Wednesday, February 18, 2026

16 வயதினிலே ...


16 வயதினிலே லேசான சினிமா ஆர்வத்துடன் ‘Andaz’ பட ஷூட்டிங் பார்க்க ஸ்டூடியோவுக்குள் நுழைந்த பெண்ணை, 'Barsaat' பட ஷூட்டிங்கிலிருந்த ராஜ் கபூர் பார்க்க, 'கண்டேன் என் ரெண்டாவது கதாநாயகியை!' என்று sign up செய்தார். இப்படியாக "ஜீயா பேகரார் ஹை ..." என்ற All India Hit பாடலைப் பாடிக்கொண்டே நுழைந்தார் படவுலகில்.
நிம்மி! கம்மியின்றி அழகை ஆண்டவன் அள்ளிக் கொடுத்த நிம்மி! இந்தித் திரையுலகின் முதல் அழகுப் பதுமை எனச் சொல்லலாம் இவரை. அப்பாவி கிராமப் பெண் வேடத்துக்கு அபாரமாக பொருந்தும் முகம். Incidentally, ‘குமுதம்' படத்தின் ரீமேக் 'Phooja Ki Phool’ -இல் சௌகார் வேடத்தில் இவரே.
லதா மங்கேஷ்கர் தமிழில் முதல் முதலாக பாடிய பாட்டு நினைவிருக்கிறதா? "நீ எந்தன் கண்ணாளன்.. கரை நோக்கி போகிறாய்..." (அந்த "தையாரே தையர..”)
படத்தில் அந்தக் காட்சியில் நிம்மி, என்னவொரு முகபாவம்! படம் 'Uran khatola'. (தமிழில் 'வானரதம்' திலீப் குமார்.)

நாம தான் சுத்திட்டு ...


நம்பளைத் தான் எல்லாம் சுத்திக்கிட்டு இருக்குதுன்னு நாமல்லாம் நினைச்சிட்டிருக்கும்போது, நாம தான் சுத்திட்டு இருக்கிறோம்னு நமக்குச் சொன்ன ஆளுக்கு இன்னிக்கு பிறந்தநாள்!
Nicolaus Copernicus... (1473 - 1543)
ஆம், பூமிதான் தன்னைத்தானேயும் சூரியனையும் சுற்றுவதை சுட்டிக் காட்டினார். அந்த Heliocentric theory யை எழுதி முடிக்க அவர் செலவிட்டது கிட்டத்தட்ட அரை வாழ்நாள்! கொடுத்து விட்டு மறைந்து விட்டார். ஆமாம் அது புத்தகமாக வெளியான வருடம் தான் அவரது கடைசி வருடம். அதற்கு முன்பிருந்த அரிஸ்டாட்டில், தொலமி (Ptolemy) இருவரின் கருத்துக்களும் தடம் புரண்டன.
அப்பப்பா என்று ஆச்சரியப்பட வைத்தவரை வானியலின் அப்பா என்றதில் ஆச்சரியம் இல்லைதான். முன்னரே சிலர் அதைக் கோடி காட்டியதுண்டு என்பார்கள். சந்தேகங்களையும் கிளப்பாமல் இல்லை. சூரிய மண்டலத்துக்கு மட்டுமல்ல, பிரபஞ்சத்துக்கே மையம் சூரியன் என்று அவர் குறிப்பட்டது ஒன்று.
கலிலியோ, நியூட்டன், கெப்லர் எல்லாம் இவரைக் கொண்டாடி இருப்பாங்க மனசிலே, அவங்க தொடர்ந்து நடந்து செல்ல பாதை போட்டவர் ஆச்சே!
சந்திரனில் கிடக்கும் பென்சிலைப் பார்க்கிற அளவுக்கு இப்ப நம்ம கிட்ட டெலஸ்கோப் இருக்கு. ஆனால் அவரிடமிருந்த டெலஸ்கோப் அவருடைய இரண்டு கண்கள்தான். ஆமா, நாம் வெறுமே பார்த்த ஆகாயத்தை அவர் வேறு மாதிரி பார்த்தார்.
போலந்தில் வானியலும் ஜோதிடமும் கணிதமும் படித்துவிட்டு இத்தாலிக்கு வந்தார். அங்கே பிரபலமாயிருந்தார் நோவேரா. அவர்தான் வருடா வருடம் வானிலையும் நாட்டின் நிலையையும் கணித்துச் சொல்ல வேண்டும். அவரிடம் நிறையக் கற்றுக் கொண்டவர் விரைவிலேயே நல்ல பிரபலம் ஆனார். சீசரின் ஜூலியன் காலண்டர் வடிவமைக்க இவரிடம் ஆலோசிக்கிற அளவுக்கு. சமீபத்தில ஒரு தனிமத்துக்கு இவரு பேரை இட்டாங்க. Copernicium.
சொன்னாரு பாருங்க ஒண்ணு:
'நமக்கு என்ன தெரியும் என்பது நமக்குத் தெரிந்திருப்பதும், நமக்கு என்ன தெரியாது என்பது நமக்குத் தெரிந்திருப்பதும் தான் உண்மையான அறிவு.'

