Wednesday, November 15, 2023

நன்றியுடனும் சந்தோஷத்துடனும்...


‘என் தாத்தா ஜெரோனிமோ கதைகள் சொல்வார்... மரணம் தன்னை நெருங்குவதாக உணர்ந்ததும் அவர் முற்றத்தில் உள்ள மரங்களையெல்லாம் ஒவ்வொன்றாக கட்டித்தழுவி குட்பை சொன்னார். ஏனென்றால் அவற்றையெல்லாம் தான் இனிமேல் பார்க்க முடியாது என்று அவருக்குத் தெரிந்ததால்! வாழ்க்கையை முழுவதுமாக அனுபவிக்க வேண்டுமா? எதுவுமே எப்போதும் நீடிப்பதில்லை என்பதையும் எதையும் சும்மா வந்ததாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் நமக்கு கிடைத்திருக்கிற எல்லாவற்றுக்கும் நன்றியுடனும் சந்தோஷத்துடனும் நாம் இருக்க முடிகிறது.’

இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? Jose Saramago.
நோபல் பரிசு பெற்ற முதல் போர்ச்சுக்கல் எழுத்தாளர். 25 மொழிகளில் வெளியாகியுள்ள நாவல், கவிதை, சிறுகதைகள்… இன்று பிறந்த நாள்!
இன்னும் சொன்ன இனியவை:
‘மற்றவர்களுடன் வாழ்வது கஷ்டம் இல்லை; மற்றவர்களைப் புரிந்து கொள்வது தான்...’
‘மனிதர்கள் சிறகு இல்லாமல் பிறந்த தேவதைகள். சிறகில்லாமல் பிறந்து அவற்றை வளரச் செய்வதுபோல் இனியது வேறில்லை.’
‘வெட்டப்படும் போது மரம் அழுகிறது; தாக்கப்படும் போதும் நாய் ஓலமிடுகிறது; ஆனால் மனிதனோ புண்படுத்தப்படும்போது பக்குவமடைகிறான்.’
‘இதயத்திலிருந்து வரும் வார்த்தைகள் பேசப்படுவதில்லை; தொண்டையில் அடைபட்டுக் கொள்கின்றன; கண்களில் தான் அவற்றைப் படிக்க முடியும்.’
‘வார்த்தைகள் மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பது எண்ணங்களை மறைப்பதற்காக அல்ல.’
‘சரியாகச் சொல்வதானால் நாம் முடிவுகளை எடுப்பதில்லை; முடிவுகள் நம்மை எடுக்கின்றன.’
‘ஒரு கையால் கொடுப்பதை மற்றொரு கையால் எடுத்துக் கொள்கிறது; அதுதான் வாழ்க்கை.’
‘உங்கள் புத்தகங்களை நீங்கள் தான் எழுத வேண்டும்; வேறு யாரும் அவற்றை உங்களுக்காக எழுத முடியாது; உங்கள் வாழ்க்கையை வேறு யாரும் வாழ்ந்ததில்லை.’
‘உங்களை விட்டு நீங்கள் வெளியில் வராத வரை நீங்கள் யார் என்று உங்களால் கண்டுகொள்ள முடியாது. உங்களுக்கு தெரியாதா என்ன?’
‘எந்த மனிதரும் தான் வாழ்க்கையில் அடைய நினைக்கிற அத்தனையையும் அடைய முடியாது. கனவுகளில் மட்டுமே அது சாத்தியம். ஆகவே எல்லாருக்கும் குட் நைட்!’

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!