Thursday, December 15, 2022

முந்திச் சிந்தித்தவர்...


‘இப்ப எனக்குப் புரிகிறது,’ என்றான் உலகின் கடைசி மனிதன்.’
பிரபல Scince Fiction எழுத்தாளர் Arthur C Clarke -இன் ஒரு வரி இது.
கப்பல் பாரம் சரியா இருக்க, அடைத்துவந்த குப்பை நியூஸ் பேப்பர்களில் வந்த விஞ்ஞானக் கதைகளைப் படித்தவர், பின்னாளில் பிரபல Scince Fiction எழுத்தாளரானார்.
Arthur C Clarke.. இன்று பிறந்த நாள்!
அரும்பியது விஞ்ஞானம் மீது காதல் எனினும் விரும்பியதைப் படிக்க வசதி இல்லாத வறுமை. ஆடிட் க்ளார்க் ஆக வேலை பார்த்தபடி எழுத ஆரம்பித்து…
ஸாட்டிலைட் வைத்து உலகம் பூரா டெலிகாஸ்ட் செய்து சௌகரியமாக உட்கார்ந்து டி.வி. பார்க்கிறோமே, அதைக் கண்டு பிடிப்பதற்கு 20 வருஷம் முன்பே இவர் எழுதிவிட்டார் அதைப் பற்றி, ‘Extra Terrestrial Relays’ என்ற தன் கட்டுரையில்!
விண்வெளிப் பயணங்களின் சாத்தியதை பற்றி 1950களிலேயே எழுதிவிட்டார். ஏன், விண்கல விஞ்ஞானிகளே ஆலோசனை கேட்க இவரிடம் வருவதுண்டு.
‘2001 A Space Odyssey’! எல்லாரும் பார்த்து ரசித்தோமே அந்த பிரம்மாண்ட ஹாலிவுட் படம்! அது 1951-இல் இவர் எழுதிய ‘The Sentinel’ என்ற சிறுகதை. 'இந்தப்படம் உங்களுக்குப் புரிந்தால் எங்களுக்குத் தோல்வி,' என்று விளம்பரப் படுத்தினார்கள். 'நிறைய கேள்விகளை எழுப்பவேண்டும் அது!'
'ஜோசியத்தில் எனக்கு நம்பிக்கையில்லை, நான் தனுசு. நாங்க சந்தேகப் பிராணிகளாச்சே?' என்பார். எப்படி ஜோக்?
கொஞ்சம் இவரது Quotes...
‘மொத்தத்தில் இரண்டு சாத்தியதை தான் உண்டு: பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோம் அல்லது இல்லை. இரண்டுமே ஒரே அளவு பயங்கரமானது; திகில் ஊட்டுவது.’
‘எந்தப் புரட்சிகரமான முன்னேற்றமும்நான்கு படிகளில் அமைவது. 1. அது மடத்தனம், என் நேரத்தை வீணாக்காதே. 2. சுவாரசியமா இருக்கிறது, ஆனால் ரொம்ப முக்கியமில்லை. 3. அது ஒரு நல்ல ஐடியா என்று நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன். 4. நான் தான் அதை முதலில் சொன்னேன்!’
‘இந்த ஒரு காலக்ஸியில் மட்டுமே 87000 மில்லியன் சூரியன்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் மனிதன் எதிர்கொள்வது இயலாத காரியம். கோள்கள் ஒருநாள் அவன் வசமாகலாம். ஆனால் நட்சத்திரங்கள் மனிதனுக்கானவை அல்ல.’
‘இன்டர்நெட்டில் இருந்து தகவல் பெறுவது என்பது நயாக்ரா நீர் வீழ்ச்சியிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீர் பெறுவது.’
‘தகவல் அறிவு ஆகாது. அறிவு விவேகம் ஆகாது. விவேகம் தொலைநோக்கு ஆகாது. ஒன்றிலிருந்து ஒன்று... எல்லாமே வேண்டும் நமக்கு.’
‘இருப்பவர்களுக்கும் இறந்து போனவர்களுக்குமான விகிதத்தை வைத்துப்பார்த்தால் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் முப்பது ஆவிகள் நிற்க வேண்டும்!’
‘இப்போது நான் ஒரு அறிவியல் விற்பன்னர். அதாவது எதைப்பற்றியும் எனக்கு முழுமையாக தெரியாது.’
‘அடுத்து என்ன செய்வது என்பதே நிஜத்தில் வாழ்வின் ஒரே பிரசினை.’
‘உங்களால் என்ன முடியும் என்று கண்டுபிடிக்க ஒரே வழி அதையும் தாண்டி முயற்சிப்பது தான்.’

Friday, August 12, 2022

கலைக் குடும்பம்...


‘உங்களை மிக அழகானவராக கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை, ஏனெனில் நீங்கள் மிக அழகானவர்.’

சொன்னவர் யார்?
மூமின்ஸ் என்ற காமிக்ஸ் ஸ்ட்ரிப்ஸ் மூலமாக பூமியில் பிரபலமான நபர் அவர். (Moomins)
பின்லாந்தின் முன்னணி பெண் எழுத்தாளர்களில் ஒருவர். புகழ்பெற்ற ஓவியரும் கூட.
குடும்பத்தில் அத்தனை பேரும் கலைஞர்களாக இருக்கும் போது அதில் வளரும் ஒருத்தி மிகச்சிறந்த படைப்பாளியாக மாறக் கேட்கணுமா?
குழந்தைகளுக்கு எழுதுவதிலும் பெரியவர்களுக்கு எழுதுவதிலும் வல்லவர்.
Tove Jansson. எழுத்தாளர்... Aug.9. பிறந்தநாள்!

