Tuesday, December 1, 2020

சிரிக்காதவர் இல்லை...


இவர் ஜோக்குக்கு சிரிக்காதவர் இல்லை.  ஹாலிவுட்டின் சோ. நகைச்சுவை நடிகர், கதாசிரியர், டைரக்டர், எழுத்தாளர். நாடகாசிரியர்...

Woody Allen. இன்று பிறந்தநாள்!

1977 இல் நாலு ஆஸ்காரை ஒரே படத்திற்காக ('Annie Hall') அள்ளிக் கொண்டார். மிக அதிக முறை ஆஸ்கார் நாமினேஷன் பெற்ற கதாசிரியர்! (16) தலை சிறந்த இயக்குநர்களில் 19-வதாக இவரைத் தேர்ந்தெடுத்தது Entertainment Weekly. 

அலாதியானது அவர் நடிப்பு.. அவர் சீரியஸாகப் பேசிக் கொண்டிருப்பார். நாம் சிரித்துக் கொண்டிருப்போம். அதான் அவர் ஸ்டைல் காமெடி. American Film Institute தேர்ந்தெடுத்த 100 மிகச் சிறந்த காமெடி படங்களில் 5 இவருடையவை.

Casino Royale என்று ஜேம்ஸ் பாண்டை வைத்து காமெடி படம் பண்ணினாங்களே 1967-இல்? அதில் இவரும்... ஜிம்மி பாண்ட் ஆக.

‘Inside Woody Allen' என்று இவரை ஓர் கார்ட்டூன் காரக்டராக வைத்து எட்டு வருடமாக ஒரு காமிக் ஸ்ட்ரிப் வந்தது.

ஜாஸ் பிரியர். கச்சேரியில் வாசிக்கிற அளவுக்கு.

Quotes? Mostly witty!

‘கடவுள் மௌனமாக இருக்கிறார். மனிதனும் அப்படி இருந்தாலும் எத்தனை நன்றாக இருக்கும்!’

‘தங்களைக் கவர்ந்த பெண்ணை காதலிக்க கற்றுக் கொள்கிறார்கள் ஆண்கள். தாங்கள் காதலிக்கும் ஆணைக் கவர்வதற்கு கற்றுக்கொள்கிறார்கள் பெண்கள்.’

‘என் படங்கள் லாபம் சம்பாதிக்காவிட்டால் நான் சரியான விஷயத்தை செய்கிறேன் என்று தெரிந்து கொள்கிறேன்.’

‘அவ்வப்போது நீங்கள் தோற்றுக் கொண்டிராவிட்டால் அது, புதுமையான எதையும் நீங்கள் செய்யவில்லை என்பதன் அடையாளம்.’

‘மேன்மைக்கும் எனக்கும் இடையே இருக்கும் ஒரே விஷயம் நான் தான்!’

‘பிரச்சனை என்னவென்று உங்களுக்கு புரிவது வரையில் உங்களிடம் இருப்பதுதான் நம்பிக்கை!’

‘நான் ஒன்றும் சாவதற்கு பயப்படவில்லை. அந்தச் சமயத்தில் நான் அங்கே இருக்க விரும்பவில்லை, அவ்வளவுதான்!’

‘கடவுளை சிரிக்க வைக்க வேண்டுமா? அவரிடம் உங்கள் திட்டங்களைப் பற்றி சொல்லுங்கள்.’

‘என்னை மாதிரி ஒருவரைச் சேர்த்துக் கொள்ள முடிகிற கிளப்பில் அங்கத்தினராக நான் விரும்பவில்லை.’

‘இல்லாததை விட்டுவிட்டு நம்மிடம் இருப்பதை ரசிப்பதும் விரும்புவதும்தான் சந்தோஷமாக இருக்கும் சாமர்த்தியம்!’

‘எவையெல்லாம் உங்களை நூறு வருடம் வாழ விரும்ப வைக்கிறதோ அவற்றையெல்லாம் விட்டு விட்டால் நூறு வருடம் வாழ்வீர்கள்!’

‘திறமையெல்லாம் அதிர்ஷ்டம்தான். வாழ்க்கையில் முக்கியமான விஷயம் துணி

வு.’‘80% வெற்றி சரியான நேரத்தில் வந்து நிற்பது.’

‘மனம் விரும்புவதை விரும்புகிறது. எந்த லாஜிக்கும் கிடையாது.’

><><


Sunday, November 22, 2020

உண்மையைத் தேடுபவர்களை...


‘எப்படி நீ இருக்கிறாயோ அதற்காக வெறுக்கப்படுவது,

எப்படி நீ இல்லையோ அதற்காக விரும்பப்படுவதைவிட

எவ்வளவோ மேல்.’
… சொன்னவர் Andre Gide.

பிரஞ்சு எழுத்தாளர். 1947 இன் இலக்கிய நோபலைப் பெற்றவர்.
இன்று பிறந்த நாள்!
சுவை, இன்னும் சொன்னவை...
‘உண்மையைத் தேடுபவர்களை நம்பு. உண்மையைக் கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்பவர்களை சந்தேகி.’
‘கரையிலிருந்து கண்ணை எடுக்கும் தைரியமுள்ளவனால்தான் புதுப்புது கடல்களைக் கண்டு பிடிக்க முடியும்.’
‘கலை என்பது கலைஞனுக்கும் கடவுளுக்குமான கூட்டு உருவாக்கம். கலைஞன் எத்தனை குறைவாக செய்கிறானோ அத்தனைக்கு நல்லது.’
‘சந்தோஷத்தைக் கதையாகச் சொல்ல என்ன இருக்கிறது? எது அந்த சந்தோஷத்தை உண்டாக்கியது, எது அதை அழித்தது என்பதைத்தான் சொல்ல முடியும்.’
‘நம்மைச் சிரமப் படுத்தி நம் முயற்சியை அதிகம் கோரிய காரியம்தான் நமக்கு மிக முக்கியமான விஷயங்களை கற்றுத் தர முடியும்.’
‘சந்தோஷம் என்பது அபூர்வமானது, மிகச் சிரமமானது, மிகவும் அழகானது என்பதை அறியுங்கள். இந்த முக்கியமான கண்டுபிடிப்பை நீங்கள் நடத்தியதும் சந்தோஷத்தை ஒரு தார்மீகக் கடமையாக தழுவிக் கொள்ள வேண்டும்.’
‘எல்லாம் முன்பே சொல்லப்பட்டு விட்டது; ஆனால் யாருமே கேட்கவில்லை என்பதால் மறுபடி மறுபடி முன்னுக்குப் போய் தொடங்க வேண்டியிருக்கிறது.’
‘மனிதர்களிடையே நாம் வாழ்வது வரை மனிதத்துவம் பேணுவோம்.’
‘ஆகவே’ என்பது கவிஞர்கள் மறக்க வேண்டிய வார்த்தை.’

‘உங்களுக்குள் இருக்கும் ஒன்றுக்கு உண்மையாக இருங்கள்.’

‘முயற்சிக்காத வரையில் முடியாதெனத் தோன்றும் விஷயங்கள் நிறைய.’

><><

Wednesday, October 28, 2020

நேர்த்தியான சிந்தனையாளர்...

 ‘Prevention is better than cure.’

