Wednesday, November 15, 2023

வெகு X வெகு தூரத்தில்....


வெகு X வெகு தூரத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவருக்கு. ஆண்டு 1780. அவர் விருப்பத்தின் தூரத்திற்கு அடர்த்தியான லென்ஸ் மார்க்கெட்டில் இல்லை. தனக்கு வேண்டிய டெலெஸ்கோப்பை தானே தயாரிக்க ஆரம்பித்தார். சரியாக வரவில்லை.

காய்ச்சி ஊற்றிய உலோகங்களுடன் கட்டிப் புரண்டார். உடைந்து விடும் கண்ணாடிகளுடன் ஊசலாடினார். சோர்வுறாமல் முயன்றதில் உயர்ந்த வெற்றி! ஏன், அப்சர்வேட்டரிகளில் உள்ளதைவிட அப்ஸார்பிங் டெலஸ்கோப் தயாரிக்க முடிந்தது அவரால். 6450 மடங்கு பெரிதாக்கி காட்டும் அது!
வைத்துக் கொண்டு வானை அலசியதில் கண்ணில்/ணாடியில் பட்ட நட்சத்திரம் ஒன்று வித்தியாசமாக கண் சிமிட்டியது. அறிவால் நெருங்கியதில் அது ஒரு பிளானட் என்று தெரிந்தது. யுரேனஸ் கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான்! கிடைத்தது அந்தக்காலத்தின் அட்டகாசமான அவார்ட்: Copley Medal.
அவர்? William Herschel… நவம்பர் 15. பிறந்த நாள்!


அப்புறம்? அதாகப்பட்டது இவர் கண்ணில் அகப்பட்டது சனியின் இரு சந்திரன்கள். இவர் டெலெஸ்கோப்புக்குள் கண்ணை நுழைத்தால் இருட்டுக்கும், வெளிவந்தால் அறையின் அரை ஒளிக்கும் கண் பழக வேண்டும். மாற்றி மாற்றி செய்யும்போது எத்தனை கஷ்டம்? கை கொடுத்தார் சகோதரி கரோலின். இவர் சொல்ல அவர் எழுதிக் கொள்வார்.
அப்பாவைப் போல இசைக் கலைஞராகத்தான் வாழ்வைத் தொடங்கினார். ​​சிலிர்க்கவைக்கும் சிம்பொனிகளின் கம்போஸர். ஆனால் காதில் இசையிருந்தாலும் கண் வானிலிருந்தது.
சூரியனை ஃபில்டர் போட்டு கண்ணுற்ற போது கண்டுபிடித்ததுதான் Infrared Radiation! பின்னாளில் அது மெடிகல் உலகில் எத்தனை உபயோகமாக இருக்கிறது என்பதை அறிவோம்.
சொன்னது: ‘எனக்கு முன்னால் பார்த்த எந்த மனிதனை விடவும் இன்னும் அதிக தூரம் நான் விண்ணில் உற்று நோக்கியிருக்கிறேன். நான் கவனித்து பார்த்த சில நட்சத்திரங்களின் ஒளி பூமியை வந்தடைய 20 லட்சம் வருடங்கள் ஆகும் என்று சொல்ல முடியும்.’

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!