Monday, November 6, 2023

திருவிடை தந்த ஒரு விடை...

அதை ஒரு தெளிந்த நீரோடை என்று சொல்லலாம். எங்கிருந்தோ வீசும் தென்றல் காற்று என உணரலாம். பல்லாயிரம் ஆண்டு படிந்து பளிங்கு படுத்திவிட்ட பாறைக் கற்களினூடே வழிந்தோடும் அருவி என்று மகிழலாம். வளைந்தும் நெளிந்தும் வட்டமடித்துத் தாழ இறங்கியும் காற்றில் சிறகுகளை அளைந்த வண்ணம் சீராகப் பறக்கும் வானம்பாடியாக எண்ணலாம். ரொம்பக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே அது புல்லாங்குழல் இசை என்பதும் வாசிப்பது டி. ஆர். மகாலிங்கம் என்றும் தெரியும். அதாவது நீங்கள் தரைக்கு வந்தால்!

புல்லாங்குழல் மேதை டி. ஆர். மகாலிங்கம்... இன்று பிறந்த நாள்!
இசையால் மனிதரை மெய்மறக்கச் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு திருவிடைமருதூர் தந்த ஒரு விடை தான் மாலி அவர்கள். பக்கத்தில் இருந்த சிவன் கோவில் மகாலிங்க சுவாமியின் பெயரையே அவருக்கு வைத்தார்கள்.
உறவினர் கோபால ஐயர் இசைப்பள்ளி நடத்தியது இசைவாக இருந்தது. சற்றே ஆரோக்கியம் குறைந்த பையன் ஆயிற்றே? வாய்ப்பாட்டு படிக்கட்டும் என்றார் தந்தை . பையனுக்கோ ஃப்ளூட் மீது ஒரு காது. யாருக்கும் தெரியாமல் பயின்றவனின் திறமையைப் பார்த்து தகுந்த குருவைத் தேடினார்கள்.
எந்த இசைச் சரத்தைக் காதில் வாங்கினாலும் அதை அப்படியே ஃப்ளூட்டில் பிரதிபலிக்க அந்த வயதிலேயே அவரால் முடிந்தது.
மயிலாப்பூர் தியாகராஜர் உற்சவத்தில் ஏழு வயதில் முதல் கச்சேரி. எந்த அளவு வாசித்தார் என்றால் பார்க்க வந்திருந்த இரு வித்வான்கள் பரவசமாகி உடனே சென்று பொன்னாடை வாங்கிவந்து போர்த்தி ஆசீர்வதிக்கும் அளவு!
நுணுக்கங்களை விமரிசிக்க நமக்கு இசை ஞானம் பத்தாது. ஆனால் எந்த இசை ஞானமும் நமக்கு அவசியம் இல்லை அவர் வாசிப்பதை அணுஅணுவாய் ரசிக்க என்பது கேட்கிற ரெண்டாவது நிமிடமே புரிந்துவிடும்.
நின்னு கேட்க நேரம் இல்லாதவர்கள் அவரது 'நின்னுவினா நாமதேனு..'வை மட்டும் கேட்டாலே போதும். என்னே இது என்று விடுவார்கள் அசந்து.
எத்தனையோ ப்ளூட் கச்சேரிகளை கேட்டிருப்பீர்கள்.. ஆனால் இங்கே புல்லாங்குழலே தன்னால் வந்து தன் அதிகப்பட்ச இசை வெளிப்பாட்டு ஆற்றலை பிரகடனப்படுத்தியது போலிருக்கும்!

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!