மறுபடி எடுக்க முடியாத மாபெரும் காட்சி அது. ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுடன் யுத்தக்காட்சி. ஒரே நேரத்தில் நாலு காமிராவால் படமாக்க ஏற்பாடு செய்திருந்தார் தயாரிப்பாள டைரக்டர்.
ஆக் ஷன் சொன்னதும் படை வீரர்கள் மோதினார்கள். குதிரைகள் பாய்ந்தோடின. பீரங்கிகள் முழங்கின. குண்டுகள் வெடித்தன. மேடைகள் வீரர்களுடன் சரிந்தன. எல்லாம் பிரமாதமாக நடந்து முடிந்ததும் பார்த்தால்... என்ன துரதிருஷ்டம்! முதல் காமிராமேன் ஃபிலிம் அறுந்துவிட்டது என்றார். இரண்டாவதில் லென்சை தூசி அடைத்துவிட்டதாம். மேடை ஒன்று விழுந்து கேமரா முறிந்துவிட்டது என்றார் மூன்றாமவர்.. அப்படியே சோர்வாக உட்கார்ந்துவிட்டார். தூரத்தில் ஒரு குன்றின் மேல் வைத்திருந்த நாலாவது கேமரா! நினைவுக்கு வர, லாங் ஷாட்டாவது முழுமையாக கிடைத்ததே! என்று மெகா ஃபோனில் கேட்டார். ‘எல்லாம் ஓகே தானே?’ ‘ஓ எஸ், ரெடி!’ என்றார் அந்த கேமராமேன், ‘நீங்க ஆக் ஷன் சொல்ல வேண்டியதுதான் பாக்கி!’
பிரபல டைரக்டர் சிஸில் பி டிமிலி பற்றி சொல்லப்படும் நிகழ்ச்சி அது.
Cecil B DeMille... இன்று பிறந்த நாள்.
உடனே நினைவுக்கு வருவது Ten Commandments & King of Kings. ரெண்டையும் அவரே Silent Era -வில் முன்பு எடுத்திருக்கிறார் என்பது நியூஸ். ஹாலிவுட்டை உலக சினிமாவின் முக்கிய இடமாக மாற்றியவர் என்றிவரைக் கொண்டாடுகிறார்கள். அதன் முதல் முழு நீளத் திரைப் படத்தை எடுத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ‘The Squaw Man’ என்ற இவரது மௌனப்படம்!
பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு எதுகை இவர். பிரமிக்க வைப்பது இவருக்கு பிஸ்கட் சாப்பிடுவது போல. இன்னும் இருவருடன் இவர் தொடங்கிய ஃபிலிம் கம்பெனிதான் பின்னால் பாரமவுண்ட் ஆனது. நடிகர்களுக்காக செலவழிக்கும் பணத்தை தயாரிப்பில் செலவழிப்பது பெட்டர் என்று நினைப்பவர்.
‘மக்களின் அபிப்பிராயம் எப்போதும் சரியாக இருக்கும்.. மக்களுக்காகத்தான் படம் எடுக்கிறேன், விமர்சகர்களுக்காக அல்ல!’ சொல்லும் இவர் படங்களைப் பார்த்த ஆடியன்ஸைக் கணக்கிட்டால் மொத்தம் நாலு பில்லியனுக்கு மேல் வரும்! சும்மா கதையை மட்டும் கேட்டிட்டுப் போக வரலை மக்கள் என்பது இவர் ஐடியா. படத்தின் மற்ற கலை அம்சங்களில் இவர் படு கவனம்! ஏன், இவர்தான் முதல்முதலாக ஆர்ட் டைரக்டர் என்றொரு ஆளைப் போட்டவர்.
ஒரிஜினல் பி டி பார்னம் சர்க்கஸ் கம்பெனியை வைத்து இவரெடுத்தது ‘The Greatest Show on Earth’. சிறந்த படம், சிறந்த கதை என ரெண்டு ஆஸ்கார் அதற்கு.
‘பத்துக் கட்டளைகள்’… .அதற்காக 18 மைல் அகலத்தில் அவர் நிர்மாணித்த எகிப்திய நகரம்! 120 அடி உயர சுவர்கள்.. 35 அடி உயர சிலைகள்.. அஞ்சு டன் எடையில் ஏராளம் sphinx... 2,000 பேருக்கு மேலான கலைஞர்களும் மற்றவர்களும் தங்குவதற்கு 1000 டெண்ட்கள்! (தைக்கப்பட்ட உடைகளின் நீளத்தை அளந்தால் 15 மைலுக்கு மேலே.) முடிந்ததும் இடித்துப் புதைத்த நகரத்தைப் பற்றி இன்னமும் பேசும் லோக்கல் மக்கள்.
ஏகத்துக்கு சிரத்தை வித்தையில். 75 வயதில் எடுத்த King of Kings படப்பிடிப்பில் ரொம்ப உயரம் ஏரியபோது நேர்ந்த ஹார்ட் அட்டாக்… இரண்டே நாள் ஓய்வில் ஷூட்டிங் திரும்பிவிட்டார். அந்தப் படத்தில் தன் சம்பளம் அனைத்தையும் கொடுத்தது தர்மத்துக்கு. அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் தேர்ந்தெடுத்த பத்துத் திரைக்காவியங்களில் ஒன்று அது.
டேக் எடுக்கும்போது யாராவது பேசினால் உடனே செட்டை விட்டு துரத்தி விடுவார். ஒருமுறை இவர் சீக்கிரம் ஆபீசுக்குத் திரும்பியபோது செகரட்டரி கேட்டாளாம், ‘என்ன, டேக்கின்போது பேசினீங்களா?’
1 comment:
வியப்பான தகவல்கள்.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!