அந்தக் கவிஞரை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வதாகச் சொன்னார்கள் பிரபல இசைஅமைப்பாளர்களான ஷங்கர் ஜெய்கிஷன். மறந்துவிட்டார்கள்போல. ஒரு நாள் அவர்களுக்கு ஒரு லெட்டர் வந்தது அவரிடமிருந்து. நாலு வரி.
‘ரொம்பச் சின்னது உலகம். பாதைகளோ மனம் அறியும். என்றோ ஒரு நாள், எங்கோ ஓரிடம் உங்களை நான் சந்திப்பேன். எப்படி இருக்கிறீர்கள் என்பேன்.’
அவ்வளவுதான், அந்த வரிகளையே தங்கள் ‘Rangoli’ படத்தில் ஒரு பாடலாக்கியதோடு (Chotisi Yeh Duniya..) மீண்டும் அவரை தங்களுடன் இணைத்துக் கொண்டார்கள்.
அந்தக் கவிஞர்... ஷைலேந்திரா! வார்த்தைகளில் மகேந்திர ஜாலம் செய்தவர்.
ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவரை ராஜ் கபூர் தன்னுடைய ‘Aag' படத்திற்கு பாடல் எழுதக் கேட்டபோது மரியாதையாக மறுத்துவிட்டார். சினிமாவுக்கு பாடல் எழுத அவர் விரும்பியதில்லை. ஆனால் மகன் பிறந்த சமயத்தில் பணம் தேவைப்பட அவரே ராஜ் கபூரைத் தேடிவந்தார். ரெண்டே பாடல்தான் பாக்கி இருந்தது 'Barsaat' படத்தில். 500 ரூபாய் பெற்றுக்கொண்டு அவர் எழுதிய அந்த ரெண்டு பாடல்களும் (“Patli Kamar Hai..” “Barsaat Mein..”) மூவரையுமே (ஆம், ஷங்கர் ஜெய்கிஷனுக்கும் அது டெப்யூட் படம்) வியந்து பார்க்க வைத்தது. கபூருக்கு ஆஸ்தான கவிஞர் கிடைத்தார். நமக்கு ‘ஆவாரா’(விலிருந்து வரிசையாக) பாடல்கள் கிடைத்தன.
ஷங்கர் ஜெய்கிஷன் என்றால் ஷைலேந்திரா அல்லது ஹஸ்ரத் பாடல்கள்தாம் என்றாகியது. அதில் கிடைத்த அளவிலா முத்துக்கள்..
“Ramaiya Vathavaiya…” “Mud Mud Ki Na Dekh…” (Shree 420)
“Main Gavun Tum So Jaavon…’ (Bramhachari)
“Dost Dost Na Raha…” (Sangam)
“Jis Desh Mein Ganga Bahti Hai…” (Jis Desh Mein..)
எஸ் டி பர்மனும் இவரை நன்றாக பயன் படுத்திக் கொண்டார் ‘Kala Bazaar’ -இல் வரும் “Koya Koya Chand…” ஒன்று போதுமே சொல்ல? சலில் சௌத்ரிக்கு இவர் எழுதிய ‘Madhu Mathi’ பாடல்கள்!
நிறைய கலைஞர்களைப்போல சொந்தப் படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டார். ஆனால் நேஷனல் அவார்ட் அவரது 'Teesri Kasam' படத்துக்கு. விரைவிலேயே மறைவு. மறக்க முடியாத அந்த “Jeena Yahan.. Marna Yahan…”! பல்லவியோடு நின்று போனதை மகன் Shaily Shailendra எழுதி முடித்தார்.
வாழ்ந்த மதுராவில் ஒரு வீதி இவர் பெயரை சூடிக்கொண்டது.
இப்ப 2016 இல் வந்த Ryan Reynolds ஆங்கிலப் படம்… ‘Deadpool’. ஆரம்பக் காட்சியிலும் கடைசியிலும் ஒலிக்கிறது இவரது “Mera Jhutha Hai Japani..” பாடல்.