இப்போது நாம் உணர்ந்து கொண்டாடும் இந்த வாசகத்தை 500 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னவர் அவரே.
Desiderius Erasmus… நெதர்லேண்டில் உதித்த நேர்த்தியான சிந்தனையாளர். இன்று பிறந்த நாள்!
சொன்ன எல்லாமுமே ஃப்ரேம் போட்டு மாட்ட வேண்டியவை. என்றாலும் சில மட்டும் இங்கே...
‘மனித மனம் உண்மையை விட பொய்யினால் மிகவும் கவரப்படுகிற மாதிரி அமைந்துள்ளது.’
‘காலம் மனிதர்களின் துக்கத்தை கரைத்து விடுகிறது.’
‘அதீத துணிச்சல் கொண்டவர்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கும்.’
‘எழுதும் ஆசை எழுத எழுத வளரும்.’
‘நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே ஆக விரும்புவதில் தான் மகிழ்ச்சியின் விதை இருக்கிறது.’
‘மிகச் சிறந்த புத்தகங்கள் முதலில் படித்து விடு. எவ்வளவு விஷயங்கள் தெரியும் உனக்கு என்பது முக்கியமல்ல. அந்த விஷயங்களின் தரமே முக்கியம்.’
‘ஒளியைச் சிந்துங்கள். இருட்டு தானே மறைந்துவிடும்.’
‘சிக்கனம் ஒரு வசீகர வருமானம்.’
‘ஒரு ஆணியை இன்னொரு ஆணியால் பிடுங்குவது போல ஒரு பழக்கத்தை இன்னொரு பழக்கத்தை வைத்து மாற்ற முடியும்.’
‘எனக்குக் கொஞ்சம் பணம் கிடைத்தால் புத்தகங்கள் வாங்குகிறேன். மீதம்இருந்தால் உணவுக்கும் உடைகளுக்கும்.’
‘கழுகுகள் ஈக்களைப் பிடிப்பதில்லை.’
‘உங்கள் நூலகம் உங்கள் சொர்க்கம்.’
‘எடுத்துக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் கடவுள் இருக்கிறார்.’
‘பெண்கள்… அவர்களோடு வாழ்வது கஷ்டம், அவர்கள் இல்லாமல் வாழ்வதும் கஷ்டம்.’
‘எதுவும் தெரியாமல் இருப்பதே ஏற்றவும் சந்தோஷமான வாழ்க்கை.’
‘ஆளுக்கொரு பாத்திரத்தை நடித்துக் கொண்டிருக்கிறோம் திரை கீழே விழும் வரை, என்பதைத் தவிர வாழ்க்கை வேறென்ன?’

><><><

Tuesday, October 27, 2020

மௌனத்தின் மௌனம்...


‘எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காவிடில் எந்த ஏமாற்றமும் இல்லை.’

இந்த சுந்தர மேற்கோளுக்குச் சொந்தக்காரர் Sylvia Plath. அமெரிக்க எழுத்தாளர். இன்று பிறந்த நாள்!
ஆங்கிலக் கவிதை இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் ஒருவர். முதல் கவிதை பிரசுரமான போது வயது எட்டு.
கவிதைத் தொகுதிக்கு புலிட்சர் பரிசு கிடைத்தது, ஆனால் மறைந்து 19 வருடங்களுக்குப் பிறகு. எழுதிய ஒரே நாவல் சற்றே சுயசரிதை கலந்தது... ‘மணி ஜாடி’.
மணந்து கொண்டதும் ஒரு கவிஞரையே. Ted Hughes. சொந்தக்கதை சோகமானது. ஆறு வருடமே மண வாழ்க்கை. கணவரின் பிரிவில் கடுமையான மன அழுத்தம். மறு வருடமே மறைந்தார். 30 வயதே ஆகியிருந்தது.
2003 இல் இவர் கதை திரைப்படமானபோது நடித்தவர் Gwyneth Paltrow.
சொன்ன இன்னும் சில...
‘எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் கடந்த காலத்தைப் பற்றிய வருத்தமும், இந்த நேரத்தைப் பாதிக்காமல் இப்பொழுதில் வளமாக வாழ்வதுதான் ஆகச் சிரமமான விஷயம் உலகில்.’
‘மௌனம் என்னை மன அழுத்தத்தில்ஆழ்த்தியது. அது மௌனத்தின் மௌனம் அல்ல. என்னுடைய மௌனம்.’
‘உங்களுக்கான ஓர் ஆக்கபூர்வமான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும், மற்றவர்கள் உங்களுக்கெனத் தயாராக வைத்திருக்கும் ஒன்றைத் தருமுன்.’
‘படைப்புத் திறனின் மோசமான எதிரி சுய சந்தேகமே.’
‘இளம் பருவத்தின் மின்னொளிக்கும் மன முதிர்வின் பிரகாசத்துக்கும் இடையே நான் பாலம் அமைக்க வேண்டும்.’
‘உங்கள் இதயத்தை முழுவதாக ஒருவருக்கு அளிக்கிறீர்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ளாவிடினும் உங்களால் அதை திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது. அது போனது போனதுதான்.’
‘ஆண் யாரென்றால் எதிர்காலத்தில் போய்த் தைக்கும் ஓர் அம்பு. பெண் யாரென்றால் அந்த அம்பு புறப்படும் இடம்.'
<><><>

Monday, October 26, 2020

ஓவிய விருட்சத்தை உலுக்கியவர்

ஓவிய விருட்சத்தை உலுக்கியவர்களில் ஒருவர்... மாடர்ன் ஆர்டின் தந்தை.

Pablo Picasso… Oct 25 பிறந்த நாள்!
20000 ஓவியங்களுக்கு மேல் வரைந்தவர், கவிதையும் தீட்டுவார் என்பது நி. பே. தெ. தகவல். 300 கவிதைகளுக்கு மேலேயே... ‘ஆசையின் வாலைப் பிடித்துக்கொண்டு’, என்றொரு நாடகமும்!
அப்பா ஓர் அபார ஓவியர். அவர்தான் பயிற்றுவித்தது. அம்மாவிடம் முதன்முதலில் வாயைத்திறந்து கேட்டதே பென்சிலைத் தான்! 13 வயதில் தன்னை மகன் மிஞ்சி விடவே, தான் பிரஷைக் கீழே வைத்து விடலாமா என்று யோசித்தாராம் தந்தை.
‘The Little Yellow Picador.’ ஏழு வயதில் வரைந்த இந்த ஓவியத்தை அவரே வைத்திருந்தார் இறுதிவரை. ஆரம்ப வறுமையில் குளிர் காய்வதற்காக தன் படங்களை எரிக்க நேர்ந்திருக்கிறது. எத்தனை இழப்பு!
கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது இவரிடம். ‘உன் ஓய்வு நேரத்தைப் போல உற்சாகம் அளிக்கக்கூடியதாக ஒரு வேலையைத் தேடிக் கொள்!’ என்பதே அவர் அட்வைஸ். தன் மன அழுத்தத்தை தானே வென்றவர். ‘அன்றாட வாழ்வின் அழுக்குகளை ஆத்மாவிலிருந்து அப்புறப்படுத்துவது தான் கலை... உற்சாகத்தை உருவாக்குவதே கலையின் நோக்கம்,’ என்பார். ‘படைப்பின் முக்கிய எதிரி அது சுவாரசியத்தை எதிர்பார்ப்பது.’
படைப்புத்திறனை வளர்த்துக் கொண்டே போனார் புதுப் புது ஸ்டைல் என்று. ஓவியக் கலையை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றார். Braque -ம் இவருமாகப் பிரபலப்படுத்தியதுதான் Cubism.
‘குழந்தையாக இருக்கும்போது நான் பெரியவர்களை மாதிரி வரைவேன். ஆனால் ஒரு குழந்தை மாதிரி வரையக் கற்றுக் கொள்ள எனக்கு வாழ்நாள் முழுவதும் ஆகிவிட்டிருக்கிறது.’
‘மற்றவர்களெல்லாம் என்ன இருக்கிறதோ அதைக் கண்டு கொண்டு ஏன் என்று கேட்டவர்கள். என்னை இருந்திருக்கக்கூடுமோ அதைக் கண்டு கொண்டு ஏன் கூடாது என்று கேட்டவன் நான்.’
இன்னும் சொன்னது...
‘கலை என்பது உண்மையை நாம் உணர வைக்கிற ஒரு பொய்.’
‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு கலைஞன். சிரமம் என்னவெனில் வளர்ந்த பிறகும் கலைஞனாக நீடிப்பதே.’
‘இசையும் கலையும் வாழ்க்கையை இன்னும் வசீகரமாக்கும் வெறும் அலங்காரங்கள் அல்ல; அவை இல்லாமல் வாழ முடியாத அளவு வாழ்வின் ஆதார தேவைகள்.’
ஒத்திப் போடுவதுபோடுவது இவருக்குப் பிடிக்காத விஷயம். ‘இப்படியே விட்டுவிட்டு இறக்கத் தயாராக இருக்கிற விஷயங்களை மட்டுமே ஒத்தி போடுங்கள்!’ என்பார்.
பிக்காஸோவின் வீட்டுக்கு விஜயம் செய்த ஓர் பிரமுகர் சுற்றிப் பார்த்துவிட்டுக் கேட்டார், “ஆமாம், சுவரில் உங்க ஓவியம் ஒன்றையும் காணோமே, உங்களுக்குப் பிடிக்காதா?”
“ரொம்பப் பிடிக்கும்,” என்றார் பிக்காஸோ, “ஆனா அதெல்லாம் ரொம்பக் காஸ்ட்லியாச்சே?”
><><