இன்னும் சொன்னவை சுவையானவை:
‘நீண்ட பிரயாணம் மேற்கொள்ள வேண்டும் நீங்கள், வீடு எத்தனை அற்புதமானது என்பதை கண்டுகொள்ள.’
‘ஒருவன் எல்லாவற்றையும் தானே கண்டுபிடித்தாக வேண்டும்; தானே அதிலிருந்து விடுபட வேண்டும்.’
‘யாரையேனும் அளவுக்கதிகமாக பிரமித்தால் சுதந்திரமாக இருக்கவே முடியாது.’
‘எல்லா விஷயங்களுமே மிகவும் நிச்சயமற்று இருக்கின்றன; அதுவேதான் என்னில் மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்துகிறது.’
‘பாலத்தில் படுத்துக்கொண்டு வெள்ளம் பாய்வதைக் கவனியுங்கள்; சிவப்பு பூட்ஸ்களை அணிந்துகொண்டு ஈர நிலத்தில் சிரமப்பட்டு ஓடுங்கள்; அல்லது மாடியில் உருண்டபடி கூரையில் மழை விழுவதை கேளுங்கள். தனக்குத்தானே அனுபவிப்பது ரொம்ப சுலபம்!'
‘உள்ளபடியே கடவுள் உதவுகிறார், ஆனால் நீ சொந்தமாக ஒரு முயற்சியாவது செய்த பிறகு தான்.’
‘மொத்தத்தில் இவ்வளவுதான் விஷயம்: ஒரு போதும் களைப்படையாதீர்கள், உற்சாகத்தை இழந்து விடாதீர்கள், வெறுமே இருந்துவிடாதீர்கள் - விலைமதிப்பற்ற உங்கள் ஆர்வத்தை இழந்து உங்களை சாக விட்டுவிடாதீர்கள். அவ்வளவுதான், விஷயம் ரொம்ப சிம்பிள்.’

Tuesday, June 21, 2022

காமெடி மன்னர்கள்!

 


விழுந்து விழுந்து சிரித்தவர்கள் வைத்திருக்கும் லிஸ்டில், விடாது இடம் பெறும் ஜோடி லாரல் ஹார்டி! 1940 களின் காமெடி மன்னர்கள்!

அவர் (லாரல்) ஏதாவது தத்து பித்தென்று பண்ணிவிடுவார். இவர் (ஹார்டி) கொடுக்கிற கோப ரீயாக்‌ஷன் இருக்கிறதே, அட்டகாசமா இருக்கும். அவர் இன்னஸெண்டாக ஒரு பலகையை தட்டிவிட, இவர் பொதேலென்று கீழே விழுவார். 'கொன்னுடறேன் பாரு!' கோபாவேசமாக எழுந்து துரத்துவார்.
ஹார்டிக்கு மேனர்ஸ், எடிகட் எல்லாம் முக்கியம். பதவிசாக அவர் பேசும் ஸ்டைலே அழகாயிருக்கும். லாரல் ஆல்வேய்ஸ் கவனப் பிசகு. அதனால் நேரும் அவதி ஹார்டிக்கு! பல்லைக் கடிப்பதும் தலையைப் பிய்ப்பதுமே இவர் வேலையாகிவிடும்.
எப்படி உருவாச்சு இந்த comic duo? மூணு படங்களில் அவங்க சேர்ந்து நடித்த காட்சிகளில் ஜனங்க ரீயாக்‌ஷனைப் பார்த்த ஸ்டூடியோ டைரக்டர் Leo McCarey அந்த காமெடி ஜோடியை தொடர்ந்து போட்டு படங்களை எடுக்க ஆரம்பித்தார். அவர்களும் கைவரிசையைக் காட்ட, விமரிசையாக ஓடின படங்கள் வரிசையாக...!
1932 இல் ஆஸ்கார் Best Short Film அவார்ட் கூட வாங்கிவிட்டார்கள். ‘Saps at Sea,’ ‘Chums at Oxford,’ 'Way out West’ எல்லாம் காமெடி காவியங்கள்.
எப்பவும் அப்பாவை உதைக்கிறாரேன்னு ஹார்டியைக் கண்டாலே ஆகிறதில்லே லாரல் பொண்ணுக்கு. அவளுக்காகவே 'One Good Turn' படத்தில் ஹார்டியை தான் உதைப்பதாக சீன் வைத்தார் அப்பா லாரல்.
John Wayne -உடன் நடித்த ஒன்றுமாக மொத்தம் 417 படங்கள் நடித்துவிட்டார் ஹார்டி. Babe Hardy என்ற பெயரில் நடிக்க ஆரம்பித்தவர் பெயரை Oliver Hardy ஆக்கியவர் நியூமராலஜிஸ்ட்.
ஹார்டி கண் மூடியபின் லாரல் மூவீ காமிரா முன் வர முன்வரவேயில்லை எத்தனையோ அழைப்பு வந்தும்!
Stan Laurel... ஜூன் 16. பிறந்தநாள்!