Tuesday, August 11, 2020

கையா A. I.யா?

சிறுவர்களுக்கு கதை எழுதுவது சாமானிய விஷயமல்ல. சாமர்த்தியமான பிளாட் இருக்கணும். சிறுவர்களுக்கே உரித்தான கோட்டில் பயணிக்க வேண்டும். வளவள வர்ணனைக்கு நோ.
சமீப அரசியை அறிவோம். சென்ற நூற்றாண்டில் ஆண்டவர் ஒருவர் உண்டு. கையா, A. I.யா என்று சந்தேகப்படும் அளவுக்கு எழுதிக் குவித்தவர் எனிட் ப்ளைடன்.
Enid Blyton... இன்று பிறந்த நாள்.
Famous Five ஃபேமஸ் என்றால் Secret Seven சிறுவர் ஹெவன். ரெண்டையும் நோண்டவில்லை என்றால் நீங்கள் சிறுவயது தாண்டவில்லை. ஒரு நொடி, ஒரு Noddy காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தால் அடியோடு மறந்து விடுவீர்கள் இந்த அவஸ்தை உலகத்தை. நோடியைப் படித்ததும் நோய் நொடி எல்லாம் பறந்துவிடும்!
சாம்பிளுக்கு இதோ ஒரு கதை...
டீச்சரின் மேஜையில் இருந்து பணம் திருடிய சிறுமி எலிசபெத் காணாமல் போய் விடுகிறாள். அவள் பாட்டி வசிக்கும் கிராமத்துப் பக்கம் அவளைக் கண்டதாகச் சொல்கிறார்கள். பக்கத்து கிராமத்தில் இருக்கும் ஸீக்ரெட் ஸெவனுக்கு கிடைத்தது கேஸ். களம் இறங்குகிறார்கள்.
பாட்டியை விசாரித்தால் தினமும் தின் பண்டங்கள் காணாமல் போவதாக சொல்கிறார். ஊரைச் சுற்றித் தேடுகிறார்கள். பக்கத்தில் இருக்கும் குதிரை லாயத்தில் வேலை பார்க்கும் டாம் என்ற பையன் அவளைப் பார்த்ததாக சொல்கிறான். லண்டன் போய் பிரான்ஸுக்கு தன் சகோதரனை பார்க்க போவதாக அவள் சொன்னாளாம்.
லண்டன் போய் இருந்தால் இங்கே பண்டம் திருடு போவது எப்படி? அன்றிரவு போலீஸ் ஒரு பக்கம், ஸீக்ரெட் 7 ஒரு பக்கம், டாம் ஒரு மரத்தில் ஏறி... என்று வீட்டைச் சுத்தியிருந்து வேவு பார்க்கிறார்கள். ஆனால் அன்றைக்கும் பட்சணங்கள் அபேஸ். எப்படி?
இதற்கிடையில் அவள் சகோதரன் வந்து சேர்கிறான். அவனைப் பார்த்ததும் ஸெவனில் ஒருவனுக்கு சந்தேகம் தட்டுகிறது. அவனை அழைத்துக்கொண்டு டாமைப் பார்க்கப் போகிறார்கள். கண்டதும் குதிரைக்குட்டியில் ஏறி டாம் விரைய, நிறுத்திப் பார்த்தால் அவன்தான் எலிசபெத். ஆண்பிள்ளை வேடத்தில். அவள் பணத்தைத் திருடவில்லை என்றும் தெரிகிறது. வாரச் சம்பளம் கிடைக்கும் வரை வயிற்றுப்பசி. ஆகவே பாட்டி வீட்டிலிருந்து! சம்பவத்தன்று மரத்திலிருந்து மாடியில் இறங்கி தின்பண்டம் எடுத்துக் கொண்டு திரும்பி மரம் வழியாகவே வந்து கண்முன்னே அவர்களை ஏமாற்றியதை சொல்கிறாள்.
சின்ன கவிதை ஒன்றில் ஆரம்பித்து 600 புத்தகங்களுக்கு அசுர வளர்ச்சி. 42 மொழிகளில் 60 கோடி பிரதி விற்பனைக்கு. நாளொன்றுக்கு அவர் டைப் ரைட்டர் கக்கும் வார்த்தைகள் 6000.
1996 இல் அவரது எழுத்துச் சொத்தை மிகக்குறைவாக கொடுத்ததிலேயே 14 மில்லியன் பௌண்ட் குடும்பத்துக்கு கிடைத்ததாம்.
குழந்தைகளுக்கு அம்மா முக்கியம் என்று சொல்லும் இவர் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு எழுத்தையும் ஜனித்துக் கொண்டவர்.
Quotes?
‘எதையாவது யாருக்காகவேனும் விட்டுச் செல்லுங்கள். ஆனால் எதற்காகவும் யாரையும் விட்டுச் செல்லாதீர்கள்.’
‘பராமரிக்க முடியாத ஒன்றை வைத்திருக்க உங்களுக்கு உரிமை இல்லை.’
‘வளர வளர நம் முகத்தை நாமே உருவாக்கிக் கொள்ளுகிறோம்.’
><><><

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!