட, கட்டிடத்தின் உள்ளே பையனுக்குக் காவலிருந்த பெண் பரிதாபப்பட்டு அனுமதிக்க, பையன் அடுத்த வரியை விசிலடிக்கிறான். பையனை மீட்க விரைகிறார்கள். ஹிட்ச்காக்கின் 'The Man Who Knew Too Much' படத்தில் வரும் காட்சி அது.

ஜோவாக, ஜோராக பாடி நடித்தவர் Doris Day!
இன்று பிறந்த நாள்.
ஆர்வம் பெரிதாய் இல்லாமல் அவர் பாடிய பாட்டு அத்தனை 'பெரும்' ஹிட்டாகும், ஆஸ்காரும் 'பெறும்' என டோரிஸ் டே எதிர்பார்க்கவேயில்லை. தமிழிலும் வந்துவிட்டது. மறந்திருக்க மாட்டீர்கள்:
"சின்னப் பெண்ணான போதிலே..
அன்னையிடம் நான் ஒரு நாளிலே..
எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா...
அம்மா நீ சொல் என்றேன்..
வெண்ணிலா நிலா... என் கண்ணல்லவா கலா..." ('ஆரவல்லி' பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்)
(இந்த ஃபேமிலி ஸாங்க் கன்செப்டை வைத்து ஆயிரம் படங்கள் வந்துட்டது அப்புறம் இங்கே என்பது வேறு விஷயம்.)
1940. டான்ஸ் பயின்று காம்பெடிஷனில் வென்று ஹாலிவுட்டுக்கு மூட்டை கட்டும்போது முட்டுக் கட்டையாக அந்த ஆக்ஸிடெண்ட். போன கார் ரயிலில் மோத, காலில் அடி. அப்புறம் இசை பயின்று பாடகி. ஸ்க்ரீன் டெஸ்டில் வென்று நடிகை. விரைவில் ஸ்டார்.
டாப் டென்னில் டென் டைம்ஸ் வந்தவர். (அதில் டாப் ஒன், நாலு முறை!) கிளார்க் கேபிளிலிருந்து ராக் ஹட்சன் வரை எல்லா பெரிய ஹீரோக்களுடனும் படங்கள்.
கடனை வைத்துவிட்டு இறந்து போன கணவர், டி.வி. சீரியல் ஒன்றுக்கும் இவரைக் கமிட் செய்துவிட்டிருந்தாராம். உடல் நிலையும் மன நிலையும் சரியில்லாத போதும் சமாளித்து அதைச் செய்ததில் சூபர்ஹிட் ஆனது அந்த 'The Doris Day Show.'
பொருத்தமாயிருக்காது என இவர் மறுத்த நாயகி ரோல் 'The Sound of Music'. பிராணிகளின் ஃப்ரண்ட். வாழ்க்கையின் பிற்பகுதியை அவற்றின் நலனுக்காக செலவழித்தார்.

Saturday, April 1, 2023

விதை? இவர் போட்டது!


இன்றைக்கு துப்பறியும் நாவலின் அபார வடிவம் அறிவீர்கள். ஆனா விதை? இவர் போட்டது! இவர் அமைத்த ட்ராக்கில்  இன்றுவரை க்ரைம் நாவல் ரயில் ஓடுகிறது. 

Edgar Wallace! இன்று பிறந்த நாள்.


அவரது உச்சப் புகழ்  காலத்தில் இங்கிலாந்தில் வாசிக்கப்பட்ட நாலு புத்தகத்தில் ஒன்று அவருடையது. மட்டுமா? மிக அதிகமாக (160) படமாக்கப்பட்ட நாவலாசிரியர்களில் ஒருத்தர்.  எழுதிய 170 நாவலுமே பெஸ்ட் ஸெல்லர். எழுதிக் குவித்தார். ரெண்டு செக்ரட்டரிக்கும் மூணு டிக்டேஷன் மெஷினுக்கும் ஒரே சமயத்தில் நாவல், நாடகம், கதை என்று நாளை நடத்திக் கொண்டிருப்பார். ‘One man writing machine’ அப்படீம்பாங்க. 72 மணி நேரத்தில் ஒரு நாவல் எழுதி விடுவார்.