Thursday, February 12, 2026

இடைவேளை வரை ...


இவரைப்போல் ரசிகர்களின் வெறுப்பையும் விருப்பையும் சம்பாதித்தவர் கிடையாது.ஏனெனில் இவரின் திரை வரலாறு இடைவேளை வரை வில்லனாக.. அப்புறம் நல்லவராக. சில சமயம் கதாநாயகனைவிட!
பிரான்... குணசித்திர நடிப்பில் எவரும் கிட்ட வரான். பிறந்த நாள் இன்று!
புகைப்படக் கலை பயில்வதற்காக சிம்லா உயரம் சென்றவர் அங்கே கிடைத்த வாய்ப்பில் நடிகராகி எவரெஸ்ட் ஏறினார். 1960 களில் அனேகமாக யார் ஹீரோ என்றாலும் இவர் தான் வில்லன் என்றிருந்தது. இவரையும் தேவ் ஆனந்தையும் பிரபலமாக்கிய படம் ஒன்றே: 'Ziddi.'(1948)
ஷம்மி கபூரோ ஜாய் முகர்ஜியோ, தேவ் ஆனந்தோ திலீப் குமாரோ யார் ஹீரோவானாலும் வில்லன் இவர்தான் என்றிருந்தது 60 களில்! ஒற்றை பிரபல வில்லனாக கோலோச்சிய காலம்!
ராஜ்குமார் மறுத்துவிட, பிரமாதமா வசனம் பேச வேண்டிய தன் ஹீரோ ரோலுக்காக பிரகாஷ் மெஹ்ரா, தேவ் ஆனந்தையும் தர்மேந்திராவையும் அணுகிக் கொண்டிருந்தபோது, இவரைப் போடுங்க என்று பிரான் சொன்னதால் நமக்குக் கிடைத்தவர் அமிதாப்! படம் ‘Zanjeer’
இவருள்ளிருந்த காமெடி நடிப்புத் திறமையை வெளிக் கொண்டுவந்த படம் 'Victoria No 203.' அசோக் குமாருடன் அடிக்கும் லூட்டி!
'ஹீரோ'க்களுக்கு உதவக்கூடிய 'வில்லனை'ப் பார்த்திருக்கிறீர்களா? 'மேரா நாம் ஜோக்கர்' எடுத்து நொடித்துப்போன ராஜ் கபூர் 'பாபி' எடுக்க நினைத்தபோது, பணம் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு, அற்புதமாக நடித்துக் கொடுத்தாராம். அமிதாப் ஒரு முறை கஷ்டத்தில் இருந்தபோது அவருக்காக,தன் தள்ளாத வயதில் இரண்டு படங்கள் நடித்துக்.. ('Mrityudata', 'Tere Mere Sapne')
என்ன ஓர் நேய இதயம்! குலாம் மொஹம்மதுவுக்கு ('Pakeeja') பெஸ்ட் மியூசிக் டைரக்டர் அவார்ட் தரவில்லையென்று தனக்கான ஃபில்ம் ஃபேர் அவார்டை வாங்க மறுத்தார்.
2003 இல் பத்ம பூஷன்..2013 இல் பால்கே விருது.
மறுபடி பிறந்தால் பிரானாகவே பிறக்க வேண்டும் என்பாராம், அந்தளவு மகிழ்ச்சியாக வாழ்ந்த திருப்தியுடன்.

Wednesday, February 11, 2026

பத்து வயதிலேயே...


