Tuesday, September 8, 2020

வெண் திரை பால்வெளியின் வான்மதி..



அவர் ஒரு பெண் எழுத்தாளர். தெலுங்கில் அவர் எழுதிய ‘அத்தகாரி கதாலு’ என்ற சிறுகதைத்தொகுதி சாகித்ய அகாடமி பரிசு பெற்றது. அதன் சில கதைகள் குமுதத்தில் ‘அத்தகாரு’ என்று தமிழில் வெளியானது என்றால் எத்தனை பேருக்கு தெரியும் அவரை என்று தெரியாது. ஆனால் பானுமதி என்றால் அத்தனை பேருக்கும் நினைவு வந்துவிடும் அவரை.
ஆம், இந்தப் பக்கம் தலை சிறந்த நடிகைகளில் ஒருவர். அந்தப் பக்கம் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.
பி. பானுமதி. வெண் திரை பால்வெளியின் வான்மதி.
Sept.7. பிறந்தநாள்! (1924-2005)
‘வான் மீதிலே… ‘ என்று ராமராவ் முதல் வரியைப் பாடியதும் கிளையில் கையூன்றி நிற்கும் பானுமதி முகத்தைத் தாழ்த்தி உடலைப் பின்னிழுத்தபடியே கண்களை உயர்த்தி ஒரு பார்வையை வீசுவார் பாருங்கள், ஒரு நாயகி தன் களையை வெளிப்படுத்தும் கலையை அந்த ஐந்து விநாடி ஷாட்டில் கற்றுக் கொள்ளலாம்.
பாத்திரங்களைப் படைக்கும் எழுத்தாளர் என்பதாலோ என்னவோ பாத்திரங்களை புரிந்துகொண்டு காத்திரமான நடிப்பை வழங்கி விடுவார்.
‘அறிவாளி’ படத்தை ஷேக்ஸ்பியர் பார்த்தால், ஆஹா, இந்த நடிகை மட்டும் நடிப்பதாக இருந்தால் எத்தனை ‘Taming of the Shrew’ களை எழுதியிருக்கலாம்! என்பார்.
ஹாஸ்டல் மாடி பால்கனியிலிருந்து, கீழே சிவாஜி பாடும் ‘வெண்ணிலா ஜோதியே வீசுதே..’வுக்கு சந்திராவாக வெட்கப்பட்டு விட்டு, அந்தப் பக்க பால்கனிக்கு ஓடி, கீழே டி. ஆர். ராமச்சந்திரன் பாடும் ‘திண்டாடுதே என் கண்களே..’வுக்கு மாடர்ன் அபிநயம் காட்டி, ஒரே ஆள் இரண்டு நபராக அசத்துவார் பாருங்கள், தியேட்டர் அதிரும். ஆம், The Fabulous Senorita வில் Estelita வாக நடித்த Estelita வை விட Fabulous ஆக நடித்திருந்தார் ‘மணமகன் தேவை’யில்.
பீறிட்டுக்கொண்டு கிளம்பும் நடிப்பு அவருடையது. நம் நாட்டின் இன்க்ரிட் பெர்க்மன். ‘Gaslight’ (1944) இல் அவர் செய்ததை அனாயாசமாக ரங்கோன் ராதாவில்… கடைசி சீனில் அவரைப்போல் ஒரு வீல் அலறல் விட்டதும், படத்தில் அது கட்டாகி விட்டதும் ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம்.
அப்புறம் அந்த நடிப்பின் எல்லை.. ‘அன்னை.’ “உன் பிள்ளையை அடிக்க நான் யாரு?” என்று சௌகார் விலகும்போது, அவன் தன் பிள்ளை இல்லை என்று தான் உணருவதையும் அதை நமக்கு உணர்த்துவதையும் ஒரே பார்வையில் வெளிப்படுத்துவார். “என் புள்ளே இல்லே, நான் பெரியம்மா, தப்பு எம்மேலதான், மன்னிச்சுக்க, என் புள்ளே இல்லே, நான் பெரியம்மா, இது உம்பிள்ளே, நீ அடி, கொல்லு, என்ன வேணாலும் பண்ணிக்கோம்மா, உன் புள்ளையாச்சு, நீயாச்சு, நான் பெரியவ, நான் பெரியவ..” என்று நகரும்போது ஒரு நடிகை வசனம் பேசுவதையா பார்க்கிறோம்? ஒரு வளர்ப்புத் தாயின் மனத் தளர்வும் வேதனையும் மட்டுமே அல்லவா தெரிகிறது?
ரோல் எதுவானாலும் ஒரு கை பார்த்து விடுவார். ‘Let me try…’ என்று சங்கர் கணேஷ் இசையில் அந்த ஆங்கிலப் பாடலையும்!(‘பத்து மாத பந்தம்’). ‘Meet my son…’ இன்னொரு அழகுப் பாடல் ‘எடுப்பார் கைப்பிள்ளை’யில்.
‘லட்டு லட்டு மிட்டாய் வேண்டுமா..’ நாலு மொழிப் பாடலிலிருந்து ‘அன்னை என்பவள் நீதானா…’ வரை லட்டு லட்டாக பாடல்கள்.
அஷ்டாவதானி என்றால் அதான் எனக்கு தெரியுமே என்பீர்கள். என்ன அந்த எட்டு என்றால்? எழுத்தாளர், டைரக்டர், பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எடிட்டர், ஸ்டூடியோ அதிபர், நடிகை. (முதல் பெண் சூபர் ஸ்டார்.)
இவர் நடிப்பில் ஒரு இயல்பான குறும்பு கலந்திருக்கும். ‘ஏரு பூட்டி ஜோரு காட்டும் …’ ('ம.பெ.மகராசி') பாடலில் அந்தக் குறும்பை நாணத்துடன் சரிவிகிதத்தில் வழங்கியிருப்பார்.
‘கள்வனின் காதலி’யில் கல்கியின் கல்யாணியை அப்படியே கண்முன் கொண்டு வந்ததை நாலு வரி சொல்லலாமென்றால் ‘அம்பிகாபதி, ‘அலிபாபா’, ‘மதுரை வீரன்', ‘கானல் நீர்' எல்லாமாக சேர்ந்து நாற்பது வரி ஆகிவிடும்.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!