1890 -களில் ஆப்பிரிக்காவிலிருந்து கட்டுரைகளை பிரிட்டனுக்கு அனுப்பிக் கொண்டிருந்தபோது தவறுதலா வேறொரு பத்திரிகைக்கு சென்றுவிட்டது ஒரு கட்டுரை. அவங்களுக்கு பிடிச்சுப் போச்சு. அவங்க வாங்கி பிரசுரிக்க ஆரம்பிக்க, அந்த The Daily Mail இல் எடிட்டரானபோது சம்பளம் அப்போதே 4000 டாலர்!


கிரைம் ரிப்போர்ட்டராக வேலை பார்த்ததாலோ என்னவோ, உண்மைகளோடு ஒட்டி உறவாடியதால், தன் கதைகளில் பிளாட், ஃபார்முலா என்றில்லாமல் பல கோணங்கள், பல பாத்திரங்கள், பல மனப்பாங்குகள் என்று பிரமாதப் படுத்தியிருப்பார்.


சட்டத்தினால் தண்டிக்க முடியாத குற்றவாளிகளைக் கண்டறிந்து தாங்களே தண்டனை வழங்குவதற்கு ரகசிய சங்கம் அமைத்த  நாலு புள்ளிகளின் கதை தான் இவர் எழுதிய முதல் மிஸ்டரி நாவல் ‘The Four Just Men.’  கையோடு அதை தானே பப்ளிஷ் செய்ய விரும்பியவர்  கையை சுட்டுக் கொண்டார். விளம்பரத்துக்காக கொலைகாரனை கண்டுபிடிங்கள் போட்டி (அட்டையில்:  'சுவையான ஒரு கதையைப் படிப்பதோடு முடிவில் யார் கொலை செய்தது என்பதைக் கண்டு பிடித்து படிவத்தை நிரப்பி அனுப்புபவர்களுக்கு பரிசு 500 பவுண்ட்!') நடத்தியதில் பின்னும் நஷ்டம், ஒருவருக்குத்தான் பரிசு என்று அறிவிக்கத் தவறியதால்.




துணை நடிகை அம்மாவால் பாராமரிக்க முடியவில்லை.. ஆதரித்த தம்பதி தத்தெடுக்க அங்கே அக்கா க்ளாராவின் ஊக்குவிப்பில் வளர்ந்தவர். வேலைக்காக அலைந்தபோது… கப்பலில் சமையல் வேலை தெரியும் என்று ஏறியவர் தவறை உணர்ந்து அடுத்த கரையில் இறங்கி லண்டனுக்கு வழி நடந்த நாட்கள் முப்பது.


ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறியும் கானன் டாயிலின் ‘The Hound of the Baskerville’  நாவலுக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார். மற்றொரு முக்கியப் படம் ‘King Kong’  தவிர நிறைய படங்களுக்கு ‘ஸ்கிரிப்ட் டாக்டரா’க இருந்திருக்கிறார்.


டி.வி.யில் ஓடிய  Edgar Wallace Mystery Series இல் வந்த படங்கள் 48. இன்னொரு பக்கம் Edgar Wallace Mystery Magazine  என்று ஒன்று மூன்று வருடங்கள் வெளிவந்தது.


ஒரு நண்பர் இந்த எழுத்தாளருக்கு போன் செய்தார். 'அவர் புது நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார்,' என்று பதில் கிடைத்தது.

'பரவாயில்லே, காத்திருக்கிறேன்!' என்றாராம் அந்த நண்பர்.


நிறைய சம்பாதித்தார். இன்னும் நிறைய செலவழித்தார். கடைசியில் விட்டுப் போனதென்னவோ கடன் தான். பொதுவாக வாழ்வின் பின் பிரபலமடையும் எழுத்தாளர்கள் அநேகம். ஆனால் இவரைப் பொறுத்தவரை வாழும் பொழுது பிரகாசித்த அளவு பின்னர் அவர் புகழ் பாடப் பெறவில்லை...  எழுதிக் குவித்தவரை எளிதாக மறந்து விட்டார்கள் பலர். 


பஞ்ச்:

பூட்டிய அறைக்குள் அந்த நபர் கொல்லப்பட்டு கிடக்கிறார் செயரில் உட்கார்ந்தபடியே. அறை வெளியே பூட்டி இருக்கிறது. அறைச் சாவியோ அவர் பாக்கெட்டில்.  எப்படி நடந்தது கொலை?  அவரது ஃபேமஸ் நாவல் ‘The Clue of the New Pin’ -இன் knot இது. 

அட்டகாசமாக அவிழ்த்திருப்பார் முடிச்சை.