Wednesday, September 9, 2020

பன்னீரில் நனைந்த பூக்கள்…

1965.. அந்த வருட ‘Filmfare பெஸ்ட் மியூசிக்’ யாருக்கு? ‘Sangam’தான், சந்தேகமென்ன என்பதே பல ரசிகர்களின் தீர்மானம். கேட்கிற அத்தனை செவிகளுக்கும் ஃபேவரிட் ஆக இருந்த சங்கர் ஜெய்கிஷன் இசையில் 'Yeh Mera Prem Patra Padkar..' உள்பட அத்தனை பாடலும் தென்றல். அதெப்படி? மதன்மோகனுக்குத்தான், என்றவர்களின் வாதம்: ‘Woh Kaun Thi?’யின் “Naina Barse..” -வை யாரால் மறக்க முடியும்? ஆனால் பரிசைப் பெற்றுக் கொண்டு போன படம் ‘Dosti’. யார்? கல்யாண்ஜி அனந்த்ஜியிடம் 10 வருடம் உதவியாக இருந்து அப்போதுதான் தனியே மலரஆரம்பித்திருந்த லக்ஷ்மிகாந்த்- பியாரிலால்!
பியாரிலால்.. Sept.3 பிறந்த நாள்!
லதா மங்கேஷ்கரின் மியூசிக் அகாடமியில் இவங்க இருவரும் பணிபுரிய, ஏற்பட்ட நட்பு. இசை ரசிகர்களுக்கு லட்டு! 40 வருஷம். 600 படங்கள். 7 Filmfare அவார்ட். 18 நாமினேஷன்.
அவர் மாண்டலின்.இவர் வயலின். ஐம்பது அறுபதுகளில் பிரபல இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு வாசித்திருக்கிறார்கள். Music arrangers ஆக இருந்திருக்கிறார்கள் பலருக்கு. ஒரே வருத்தம் O. P. நய்யாருடன் பணி புரியாததுதான்.
முதல் படம் திரைக்கு வராததால் இசை நம் காதுக்கு வராமலேயே போய்விட்டது. அடுத்து ‘Parasmani’ வெளியாகி “Wo Jab yaad Aaye..” “Hansthaa Hua…” என்று பாட, யார் இந்த இசை இரட்டையர் என்று இரட்டைப் புருவங்களையும் உயர்த்தினோம்.
“காலையும் மாலையும் உன்னைத் தேடுகிறேன்..” பாட்டைக் கேட்டதிலிருந்தே (“Chahunga Main Tujhe Shaam Savere..” - Dosti) இசை ரசிகர்கள் இவங்க படங்களைத் தேடத் தொடங்கிட்டாங்க!
ஜெய்கிஷன் மறைந்ததும் திகைத்து நின்ற ராஜ் கபூருக்கு இசைக் கரம் கொடுத்தவர்கள் இவர்கள். ‘Bobby’ பிய்த்துக்கொண்டு ஓடிற்று இசைத்துக் கொண்டு! ஆரம்பத்தில் எது இவர்கள் பாடல், எது சங்கர் ஜெய்கிஷன் பாடல் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பியது உண்டு.
1950, 60களின் ஜாம்பவான்களிடமிருந்து இசையை மேலெடுத்துச் செல்லும் பணியைத் தங்கள் தோள்களுக்கு மாற்றிக் கொண்டவர்கள்.
சில பாடல்களைக் குறிப்பிடலாம் என்றால் பல பாடல்கள் கோபித்துக் கொண்டுவிடும்! என்றாலும்..
“Hawa Hawai…” Mr India -வில் ஸ்ரீதேவி கலக்கும் பாடலைச் சொல்லவா, ‘Do Raaste’ -வில் மும்தாஜ் சிணுங்குவாரே, “Bindiya Chamkeki..” அந்த அழகைச் சொல்லவா?
கப்பல் அதிர அமிதாப் ஆடும், அரங்கம் அதிர ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் அந்த ‘ஹம்’ பாடலை ஹம் பண்ணாத வாய் இல்லை! “Jumma Chumma De De..”
‘Shagird’ படத்தில் I.S.ஜோஹருக்கு ஜாய் முகர்ஜி கற்றுக் கொடுப்பாரே, இந்தக் காலப் பெண்களை எப்படிக் கவர்வது என்று? அதைக் கேட்டு ஸாய்ராவிடம் அவர் பாடுவாரே? ஸாய்ரா இவரைத் தொட்டதும் பாட்டு ரிகார்ட் ஸ்ட்ரக் ஆகும்! அந்த அட்டகாசமான காமெடி பாட்டு “Bade Miya Diwane…”தவிர சாய்ரா பாடும் அந்த “Dil Vil Pyar Vyar..”
‘Milan’ படத்தில் கிராமத்தான் சுனில்தத், பட்டணத்து நூதனுக்கு பாட்டுச் சொல்லிக் கொடுக்கும்போது (“Saavan Ki Mahinaa…”) அவர் தெளிவாக உச்சரிக்க, இவர், “ஷோரு நஹீன், சோரு! சோரு!” என்று திருத்தும் அழகு அந்த விருது பாடலுக்கு மெருகு சேர்த்தது. (தமிழில் சிவாஜி “காற்று இல்லே காத்து காத்து” என்று திருத்துவாரே சாவித்திரியை, அது! - ‘பிராப்தம்’)
‘Ek Tujhe Ke Liye’... S.P.B -க்கு இவர்கள் அளித்த அவார்ட் பாடல் “Tere Mere Beech Mein…
“பன்னீரில் நனைந்த பூக்கள்…” அந்த ஆறு நிமிடப் பாட்டு நினைவுக்கு வருகிறதா? ‘உயிரே உனக்காக.’ இவர்கள் இசையமைத்த தமிழ் படம். “தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்…” என்று ஜானகி பாடும் நேரம் காதில் தேனூறும்.
“My name is Anthony Gonsalvaz…” என்று பாடுவார் அமிதாப் ‘Amar Akbar Anthony’யில். அதுதான் இவருக்கு இசை கற்றுக் கொடுத்த குருவின் பெயர்.
லதா அதிக பாடல்கள் பாடியது இவர்களுக்குத்தான். 712. ரஃபியும் அதே. 379. ஆனந்த் பக்ஷிதான் ஆஸ்தான பாடலாசிரியர்.
R. D. பர்மன் முதலிரு படத்துக்கு இவர்கள்தாம் music arrangers. இவர்கள் ‘Dosti’ படத்துக்கு R.D.பர்மன் தான் இரு பாடல்களுக்கு மௌத் ஆர்கன் வாசித்தவர். அத்தனை ஒற்றுமை அவர்களுக்குள்.
“Ek Pyar Ka Nahma Hai…” (Shor) பாடலை பியாரிலால் வயலினில் இசைத்திருக்கும் நேர்த்தி! (லிங்க் கீழே)
நாள் பூராவும் இசை பற்றிப் பேச நான் தயார் என்று சொல்லும் இவர் கீ போர்டு வாசிப்பவர்களுக்கு கொடுக்கும் கீ அட்வைஸ்: எந்த வாத்தியத்தை அதில் வாசிக்கிறோமோ அதற்கேற்ப கீ போர்டை கையாளவேண்டும்.

Tuesday, September 8, 2020

வெண் திரை பால்வெளியின் வான்மதி..



