Tuesday, August 31, 2021

அனுபவம் தாண்டாத அறிவு...


‘எந்த ஒரு மனிதனின் அறிவும் அவன் அனுபவத்தை தாண்டியதல்ல.’

சொன்னவர் John Locke. பதினேழாம் நூற்றாண்டில் தலைசிறந்த தத்துவவாதிகளில் ஒருவர். அறிவியலாளரும் கூட.
John Locke... ஆகஸ்ட் 29. பிறந்த நாள். (1632 - 1704)
இன்னும் சொன்னவை:
‘எதற்குக் கவலைப்படுகிறாயோ அது உனக்கு எஜமானாகி விடுகிறது.’
‘ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சொத்து அவனுக்குள்ளாக உண்டு. அவனைத் தவிர யாருக்கும் உரிமையில்லாத சொத்து.’
‘பெரியவர்களின் சொற்பொழிவுகளில் இருந்து பெறுவதைவிட குழந்தையின் எதிர்பாராத கேள்விகளிலிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.’
‘ஓடை நீர் ஏன் கசக்கிறது என பெற்றோர் வியக்கிறார்கள், ஊற்றை அவர்களே மாசுபடுத்திவிட்டு.’
‘உலகுக்கு நாம் இடும் ஒரே வேலி அதைப் பற்றிய முழு அறிவு தான்.’
‘நாம் பச்சோந்திகள் மாதிரி. நம் சாயலையும் வண்ணத்தையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறோம்.’
‘கல்வி ஒரு மனிதனை தொடங்கி வைக்கிறது. ஆனால் வாசிப்பும் யோசிப்பும் நல்ல நட்பும்தாம் அவனைப் பூர்த்தி செய்கிறது.’
‘தைரியமே மற்ற நற்குணங்களின் துணையும் பாதுகாப்பும்.’

‘நாம் புரிந்து கொள்வதை விருத்தி செய்வது இரண்டு காரணத்துக்காக. முதலில் அறிவை அதிகரிக்க. இரண்டாவது அந்த அறிவை மற்றவர்களுக்கு அளிக்க.’

>><<


ஒரு மழை நாளில்...


“ஆளுக்கு ஒரு பேய் கதை எழுத வேண்டும். உன்னால் முடியுமா?” பிரபல கவிஞர் பைரன் கேட்கிறார் அந்த சின்னப் பெண்ணை. காதலனுடன் ஓடி வந்திருந்த அந்த அந்தப் பதினெட்டு வயது பெண்ணை. 1816 -இன் மழை நாளொன்றில் சுவிட்சர்லாந்தில். யோசித்து யோசித்து பார்க்கிறாள். மறுநாள் இரவு கனவொன்று. இன்ஸ்பயர் ஆகி எழுந்து எழுத ஆரம்பிக்கிறாள். உலகின் முதல் சயின்ஸ் ஃபிக் ஷன் எனப்படும் Frankenstein கதை பிறக்கிறது. எழுதியவர் பெண்ணென்றால் நம்பவில்லை. 'கணவர்தான் எழுதியிருப்பார்!' என்றார்கள்.

அந்தப் பெண் .. Mary Shelley... (1797-1851) ஆகஸ்ட் 30. பிறந்த நாள்!
சாதாரண கதையா அது? ரொம்ப ரகசியமாக ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிதான் ஃப்ராங்கென்ஸ்டீன். சடலத்துக்கு உயிர்கொடுக்கும் மாய ஒளிக்கற்றையைக் கண்டுபிடித்தவர் அற்புதமான ஒரு மனிதனை உருவாக்க எண்ணுகிறார். என்ன, எடுத்துக்கொண்ட உடலுக்கு மூளைப் பகுதி சேதமுற்றிருக்கிறது. வேறொரு நல் மூளையைக் கொண்டுவந்து விட்டாலும் அது மாறிப்போய் விடுகிறது. எழுந்து கொண்டது மனிதனல்ல, மான்ஸ்டர். தப்பாய்ப் போனவனை தடுப்பதற்குள் தப்பி விடுகிறான். அதிர வைக்கிறது அவரையும் அவனது கொடூரங்கள். எப்படி ஒழிக்கிறார்கள் என்பது கதை. கடவுளின் படைப்பை எதிர்க்கும் மனிதச் செயலின் விளைவு நாசம்தான் என்பது மெசேஜ்.

பிரபல Boris Karloff தான் முதல் ஃப்ராங்கென்ஸ்டீன் மான்ஸ்டர். அசத்தி (அச்சுருத்தி) விட்டார் மனிதர்!
எதைவிட எது பெட்டர் என்று விவாதிக்கிற அளவுக்கு ஏகப்பட்ட ஃப்ராங்கென்ஸ்டீன் திரைப்படங்கள் வந்துவிட்டன. அமுதசுரபி மாதிரி ஒரு அடிப்படை லைன் கொடுத்துவிட்டாரா, அடியொற்றி வந்த புதினங்களும் அனேகம். தமிழில் கூட இந்த பாணியில் நான் வணங்கும் தெய்வம் என்று வந்ததாய் ஒரு ஞாபகம்.
மேரி ஷெல்லியின் வாழ்க்கையோ? பிறந்ததுமே மரித்து விட்ட தாய்.. கடன் சுமையில் அப்பா.. சித்தி கொடுமை..என்று சுத்திச் சுத்தி சோகம். காதலித்தவரும் வேறொருத்தியின் கணவர். பிறந்த குழந்தைகளில் பிழைத்தது ஒன்றே. 24 வயதில் நீரில் மூழ்கி கணவர் மரணம்... ஆனால் எழுத்தாளராக மட்டும் வாழ்வில் வெற்றி. எழுதிய ‘கடைசி மனிதன்’ நாவலும் பின் நாட்களில் பிரபலமாகிப் போனது.
Elle Fanning நடித்து 2017 இல் படமாக வந்த இவரின் கதைக்கு (‘Mary Shelley’) அமோக விமரிசனம்!
>><<

