Tuesday, June 18, 2019

அவள்... (கவிதைகள்)


529
திரும்பிப் பார்த்தாய்,
'என்'னைக் காணோம்!

530
சொல்லவே மாட்டேன் உன்னிடம்:
'மாத்தி யோசி.'

531
அன்பின் நுணுக்கங்கள்
அவள்போல் ஆரறிவார்?

532
உன்னை வர்ணிக்கையில் 
சிலிர்த்தன சொற்கள்!

533
சொல்லவும் தெரியவில்லை
சொல்லாதிருக்கவும் முடியவில்லை
வார்த்தையில்
நில்லாத உன் அன்பை.

534
உன் முகம்
என் நூல்.

535
நின்று மீள்கிற
நாநோ செகண்டில் உன் பார்வை
கொன்று துடிக்கிறது மனசு.


536
மெல்லத் துடிக்கிற இமையும்
விழியசையும் லாவகமும்
உன் கண் ரேகை எனக்கு.

537
காலை மலர்களை ரசிக்க வந்தால்
அவை உன்னைத் தேடிக் கொண்டிருந்தன
தங்களை ஒப்பிட.

538
மணம் வைத்தறியும் மலர் போல
மனம் வைத்தறிந்தேன் உன்னை.

><><><

Wednesday, June 12, 2019

அந்தக் கோணத்தில்...(நிமிடக் கதை)


"அப்படியா?" என்றார் சாத்வீகன், "நம்ம ஷண்முகமா?"
"ஆமா பெரியப்பா. என்னாலேயே தாங்க முடியலே... அப்படீன்னா பிள்ளைகள் என்ன பாடு படும்னு நீங்களே ஊகியுங்க.... நீங்கதான் எப்படியாவது என் கணவர்ட்ட எடுத்து சொல்லி...” கெஞ்சாக் குறையாக மாலினி.  சொந்தக்காரப் பெண். பக்கத்து தெரு.
”சொல்லிச் சரிப்படுத்த முடியாது இதை...” என்றவர் யோசித்தார். ”சரி, நான் பார்க்கிறேன். ஒரு வழி இருக்கு.”
மறு நாள் மாலை வாக் புறப்பட்டபோது  ஷண்முகத்தையும் அழைத்தார். பூங்காவில்  வழக்கமான பாதை. இவனிடம் பேசிக்கொண்டே நடை இரண்டு சுற்று முடிந்தபோது மணி ஆறு. அவர் எதிர்பார்த்த நண்பர் சொர்ணகுமார் வருவது தெரிந்தது. ”தெரியுமா  அவரை? புரஃபசர் சொர்ணகுமார். பெரிய ஸ்காலர். ரொம்பப் பிரபலம்.”
நெருங்கியதும் அவரிடம் இவனை அறிமுகம் செய்து வைத்தார். ”...ரொம்ப வேண்டிய பையன்.” கைகுலுக்கிக் கொண்டார்கள்.
”ஆச்சு, நாலு ரவுண்ட்! போதும் எனக்கு..  கொஞ்சம் உட்கார்றேன். நீ சாரோடு இன்னும் கொஞ்சம் நடந்துட்டு வரலாமே?”  என்றார் சாத்வீகன்.
”எஸ், வாங்க. Young as you are, I bet you can definitely take a few rounds more.” என்று சொர்ணகுமாரும் அழைக்க இருவரும் தொடர்ந்தார்கள். முடிந்ததும் அவர் விடை பெற்றுக் கொண்டு போய்விட்டார்.
அடுத்த நிமிடமே ஷண்முகம் இவரை சாடினான். ”நல்ல ஆள் கூட அனுப்பினீங்க என்னை... சே!”
”ஏன், என்ன ஆச்சு?”
”இப்படியா ஒரு மனுஷன் போர் அடிப்பார்?”
”என்ன பண்ணினார்?”
”ஒரே அட்வைஸ் மழை. இந்த முப்பத்தஞ்சு நிமிஷமும் அவர்தான் பேசினார்.”
”அப்படியா?” தெரியாதது போல...
”ஆமா. எங்கே வேலைன்னு கேட்டார் சொன்னேன் உடனே ஆபீஸில் எப்படி முன்னேறி எம் டி ஆகிறதுன்னு பொழிஞ்சு தள்ளிட்டார்.”
”ஓஹோ?’
”அப்புறம் எங்கே ஜாகைன்னார். சொன்னேன். அதுவா, கொசுத்தொல்லை இருக்குமேன்னு கேட்டு அதை எப்படி சமாளிக்கிறதுன்னு அடுத்த பத்து நிமிஷம் நான்ஸ்டாப்பா... அப்புறம் சாப்பாடைப் பத்தி ஏதோ கேட்டார். தொடர்ந்து ஹெல்தியா எப்படி சாப்பிடறதுன்னு பக்கம் பக்கமா வசனம்.”
”நல்ல விஷயங்கள் தானே சொல்லியிருக்கார்? நிறைய படிக்கிறவராச்சே? நிறைய பாயிண்ட் வெச்சிருப்பாரே...?
நல்லதுதானே?”
”ரொம்ப நல்லதுதான்.  ஆனா நான் பட்ட பாடு எனக்கில்ல தெரியும்?”
”ஓ அதுவா? அதுதான்  இவங்களை மாதிரி ஆட்களுக்கெல்லாம் பிரசினை. நாம இப்படி அட்வைஸாப் பொழியறது கேட்கிறவங்களுக்கு எவ்வளவு போரடிக்கும், சமயத்தில எத்தனை கஷ்டமா இருக்கும்னு கொஞ்சமும் யோசிக்கிறதில்லை. உன் இடத்தில் தன்னை வெச்சு ஒரு நிமிஷம் பார்த்திருந்தால்!  அப்படி செய்திருக்க மாட்டார் இல்லையா?”
ஒரு நிமிடம் யோசித்தவன், ”கரெக்ட். அந்தக் கோணத்தில் அவர் யோசித்திருக்க மாட்டார்னுதான் நினைக்கிறேன்.”
”அப்படி யோசித்தால் அவருக்கு இன்னொண்ணும் புரியும். இப்படி எப்பவும் எதுக்கும் அறிவுரைன்னு அடுக்கறதால முக்கியமான மிக அவசியமான அறிவுரை கூட  தன் எஃபெக்டை இழந்துரும்னும்.”
”அட, அதுகூட சரிதானே?” என்றபடி கிளம்பினான்.