அவர் ஒரு பெண் எழுத்தாளர். தெலுங்கில் அவர் எழுதிய ‘அத்தகாரி கதாலு’ என்ற சிறுகதைத்தொகுதி சாகித்ய அகாடமி பரிசு பெற்றது. அதன் சில கதைகள் குமுதத்தில் ‘அத்தகாரு’ என்று தமிழில் வெளியானது என்றால் எத்தனை பேருக்கு தெரியும் அவரை என்று தெரியாது. ஆனால் பானுமதி என்றால் அத்தனை பேருக்கும் நினைவு வந்துவிடும் அவரை.
ஆம், இந்தப் பக்கம் தலை சிறந்த நடிகைகளில் ஒருவர். அந்தப் பக்கம் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.
பி. பானுமதி. வெண் திரை பால்வெளியின் வான்மதி.
Sept.7. பிறந்தநாள்! (1924-2005)
‘வான் மீதிலே… ‘ என்று ராமராவ் முதல் வரியைப் பாடியதும் கிளையில் கையூன்றி நிற்கும் பானுமதி முகத்தைத் தாழ்த்தி உடலைப் பின்னிழுத்தபடியே கண்களை உயர்த்தி ஒரு பார்வையை வீசுவார் பாருங்கள், ஒரு நாயகி தன் களையை வெளிப்படுத்தும் கலையை அந்த ஐந்து விநாடி ஷாட்டில் கற்றுக் கொள்ளலாம்.
பாத்திரங்களைப் படைக்கும் எழுத்தாளர் என்பதாலோ என்னவோ பாத்திரங்களை புரிந்துகொண்டு காத்திரமான நடிப்பை வழங்கி விடுவார்.
‘அறிவாளி’ படத்தை ஷேக்ஸ்பியர் பார்த்தால், ஆஹா, இந்த நடிகை மட்டும் நடிப்பதாக இருந்தால் எத்தனை ‘Taming of the Shrew’ களை எழுதியிருக்கலாம்! என்பார்.
ஹாஸ்டல் மாடி பால்கனியிலிருந்து, கீழே சிவாஜி பாடும் ‘வெண்ணிலா ஜோதியே வீசுதே..’வுக்கு சந்திராவாக வெட்கப்பட்டு விட்டு, அந்தப் பக்க பால்கனிக்கு ஓடி, கீழே டி. ஆர். ராமச்சந்திரன் பாடும் ‘திண்டாடுதே என் கண்களே..’வுக்கு மாடர்ன் அபிநயம் காட்டி, ஒரே ஆள் இரண்டு நபராக அசத்துவார் பாருங்கள், தியேட்டர் அதிரும். ஆம், The Fabulous Senorita வில் Estelita வாக நடித்த Estelita வை விட Fabulous ஆக நடித்திருந்தார் ‘மணமகன் தேவை’யில்.
பீறிட்டுக்கொண்டு கிளம்பும் நடிப்பு அவருடையது. நம் நாட்டின் இன்க்ரிட் பெர்க்மன். ‘Gaslight’ (1944) இல் அவர் செய்ததை அனாயாசமாக ரங்கோன் ராதாவில்… கடைசி சீனில் அவரைப்போல் ஒரு வீல் அலறல் விட்டதும், படத்தில் அது கட்டாகி விட்டதும் ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம்.
அப்புறம் அந்த நடிப்பின் எல்லை.. ‘அன்னை.’ “உன் பிள்ளையை அடிக்க நான் யாரு?” என்று சௌகார் விலகும்போது, அவன் தன் பிள்ளை இல்லை என்று தான் உணருவதையும் அதை நமக்கு உணர்த்துவதையும் ஒரே பார்வையில் வெளிப்படுத்துவார். “என் புள்ளே இல்லே, நான் பெரியம்மா, தப்பு எம்மேலதான், மன்னிச்சுக்க, என் புள்ளே இல்லே, நான் பெரியம்மா, இது உம்பிள்ளே, நீ அடி, கொல்லு, என்ன வேணாலும் பண்ணிக்கோம்மா, உன் புள்ளையாச்சு, நீயாச்சு, நான் பெரியவ, நான் பெரியவ..” என்று நகரும்போது ஒரு நடிகை வசனம் பேசுவதையா பார்க்கிறோம்? ஒரு வளர்ப்புத் தாயின் மனத் தளர்வும் வேதனையும் மட்டுமே அல்லவா தெரிகிறது?
ரோல் எதுவானாலும் ஒரு கை பார்த்து விடுவார். ‘Let me try…’ என்று சங்கர் கணேஷ் இசையில் அந்த ஆங்கிலப் பாடலையும்!(‘பத்து மாத பந்தம்’). ‘Meet my son…’ இன்னொரு அழகுப் பாடல் ‘எடுப்பார் கைப்பிள்ளை’யில்.
‘லட்டு லட்டு மிட்டாய் வேண்டுமா..’ நாலு மொழிப் பாடலிலிருந்து ‘அன்னை என்பவள் நீதானா…’ வரை லட்டு லட்டாக பாடல்கள்.
அஷ்டாவதானி என்றால் அதான் எனக்கு தெரியுமே என்பீர்கள். என்ன அந்த எட்டு என்றால்? எழுத்தாளர், டைரக்டர், பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எடிட்டர், ஸ்டூடியோ அதிபர், நடிகை. (முதல் பெண் சூபர் ஸ்டார்.)
இவர் நடிப்பில் ஒரு இயல்பான குறும்பு கலந்திருக்கும். ‘ஏரு பூட்டி ஜோரு காட்டும் …’ ('ம.பெ.மகராசி') பாடலில் அந்தக் குறும்பை நாணத்துடன் சரிவிகிதத்தில் வழங்கியிருப்பார்.
‘கள்வனின் காதலி’யில் கல்கியின் கல்யாணியை அப்படியே கண்முன் கொண்டு வந்ததை நாலு வரி சொல்லலாமென்றால் ‘அம்பிகாபதி, ‘அலிபாபா’, ‘மதுரை வீரன்', ‘கானல் நீர்' எல்லாமாக சேர்ந்து நாற்பது வரி ஆகிவிடும்.

Sunday, August 30, 2020

ரொம்பச் சின்னது உலகம்...

அந்தக் கவிஞரை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வதாகச் சொன்னார்கள் பிரபல இசைஅமைப்பாளர்களான ஷங்கர் ஜெய்கிஷன். மறந்துவிட்டார்கள்போல. ஒரு நாள் அவர்களுக்கு ஒரு லெட்டர் வந்தது அவரிடமிருந்து. நாலு வரி.
‘ரொம்பச் சின்னது உலகம். பாதைகளோ மனம் அறியும். என்றோ ஒரு நாள், எங்கோ ஓரிடம் உங்களை நான் சந்திப்பேன். எப்படி இருக்கிறீர்கள் என்பேன்.’
அவ்வளவுதான், அந்த வரிகளையே தங்கள் ‘Rangoli’ படத்தில் ஒரு பாடலாக்கியதோடு (Chotisi Yeh Duniya..) மீண்டும் அவரை தங்களுடன் இணைத்துக் கொண்டார்கள்.
அந்தக் கவிஞர்... ஷைலேந்திரா! வார்த்தைகளில் மகேந்திர ஜாலம் செய்தவர்.
ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவரை ராஜ் கபூர் தன்னுடைய ‘Aag' படத்திற்கு பாடல் எழுதக் கேட்டபோது மரியாதையாக மறுத்துவிட்டார். சினிமாவுக்கு பாடல் எழுத அவர் விரும்பியதில்லை. ஆனால் மகன் பிறந்த சமயத்தில் பணம் தேவைப்பட அவரே ராஜ் கபூரைத் தேடிவந்தார். ரெண்டே பாடல்தான் பாக்கி இருந்தது 'Barsaat' படத்தில். 500 ரூபாய் பெற்றுக்கொண்டு அவர் எழுதிய அந்த ரெண்டு பாடல்களும் (“Patli Kamar Hai..” “Barsaat Mein..”) மூவரையுமே (ஆம், ஷங்கர் ஜெய்கிஷனுக்கும் அது டெப்யூட் படம்) வியந்து பார்க்க வைத்தது. கபூருக்கு ஆஸ்தான கவிஞர் கிடைத்தார். நமக்கு ‘ஆவாரா’(விலிருந்து வரிசையாக) பாடல்கள் கிடைத்தன.
ஷங்கர் ஜெய்கிஷன் என்றால் ஷைலேந்திரா அல்லது ஹஸ்ரத் பாடல்கள்தாம் என்றாகியது. அதில் கிடைத்த அளவிலா முத்துக்கள்..
“Ramaiya Vathavaiya…” “Mud Mud Ki Na Dekh…” (Shree 420)
“Main Gavun Tum So Jaavon…’ (Bramhachari)
“Dost Dost Na Raha…” (Sangam)
“Jis Desh Mein Ganga Bahti Hai…” (Jis Desh Mein..)
எஸ் டி பர்மனும் இவரை நன்றாக பயன் படுத்திக் கொண்டார் ‘Kala Bazaar’ -இல் வரும் “Koya Koya Chand…” ஒன்று போதுமே சொல்ல? சலில் சௌத்ரிக்கு இவர் எழுதிய ‘Madhu Mathi’ பாடல்கள்!
நிறைய கலைஞர்களைப்போல சொந்தப் படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டார். ஆனால் நேஷனல் அவார்ட் அவரது 'Teesri Kasam' படத்துக்கு. விரைவிலேயே மறைவு. மறக்க முடியாத அந்த “Jeena Yahan.. Marna Yahan…”! பல்லவியோடு நின்று போனதை மகன் Shaily Shailendra எழுதி முடித்தார்.
வாழ்ந்த மதுராவில் ஒரு வீதி இவர் பெயரை சூடிக்கொண்டது.
இப்ப 2016 இல் வந்த Ryan Reynolds ஆங்கிலப் படம்… ‘Deadpool’. ஆரம்பக் காட்சியிலும் கடைசியிலும் ஒலிக்கிறது இவரது “Mera Jhutha Hai Japani..” பாடல்.