Saturday, August 21, 2021

ஒற்றை அடியில் உலகம்...

 


எந்த ஒன்று மட்டும் இல்லை என்றால் திணறித் திண்டாடிப் போவோமோ, அந்த ஒன்றை உருவாக்கிய ரெண்டு பேரில் ஒருவர் அவர்.

தகவல் என்ற மலையை எல்லார் கைக்குள்ளும் அடங்கும்படி செய்த இருவர். சிறு கூழாங்கல்லாக.. ஆம், கூகிளாக..

Google! உலகின் மொத்த விஸ்தீரணமும் ஒற்றை அடியாகி விட்டது. அதாங்க உங்க உள்ளங்கைக்கும் லேப்டாப்புக்கும் உள்ள தூரம்.

Segey Brin… இன்று பிறந்த நாள்!

மேரிலாண்ட் யூனிவர்ஸிடியில் கணக்கிலும் கம்ப்யூட்டர் சயின்ஸிலும் ஹானர்ஸுடன் B.S. முடித்தவர் மேல்படிப்புக்காக சேர்ந்த ஸ்டான்ஃபோர்டில் அந்த இரண்டாமவரை (Larry Page) சந்தித்தார். 

ரெண்டு பேருமாக சேர்ந்து செய்த ரிஸர்ச்சில் உருவானது உலகின் மாபெரும் ஸர்ச் என்ஜின்.  ஒன்றுடன் நூறு சைபரை பின்னால் வரும் அடுக்கினால் வரும் மாபெரும் எண்ணைக் குறிக்கும் சொல் Googol. அதிலிருந்து தோன்றியது Google.

எத்தனை தூரம் ஒரு வெப்ஸைட் மற்றொன்றால் இணைக்கப்படுகிறது என்பதைக் கொண்டு அதைத் தரப் படுத்தலாம் என்று யோசித்தார்கள். Page Rank என்ற அதன் முதல் அல்காரிதத்தை எழுதினார்கள். சடுதியில் பதில் தரும் கூகுள் பிறந்தது, லாரி பேஜ் தங்கிய விடுதியில்.

குடும்பம் நண்பர்கள் என்று உதவிக்கு கிடைத்த ஒரு மில்லியனை கொண்டு உருவாக்கிய தேடல் என்ஜினை இன்று தினமும் ஒரு ட்ரில்லியன் பேருக்கு மேல் கிளிக்குகிறார்கள்.

வேக வளர்ச்சி. YouTube -ஐச் சொந்தமாக்கிக் கொண்டது 2006 இல். 2015 இல் கூகிள் Alphabet Inc இன் அங்கமானபோது அதன் தலைவரானார் ப்ரின். 

கவலையின்றி தகவல் பிடிக்கும் வலையை நமக்குத் தந்தவர்கள் தற்போது அக்கறை காட்டுவது உலகை மேம்படுத்தும் வழிகளில். மாற்று எரிசக்தி, மாசற்ற கார், மாறுபடாத க்ளைமேட் என்று. Artificial Intelligence -இல் காரை இயக்கிக் காட்டியது 2010இல்.

உடற் பயிற்சி என்றால் ப்ரின்னுக்கு உயிர். காலேஜில் படிக்கையில் ‘ஏதும் அட்வான்ஸ்ட் கோர்ஸ் எடுத்திருக்கியா’ன்னு அப்பா கேட்டபோது, ‘ஆமா, அட்வான்ஸ்ட் ஸ்விம்மிங்!’ன்னு பதிலளித்தாராம். 

><><

(தகவல் நன்றி: கூகிள்)


Thursday, August 19, 2021

தினமும் உங்களை புதுப்பித்துக் கொண்டே...

 யார் இந்த முன்னேற்ற வாசகங்களைச் சொல்லியிருப்பார் என்று ஊகிக்க முடிகிறதா?


'பறக்கக் கற்றுக் கொள்வது வசீகரமானது அல்ல. ஆனால் பறப்பது வசீகரமானது'

'ரசிக்க முடிகிற வரையில் உங்கள் வேலையை நன்றாகவும் மனப்பூர்வமாகவும் நேர்மையான நோக்கத்துடன் செய்யுங்கள், வாழ்க்கை உங்களை ஒருபோதும் ஏமாற்றாது.’