பெண்களின் அதி ஃபேவரிட் ஆங்கில நாவலாசிரியர் யார்னு கேட்டால் சட்னு சொல்லிடுவாங்க சிட்னி ஷெல்டன்’னு. திறமையும் ஆற்றலும் கொண்ட பெண்களே அவரது நாயகிகள். எதிர்த்து நிற்பார்கள். போராடுவார்கள். வெற்றியும் பெறுவார்கள்.
Sidney Sheldon (1917 - 2007) இன்று பிறந்த நாள்!
பத்து வயதிலேயே கவிதை எழுதி பத்து டாலர் பெற்றவர். 18 நாவல்களும் 300 கோடி பிரதிக்கு மேல் விற்று விட்ட, டாப் 10 சேல்ஸ் உள்ள நாவலாசிரியர்களில் ஒருவர்.
17 வயதில் ஹாலிவுட் கதவை தட்டினார். கதைகள் எழுதப் போனவருக்குக் கிடைத்ததோ கதைகள் படிக்கிற வேலை, யுனிவர்சல் ஸ்டுடியோவில். ஸைடில் அவர் எழுதிய ‘ஸௌத் அஃப் பனாமா’வை 250 டாலர் தந்து வாங்கிக் கொண்டார்கள். அப்படியே நிறைய படங்கள்.
ஜெர்ரி லூயிஸ் & டீன் மார்டின் காமெடி பார்த்து விழுந்து விழுந்து சிரித்திருப்பீர்களே, ‘You’re Never Too Young’ இல்? இவர் எழுதியது தான். அவர்களின் ‘Bardners’ ம்!
Cary Grant நடித்த ‘The Bachelor and the Bobby-Soxer’ ஆஸ்கார் வாங்கித் தந்தது இவர் கதைக்கு.
எம்.ஜி.எம்மில் வேலை பார்த்தது பொற்காலம். ஏகப்பட்ட படங்களுக்கு எழுதிய வேகத்தைப் பார்த்து இவரை அவர்கள் தயாரிப்பாளர் ஆக்கினார்கள். ஒருபக்கம் மேடைக்கும் எழுதி, எழுதிய ஆறில் ஒன்றுக்கு Tony அவார்டும் வாங்கினார்.
நாவல், to டி.வி. to சினிமா என்று வருவார்கள். இவரோ சினிமா, டிவி, நாவல் என்று தலைகீழாக. ஆனால் தலைசிறந்தவராக.
ஆம், லிவிங் ரூம்களை டி.வி. ஆக்கிரமித்ததும் சின்னத் திரைக்குப் போனார். முதல் சிரீஸே (The Patty Duke Show) மிகப் பிரபலம். ஏழு வருடம் எல்லா எபிசோடுகளையும் எழுதி அதிலும் ஒரு ரெக்கார்டு! எம்மி அவார்டு நாமினேஷனும் (‘I Dream of Jeannie’) வாங்கிவிட்டே ஒய்ந்தார்.
எப்படி எழுதுகிறார்? தினசரி 50 பக்கம். அதை மறுநாள் திருத்துவதோடு, 50 பக்கம் புதிதாக! 1000 பக்கம் போல வந்ததும் அதை பத்துப் பதினைந்து முறை திருத்தி எழுதுவார் சளைக்காமல். ரெண்டே வார்த்தையில் சொன்னால் 'கடின உழைப்பு'!
சினிமாவும் டி.வியும் சாதித்துவிட்டு நாவலுக்கு வந்தார். விறுவிறுப்பு, சஸ்பென்ஸ் 50:50 கலந்து அழகாய் எழுத, விற்பனைக்கு கேட்கணுமா? முதல் நாவலே 30 லட்சம் விற்று அவர் பெயரை எழுதியது. (‘The Naked Face’) அத்தியாய கடைசியில் கொக்கி போட்டு அடுத்ததுக்கு இழுப்பதில் மன்னர்.
அப்புறம் வரிசையாக டாப் செல்லர்ஸ். ‘Rage of Angels’. என்றதுமே நினைவுக்கு வருமே நம் ரா.கி.ரங்கராஜனின் 'ஜெனிஃபர்'? (என்னவொரு மொழி பெயர்ப்பு!) ‘Master of the Game’.. ‘If Tomorrow Comes’.. ‘The Best laid Plans’...
நாட்கணக்காக மெனக்கெடுவார் தகவல்களுக்காக. “நான் ஒரு இடத்தை பற்றி எழுதினால் அங்கே நான் போயிருந்திருப்பேன். ஒரு ஹோட்டலைப் பற்றி எழுதினால் அங்கே நான் சாப்பிட்டிருப்பேன். வாசகரை ஏமாற்ற எல்லாம் முடியாது,” என்பார், சினிமாவை விட நாவல் எழுதுவதில்தான் அதிக சுதந்திரம் இருப்பதாக கருதும் இவர்.
‘The Other Side of Midnight’ நாவலை எழுதியவர் ‘The Other Side of Me’ என்று சுயசரிதையை எழுதினார். கட்டாயம் படியுங்கள். எளிய வாக்கியங்கள். ஈர்க்கும் நடை. எழுதி முன்னேற விரும்பும் எவரும் படிக்க வேண்டியது.
நியூயார்க் ஹோட்டல் ஒன்றில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு பெண் அவரிடம் வந்து, "நான் வக்கீல் ஆனதற்குக் காரணம் உங்கள் 'ரேஜ் அஃப் த ஏஞ்சல்ஸ்' படித்ததினால்தான்," என்றார். தன் நாவல் விற்பனையைவிட இதையே அர்த்தமுள்ளதாக நினைக்கிறார்.
ஒரு காரக்டர் அழகாகக் கேட்கும் அவர் நாவலில்: ‘தங்களை நிரூபித்துக் காட்டாத வரையில் பெண்களைக் குறைவாக மதிப்பிடுகிறார்கள், ஆனால் ஆண்களையோ அவர்கள் படு முட்டாள்கள் என்று நிரூபணமாகாத வரையில் உயர்வாக மதிப்பிடுகிறார்கள். என்ன நியாயம் இது?’
சொன்னதில் இரண்டு:
‘இரண்டே சாய்ஸ் உங்களுக்கு: ஓடி ஒளிந்து கொண்டு உங்கள் துன்பங்களுக்கு இந்த உலகத்தைக் குறை கூறிக் கொண்டேயிருக்கலாம். அல்லது எழுந்து நின்று நீங்கள் யாரென்று நிரூபிக்கத் தீர்மானிக்கலாம்.’
‘நீங்கள் வெற்றி பெற உங்களுக்கு நிறைய நண்பர்கள் வேண்டும். மிகப் பெரும் வெற்றி பெற நிறைய எதிரிகள் வேண்டும்.’