Monday, August 24, 2020

அடுத்த வீட்டு அழகி...


அடுத்த வீட்டு அழகி மீது டி ஆர் ராமச்சந்திரனுக்கு ஒரு கண். அவருக்கோ இசை மீது ஒரு காது. பாடவே வராத ராமச்சந்திரன் சாளரத்தில் நின்று வாயசைக்க, தங்கவேலு உள்ளிருந்து பாட, கிடைக்கிறது காதல். இசை கற்றுத் தரும் பாட்டு வாத்தியாருக்கும் காதல் அவர்மீது. போட்டிப் பாடலிலும் ஹீரோ இரவல் குரலில் வாகை சூட, வளர்கிறது காதல். ஹீரோயின் பிறந்த நாள் அன்று ஹீரோ வழக்கம்போல் வாயசைக்க, குரலைக் கேட்ட அழகியின் தோழி சரோஜா, ஆ, இது என் காதலர் குரலாச்சேன்னு அலற, குரலும் குட்டும் உடைகிறது.
முதல் கார்ட்டூன் டைட்டிலிலிருந்து கடைசி ஷாட் வரை வயி.குலு. சிரிக்க வைத்த ‘அடுத்த வீட்டுப்பெண்' படத்தைத் தந்தவர்தான் படத்தின் நாயகியும்.
அஞ்சலி தேவி… இன்று பிறந்த நாள்!
பால்கோவாவுக்கும் பட்டுப்புடவைக்கும் பேர்போன பெத்தாபுரத்தில் பிறந்த அஞ்சம்மா... டைரக்டர் புல்லையாவின் படம்தான் அழைத்து வந்தது அஞ்சலிதேவியாக.
அழைக்காதே… என்று இவர் தவிப்புடன் அழகாக ஆடுவாரே… கேட்டு மகிழ்ச்சியில் திளைக்காத காதில்லை.
இங்கே ஜெமினி, சிவாஜி, எம்.ஜி.ஆருடன்... அங்கே என்.டி.ஆர், ஏ.என்.ஆருடன் என்று 50களில் இரு மொழியில் பெரு வழி நடந்தவர்.
ரசிக்க வைத்து விடுவார் ஏற்ற பாத்திரங்களை. ‘மர்மயோகி'யில் வில்லியாக என்றால் ‘சக்கரவர்த்தி திருமகளி’ல் நாயகியாக… பி யூ சின்னப்பாவிலிருந்து பிரம்மானந்தம் வரை சக நடிகையாக விதவிதமான கதா பாத்திரங்களில் நடித்துவிட்டார்.
வைஜயந்தி மாலாவுடன் காண்ட்ராஸ்ட் ரோலில் நடித்த ‘பெண்'... ‘சிட்டுக்குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா…’ என்று கொஞ்சிய ‘டவுன் பஸ்' … சீதாவாக வந்து கண்ணீர் சிந்திய சிந்த வைத்த ‘லவ குசா’... ஜ.ரா. சுந்தரேசனின் ‘கலீர் கலீர்'படமாகியபோது அதில் இவர்தான் நாயகி. (‘ஆடவந்த தெய்வம்')
சிவாஜி, நாகேஸ்வரா ராவ் இருவருடனும் ஒரு படத்தில் நடித்த ஒரே பிரபல நடிகை இவராகத்தான் இருக்கும். படம் :பரதேசி (தெலுங்கு)
பெண்களின் இதயத்தில் இவர் பெர்மனண்ட் டெண்ட் அமைத்தது, ஆ, சொல்லிட்டீங்களே, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில்தான். அந்த இமேஜ் மங்காமல் பார்த்துக் கொண்டார், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்' படம் கொடுத்து. ‘அன்பில் மலர்ந்த நல் ரோஜா…’ என்று தாலாட்டு பாடும்போது உருகாத நெஞ்சமுண்டோ?
மண வாழ்வில் இசைந்தது இசையமைப்பாளர் ஆதி நாராயண ராவுடன். அவர் தயாரித்த 27 படங்களில் முக்கியானது 'அனார்கலி'.
உருக்கம் ஒரு கண் என்றால் ஹாஸ்யம் இன்னொன்று. ‘கண்ணாலே பேசி பேசி..’ (அ.வீ.பெண்) பாடலில் அவர் ரீயாக் ஷனைப் பாருங்கள். குறும்பு முகத்தில் கொப்பளிக்கும்.

Wednesday, August 19, 2020

பரிசாக வந்த நாய்க்குட்டி...


ஆனிவர்ஸரியும் அதுவுமாக மனைவி கேதிக்கு கிஃப்ட் வாங்க அவன் போனபோது கூடவே உள் நுழைந்த நாய் ஒன்று கண்ணாடியை உடைத்து விட, கையில் இருந்ததை டேமேஜுக்கு அழுதுவிட்டு வெறுங்கையோடு வீடு திரும்புகிறான் டேனி. தொடர்கிறது நாய். வாயில் இவன் பரிசில் செருக எழுதிய சீட்டு. பார்த்துவிட்டு ஆஹா, அழகிய பரிசு! என்று அவள் தழுவிக் கொள்கிறாள் நாயை! பிறகு நாயகனையும். மாமியார் முன் கேவலப்பட வேண்டாமேன்னு மூடிக் கொள்கிறான் வாயை.
நாயோ ஒரு கடத்தல் கூட்டத்தினுடையது. பண்ட மாற்று செய்ய பயன் படுத்துவது. அதைக் காணாமல் அவங்க தலையைப் பிய்த்துக் கொள்கிறாய்ங்க, அதாவது ஒருத்தர் தலையை அடுத்தவன்! அவர்கள் ஒவ்வொருவராகப் போட்ட, நாய் காணோம் விளம்பரத்தை ஆவலோடு பார்த்து (பின்னே? பெட் ரூமுக்கே வந்துவிட்ட நாயை அவளுக்குத் தெரியாமல் அப்புறப்படுத்த வேறு வழி?) அங்கே போனால் அவன்களுக்குள் வரிசையாய் கொலை விழ, அங்கே போனதால் போலீஸ் இவனைத் தூக்க .. வீட்டில் அமளி.
நாயை வாக் அழைத்துப் போகிறாள் கேதி. வழக்கப்படி வந்த கடத்தல்காரன் ஒருவன் அவள் பையைப் பிடுங்கிவிட்டு பணத்தைக் கொடுத்துவிட்டுப் போகிறான். அவன், பையைப் பிரித்தால் எலும்புத் துண்டுகள். இவள் பையைப் பிரித்து மகிழ்ந்தால், அத்தனையும் கள்ள நோட்டு.
தம்பதி அதை ஸ்டேஷனில் ஒப்படைக்கையில், பெண்டாட்டி முன்னாடி உண்மையை, அவளுக்கு பரிசு வாங்காத உண்மையைச் சொல்லவேண்டி வருகிறது. அடுத்து, வீட்டுக்கே மீதி கோஷ்டி தேடிவர போலீஸ் சுற்றி வளைக்கிறது. அவளுக்கு நாயும், அவனுக்கு அதை பெட் ரூமுக்கு வெளியே தள்ளும் தைரியமும் கிடைத்து விடுகிறது!
1951 -இல் வந்த ‘Behave Yourself’ படத்தில் கேதியாக நடித்தவர் Shelley Winters. Aug.18. பிறந்த நாள்.
நிறைய பேர் மறைவதாலோ என்னவோ படம் முடியும்போது நடிகர்கள் பேரை in the order of disappearance என்று தமாஷாக போடுவார்கள்.
Shelley Winters... 50 களின் கவர்ச்சிக் கன்னியரில் ஒருவர்.. அழகாய் நடிக்கும் டிப்ஸை மர்லின் மன்றோவுக்கே ஒரு முறை வழங்கியவர்.
‘A Place in the Sun’ -இல் எலிசபெத் டெய்லருடன் நடித்தபோது அவருக்கல்ல, இவருக்கு ஆஸ்கார் நாமினேஷன் வந்தது. அவார்டை பின்னால் ரெண்டு முறை வாங்கிவிட்டார். (‘The Diary of Anne Frank’, ‘A Patch of Blue.’)
‘எல்லா கல்யாணங்களுமே சந்தோஷ சமாசாரம்தான் ஹாலிவுட்டில். அப்புறம் சேர்ந்து வாழ நினைக்கிறதுதான் எல்லா பிரசினையும் கொண்டுவருது,’ என்பவர் சொன்ன ஒன்று, “ஆஸ்காரை வாங்கிக் கொண்டு நான் வீட்டுக்குள் நுழைந்தபோது என் கணவர் அதைப் பார்த்த ஒரே பார்வையில் எனக்குத் தெரிஞ்சு போச்சு என் மணவாழ்க்கை முடிஞ்சதுன்னு.”
Best Quote? ‘நாடகத்திலதான் அந்த நல்ல சப்தத்தை நீங்க கேட்க முடியும். அதை படத்திலேயோ டி.வி.யிலேயோ கேட்கவே முடியாது. அது ஒரு அற்புதமான நிசப்தம். அர்த்தம் என்னன்னா நீங்க அவங்க இதயத்தில அறைஞ்சிட்டீங்க.’