‘ஒவ்வொரு மனிதரும், நிறுவனமும், ஏன், சமூகமும் ஒரு கட்டத்தை அடைந்தவுடன் தங்கள் நோக்கத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் - புத்துணர்ச்சியூட்டிக்கொள்ள, புதிதாக கட்டமைத்துக் கொள்ள, மீண்டும் சிந்திக்க வேண்டும்.’

‘புதியவைகளை நோக்கித் தாவா விட்டால் நீங்கள் ஜீவிக்க முடியாது.’

‘உங்கள் போட்டியாளர் மீது எப்போதும் மதிப்பு வைத்திருங்கள், அவர்களை வியந்து பார்க்க வேண்டியதில்லை.’


‘நமக்கு வேண்டியது புத்திசாலித்தனமான இயந்திரங்கள் அல்ல, புரிந்துகொள்ள எளிதானவை. செயற்கை நுண்ணறிவு அல்ல, கூட்டு அறிவு.’


‘உங்களுக்கு என்று நீங்கள் வகுத்துக் கொள்ளும் பார்வை, நீங்கள் வாழ்க்கையை நடத்தும் விதத்தை வெகுவாக பாதிக்கிறது.’

‘தினமும் உங்களை புதுப்பித்துக் கொண்டே இருங்கள். சிலசமயம் வெற்றியடைவீர்கள், சிலசமயம் அடைவதில்லை. இரண்டின் சராசரி என்னவோ அதுதான் முக்கியம்.’

‘உலகில் இருக்கும் நிலையற்ற தன்மையை இன்னும் ஆழமாக உணர்ந்து கொண்டால், மனதில் ஒரு சமநிலையை வளர்த்துக் கொள்ள முடியும். வாழ்வின் உயர்வுகளும் வீழ்ச்சிகளும் திகைக்க வைக்காது. அப்போதுதான், சுற்றியுள்ளவர்களின் மீது ஆழமான பரிவையும் பச்சாதாபத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும்.’

‘எந்தப் பழக்கங்களால் முதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களோ அந்தப் பழக்கங்களையே மக்கள் மறந்துவிடச் செய்கின்றன வெற்றிகள்.’

‘நாம் செய்வது வேலை அல்ல, மற்றவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது என்பதை அறியும் போதுதான் அது மிகச் சிறந்த வேலை ஆகிறது.’

‘என் வளர்ச்சியை பற்றி நான் யோசிக்கும்போது, என் வெற்றிகள் என் தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டவைகளால் கட்டமைக்கப்பட்டவை.’

'நான் இன்னும் உழைக்க வேண்டும். ஏணியில் ஏறுவதற்காக அல்ல. மிக முக்கியமான வேலைகளைச் செய்வதற்காக!'

… சொன்னவர் Satya Nadella. மைக்ரோ ஸாஃப்ட் நிறுவனத்தின் சி. இ. ஓ. இவரின் பிரபல ‘Hit Refresh’ புத்தகம் படித்திருப்பீர்கள்...

இன்று பிறந்த நாள்!

Sunday, August 15, 2021

அந்தப் புறா...

“இந்தப் புறா ஆட வேண்டுமானால் இளவரசர் பாட வேண்டும்!” என்றபடி "வசந்த முல்லை போலே வந்து" ரசிகர் மனம் கவர்ந்தவர்.

ராஜசுலோசனா.. இன்று பிறந்த நாள்! (1935 - 2013)

அண்ணனுக்காக பெண்பார்க்க வந்த சிவாஜி அவரை நாலு கேள்வி இலக்கிய நயமாகக் கேட்கப் போக, ஒரு சந்தர்ப்பத்தில் அவரை மணந்த ராஜசுலோசனா, திருமண இரவின் போது சிவாஜியிடம், “நான் உங்க வீட்டிலே முதல்முதலா பார்க்க ஆசைப்பட்ட இடம் எது தெரியுமா? உங்க லைப்ரரி!”ன்னு சொல்ல, “லைப்ரரியா, இந்த புஸ்தகம்லாம் வெச்சுப் படிப்பாங்களே அதுவா? அது அண்ணன் ரூமிலில்ல இருக்கும்? நான் படிக்காதவனாச்சே?”ன்னு சொல்லும்போது வெடிக்கும் ஏமாற்றத்தை முகத்தில் கொட்டுவதில் தொடங்கி அவரை எகத்தாளமாக பேசுவது, ஏளனப் படுத்துவது, இளக்காரமாக பார்ப்பது, ‘என் வாழ்க்கையையே நாசமாக்கிட்டீங்கன்னு ஆக்ரோஷமாக பழிப்பது... ‘நாளைலேர்ந்து நான் உன்கிட்டயே படிக்கிறேன்’னு சொல்லும் சிவாஜியிடம், ‘ஏது, அரிச்சுவடியில் இருந்தா?' என்று சொடுக்கும் சாட்டை, சிவாஜியுடன் சரிக்கு சரியாக மோதி அந்த வெறுப்பை நாமும் சரியாக உள்வாங்க வைத்திருப்பார் அந்தப்படத்தில். ‘படித்தால் மட்டும் போதுமா?’ மறக்க முடியுமா? அவர் நடிப்பில் முத்திரை பதித்த படம்!

சிவாஜியுடன் போட்டிபோட்டுக்கொண்டு நடித்தது அந்தப் படம் என்றால் பத்மினியுடன் போட்டி போட்டுக் கொண்டு ஆடியது ‘திருமால் பெருமை’யில். “கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு..”