அடுத்தடுத்து நம்பர் ஒன்...


Burt Reynolds..
கால் பந்தாட்டத்தில் ஒரு முழங்காலிலும் கார் விபத்தில் மறுகாலிலும் பட்ட அடியால், மைதானத்திலிருந்து நாடக மேடைக்குத் தாவிட, ஹாலிவுட்டுக்கு கிடைத்த நட்சத்திரம்! இன்று பிறந்த நாள்!
அடுத்தடுத்து ஐந்து வருடங்களுக்கு (1978 -82) நம்பர் ஒன் வசூல் நடிகராக இவர் இருப்பதென்றால் சும்மாவா? இதே ரிகார்ட் Bing Crosby க்கு மட்டுமே உண்டு. மிகப் பிடித்த நடிகராக People’s Choice Award -ஐ ஆறு வருடம் தொடர்ந்து வாங்கினது வேறு விஷயம்!
ஸ்டார் ஆக்கிய படம் ‘Deliverance’.. மார்லன் பிராண்டோவும் ஜேம்ஸ் ஸ்டீவர்டும் மறுத்த படம். மீசையுடன் அட்டகாசமான லுக்! ஹாண்ட்ஸம் ஆக்டர் வரிசயில் தனியிடம் உண்டு இவருக்கு.
ப்ரூஸ் வில்லிஸின் மிகப் பிரபலமான Die Hard இவர் மறுத்த படம். ஏன், ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் வாய்ப்பைக்கூட மறுத்தவர்.
City Heat படத்தில் இரும்பு செயர் தாடையைத் தாக்க சரியான அடி. வாழ்நாள் முழுதும் வலியில் அவதிப்பட்டார்.
100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் அதில் தான் பெருமைப்படும் விதமாக ஐந்து படங்கள் இருக்கலாம் என்று அடக்கத்துடன் குறிப்பிடுகிறார்.
குழந்தைகளுக்கான, விடா முயற்சியை விளக்கும் புத்தகமொன்றை இன்னொருவருடன் சேர்ந்து எழுதியிருக்கிறார் என்பது கூடுதல் விசேஷம்..
Quote?

'நடிகரின் வாழ்க்கையில் மூன்று பருவம் உண்டு: இளமையாக இருப்பது, வயதாகியிருப்பது, பார்க்க நன்றாயிருப்பது.' 

Monday, February 9, 2026

சிந்தித்து முடிவெடுக்க...