Wednesday, August 12, 2020

பிரமிப்பு.. பிரமிப்பு..

மறுபடி எடுக்க முடியாத மாபெரும் காட்சி அது. ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுடன் யுத்தக்காட்சி. ஒரே நேரத்தில் நாலு காமிராவால் படமாக்க ஏற்பாடு செய்திருந்தார் தயாரிப்பாள டைரக்டர்.
ஆக் ஷன் சொன்னதும் படை வீரர்கள் மோதினார்கள். குதிரைகள் பாய்ந்தோடின. பீரங்கிகள் முழங்கின. குண்டுகள் வெடித்தன. மேடைகள் வீரர்களுடன் சரிந்தன. எல்லாம் பிரமாதமாக நடந்து முடிந்ததும் பார்த்தால்... என்ன துரதிருஷ்டம்! முதல் காமிராமேன் ஃபிலிம் அறுந்துவிட்டது என்றார். இரண்டாவதில் லென்சை தூசி அடைத்துவிட்டதாம். மேடை ஒன்று விழுந்து கேமரா முறிந்துவிட்டது என்றார் மூன்றாமவர்.. அப்படியே சோர்வாக உட்கார்ந்துவிட்டார். தூரத்தில் ஒரு குன்றின் மேல் வைத்திருந்த நாலாவது கேமரா! நினைவுக்கு வர, லாங் ஷாட்டாவது முழுமையாக கிடைத்ததே! என்று மெகா ஃபோனில் கேட்டார். ‘எல்லாம் ஓகே தானே?’ ‘ஓ எஸ், ரெடி!’ என்றார் அந்த கேமராமேன், ‘நீங்க ஆக் ஷன் சொல்ல வேண்டியதுதான் பாக்கி!’ 
பிரபல டைரக்டர் சிஸில் பி டிமிலி பற்றி சொல்லப்படும் நிகழ்ச்சி அது. 
Cecil B DeMille... இன்று பிறந்த நாள்.
உடனே நினைவுக்கு வருவது Ten Commandments & King of Kings. ரெண்டையும் அவரே Silent Era -வில் முன்பு எடுத்திருக்கிறார் என்பது நியூஸ்.  ஹாலிவுட்டை உலக சினிமாவின் முக்கிய இடமாக மாற்றியவர் என்றிவரைக் கொண்டாடுகிறார்கள். அதன் முதல் முழு நீளத் திரைப் படத்தை எடுத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ‘The Squaw Man’ என்ற இவரது மௌனப்படம்! 
பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு எதுகை இவர். பிரமிக்க வைப்பது இவருக்கு பிஸ்கட் சாப்பிடுவது போல. இன்னும் இருவருடன் இவர் தொடங்கிய ஃபிலிம் கம்பெனிதான் பின்னால் பாரமவுண்ட் ஆனது. நடிகர்களுக்காக செலவழிக்கும் பணத்தை தயாரிப்பில் செலவழிப்பது பெட்டர் என்று நினைப்பவர்.
மக்களின் அபிப்பிராயம் எப்போதும் சரியாக இருக்கும்.. மக்களுக்காகத்தான் படம் எடுக்கிறேன், விமர்சகர்களுக்காக அல்ல!’ சொல்லும் இவர் படங்களைப் பார்த்த ஆடியன்ஸைக் கணக்கிட்டால் மொத்தம் நாலு பில்லியனுக்கு மேல் வரும்! சும்மா கதையை மட்டும் கேட்டிட்டுப் போக வரலை மக்கள் என்பது இவர் ஐடியா. படத்தின் மற்ற கலை அம்சங்களில் இவர் படு கவனம்! ஏன், இவர்தான் முதல்முதலாக ஆர்ட் டைரக்டர் என்றொரு ஆளைப் போட்டவர்.
ஒரிஜினல் பி டி பார்னம் சர்க்கஸ் கம்பெனியை வைத்து இவரெடுத்தது ‘The Greatest Show on Earth’.  சிறந்த படம், சிறந்த கதை என ரெண்டு ஆஸ்கார் அதற்கு.
‘பத்துக் கட்டளைகள்’… .அதற்காக 18 மைல் அகலத்தில் அவர் நிர்மாணித்த எகிப்திய நகரம்! 120 அடி உயர சுவர்கள்..  35 அடி உயர சிலைகள்.. அஞ்சு டன்  எடையில் ஏராளம் sphinx... 2,000 பேருக்கு மேலான கலைஞர்களும் மற்றவர்களும் தங்குவதற்கு 1000 டெண்ட்கள்! (தைக்கப்பட்ட உடைகளின் நீளத்தை அளந்தால் 15 மைலுக்கு மேலே.) முடிந்ததும் இடித்துப் புதைத்த நகரத்தைப் பற்றி இன்னமும் பேசும் லோக்கல் மக்கள்.
ஏகத்துக்கு சிரத்தை வித்தையில்.  75 வயதில்  எடுத்த King of Kings படப்பிடிப்பில் ரொம்ப உயரம் ஏரியபோது நேர்ந்த ஹார்ட் அட்டாக்…  இரண்டே நாள் ஓய்வில் ஷூட்டிங் திரும்பிவிட்டார். அந்தப் படத்தில் தன் சம்பளம் அனைத்தையும் கொடுத்தது தர்மத்துக்கு. அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் தேர்ந்தெடுத்த பத்துத் திரைக்காவியங்களில் ஒன்று அது.
டேக் எடுக்கும்போது யாராவது பேசினால் உடனே செட்டை விட்டு துரத்தி விடுவார்.  ஒருமுறை இவர் சீக்கிரம் ஆபீசுக்குத் திரும்பியபோது செகரட்டரி கேட்டாளாம், ‘என்ன, டேக்கின்போது பேசினீங்களா?’

Tuesday, August 11, 2020

கையா A. I.யா?