அந்தப் படம் எத்தனை பாப்புலரோ அத்தனை பாப்புலர் அந்தப் பாடலும்! காதில் கிறக்கும் விக்கலை போலவே மனதில் நிற்கும் நடனம். ‘குலேபகாவலி’யில் “ஆசையும்.. ஹக்! என் நேசமும்.. ஹக்! ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா..”

நடனத்துக்கு முகபாவம் முக்கியம் என்பதை நன்குணர்ந்து ஆடியிருப்பார் இந்தப் பிரபல பாடலில்: “ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட நேசா... பேசும் ரோஜா என்னை பாரு ராஜா…” (‘ஆசை’) 

தமிழ் தெலுங்கு கன்னடம் என்று சுமார் 300 படங்களில் நடித்த சுலோசனா  நடனப்பள்ளி (‘புஷ்பாஞ்சலி நிருத்ய கலா கேந்திரம்') ஒன்றை ஆரம்பித்து வெள்ளி விழா கண்டவர்..

சிறுவன் ரவிக்கு ‘கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..’ என்று பாட்டுப்பாடி உலகம் புகட்டும் டீச்சராக வரும்போதும் சரி, அவன் கடத்தப்படும்போது தெரு முனையில் நின்று அதே பாட்டைப் பாடி அவனை காப்பாற்றத் தவிக்கும்போதும் சரி, ‘கைதி கண்ணாயிரம்' படத்தின் ஜீவநாடியான காட்சிகளை வெகு நயமாகக் கையிலேந்தி கிளாப்ஸ் ஆயிரம் வாங்கினார். 

தொடர்ந்து  நாலரை நிமிட நேரம் ரீயாக் ஷன் மட்டுமே கொடுத்து அந்த ஒரே ஷாட் காட்சியில் நடித்த சிறப்பு உண்டு இவருக்கு. ஒரே ஷாட்? ஆம், ‘சேரன் செங்குட்டுவன்' நாடகக் காட்சியில் சிவாஜி பேசப் பேச.... (‘ராஜா ராணி')

><><


Friday, August 13, 2021

தெளிவைஸர்!


அது இல்லாமல் முடியாது என்று ஆகிவிட்டது நம்ம வாழ்க்கை. ஆனால் அந்த ‘டி.வி.’யை கண்டு பிடித்தவர், அதன் தந்தை என்று அழைக்கப்படுபவர், முதல் பேசும் சினிமா வெளிவருவதற்கு முந்தைய வருடமே அதைச் செய்து காட்டியவர்...

John Logie Baird. இன்று பிறந்த நாள்! (1888 - 1946)
லண்டன் Royal Institution -இல் 1926 ஜனவரியில் நடந்தது அந்த டெமோ. நகரும் பொருட்களை திரைக்கு நகர்த்தி காட்டினார் ஜான். விநாடிக்கு 5 வேகத்தில் படங்கள் வந்து விழுந்தன திரையில். அப்ப அதற்கு அவர் சொன்ன பெயர் டெலிவைஸர்!
அடுத்த வருடமே லண்டனிலிருந்து கிளாஸ்கோவிற்கு அசைவுகளை ஓசையுடன் டெலிபோன் ஒயர்களின் வழியே டெலிகாஸ்ட் செய்தார். அடுத்த வருடம் லண்டனிலிருந்து நியூயார்க்குக்கு. அதே வருடம் கலர் டெலிவிஷனையும்!
ஒளியை மின்சாரமாக மாற்றும் தன்மை selenium -க்கு உண்டு என்பதைப்பற்றி படித்ததுதான் அந்த ஸ்காட்லாண்ட் இளைஞனை டெலிவிஷனைப் பற்றி சிந்திக்க வைத்தது.
பாவம், ஃபண்ட்ஸ் கிடைக்கவில்லை. பத்திரிகை ஆபீஸில் சென்று தன் ஐடியாவை சொன்னால் பைத்தியம் மாதிரி பார்த்தார்கள். தன் முதல் டி.வி. மாடலை செய்தபோது தையல் ஊசியிலிருந்து சைக்கிள் லைட் வரை கையில் கிடைத்த பொருளை எல்லாம் உபயோகிக்க வேண்டியதாயிற்று.
சூழலும் டிஸ்குகள் அசைவுகளை ஸ்கேன் செய்து மின் சிக்னல்களாக கம்பிகளில் அனுப்ப, வேறோரிடத்தில் அவை திரையில் பதிக்கப்படுகின்றன. முதலில் திரையில் அசைந்த பிம்பம் ஒரு பொம்மையின் தலை. பார்த்ததும் அவர் துள்ளிக் குதித்தார்.
டி.வி.க்கான அந்த ஒரிஜினல் ஐடியா Nipkow உடையது. ஆனால் அதை மேம்படுத்தி தெளிவான பிம்பம் கொண்டுவந்தது இவரது டெலிவைஸர் தான். தெளிவைஸர்!
முதலில் ஐந்து வருடத்திற்கு அவருடைய டெக்னிக்கை உபயோகித்தது BBC. இரண்டு மடங்கு லைன்களுடன் இவருடன் போட்டியிட்டது மார்க்கோனி டிவி. இவருடையது மெக்கானிக்கல் என்றால் அவருடையது எலக்ட்ரானிக்.
டி.வி. உலகத்தின் எந்த சாத்தியதையையும் விட்டு வைக்கவில்லை ஜான். HD TV, 3D TV.... ஏன், வீடியோவையும் தொட்டார். Phonovision என்று பெயர் வைத்தார்.