அடுத்த மாதம் மாலினியை சந்தித்தபோது, எப்ப பார்த்தாலும் தன்னிடமும் பிள்ளைகளிடமும் எதுக்கெடுத்தாலும் அட்வைஸ், அட்வைஸ் என்று அலட்டிக்கொண்டிருந்த ஷண்முகம் இப்போதெல்லாம் தேவையான நேரத்தில் முக்கியமான அறிவுரையை மட்டுமே தருவதாக நன்றி தெரிவித்தாள்.
><><
அன்புடன் ஒரு நிமிடம் - 129 
('அமுதம்' அக். 2015 இதழில் வெளியானது)

Tuesday, June 4, 2019

உற்சாகத்துக்கு ஒரு பாடல்!


'பாலூற்றி உழவு செய்வார்...' என்று ஆரம்பிக்கிறது அந்தப் பாடல்.
தென்பாண்டி சீமையின் வளத்தை எத்தனை அழகாக...

அடுத்த வரிதான் அற்புதம்!
'பனிபோல் விதை நடுவார்..' என்னவொரு கற்பனை! இதைவிட சிறப்பா சொல்லமுடியுமா?


முதல் தடவை கேட்கிறப்ப ஒரு உற்சாகம் பிறக்கும். ரெண்டாம் முறை ஆஹான்னு.. மூணாவது எழுந்து ஆடத் தோணும்.. அப்படி ஒரு இசை!


படம்: பாகப் பிரிவினை
பாடல்: "தேரோடும் வைகை.. சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும்.. ஒயிலாட்டம்!"


முன்னே சிவாஜியும் சரோஜா தேவியும்..
பின்னே பீம்சிங்கும்விஸ்வநாதன் ராமமூர்த்தியும் மருதகாசியும்!

பீம்சிங் படம் என்றால் தவறாமல் அதில் ஒரு கோஷ்டி நடனம் இடம் பெறும். (தீர்க்கதரிசி. இப்ப அது இடம் பெறாத படமே இல்லை.)

எந்த ஷாட்டை எடுத்துப் பார்த்தாலும் சிவாஜியின் நடன அசைவுகள் படு கச்சிதமாக பாத்திரத்தின்  இயலாமையுடன் பொருந்திப்போகும்.

தேரோடும் ... எனும்போது பின்னால் சீறிப்பாயும் அந்த இசை!


சரணத்தில் வெள்ளந்தியாக எழுப்பும் வினாவும் சுள்ளென்று வந்து விழும் விடையும்…
'சித்திரை மாதம் முத்துக்கள் வித்து
திரும்பி இங்கே வருவதென்றே
சென்றவர் இன்னமும் வந்தில சேதி
தெரிந்து சொல்லடி ராமாயம்மா..'
என்று அவன் கேட்க,
'வித்த இடத்தில பத்தினிப் பொண்ணும்
விரித்த வலையில் விழுந்து விட்டார்
உன்னையும் என்னையும் மறந்து விட்டார்
உண்மையைச் சொல்லடி ராமாயம்மா...'
என்று அவள் பதில் சொல்ல..


இந்தப் பாடலின் பாணியில் வந்த ‘Jis Desh Mein Ganga Behti Hai’ படப் பாடலில் ('Hum bhi hain Tum bhi ho..) சங்கர் ஜெய்கிஷன், அவர்கள் ஸ்டைலில் பிச்சி உதறியிருப்பாங்க.

><><