சப்புக் கொட்டி ருசித்து சாப்பிடுவோம், அதற்கு காரணமான உப்பு தந்தவனைப் பற்றியோ கண்டுபிடிச்சவனைப் பற்றியோ எப்பவாவது யோசிக்கிறோமா? இப்போ இதை லேப்டாப்பிலேயோ மொபைலிலேயோ படிக்கிறோம். அதை சாத்தியதையாக்க சிப்புகளுக்குள் கப்சிப்பாக அமர்ந்துகொண்டு வேலை செய்யற பில்லியன்கணக்கான டிரான்ஸிஸ்டர்களைப் பற்றியோ அதைக் கண்டுபிடிச்சவர்களைப் பற்றியோ கொஞ்சம்ம் யோசிக்கலாமா?
மூளை சிந்தித்து முடிவெடுக்க எப்படி பல கோடிக்கணக்கான நியூரான்கள் ஒவ்வொண்ணும் பல நூறு பின்னல்கள் போட்டு வேலை செய்யுதோ அதே மாதிரி கம்ப்யூட்டர் தன் முடிவுகளை அள்ளித்தர ஆதாரமானது இந்தச் சில கோடிக் கணக்கான டிரான்சிஸ்டர்கள். தங்களுக்குள் ஒரு தர்க்கக் கதவை அமைத்துக் கொண்டு அதைத் திறக்கவோ மூடவோ செய்து, ஃபைனரியைக் கொண்டு ஃபைன் மெமரி இட்டு, நம்ம சிந்தனையை இமிடேட் செய்யறதனால, நாம் அனுபவிக்கிற எண்ணிலா சௌகரியங்களை எண்ணி பார்த்தால்...!
ஆனால் இப்படி ஒண்ணைக் கண்டு பிடிக்கணும்னு அவங்களும் - அந்த மூணு பேரும் - நினைக்கலே. அவங்க மண்டையை உடைச்சிட்டிருந்ததெல்லாம் பெல் கம்பெனிக்காக ஒரு ஆம்ப்ளிஃபையருக்கான வழியைத் தேடித்தான். கிடைத்ததோ டிரான்சிஸ்டர்! அது சுவிட்ச் ஆகவும் போனஸ் வேலை செய்தது.
அவ்வளவுதான். கம்ப்யூட்டருக்குள் எலெக்ட்ரானிக்ஸ் ஆவி புகுந்தது! இப்ப அது ஆடாத ஆட்டமில்லை.
வில்லியம் ஷாக்லீ, ஜான் பர்டீன் ரெண்டு பேருடன் இணைந்து டிரான்சிஸ்டரை கண்டுபிடித்து பௌதீக நோபலை (1956) வாங்கியவர்...
Walter Brattain… இன்று பிறந்தநாள்.

“ஒன்னோட நடந்தா…"


'விடுதலை' பாடல்...
இருள் பிரியாத இளம் கருக்கலில், இனம் புரியாத நதிப் போக்கில், இஞ்ச் சரியாத மரப் படகில், இலக்கின்றி வழுக்கிச் செல்வதைப்போல ஒரு பாடல் தந்திருக்கிறார் இளையராஜா.
வெற்றி மாறனின் 'விடுதலை'யில் அவர் பாடல்...
“ஒன்னோட நடந்தா…கல்லான காடு.. பூத்தாடும் பூவனம் ஆகிடுமே...”
வாழ்க்கையின் அழுத்தமும் சூழலின் இறுக்கமும் காதலின் இதமும் கலந்தேற்படுத்தும் உணர்வை இசையைப் போல் சொல்வதொன்றுண்டோ? என்று கேட்கும் பாடல் இது.
சின்னஞ்சிறு மதகுக்குள் புது வெள்ளம் குபுக் குபுக் என்று நுழைந்தோடுவதைப் போல முதல் சரண முன் இசையை தொடங்குவதும்… இரண்டாவது இடையிசையில் அந்த ஆராரிரோவை பல்லவி முடியும் முன்னால் சன்னமாக வெள்ளோட்டம் விடும் புதுமையும்!
சரணத்தின் முதல் வரியில் தாளத்தை வேறு விதத்தில் கொடுப்பதாகட்டும், நாலாவது வரியில் இல்லாத தாளத்தால் பிறப்பிக்கும் அமைதியாகட்டும்.. ஈர்த்து ரசிக்க வைக்கிறது.
“காத்தில் வரும் புழுதியை போல்.. நம்மைத் தூத்துகிற ஊரு இது..”. என்று சரணம் தொடங்கும் பொழுது பின்னால் பங்சுவேஷன் கொடுக்கும் அந்த மணி ஓசை மனதை என்னவோ செய்கிறது.
“முன்னேறிப் போக முட்டுக்கட்டை ஏது…” என்று பாடும்போது தனுஷின் குரல் ராகத்தின் எழுச்சிக்கு பதமாகப் பொருந்திப் போகிறது!
எங்கே வரும் எங்கே வரும் என்று எதிர்பார்க்கும் ஃப்ளூட் இசை, என்ன எதிர்பார்த்தாலும் அதையும் தாண்டிய ஒரு அழகு வரி வைத்திருப்பார், இரண்டாவது சரணத்துக்கு முன் அது சிறு நடனம் ஆடுகிறது.
‘காதல் சாதி’யில் ராஜா கொடுத்திருந்த, படம் வெளியாகாததால் பலரால் கவனிக்கப்படாமல் போய்விட்ட அந்த மாஸ்டர் பீஸ், அவரே பாடிய, “என்னை மறந்தாலும் உன்னை மறக்க மனம் கூடுதில்லையே..” கொடுத்த அதே உருக்கத்தை இந்தப் பாடலில் காண்கிறேன்.
பாட்டு முடிந்த பிறகும் அந்த ‘தன்னத் தன்னத் தானா..’ மனதில் ஆடிக்கொண்டே இருக்கிறது…

Saturday, February 7, 2026

அசத்தும் அப்பாவி....