<<>>

Monday, August 9, 2021

நீங்கள் மிக அழகானவர்...



மூமின்ஸ் என்ற காமிக்ஸ் ஸ்ட்ரிப்ஸ் மூலமாக பூமியில் பிரபலமான நபர் அவர். (Moomins)

பின்லாந்தின் முன்னணி பெண் எழுத்தாளர்களில் ஒருவர். புகழ்பெற்ற ஓவியரும் கூட.
குடும்பத்தில் அத்தனை பேரும் கலைஞர்களாக இருக்கும் போது அதில் வளரும் ஒருத்தி மிகச்சிறந்த படைப்பாளியாக மாறக் கேட்கணுமா?
குழந்தைகளுக்கு எழுதுவதிலும் பெரியவர்களுக்கு எழுதுவதிலும் வல்லவர்.
Tove Jansson. இன்று பிறந்தநாள்!
சொன்னவை சுவையானவை:
‘உங்களை மிக அழகானவராக கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை, ஏனெனில் நீங்கள் மிக அழகானவர்.’
‘நீண்ட பிரயாணம் மேற்கொள்ள வேண்டும் நீங்கள், வீடு எத்தனை அற்புதமானது என்பதை கண்டுகொள்ள.’
‘ஒருவன் எல்லாவற்றையும் தானே கண்டுபிடித்தாக வேண்டும்; தானே அதிலிருந்து விடுபட வேண்டும்.’
‘யாரையேனும் அளவுக்கதிகமாக பிரமித்தால் சுதந்திரமாக இருக்கவே முடியாது.’
‘எல்லா விஷயங்களுமே மிகவும் நிச்சயமற்று இருக்கின்றன; அதுவேதான் என்னில் மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்துகிறது.’
‘பாலத்தில் படுத்துக்கொண்டு வெள்ளம் பாய்வதைக் கவனியுங்கள்; சிவப்பு பூட்ஸ்களை அணிந்துகொண்டு ஈர நிலத்தில் சிரமப்பட்டு ஓடுங்கள்; அல்லது மாடியில் உருண்டபடி கூரையில் மழை விழுவதை கேளுங்கள். தனக்குத்தானே அனுபவிப்பது ரொம்ப சுலபம்!'
‘உள்ளபடியே கடவுள் உதவுகிறார், ஆனால் நீ சொந்தமாக ஒரு முயற்சியாவது செய்த பிறகு தான்.’
‘மொத்தத்தில் இவ்வளவுதான் விஷயம்: ஒரு போதும் களைப்படையாதீர்கள், உற்சாகத்தை இழந்து விடாதீர்கள், வெறுமே இருந்துவிடாதீர்கள் - விலைமதிப்பற்ற உங்கள் ஆர்வத்தை இழந்து உங்களை சாக விட்டுவிடாதீர்கள். அவ்வளவுதான், விஷயம் ரொம்ப சிம்பிள்.’

Friday, August 6, 2021

சிரிப்பு வருது.. சிரிப்பு வருது...



இங்கிருந்து அங்கே ஒரு ஜம்ப்.. அங்கிருந்து இங்கே ஒரு ஜம்ப். இங்குமங்கும் அணிலைவிட அதிவேகமாக தாவல்கள்... அது என்னமோ ரப்பர் மாதிரி இஷ்டத்துக்கு வளைகிற உடல்.. ஆம், சந்திரபாபு என்றதுமே அந்த அந்தர்பல்டிகள் தான் நினைவுக்கு வரும்.