சிறுவர்களுக்கு கதை எழுதுவது சாமானிய விஷயமல்ல. சாமர்த்தியமான பிளாட் இருக்கணும். சிறுவர்களுக்கே உரித்தான கோட்டில் பயணிக்க வேண்டும். வளவள வர்ணனைக்கு நோ.
சமீப அரசியை அறிவோம். சென்ற நூற்றாண்டில் ஆண்டவர் ஒருவர் உண்டு. கையா, A. I.யா என்று சந்தேகப்படும் அளவுக்கு எழுதிக் குவித்தவர் எனிட் ப்ளைடன்.
Enid Blyton... இன்று பிறந்த நாள்.
Famous Five ஃபேமஸ் என்றால் Secret Seven சிறுவர் ஹெவன். ரெண்டையும் நோண்டவில்லை என்றால் நீங்கள் சிறுவயது தாண்டவில்லை. ஒரு நொடி, ஒரு Noddy காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தால் அடியோடு மறந்து விடுவீர்கள் இந்த அவஸ்தை உலகத்தை. நோடியைப் படித்ததும் நோய் நொடி எல்லாம் பறந்துவிடும்!
சாம்பிளுக்கு இதோ ஒரு கதை...
டீச்சரின் மேஜையில் இருந்து பணம் திருடிய சிறுமி எலிசபெத் காணாமல் போய் விடுகிறாள். அவள் பாட்டி வசிக்கும் கிராமத்துப் பக்கம் அவளைக் கண்டதாகச் சொல்கிறார்கள். பக்கத்து கிராமத்தில் இருக்கும் ஸீக்ரெட் ஸெவனுக்கு கிடைத்தது கேஸ். களம் இறங்குகிறார்கள்.
பாட்டியை விசாரித்தால் தினமும் தின் பண்டங்கள் காணாமல் போவதாக சொல்கிறார். ஊரைச் சுற்றித் தேடுகிறார்கள். பக்கத்தில் இருக்கும் குதிரை லாயத்தில் வேலை பார்க்கும் டாம் என்ற பையன் அவளைப் பார்த்ததாக சொல்கிறான். லண்டன் போய் பிரான்ஸுக்கு தன் சகோதரனை பார்க்க போவதாக அவள் சொன்னாளாம்.
லண்டன் போய் இருந்தால் இங்கே பண்டம் திருடு போவது எப்படி? அன்றிரவு போலீஸ் ஒரு பக்கம், ஸீக்ரெட் 7 ஒரு பக்கம், டாம் ஒரு மரத்தில் ஏறி... என்று வீட்டைச் சுத்தியிருந்து வேவு பார்க்கிறார்கள். ஆனால் அன்றைக்கும் பட்சணங்கள் அபேஸ். எப்படி?
இதற்கிடையில் அவள் சகோதரன் வந்து சேர்கிறான். அவனைப் பார்த்ததும் ஸெவனில் ஒருவனுக்கு சந்தேகம் தட்டுகிறது. அவனை அழைத்துக்கொண்டு டாமைப் பார்க்கப் போகிறார்கள். கண்டதும் குதிரைக்குட்டியில் ஏறி டாம் விரைய, நிறுத்திப் பார்த்தால் அவன்தான் எலிசபெத். ஆண்பிள்ளை வேடத்தில். அவள் பணத்தைத் திருடவில்லை என்றும் தெரிகிறது. வாரச் சம்பளம் கிடைக்கும் வரை வயிற்றுப்பசி. ஆகவே பாட்டி வீட்டிலிருந்து! சம்பவத்தன்று மரத்திலிருந்து மாடியில் இறங்கி தின்பண்டம் எடுத்துக் கொண்டு திரும்பி மரம் வழியாகவே வந்து கண்முன்னே அவர்களை ஏமாற்றியதை சொல்கிறாள்.
சின்ன கவிதை ஒன்றில் ஆரம்பித்து 600 புத்தகங்களுக்கு அசுர வளர்ச்சி. 42 மொழிகளில் 60 கோடி பிரதி விற்பனைக்கு. நாளொன்றுக்கு அவர் டைப் ரைட்டர் கக்கும் வார்த்தைகள் 6000.
1996 இல் அவரது எழுத்துச் சொத்தை மிகக்குறைவாக கொடுத்ததிலேயே 14 மில்லியன் பௌண்ட் குடும்பத்துக்கு கிடைத்ததாம்.
குழந்தைகளுக்கு அம்மா முக்கியம் என்று சொல்லும் இவர் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு எழுத்தையும் ஜனித்துக் கொண்டவர்.
Quotes?
‘எதையாவது யாருக்காகவேனும் விட்டுச் செல்லுங்கள். ஆனால் எதற்காகவும் யாரையும் விட்டுச் செல்லாதீர்கள்.’
‘பராமரிக்க முடியாத ஒன்றை வைத்திருக்க உங்களுக்கு உரிமை இல்லை.’
‘வளர வளர நம் முகத்தை நாமே உருவாக்கிக் கொள்ளுகிறோம்.’
><><><

Monday, August 10, 2020

கடவுளின் செல்லம்...

விஞ்ஞானம் கடவுளின் செல்ல சப்ஜெக்ட்! உள்ளே செல்லச் செல்ல சுவாரசியம் விரிந்துகொண்டே போகும்...
இப்ப பாருங்க… ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன்... எல்லாம் வாயுக்கள். தெரியும். எல்லா வாயுவும் மாலிக்யூல்களால் ஆனது. அறிவோம். ஒரு பிடி ஹைட்ரஜனை அள்ளிக் கொண்டால் அதில் ஆயிரக் கணக்கில் ஹைட்ரஜன் மாலிக்யூல்கள் இருக்கும். ஆமா, சரிதான். போலவே ஒரு பிடி நைட்ரஜனை அள்ளிக் கொண்டால் அதில் ஆயிரக்கணக்கில் நைட்ரஜன் மாலிக்யூல்கள். இந்த ரெண்டு கணக்கும் எக்ஸாட்லி ஒரே நம்பராக இருக்கும்னு நினைச்சுப் பார்த்திருப்பீங்களா? ஒண்ணாதான் இருக்கும். ஒரே கன அளவுள்ள எந்த வாயுவை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரே எண்ணிக்கை மாலிக்யூல்கள்தாம் இருக்கும் (ஒரே வெப்பம் & அழுத்தத்தில்) அது தான் ஆவகாட்ரோ விதி. அது ஆரோ? அவருதாங்க அதைக் கண்டு பிடிச்சது.. 200 வருஷம் முன்னாடியே…
Amedeo Avogadro... 
படித்தது முதலில் சட்டம். ஆர்வத்தில் நுழைந்தது விஞ்ஞானம். வாழ்ந்த காலத்தில் உரிய பாராட்டு வழங்கப் படாதவர்களில் ஒருவர்.
><><><

முயல் குட்டியின் கதை...

நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு சிறுமிக்கு ஒரு கதையை எழுதி படங்களும் வரைந்து அனுப்பினாள் அந்தப் பெண். பீட்டர் என்ற முயலின் கதை. படித்த எல்லோருமே அதை புகழ்ந்தனர். மகிழ்ந்து போனாள் அவள். ஒரு சின்ன புத்தகமாக அது வெளியானது. Peter Rabbit பிரபலமாயிற்று. வரவேற்பின் வேகத்தில் ஒவ்வொன்றாக எழுத, அடுத்த 23 பீட்டர் கதைகள் வெளியாகின. அந்த எழுத்தாளர்...
Beatrix Potter. ( 1866-1943) 
அந்த முதல் கதை? முயல் குட்டி பீட்டர் ரொம்ப சுட்டி. கூடப் பிறந்ததுகளை மாதிரி அல்ல. அந்தப் பக்கம் மெக்கிரிகர் தோட்டத்துக்கு மட்டும் போய் விடாதே, என்று எச்சரித்துவிட்டு வெளியே போகிறாள் அம்மா முயல். கேட்குமா பீட்டர்? அங்கே தான் போகிறது. அதையும் இதையும் பிடுங்கி சாப்பிட்டுவிட்டு மாட்டிக் கொள்ளப் பார்க்கிறது. அடிபட்டு, மிதிபட்டு மயிரிழையில் தப்பி ஓடி வருகிறது. சொன்னால் புரியாத உலகத்தை அனுபவத்தால் புரிந்து கொள்கிறது. அம்மா டின்னர் தராமல் டீயைக் கொடுத்து படுக்க வைக்கிறாள்.
பீட்டர் கதைகள் (The Tale of Peter Rabbit) உலக பிரசித்தம். எல்லாமே கருத்துள்ளவை என்பது அதன் மற்றொரு பிளஸ்.

Saturday, August 8, 2020

அம்மாவும் ஆகி...

