சிறந்த பாடகிக்கான தேசிய விருதை அதிகமா எத்தனை தடவை ஒரே பாடகி வாங்கியிருக்காங்கன்னு கேட்டா ஆறுன்னும், ஆருன்னு கேட்டா சித்ரான்னும் பதில் சொல்லிடுவீங்க.
K. S. Chithra... சின்னக் குயில் சித்ரா..
அந்தக் குழைவுன்னு இருக்கலாம், அந்தத் தெளிவுன்னு இருக்கலாம், வெகு நேர்த்தின்னு இருக்கலாம்…soul touchingஆக இருக்கலாம். சொல்ற காரணங்கள் வேறுவேறா இருக்கலாம். ஆனா எல்லாருக்கும் அந்தக் குரல் பிடிக்கும்.
தமிழில் அவர் முதல் பாடல்.. 'பூஜைக்கேத்த பூவிது...' கேட்டதுமே புகழ்வதற்கேற்ற குரலிது என்று தெரிந்துவிட்டது. அடுத்த வருடம் சிந்து பைரவி பாடல்களுக்கு நேஷனல் அவார்டு கிடைக்க, புகழப்பட்டே விட்டது.
'நான் ஒரு சிந்து..' பாடலில் முதல் சரணத்தில் வயலின் எங்கே முடிகிறது, ப்ளூட் எங்கே ஆரம்பமாகிறது, சித்ரா எங்கே தொடங்குகிறார்... கண்டுபிடிப்பது கஷ்டம்தான். அடுத்த சரணத்தில் வீணை வந்துதான் அந்த வித்தியாசத்தை சற்றே எளிதாக்குகிறது.
மடியுமுன் கேட்க வேண்டிய 1000 பாடல்களில் ஒன்றாக ‘Guardian’ தேர்ந்தெடுத்த இவரின் ‘பம்பாய்’ பாடல்,எந்நாளும் நாம் பாடும். “கண்ணாளனே…”
ஓடை நீர் இலகளினூடே ஒழுகுவது போல சலசலக்கும் அந்த மலையாளப் பாடல். அவார்ட் பெற்ற “மஞ்சள் ப்ரசாதவும் நெற்றியில் சார்த்தி..” (‘Nakhakshathangal’) அடுத்த அவார்ட் வாங்கிய 'இந்து புஷ்பம் சூடிய ராத்திரி..' பிரபல இந்தி இசையமைப்பாளர் ரவி எழுதி இசையமைத்த மலையாளப்பாடலை, மன ஆற்றில் படகாக மிதந்து செல்லும் குரலில் பாடியிருப்பார். இந்தியில் பாடி நேஷனல் அவார்ட் வாங்கிய முதல் தென்னிந்தியப் பாடகியாக, இந்தியில் ‘Vir Sat’ படத்தில் அந்த ‘Payalen..’ பாடல். (இஞ்சி இடுப்பழகி..) How elegant! அத்தோடு நிற்காமல் ஃபிலிம்ஃபேர் அவார்டும் வாங்கிக் கொண்டது அது. ஒவ்வொரு பாடலுமே அழகு என்றாலும் 'ஒவ்வொரு பூக்களுமே..' ஒய்யார அழகு!
இளையராஜா இசையில் ‘பழசிராஜா’வின் ‘குன்றத்து கொன்றைக்கும்…’ மலையாளத்தில் பிலிம்பேர் அவார்ட் வாங்கியது, தமிழிலும் அழகாக பாடி இருப்பார். அதில் இரு வரி: ‘வரவேற்று உருகாதோ குலவையிட்டு கிளிகள் வழி நீள வயலில் தலை சாய்ந்து வெட்கி நிற்கும் ஒரு தமிழ் மகள் போல..’ இனிமையில் தோய்த்தெடுத்த தெளிவு... அல்லது தெளிவில் முக்குளித்த இனிமை என்றும் சொல்லலாம்.
இந்தப் பாட்டை இன்னும் இனிமைப் படுத்துகிறார், அந்தப் பாட்டை அழகாகப் பாடியிருக்கிறார் என்று வரிசையா சொல்ல ஆரம்பித்தால் இடத்துக்கு எங்கே போவது? சரி, இந்த ஒரு பாட்டு தான் கொஞ்சம் நல்ல வரலைன்னு சொல்லலாமா என்றால் நான் தேடிக்கொண்டிருக்கிறேன் நாலு நாளாக அப்படி ஒன்றை…
வெறும் பாட்டல்ல அவர் பாடுவது. ‘குழலூதும் கண்ணனுக்கு கேட்கும் குயில் பாடும் பாட்டு!’ என்று தொடங்கி அந்த குயிலாகவும் கூவும் அழகு குக்கூ.. குக்கூ…
ஆர். டி. பர்மனின் ஜாய்ஃபுல் பாட்டு. ‘ஹே மாமா ஹே மாமா..’ லேசில் யாரால் அத்தனை இலாவகமாக பாட முடியும்? ‘ஹே மாமா’வுக்கு முன் போடும் அந்த ஹா என்ற நொடிப்பு! (பூமழை பொழியுது)
‘கொட்டிக்கிடக்குது செல்வங்கள் பூமியிலே…’ பாடிய அவரது இளைய ராஜா பாடல்களும் கொட்டிக்கிடக்குது ஃபேவரைட் பட்டியலிலே. எண்ட 'குருவாயூரப்பா..' நான் எதைன்னு சொல்றது? வர்ணத்தை வாரியிறைத்த 'நின்னுக்கோரி வர்ணத்தை' சொல்லவா? ‘மீனம்மா மீனம்மா..’ பாடியவரின் குரல் தேனம்மா தேனம்மா என்றிடவா? ‘தூளியிலே ஆடவந்த..’ பாடவந்த இசை வானத்து மின்விளக்கு.. எனவா? லிஸ்ட் என்று வந்தால் ‘கல்யாணத் தேனிலா..’ இல்லாமலா? ‘கிழக்கு வாசலை’த் திறந்தால் ‘வந்ததே ஓ.. குங்குமம் தந்ததே..’ மனதில் வைக்கப் போய் மனதையே கரைத்து விட்ட அந்த இரண்டு நிமிட பாடல்: “வானத்தில் ஆடும் ஓர் நிலவு..’ (‘மனம் விரும்புதே உன்னை’)