வைரத்தை பட்டை தீட்டுவதுபோல நகைச்சுவைக்கு ஒரு பாலிஷ் கொடுத்தவர். கதாநாயகனை விட அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டு வாங்கிய ஒரே நடிகர். லட்சம் தொட்ட முதல் காமெடி நடிகரும்!
ஆக. 5. பிறந்த நாள்.
ஆரம்பித்து வைத்த முன்மாதிரிகள் அனேகம். அதில் ஒன்று காமெடி நடிகர் கதாநாயகனாக நடிப்பது. கண்ணதாசனின் 'கவலை இல்லாத மனிதன்.' மற்றொன்று காமெடி நடிகர் சோகக் காட்சிகளிலும் சோபிக்க முடியும் என்று காட்டியது. ‘குமார ராஜா’ ஒன்று போதுமே?
“கல்யாணம் என்பது எது வரை?”என்று கதாநாயகன் பாடினால் “கழுத்தினில் தாலி விழும்வரை!” என்று அழகாகப் பதில் பாட இவர்தான் வேண்டும்! பாபு - நாகேஷ் ஜோடி சேரும்போதெல்லாம் அமர்க்களம்தான்.‘கடவுளைக் கண்டேன்’ முதல் ‘அன்னை’ வரை.
பத்மினி படத்தை வைத்துக்கொண்டு “உனக்காக, எல்லாம் உனக்காக..” பாடினாலும், சாவித்திரி படத்தை வைத்துக்கொண்டு “கோவா மாம்பழமே..” பாடினாலும் மாலினி படத்தை வைத்துக்கொண்டு “பம்பரக் கண்ணாலே…” பாடினாலும் அலுக்கவே அலுக்காது அந்த ஸ்டைல்! “காவேரி ஓரம், கவி சொன்ன காதல்…” பாடலில் பாபுவின் பால் ரூம் டான்ஸ் திறமையை பார்க்கலாம் என்றால் ‘பதி பக்தி’ பாடலில் ராக் ஸ்டைலை ரசிக்கலாம்.
ஆம், எந்த மாதிரியும் ஆட வல்லவர். ‘சபாஷ் மீனா’ வில் சரோஜாதேவியுடன் “ஏறுங்கம்மா.. ரிக்‌ஷா ஏறுங்கம்மா…” விலிருந்து ‘நீதி'யில் “முத்தமிழின் செல்வன் வாழ்க..” என்று சிவாஜி, ஜெயலலிதாவுடன் ஆடுவது வரை சலிக்காத நடனம் அவருடையது. பொம்மலாட்ட பொம்மை போல் பாட வேண்டுமா? “நான் கோலாலம்பூர் காட்டுக்குள்ளே குருவி பிடிக்கப் போனேன்..” (காத்தவராயன்)
கையையும் காலையும் மடித்து இடுப்பை ஒயிலாக ஒடித்து அவர் ஆடும் அந்த சந்திரபாபு ஸ்டைல் தனி முத்திரை பெற்றது.
அந்தப்படம் மட்டும் ஓடியிருந்தால் ஜோரான டைரக்டராக ஜொலித்திருப்பார். ஆம், அவரது மாஸ்டர்பீஸ்: ‘தட்டுங்கள் திறக்கப்படும்’. கே.ஆர்.விஜயா, சாவித்திரி, மனோகர் நடித்த க்ரைம் த்ரில்லர் அது. ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எடுத்திருப்பார். ஷாட்டுக்களை அந்தக் காலகட்டத்துக்கு இன்னொவேடிவாக அமைத்திருப்பார். சாவித்திரியும் மனோகரும் விவாதிக்கும் காட்சியில் அந்த பிரம்மாண்ட செட்டின் ஒரு மூலையில் தொடங்கி, சுற்றி நடந்து அதே இடம் வரும் டிராலி ஷாட்டும் சரி, ஆடும் நாற்காலியில் குழந்தையைத் தாலாட்டும் சாவித்திரியை கணப்புக்குள் இருந்து காமிரா எட்டிப் பார்ப்பதும் சரி, நிமிர்ந்து ரசிப்போம் என்றால் மனோகரின் உடலை நம் முன்னால் எடுத்துக் கொண்டு வரும் ஸ்ட்ரெச்சர் நம் தலைக்கு மேலோடு படியிறங்கும்போது அசந்து போவோம். (காமிரா பி.எஸ்.லோகநாதன்.) படமே ஓர் உயர் தரத்தில் இருக்கும். அந்தப் பிரபல "கண்மணி பாப்பா... மனிதன் பிறந்தது குரங்குக்குத்தான் என்று சொன்னது தப்பா..."(எம்.எஸ்.வி.)
ஆரம்பத்தில் அவர் பாடியது அவருக்கே அல்ல. ஏ.வி.எம்மின் ‘பெண்’ படத்தில் எஸ். பாலச்சந்தருக்கு. "கல்யாணம்... உல்லாசமாகவே.. உலகத்தில் வாழவே.."
ஏன், சிவாஜிக்கே பின்னணி பாடியிருக்கிறார். “ஜாலி லைஃப்.. தம்பதி யானால் ஜாலி லைஃப்.” (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி) பாடலில். “பெண்டாட்டி கூடவே கொண்டாட்டம் போடுவே.. பின்னாலே நீயும் ஓடுவே.. என்ன சொன்னாலும் பின் பாட்டு பாடுவே.. என்னை கண்டாலும் காணாத மாதிரி.. எதோ காணாததை கண்ட மாதிரி…” என்ற வரிகளை அவர் பாடும் விதமே அலாதி!
சந்திரபாபுவுக்கே மற்றவர்கள் பாடியதும் உண்டு. யார் யார்? ‘அன்னை’யில் டிஎம்எஸ். ( “லைலா மஜ்னு..”) ‘பறக்கும் பாவை’யில் ஜேசுதாஸ் (“சுகம் எதிலே இதயத்திலா..”) ஏன், சீர்காழி கூட… ("அலங்கார வல்லியே.." - 'சபாஷ் மீனா')
நிறைய காமெடி நடிகர்களைப் போலவே சொந்த வாழ்க்கை சற்றே சோகம் சிந்துவது. 46 வயதில் மறைவு என்பது நம்மைத் திகைக்க வைத்த ஒன்று.
“குங்குமப்பூவே..”வை துள்ளலாக பாடிய அதே குரல் தான், “ஒண்ணுமே புரியலே உலகத்திலே..”வை உருக்கமாகவும் "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை..”யை அட்டகாசமாகவும் பாடுவது! அங்கே கிஷோர்குமார் என்றால் இங்கே இவர் ஒருவரே yodelling இல்.
இவரது காமெடி டிராக்குக்காகவே கூடுதலாக ஓடிய படங்களும் உண்டு. உதா: ‘சகோதரி.’ விளம்பரத்தில் அந்த “நான் ஒரு முட்டாளுங்க..” தனி இடம் பெற்றது.
‘சபாஷ் மீனா’வில் சிவாஜியுடன் ஒரு காட்சி. பயந்த குரலில் தொடங்கி படிப்படியாக இறங்கி அழுகைக் குரலுக்கு அட்டகாசமாக மாறுவார். பாபு: “முதல்ல யார் வர்றாங்க தெரியுமா கண் முன்னால? அப்பா வர்றார். அப்புறம் அந்த கலெக்டர் அப்பாத்துரை வர்றார். (குரலில் பயம்.) அப்புறம் ஜெயில் வருதுடா.. அப்புறம் விலங்கு வருது... (குரலில் நடுக்கம்) அப்புறம் தூக்குக் கயிறு…” (குரலின் அழுகை)
சொல்ல வேணுமா? ‘சபாஷ் மீனா’வின் அந்த ஃபேமஸ் காட்சி! சிவாஜியின் அப்பா வரும்போது அவர் மேனேஜர், சந்திரபாபு டைப்பிஸ்ட் ஆகவும், பாபுவின் அப்பா வரும்போது அவர் மேனேஜர், இவர் டைப்பிஸ்ட் ஆகவும் சட்டென்று மாறும், தூள் கிளப்பிய சாகா வரம் பெற்ற காட்சி..
டவுன் சந்திரபாபு கிராமத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கும்போது எரியும் கற்பூரத்தை முழுங்கும்போதும், கிராமத்து சந்திரபாபு டவுனில் இட்லியை பிளேட் பிளேட்டாக விழுங்கும்போதும் அந்த காமெடியிலும் வித்தியாசத்தை துல்லியமாக காட்டியிருப்பார்.
கைலியை தூக்கி முழங்காலில் செருகிக்கொண்டு இந்த காலிலிருந்து அந்த காலுக்கும் உடம்பை மாற்றி மாற்றி பேசிக் கலாய்ப்பது அவருக்கே உரித்தானது. மெட்ராஸ் பாஷையை அவர் போல யாரால் அத்தனை தத்ரூபமான பேசமுடியும்?
‘ராஜா’ படத்தில்... மீசையால் அவதிப்பட்ட சந்திரபாபு சலூனில் சென்று ‘மீசையை எடுத்துருப்பா!’ என்கிறார்.
அவன்: ‘சார், உங்க முகத்திலேயே அழகா இருப்பது மீசை ஒண்ணுதான்!’
இவர்: ‘அப்படின்னா மீசையை வெச்சிட்டு முகத்தை எடுக்க சொல்றியா?’

