“இந்தப் புறா ஆட வேண்டுமானால் இளவரசர் பாட வேண்டும்!” என்றபடி "வசந்த முல்லை போலே வந்து" ரசிகர் மனம் கவர்ந்தவர்.
ராஜசுலோசனா.. இன்று பிறந்த நாள்! (1935 - 2013)
அண்ணனுக்காக பெண்பார்க்க வந்த சிவாஜி அவரை நாலு கேள்வி இலக்கிய நயமாகக் கேட்கப் போக, ஒரு சந்தர்ப்பத்தில் அவரை மணந்த ராஜசுலோசனா, திருமண இரவின் போது சிவாஜியிடம், “நான் உங்க வீட்டிலே முதல்முதலா பார்க்க ஆசைப்பட்ட இடம் எது தெரியுமா? உங்க லைப்ரரி!”ன்னு சொல்ல, “லைப்ரரியா, இந்த புஸ்தகம்லாம் வெச்சுப் படிப்பாங்களே அதுவா? அது அண்ணன் ரூமிலில்ல இருக்கும்? நான் படிக்காதவனாச்சே?”ன்னு சொல்லும்போது வெடிக்கும் ஏமாற்றத்தை முகத்தில் கொட்டுவதில் தொடங்கி அவரை எகத்தாளமாக பேசுவது, ஏளனப் படுத்துவது, இளக்காரமாக பார்ப்பது, ‘என் வாழ்க்கையையே நாசமாக்கிட்டீங்கன்னு ஆக்ரோஷமாக பழிப்பது... ‘நாளைலேர்ந்து நான் உன்கிட்டயே படிக்கிறேன்’னு சொல்லும் சிவாஜியிடம், ‘ஏது, அரிச்சுவடியில் இருந்தா?' என்று சொடுக்கும் சாட்டை, சிவாஜியுடன் சரிக்கு சரியாக மோதி அந்த வெறுப்பை நாமும் சரியாக உள்வாங்க வைத்திருப்பார் அந்தப்படத்தில். ‘படித்தால் மட்டும் போதுமா?’ மறக்க முடியுமா? அவர் நடிப்பில் முத்திரை பதித்த படம்!
சிவாஜியுடன் போட்டிபோட்டுக்கொண்டு நடித்தது அந்தப் படம் என்றால் பத்மினியுடன் போட்டி போட்டுக் கொண்டு ஆடியது ‘திருமால் பெருமை’யில். “கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு..”
அந்தப் படம் எத்தனை பாப்புலரோ அத்தனை பாப்புலர் அந்தப் பாடலும்! காதில் கிறக்கும் விக்கலை போலவே மனதில் நிற்கும் நடனம். ‘குலேபகாவலி’யில் “ஆசையும்.. ஹக்! என் நேசமும்.. ஹக்! ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா..”
நடனத்துக்கு முகபாவம் முக்கியம் என்பதை நன்குணர்ந்து ஆடியிருப்பார் இந்தப் பிரபல பாடலில்: “ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட நேசா... பேசும் ரோஜா என்னை பாரு ராஜா…” (‘ஆசை’)
தமிழ் தெலுங்கு கன்னடம் என்று சுமார் 300 படங்களில் நடித்த சுலோசனா நடனப்பள்ளி (‘புஷ்பாஞ்சலி நிருத்ய கலா கேந்திரம்') ஒன்றை ஆரம்பித்து வெள்ளி விழா கண்டவர்..
சிறுவன் ரவிக்கு ‘கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..’ என்று பாட்டுப்பாடி உலகம் புகட்டும் டீச்சராக வரும்போதும் சரி, அவன் கடத்தப்படும்போது தெரு முனையில் நின்று அதே பாட்டைப் பாடி அவனை காப்பாற்றத் தவிக்கும்போதும் சரி, ‘கைதி கண்ணாயிரம்' படத்தின் ஜீவநாடியான காட்சிகளை வெகு நயமாகக் கையிலேந்தி கிளாப்ஸ் ஆயிரம் வாங்கினார்.
தொடர்ந்து நாலரை நிமிட நேரம் ரீயாக் ஷன் மட்டுமே கொடுத்து அந்த ஒரே ஷாட் காட்சியில் நடித்த சிறப்பு உண்டு இவருக்கு. ஒரே ஷாட்? ஆம், ‘சேரன் செங்குட்டுவன்' நாடகக் காட்சியில் சிவாஜி பேசப் பேச.... (‘ராஜா ராணி')
><><
1 comment:
தகவல்கள் நன்று.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!