கொஞ்சம் எசகு பிசகான லாட்ஜ்கள் இருக்கும் தெரு அது. புதிதாக அந்தத் தெருவுக்கு இரவு பீட் வரும் நேர்மையான கான்ஸ்டபிள் நெஸ்டர் ஒரு ஹோட்டலில் நுழைந்து தொப்பியை கழற்றி வைத்து விட்டு ஒரு டீ சாப்பிடுகிறான். திறந்த தொப்பிக்குள் வரிசையாக புரோக்கர்கள் வந்து வழக்கம்போல் மாமூலை போட்டுச் செல்வதை அவன் கவனிக்கவில்லை. எடுத்துத் தலையில் வைத்துக் கொள்கிறான் சுவாதீனமாக. கொஞ்ச நேரத்திலேயே கண்டு கொண்டு விடுகிறான் அங்கே நடப்பதை. போனைச் சுழற்ற போலீஸ் வேன் வந்து நிற்கிறது. அத்தனை பெண்களையும் அள்ளிப்போட்டுக்கொண்டு ஸ்டேஷனுக்கு கிளம்புகிறான். இன்ஸ்பெக்டருக்கு இஷ்டமே இல்லை கேஸ் புக் செய்ய. அவனை அதட்ட, அப்ப பார்த்தா தொப்பி கீழே விழுந்து பணம் சிதறவேண்டும்? அவ்வளவுதான்! வேலை இழந்து அடுத்த நாள் அதே தெருவில் பரிதாபமாக..
இப்படி ஆரம்பிக்கிறது ‘Irma La Douce’ கலகலப்பாக. அவருக்காகவே உருவாக்கப்பட்ட சீன் மாதிரி இருக்கும். அத்தனை அட்டகாசமாக நடித்திருப்பார்.
Jack Lemmon… இன்று பிறந்த நாள்!
காமெடி நடிப்பு ஜாக் லெமனுக்கு ஜாக் ஃப்ருட் சாப்பிடுவது மாதிரி என்றால் அப்பாவியாக நடிப்பதில் ஜாக் லெமன் எமன்.
ஹாஸ்பிடல் எலிவேட்டரில் பிறந்தபோது ஆருக்கும் தெரியாது பின்னால் இத்தனை எலிவேட் ஆவார் என்பது.
ஹார்வர்டில் படித்து நேவியில் பணியாற்றிய பியானோ பிளேயர், மேடையிலிருந்து திரைக்குத் தாவிய இந்த நடிகர்.
நடிக்க வந்த இரண்டாம் வருடமே ‘Mister Roberts’ படத்துக்காக ஆஸ்கார் வாங்கி அசத்திவிட்டார். 1973 இல் ‘Save the Tiger’ இல் இரண்டாவது ஆஸ்கார்.
The Great Race. மிக அதிக செலவில் எடுக்கப்பட்ட, 1965 இல் வசூலைக் குவித்த அதில் Prof. Fate ஆக… தானே தயாரித்த சொந்தக்காரில் நியூயார்க் டு பாரிஸ் ரேஸில் ஜெயிக்க அவர் படும் பாடு! படுத்தும் அமர்க்களம்! அப்போது போல் ரசிகர் கடிதம் அவருக்கு எந்த படத்துக்கும் வந்ததில்லை.
Marlyn Manroe வுடன் நடித்த பில்லி வைல்டரின் ‘Some Like It Hot’ இல் பெண் வேடம். வில்லன் செய்த கொலையை இவரும் நண்பனும் பார்த்துவிட்டதை வில்லன் பார்த்துவிட, அவன் கண்ணில் படாமல் ஊரை விட்டோட வழி தேடி, வெளியூர் கிளம்பும் மர்லினின் ஆல் வுமன் இசைக் கோஷ்டியில் விட்டுப்போன ரெண்டு பெண்களாக வந்து தொத்திக் கொள்கிறார்கள் ரயிலில். பிரபல பிரிமியர் மேகஸைன் 2006 இல் தேர்ந்தெடுத்த 100 தலை சிறந்த நடிப்புகளில் ஒன்று அது. (மேக்கப் போட்டதும் முதலில் ஸ்டூடியோவுக்குள் சுற்றிப் பார்த்து, பெண்களிடம் எந்த ரீயாக்‌ஷனும் இல்லாததும்தான் நடித்தனராம்.)
அதைவிடப் பிரமாதமான ரோல் ‘The Apartment’ இல். தான் காதலிக்கும் பெண் தன் பாஸுடன் பொழுதைக் கழிக்க தன் பேச்சலர் அபார்ட்மெண்டையே கொடுத்துவிட்டு பனியில் இரவில் உலாவும் பரிதாப வேடத்துக்கு அவர் கொடுத்த அப்பாவித்தனமான காமெடி நேர்த்திக்கு ஆஸ்கார் ஜஸ்ட் மிஸ், அந்தப் படம் அஞ்சு ஆஸ்கார் வாங்கியும்.
நடிகர் Walter Matthau -ம் இவரும் வித்தியாசமான ஜோடி. ‘The Odd Couple' இல் தொடங்கி ஆறேழு படங்களில் உயர் ரக காமெடி.
'Irma la Douce’ ஐத் தழுவி இந்தியில் ஷம்மி கபூரின் Manoranjan வந்தபோது இவர் ரோலில் கலக்கியவர் சஞ்சீவ் குமார். ஷர்லி மெக்லீன் ரோலில் ஜீனத்!