பெண் வேடத்தில் வந்து கலாய்த்த ஒரு படம் ‘புதையல்' “ஹலோ மை டியர் ராணி.. எங்கம்மா உனக்கு மாமி..” (“யுவர் கண்ணு ஸ்வீட் பன்னு.. யுவர் காது கேக் காது..”) மற்றொன்று, ‘வாலிப விருந்து’ (“டோரியா.. சென்னப்பட்டினம் போறியா.. கப்பலா, காரிலா, ஓசி ரயிலா..?”) கிணற்றுச் சுவரில் பாடியபடி நடனமாட பாபுவின் கால்களால்தாம் முடியும் போல. (“ஓஹோ மேரி பியாரி புல் புல்…”)

எப்ப எங்கே கேட்டாலும் மனது (சுற்றி யாருமில்லாவிடில் உடம்பும்) துள்ளும் பாடல்கள்!
பத்மினி பிரியதர்சினியுடன் 'பாதகாணிக்கை’யில் வண்டலூர் ஜூவில் பாடும் “தனியா தவிக்கிற வயசு.. இந்த தவிப்பும் எனக்கு புதுசு..”
ஜமுனா ராணியுடன் “நீயாடினால் ஊராடிடும்.. நானாடினால் யார் ஆடுவார்..”. (பாண்டித்தேவன்)
“தடுக்காதே என்னை தடுக்காதே..”(நாடோடி மன்னன்)
“கொஞ்சம் தள்ளிக்கணும்..” (கடவுளைக் கண்டேன்)
“சிரிப்பு வருது சிரிப்பு வருது..” (ஆண்டவன் கட்டளை)
“உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு..” (மகாதேவி)
“எப்போ வச்சுக்கலாம்.. எப்படி வெச்சுக்கலாம்..” (பந்த பாசம்)
“நம்பள்கி பியாரி நம்பள் மஜா..” (பாதுகாப்பு)
ஒவ்வொரு தம்பதியையும் சிலிர்க்க வைத்த அந்தப் பாடல் சிகரம்! “பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது… ஐயா, பொறந்துவிட்டா..”

><><

Wednesday, August 4, 2021

அன்பின் மகிமை...


‘நேருக்கு நேர் எதிர் கொள்வதால் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது, ஆனால் நேருக்கு நேர் எதிர் கொள்ளாமல் எதையும் மாற்ற முடியாது.’