‘சிறு கூட்டிலே உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசைன்னா அதை நூறு தடவை கேட்க நமக்கு ஆசை. சிறு குரலில்தான் என்ன ஒரு ஓசை! (பாண்டி நாட்டு தங்கம்) ‘உன் மனசுல பாட்டுதான் இருக்குது..’ பாடியவர் மனசுல பாட்டுதான் எப்பவும் இருக்குது போல! மனோ பாடி முடித்ததும் ‘குடகு மலை காற்றில் ஒரு..’ என்று சோகம் குரலை உடைக்க, இசை பிசகாமல், நல்கும்போது சட்டென்று பல்கும் உருக்கம்! (கரகாட்டக்காரன்)
ரகுமானின் ‘தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியிலே ஏழைப்பட்ட சாதிக்கொரு ஈரம் இருக்கு..' பாடலுக்கு ஈரம் சேர்த்தது அவர் குரல். (கிழக்கு சீமையிலே) ‘கண்ணாளனே..’ என்ன, ‘உயிரே..’ என்ன! ரகுமான் இசையில் அந்தக் குரல் உயரப் பறந்தது. ‘டூயட்’ டில் நம்மையும் ‘அஞ்சலி அஞ்சலி..’ என்று, இல்லை ‘அஞ்சேல் அஞ்சேல்..’ என்று அத்தனை உயரத்துக்கு எடுத்துச்சென்றது. ‘இந்திரா’வின் ‘தொடத்தொட…’ பாடப்பாட படி இறங்கிக் கொண்டே போகும் பல்லாங்குழி இசை.. ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் ‘எங்கே எனது கவிதை..’ சிலிர்க்க வைக்கும் அந்த கடைசி சரணம். ‘மலர்கள் கேட்டேன், மனமே தந்தனை..தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை…’ அமைதியாக அன்னத்தைப் போல நீந்தும். (ஓ காதல் கண்மணி)
‘சாம்ராட் அசோகன்’ படத்தின் தமிழாக்கத்தில் 'தாங்குமா கனாக்களே...' தாங்க முடியாத இனிமையுடன், அனு மாலிக் இசையில். ஆடிட்டோரியமே எழுந்து கைதட்டும் அந்த ‘நிலாவே வா..’ பாடல் (‘கோகுலத்தில் சீதை’) கங்கை அமரன் இசையில் ‘மழையின் துளியில் லயம் இருக்குது…’ பாடினால் ஒரு கலயம் நிறைய லயம் இருக்குது அதில்! ‘தத்தித்தோம்.. ‘ (அழகன்) பியானோ & ப்ளூட்டுடன் சேர்ந்து அழகாய் தத்தித் தத்தி வரும் பாடல்.. கீரவாணி இசையில். கர்நாடக சங்கீதம் பயின்றவர் ஆயிற்றே, கடைசி வரிகளில் விளாசி இருப்பார்.
‘கஸ்தூரி மான் குட்டியாம்…’ (எம்.எஸ்.வி)
‘பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா..’ (கார்த்திக் ராஜா)
‘யாரோ யாருக்குள் இங்கு யாரோ..’ (யுவன்)
‘மெதுவா மெதுவா…’ (சந்திரபோஸ்)
‘ஒரு காதல் தேவதை..’ (சங்கர் கணேஷ்)
‘திருடிய இதயத்தை திருப்பி கொடு…’ (பரணி)
‘ஐ லவ் யூ..’ (சிற்பி)
‘மனசுக்கு வயசு என்ன…’ (வித்யாசாகர்)
‘கண்ணுக்குள் நூறு நிலவா…’ (தேவேந்திரன்)
‘குயிலின் குக்கூ குக்கூ..’ (தாயன்பன்)
‘உள்ளம் உள்ளம்…’ (மனோஜ் க்யான்)
‘நூலு இல்ல ஊசியில்லை..’ (டி ராஜேந்தர்)
‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு…’ (ஹம்சலேகா)
‘பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா..’ (கார்த்திக் ராஜா)
‘யாரோ யாருக்குள் இங்கு யாரோ..’ (யுவன்)
‘மெதுவா மெதுவா…’ (சந்திரபோஸ்)
‘ஒரு காதல் தேவதை..’ (சங்கர் கணேஷ்)
‘திருடிய இதயத்தை திருப்பி கொடு…’ (பரணி)
‘ஐ லவ் யூ..’ (சிற்பி)
‘மனசுக்கு வயசு என்ன…’ (வித்யாசாகர்)
‘கண்ணுக்குள் நூறு நிலவா…’ (தேவேந்திரன்)
‘குயிலின் குக்கூ குக்கூ..’ (தாயன்பன்)
‘உள்ளம் உள்ளம்…’ (மனோஜ் க்யான்)
‘நூலு இல்ல ஊசியில்லை..’ (டி ராஜேந்தர்)
‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு…’ (ஹம்சலேகா)
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!