மனதில் ஒலிக்குமே ...


Harry Potter என்றதுமே மனதில் ஒலிக்குமே அந்த haunting தீம் மியூசிக்! அது யார் போட்டது தெரியுமா?
2. அமெரிக்க படங்களிலேயே அதி புகழ் பெற்ற தீம் மியூசிக் என்று சொல்லப்படுவது ‘Star Wars’! மெல்லிய குழலொலியுடன் மேலெழும்பும் அந்த இசைச் சரம் யார் கரம் தொடுத்தது?
3.அலை அலையாக கரை மோதுவது போல ஆரம்பித்து ஆரவாரமாக எழுமே அந்த ‘Jaws’ தீம்? அந்த இசை அமைப்பாளரின் பெயர் நினைவிருக்கிறதா?
4.’Indiana Jones...’ படங்களில் ட்ரம்பெட் பீறிடுமே அந்த அசத்தல் சூபர் ஹிட்டின் சிருஷ்டிகர்த்தா?
5.பிரபல ‘E.T.’ படத்தின் வயலின்கள் குதிரை சவாரி செய்து மனம் வருடும் இசை.. அந்த இசை யார் அமைத்தது?
இதில் ஒன்றுக்கு விடை சொன்னா எல்லாத்துக்கும் விடை சொன்ன மாதிரி.
John Williams! இன்று பிறந்த நாள்..
நம் நெஞ்சம் தவிர, ஐந்து ஆஸ்காரும் 18 Grammy அவார்டும் அள்ளிக் கொண்டவர்!

வெற்றிகரமான பெண்மணி...


பிரம்மாண்ட பணக்காரி அவள். மேடம் கிறிஸ்டல்! அந்தச் சின்னஞ்சிறு நாட்டின் மொத்த வரியில் பாதியை தன்னந்தனியாக அளித்துக் கொண்டிருந்தவள். திடீரென்று அவள் பாரிஸுக்கு ஷிஃப்ட் ஆகிறாள் என்றதும் பதறிப் போகிறார் மன்னர். கஜானா என்னாவது ?
'போய் எப்படியாவது அவளைக் 'காதலித்து'க் கொண்டு வா நம்ம ஊருக்கு!' என்கிறார் இளம் பிரபு டேனிலோவிடம். அவள் மனதைப் பறிக்கப் போனவன், போன இடத்தில் ஒரு கிளப்பில் சந்தித்த பெண்ணிடம் மனதைப் பறி கொடுத்து விடுகிறான். சீமாட்டியை சந்தித்த போது காதல் வரமாட்டேன் என்கிறது அவனுக்கு.
பாவம், ஒரு ஸேஃப்டிக்காக தன் செக்ரெட்டரியுடன் இடம் மாற்றிக் கொண்டு விட்டிருக்கிறாள் அந்த சீமாட்டி என்பதும் தான் மையல் கொண்டது அதே மயில்தான் என்பதும் அவனுக்குத் தெரியாது. ஆனால் அவன் மோடிவ் அவளுக்கு தெரிந்து விடுகிறது. ஆசிட் டெஸ்ட் வைக்கிறாள் அவன் காதலுக்கு….
அட்டகாசமான இந்தக் கதைதான் 1952 இல் வந்த மியூஸிகல் 'The Merry Widow'. கிறிஸ்டலாக ஆடிப் பாடிக் கலக்கியவர் பிரபல லானா டர்னர்.
Lana Turner.. இன்று பிறந்த நாள்.
1950 களின் அதிகச் சம்பள ஹாலிவுட் நாயகிகளில் ஒருவர். அகாடெமி அவார்டுக்காக நாமினேஷன் பெற்றது ‘Peyton Place’ படத்துக்காக.
சொந்த வாழ்க்கையில் சந்தித்த சோகம் அனேகம். சின்ன வயதில் தந்தை கொலை செய்யப்பட்டுவிட, வறுமையில் உழன்ற நாட்கள் அவரால் மறக்க முடியாதவை.
சொன்னவையில் சுவையானவை…
‘தன் மனைவியால் செலவு செய்ய முடிவதை விட அதிகம் சம்பாதிக்கிறவனே வெற்றிகரமான ஆண். அப்படி ஒருவனைக் கண்டுபிடிக்க முடிகிறவளே வெற்றிகரமான பெண்மணி.’
‘சந்தோஷம் நீங்கள் வளர்வதற்கு உதவியாய் இருப்பதில்லை, சந்தோஷமின்மைதான் உதவும். ஆகவே என் படுக்கை மலர்களுடன் முட்களாலும் நிரம்பியிருப்பதற்கு நான் நன்றி சொல்லவேண்டும்.’
‘ஒரு நாளைக்கு மூன்று முறையாவது சிரிக்காவிட்டால் எனக்கு அது மோசமான நாள். நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லையெனில் நான் வாழ்ந்திருக்க முடியாது. என்னைப் பார்த்து நான் சிரித்துக் கொள்ள முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி.’
‘ஒரு கணவர், ஏழு குழந்தைகள்.. இதுதான் நான் திட்டமிட்டது. நடந்ததோ நேர் மறாக.’

=====

Wednesday, February 4, 2026

நானேகூட...


"எப்படியிருக்கு?"
சொல்ல்லியிருக்க வேண்டாம், “நல்ல சூபரா இருக்கு, கிழங்கை பதமா அவிச்சிருக்கே… நானேகூட பண்ணிடலாம் போல!…”
அரை செகண்ட் அமைதி. “ஆமா. பண்ணிடலாம். அடுத்த வாட்டி பண்ணிடுங்க. சொல்லட்டுமா?”
“எதுக்கு வீணா இப்ப? சொல்லும்போதே பண்ணிடறேன்.” வாயில் வழுக் வழுக் கிழங்குடன்.
அடுத்த வாட்டி வாட்டியதை அப்படியே…
“அரை கிலோ கப்பக் கிழங்கையும் சின்ன சின்ன பீஸா…” வெட்டிட்டேன்.
“அப்படியே தண்ணியில போட்டு வைங்க.” வைத்தேன்.
“இன்னொரு பாத்திரம் எடுங்க. மூழ்கிற அளவுக்கு தண்ணியை விட்டு…”
“நானா?”
“கிழங்கு!”
“என்னையா?” கொதித்தேன்.
“கிழங்கை சொன்னேன். கொதிக்க வையுங்க.”
கொதித்தது.
“வெட்டின கிழங்கை இப்ப போடுங்க. வெந்ததும் தண்ணியை வடிகட்டி இறக்கிடணும்.”
“அவ்வளவுதானா? முடிஞ்சதா?”
“ஆரம்பிச்சிருக்கு. தேங்கா துருவிட்டீங்களா?”
“தேங்க்.. தேங்காயா?”
“ஓரு பிடி.” துருவினேன்.
“மிக்ஸியில போடு."(‘ங்க.’ மிக்ஸி சத்தத்தில கேட்டிருக்காதுன்னு எனக்குள் சொல்லிக்கிட்டேன்.)
“கூட ரெண்டு மிளகா வத்தல். அரை டீஸ்பூன் சீரகம். கால் மஞ்சள் பொடி. பத்து மிளகு. ரெண்டு பல் பூண்டு. ஒரு சின்ன வெங்காயம்.”
“அம்புட்டுமா?”
“அம்புட்டும்.”
“அரைச்சு கடைசில கருவேப்பிலை போட்டு ஒரு சுற்று சுற்றியெடுத்து அந்த கிழங்கில கொட்டுங்க. அரை ஸ்பூன் உப்பு ஞாபகமிருக்கட்டும்.”
“அவ்வளவுதானா?” கை கழுவலாம்னா…
“அப்படியே மிக்ஸில டம்ளர் தண்ணி விட்டு கழுவி அதில சேருங்க.”
சேர்த்ததும்… “இனி தாளிக்கணும்.”
அது வேறயா? வாணலியை அடுப்பில் வைத்தேன். “உளுத்தம் பருப்பு?”
“கடுகும்.”
“அப்புறம் மிளகா வத்தல்?”
“ஆமா.”
“கறிவேப்பிலை?”
“சொல்லணுமாக்கும்? சரி, இனி அந்த கிழங்கு கலவையை இதில கொட்டுங்க. அதே பாத்திரத்தில அரை கப் தண்ணியை விட்டு அலசி கொட்டுங்க.”
“அதிலதான் அலசி கொட்டணுமா?”
“ருசியாதான் வேணுமா?”
“கொதிக்கட்டும் ரெண்டு நிமிஷம்.”
கொதிச்சதும் வந்திட்டதா பார்க்கணும் அந்த மணமும் கலரும்.
…ருசியும்!