சொன்னவர் James Baldwin. (1924 - 87) அமெரிக்காவின் மிக முக்கிய நாவலாசிரியர், கவிஞர், பேச்சாளர். ஆகஸ்ட் 2. பிறந்த நாள்!
திரைப்படமாகிய இவரின் ‘If Beale Street Could Talk’ என்ற நாவல் ஆஸ்கார் அவார்ட் பெற்றது.
இன்னும் சொன்னவை:
‘கல்வியின் முரண் என்னவெனில் ஒருவன் கற்று விழிப்புணர்வு பெற தொடங்கியதும், தான் கல்விபெறும் சமூகத்தையே பரிசீலனை செய்ய தொடங்குகிறான்.’
‘மக்கள் தங்கள் வெறுப்புகளைப் பிடிவாதமாக சுமந்து கொண்டு திரிவதற்கு ஒரு காரணம் வெறுப்புகளில் இருந்து விடுபட்டால் வலிகளுடன் போராடவேண்டுமே என்பதால்தான்.’
‘மக்கள் சரித்திரத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். சரித்திரம் மக்களிடம் சிக்கிக் கொள்கிறது.’
‘அறியாமை அதிகாரத்துடன் சேர்ந்து இருப்பதுதான் நீதிக்கு கிடைக்க இருக்கிற மிகக்கொடூரமான எதிரி என்பது நிச்சயம்.’
‘வறுமையுடன் போராட நேர்ந்த எவருக்குமே தெரியும் ஏழையாக இருப்பது எத்தனை விலை உயர்ந்த விஷயம் என்று.’
‘அவற்றை அணியாமல் நாம் வாழ முடியாது என்று நாம் பயப்படுகிற, அணிந்தாலும் கஷ்டம் என்று நமக்குத் தெரிகிற முகமூடிகளை அன்பு அகற்றிவிடுகிறது.’

‘நேசி, நேசிக்க விடு. அதைத் தவிர வேறு முக்கியமான விஷயம் உலகத்தில் இருக்கிறதா என்ன?’

><><><

நம்மை உயர்த்தியவர்...


1853. நியூயார்க்கில் அந்த எக்ஸிபிஷன். கூடி நிற்பவர்கள் பார்த்துக்கொண்டே இருக்க அந்த 42 வயது இளைஞர் கயிற்றால் கட்டப்பட்ட ஒரு மர மேடையில் ஏறி நிற்கிறார். சாமான்களை மேலே கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் எலிவேட்டர் அது. உயரே உயரே தூக்கப் படுகிறது. அவர் கட் சொல்ல, வெட்டப்படுகிறது கயிறு. கூட்டம் பதைபதைக்க... ரெண்டே வினாடிதான். சர்ரென்று இறங்கிய அது சட்டென்று அந்தரத்தில் நிற்கிறது. உலகின் முதல் ஸேஃப்டி லிஃப்ட்! கைதட்டல்களை அள்ளிக் கொண்டவர்...

Elisha Otis.... ஆகஸ்ட் 3, பிறந்த நாள். (1811 - 61)
லிஃப்டுக்கான ஐடியா ஆர்க்கிமிடிஸ் காலத்திலேயே வந்து விட்டது, கயிற்றைக் கட்டி மேலே தூக்குவது என்ற அளவில்! நிறைய மாடல்கள். அதில் ரொம்ப வேடிக்கையானது 15ஆம் லூயிஸ் தன் காதலி ஒருத்தியை ரகசியமாக சந்திக்க, தன் மூன்றாவது மாடிக்கு அவளைக் கொண்டு வர அமைத்திருந்த பறக்கும் நாற்காலி!
பரவலாக ஏராளம் ‘உயர்த்தி’கள் நாடெங்கும் நடமாடினாலும் பாதுகாப்பு இல்லாததால் மனிதர்கள் அதில் காலடி எடுத்து வைக்கவில்லை, எலிஷா ஓடிஸ் வந்து எலிவேட்டரில் ஸேஃப்டியை ஏற்படுத்தி அதை டெமோ செய்த நாள் வரையில்! நாலாவது வருடமே பொருத்தி விட்டார் தன் லிஃப்டை நகரத்தின் மால் ஒன்றில்.
நினைத்துப் பாருங்கள். வானளாவியிருக்குமா கடடிடங்கள் அவர் வாளாவிருந்திருந்தால்?
இத்தனைக்கும் மனிதருக்கு அதை சரியாக விற்பனை செய்யத் தெரியவில்லை. தொடங்கிய லிஃப்ட் கம்பெனி ரொம்ப உயரவில்லை. மகன்கள் காலத்தில் தான் மேலே வந்தது. இன்றைக்கு அது டாப் பிராண்ட்! இரட்டை மாடி கடையிலிருந்து ஈஃபில் டவர் வரை 'ஓடிஸ்' கேபிள் கட்டிப் பறக்கிறது.
அடிப்படையில் அவர் ஒரு அபாரக் கண்டு பிடிப்பாளர். ரயிலுக்கான ஸேஃப்டி பிரேக்கும் தானியங்கி ரொட்டி அடுப்பும் மற்றவை.