79 இல் வந்த படம்... அதன் பின் அதே மாதிரி கதை நிறைய வந்துவிட்டனதான். என்றாலும்...
வேலைப் பிரியமரான கிரேமர் பிரமோஷன் ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது மனைவி ஜோனா அவனைப் பிரிந்து செல்ல தயாராக இருக்கிறாள். அப்பாவை வெறுக்கும் மகனை அவன் பொறுப்பிலேயே விட்டுவிட்டு. வீட்டையும் மகனையும் கவனிப்பதில்லையாம் அவன்!
அம்மாவும் ஆகி, திணறும் கணவன் வேறு வழியில்லாமல் சாதாரண வேலைக்கு இறங்குகிறான். கொஞ்சம் கொஞ்சமாய் மகனின் இதயத்தில் இடம் பிடிக்கிறான்.
இப்போது அவள் வருகிறாள் மகனைக் கேட்டு. வழக்கில் அவன் பக்க நியாயங்கள் வெளிப்பட்டாலும் முடிவு அவளுக்கு சாதகமாக. அப்பீலுக்கு போகலாம்தான், ஆனால் சின்ன பையன் தலையில் தேர்ந்தெடுக்கும் பெரிய சுமை விழுமே என்று விட்டுக் கொடுக்கிறான்.
பையனை அழைத்து போக மறுநாள் காலை வருகிறாள் ஜோனா. அவள் விட்டுப் பிரிந்த முதல் நாள் தயாரித்த அதே காலை டிபன். அப்பவும் மகனுமாக தயாரிக்கிறார்கள். தன்னைவிட அவனிடமே பையன் ஹோம்லியாக இருப்பதைச் சொல்லி விட்டு வெளியேறுகிறாள் தனியே.
கிரேமராக நடித்தவருக்கு எப்படியோ, நமக்கு ‘Kramer Vs Kramer’ மறக்க முடியாத படம். அவருக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆஸ்கார் வாங்கித் தந்தது ஆயிற்றே?
Dustin Hoffman... இன்று பிறந்த நாள்.
‘என்னாலே தானே அம்மா பிரிந்து போனாள்?’ என்று கேட்கும் மகளிடம் பொறுமையாக, ‘உன் அம்மாவை அவளாக நான் இருக்க விடாமல் என் விருப்பப்படி மாறச் செய்தேன். அவளைக் கவனிக்கவோ கேட்கவோ எனக்கு நேரமில்லை. முடிந்தவரை முயன்று பார்த்துவிட்டுத்தான் அகன்றாள். உனக்காகத்தான் இன்னும் சில நாள் இருந்தாள்..’ என்று அரவணைக்கும் காட்சியில் பையனின் & நம் இதயம் தொடுவார். ஆஸ்காரையும்!
ஆரம்பப் படங்களில் ஒன்றான ‘The Graduate’ படத்திலேயே எல்லோரையும் தன்னைக் கவனிக்க வைத்தவர். இளைஞராக இருந்த போதும் சரி வயதானவரான போதும் சரி, பிரதான காரெக்டர்களில் பிரமாதமாகப் பண்ணியவர்.
வாங்கிய மற்றொரு ஆஸ்கார் Tom Cruise உடன் நடித்த 'Rain Man'-க்காக.
கூட உட்கார்ந்து திரைக்கதை எழுதுவார் ஆனால் திரையில் பேர் போட்டுக்கொள்ள பிரியப் பட்டதில்லை.
தமாஷான ஒரு Quote? ‘வெற்றி அடைஞ்சதில ஒரு சந்தோஷம் என்னன்னா சாவதைப் பற்றிய பயம் போயிடுச்சு. ஸ்டார் ஆயிட்டீங்கன்னா, ஏற்கனவே நீங்க செத்துப் போயாச்சு. பாடம் பண்ணியாச்சு.’
'விவாகரத்துகள் நடக்கக் காரணம் என்ன? ஏதோ ஒரு காரணத்தால் உங்களால் அதே இடத்தில் இருக்க முடியாமல் போகிறது. ஆனால் மனசில் அந்த அன்பு நீங்காமல் தங்கியே இருக்கிறது. அதுதான் கொல்கிறது. அங்கேயிருந்துதான் எல்லா ஆத்திரமும் கோபமும் கிளம்புகிறது.'

Friday, August 7, 2020

தேன் (தேனீர்) பாடல் ஒன்று!

இந்தப் பாடலைக் கேட்டதிலிருந்து காலைத் தேநீரின் சுவை கன மடங்கு அதிகரித்துவிட்டது!
என்ன பாடல் அது?
“காலைத் தேனீர்… கையில் ஏந்தி…” (படம்: ‘என்னோடு விளையாடு.’ 2017)
இப்ப வர்ற பாட்டில் எல்லாம் மெலடி இல்லை, ஆழமில்லை, வார்த்தை தெளிவில்லை என்று அலுத்துக் கொள்பவருக்கு இது ஒரு பிளசன்ட் சர்ப்ரைஸ்!
மெல்லத் தொடங்கும் பல்லவி... ஐந்தே ஸ்டெப்பில் ராகம் உச்சத்தை எட்டுகிறது. அப்புறம் அந்த உச்ச வரிகள்.  அவ்வளவே.  வரணும் என்றே இல்லை சரணம். இடையிசையும் தடையிசை ஆகிவிடாமல் பாட்டு அதன் போக்கிலேயே ஆற்றில் படகாக . ஒரு அற்புத இசையனுபவம்!
பல்லவியை தொடர்ந்து முதல் அனுபல்லவியில் ‘உன் கண் பந்தாடும் நேரம்… ஐயோ என்னாகும் நாணம்…’ என்ற வரியில், இசையில் ஒரு வளைவு கொடுத்திருப்பார் பாருங்கள். இலயோரம் திரண்டு கீழே விழும் நீர்ச் சொட்டுப் போல! Ravishing!
அடுத்து ‘சிறு பிள்ளை போல் உனைப் பார்க்கிறேன்..’ என்று ஒரே ஒரு வரி இறங்கி வந்து தொடர்ந்து ‘களங்கம் ஏதும் இல்லையே என்காதல் பிள்ளையே..’ என்று ராகத்தைச் சொடுக்கி ‘சாய்கிறாய் எனைச் சாய்க்கிறாய் ..’ என்று உயர்ந்து, காதலில் படபடத்து அவள் குரல் மூச்சை இழக்கும்போது அவன் கையிலேந்திக் கொள்கிறான் அந்த இசையை. ‘எனக்கானவா… ‘ என அனாயாசமாக உச்சத்துக்கு எடுத்துச் செல்கிறான். 
பொதுவாக high pitch -இல் பாடும்போது அதில் ஒரு வலிந்து இழுத்த பிரயத்தனம் தெரியும். இதுவோ சுபாவமாக இருக்கிறது. காதலின் மீதான அதன் தீவிரத்தை காட்ட முற்படும் குரலாக மட்டுமே அது உயர்கிறது. அதோடு உணர்வும் முதல் பகுதிக்கு ஈடாக, பெண்ணின் நாண ராகத்திற்கு ஆணின் விடையாக இருக்கிறது
அதே ஆறு ஸ்டெப் மறுபடியும் நம்மை அழைத்துச் செல்ல… ‘லல லல்லல் லல் லலா… என்று இறுதியில் வயலின் ஒலித்து அடங்குவதும் சரி, ‘அன்பே…!’ என்ற முத்தாய்ப்பும் சரி, ஆழ் மனதை வருடுகிறது. மேல் மனசுக்குள் ஒரு குஷி பிறக்கிறது.
ரெண்டாவது பல்லவியில் ‘ஏதோ என்னில், மாற்றம் வந்தே, கூச்சல் கொண்டேன் உள்ளே…’ இந்த வரி முடிவில் ‘உள்ளே…’ என்று நீண்டு எதிரொலிப்பது ஒரு அழகு நச்!
60 -க்கான இனிமையும் 20 -க்கான புதுமையும் right mix -இல். (1960 - 2020)
ஒரு பாடலை முதல்முறையாக ஒரு தடவை கேட்டு முடித்ததும் உங்கள் காதில் அதன் முதல் வரி ப்ளே பேக் செய்கிறதா? அதான் சிறந்த tune க்கு அடையாளம். 
பாடலின் இனிமையை ஒரு வார்த்தையில் சொன்னால்… மயிலிறகு! 
இந்த ஏ ஒன் பாட்டை தந்தவர் ஏ. மோசஸ். ஏகப்பட்ட ஃபேமஸ் ஆகிவிடுவார் விரைவில். சந்தேகமில்லை. 

மொழியின் அழகு வார்த்தைகளை பொறுக்கியெடுத்து எழுதியவர் கதிர் மொழி. இழைத்து இழைத்துப் பாடியவர்கள்: கௌரி லக்ஷ்மி  - ஹரி சரண்.
பாடல் லிங்க்: