Saturday, August 25, 2018

அவள் - கவிதைகள்

499
அடிமை சாசனம் 
எழுதிக் கொடுத்தே பெற்றேன்,
உன்னுடனான சுதந்திரத்தை. 

500
நினைவில் ஆழும்போதெல்லாம் 
நீயே ஆளுகிறாய் என்
நினைவை.

501
நினைவுகளுக்கு ஒரே திசை.
நீ இருக்கும் திசை.

502
இட்டுவிட்டேன் கவிதை ஐநூறு.
விட்டு விடேன், என்கிறாய், கவிதையை. 

503
ஸ்தம்பித்தே நிற்கின்றன
வருடங்கள் உன்
வனப்பில்.

504
ஆற்றின் இரு கரையும்
ஒன்றானாற்போல்
நீ எனக்கு.

505
எங்கோ திறக்கிறது ஒரு கதவு
ஓடி வருகிறேன்..
உன் மனக்கதவோ?

506.
ஒரு பார்வைதான் பார்க்கிறாய்...
உணர்ந்து கொள்கிறாய் என்
அன்றைய உள்ளத்தை.

507
நானும் என் கவிதைகளும்
இந்த இரவு பூராவும்
விழித்துக்கொண்டு...

508
சந்திக்குமுன்
நான், மற்றும் நீ.
சந்தித்தபின்
நீ நீ நீ...

><><

Tuesday, August 21, 2018

அந்தப் பக்கமிருந்து...

அன்புடன் ஒரு நிமிடம் - 126

”என்னவெல்லாமோ பண்ணிப் பார்க்கிறேன் மாமா, சேல்ஸை பழைய நிலைக்கு கொண்டு வர முடியலே..." என்றான் மிக்க கவலை ரேகைகளுடன் வந்த சோமு...அவனின் சோப் தயாரிப்பு தொழிலில் தற்போது விற்பனை வீழ்ச்சி. 
”அதுக்கு நீ என்னென்ன நடவடிக்கை எடுத்தே?” கேட்டார் வாசு.
”என்னவெல்லாம் முடியுமோ அது.. வழக்கமா செய்யற விளம்பரத்தை 25% அதிகரிச்சுப் பார்த்தேன். புதுசா சில விளம்பர யுக்தி பண்ணினேன்.” 
”அப்புறம்?”
”விலையை 10% குறைச்சேன், கட்டுப்படியாகாதுன்னாலும்...” 
”அப்புறம்?”
”மார்கெட்டிங்க் சைடில் இன்னும் நாலு ஆளைப்  போட்டேன்..”
அப்போதுதான்...
வெளியே கூக்குரல். பசங்க சத்தம். “அப்படித்தான்! போடு, போடு!”
“இன்னும் நல்லா வீசு!” எட்டிப்பார்த்தார்கள். 
பையன்கள்.. ஒரு தொட்டிலை மரத்தில் கட்ட முயன்றுகொண்டு... கீழேயிருந்து கயிற்றை வீச வீச அது அந்த வேப்ப மரக் கிளையில் அந்தப் பக்கம் விழாமல் அதன்மேல்கிளை இலைகள் தட்டிவிட  கீழேயே திரும்பிற்று.
”கொஞ்சம் இருடா,” என்றொருவன் மாடிக்கு ஓடினான்.
அங்கிருந்து பார்த்துவிட்டு அவன் கத்தினான், ”டேய் அப்படிப் போடறதை நிறுத்து. இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கம் கயித்தை வீசு... ஏன்னா மேல் கிளை அந்தப் பக்கமா சாய்ஞ்சிருக்கு.”
அப்படியே போட, கயிறு அழகாய் அந்தப் பக்கம் ஜம்மென்று விழுந்தது.
”பார்த்தியா, இதைத்தான் உன்கிட்ட சொல்ல நினைச்சேன்...” என்றார் வாசு இவனிடம்.
”அந்தக் கயிறு மேலே போகணும். போகலே. எங்கே போகணுமோ அங்கேயிருந்து பார்த்தால்தான் என்ன பிரசினை, என்ன செய்யணும் அதுக்குன்னு தெரியும். அதேபோலத்தான் உன் பிரசினையும் உன் சைடிலிருந்தே பார்த்தால் போதாது. என்ன நம் இலக்கோ அந்தப் பக்கமிருந்து பார்த்தால்தான் அதுக்கு என்ன வழி, என்ன தடை, அதை அகற்ற, இலக்கை அடைய என்ன செய்யணும்னு தெளிவா தெரியும்.  
”அதைத்தான் இப்ப அந்த பையன் செய்தான். இப்ப நீயும் அதை செய்யறே. உன் பிரசினை என்ன? சேல்ஸ் டௌன். இலக்கு என்ன? முன்னே மாதிரி அதை நிறைய பேர் வாங்கணும். உன் சைடிலிருந்தே பார்த்து நீ இதுவரை செய்ததையே திரும்பத் திரும்ப அதிகமா செய்துட்டு இருக்கிறதில்லை.. அந்த எண்ட்லேயிருந்து பார். அவங்க வேறே எதையோ வாங்கறாங்க. என்ன காரணத்தால் நம்ம ப்ராடக்டை வாங்கலேன்னு யோசி. அவங்க வாங்கற மாற்று சோப்பில் இப்ப ஏதோ ஒண்ணு அதிகமா இருக்கலாம், ஆரோக்கியத்துக்கு உதவற ஒன்றோ, ஒரு அதி நறுமணமோ..  அப்ப நாம என்ன செய்யலாம்? அவங்களை சந்திச்சு பேசணும். நீ சில ஏஜெண்டுகளுக்குக் கொடுக்கறே. அவங்க சில்லறைக் கடைகளுக்குக் கொடுக்கறாங்க. அவங்கதானே கஸ்டமரோட பழகறாங்க? அவங்க மூலமா கஸ்டமர்களை அணுகினால் தானே  தெரிந்துவிடும் பிரசினையின் மையம். விஷயத்தை சரி செய்ய வழியும்!”
”முதல்ல அதை செய்யறேன்,” என்று புறப்பட்டான் அவன்.
><><
('அமுதம்' அக்டோபர் 2015 இதழில் வெளியானது)

Monday, August 20, 2018

நல்லதா நாலு வார்த்தை - 90

’மிகச் சிறந்த வகை நண்பர் என்பவர்,
ஒரு வார்த்தை கூட பேசாமல் 
தாழ்வாரத்தில் அவருடன் உட்கார்ந்து விட்டு
உங்கள் வாழ்க்கையிலேயே 
மிகச் சிறந்த சம்பாஷணை அது என்ற 
உணர்வுடன் நடந்து செல்ல முடிகிறவரே.’
- Anonymous
('The best kind of friend is the one you could sit on a porch with,
never saying a word, and walk away feeling like that was
the best conversation you've had.')


’எந்த இடர் அந்தத் துணிவைக் கொணர்ந்ததோ
அதை அனுபவித்து முடித்திராமல்
அத் துணிவை பாராட்டுவது
முடிகிற காரியம் எனக் கருதவில்லை நான்.’ 
- Jim Corbett
(’I do not think it is possible to appreciate courage until
the danger that brought it into being has been experienced’)

'முதல் முறை வெற்றி பெறாவிடில்
முயற்சி செய், மறுபடியும் முயற்சி செய்.
பின் விலகி விடு.
விடாமல் அதை மடத்தனமாகப் பற்றுவதில்
எந்த அர்த்தமுமில்லை.’
-W C Fields
('If at first you don't succeed, try, try again. Then quit.
There's no point in being a damn fool about it.')

'என் குழந்தைகளின் முகத்தில் புன்னகையைக்
காண்பதுபோல் வேறொன்றில்லை.
சேர்ந்து சிரிப்பது. விளையாடுவது.
ஆகச் சிறந்தது அதுவே.'
- Mark Wahlberg
('There is nothing like seeing the smile on my kid's faces.
Laughing together. Playing. It's the best.')

’இதைப் படிக்கும் எவருக்குமே
உள்ளபடியே நல்லதொரு நாள்
வாய்க்கப் பெற்றதாக நம்புகிறேன்.
அப்படி உங்களுக்கு அமையாவிடில்,
நகரும் புது நிமிடம் ஒவ்வொன்றிலும் 
அதை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு
இருப்பதை அறிந்து கொள்ளுங்கள்.’
-Gillian Anderson
('I hope everyone who is reading this is having a
really good day. And if you are not, just know that in every
new minute that passes you have an opportunity to change that.')

'யாருடனாவது யாத்திரை செல்லும்போது
காலை காபியுடன் தாராள அளவு
பொறுமையையும் சகிப்புத்தன்மையையும்
அருந்திவிட்டுச் செல்லுங்கள்.'
- Helen Hayes
('When travelling with someone, take large doses of
patience and tolerance with your morning coffee.')

'பெருந்திரளின் களிப்புக்கு என் துயரத்தை
மாற்றிக்கொள்ள தயாரில்லை நான்.
துயரம் என்னிலிருந்து வடிக்கும் கண்ணீரை
சிரிப்புக்கு மாற்றிக்கொள்ளவும் விரும்பவில்லை.
கண்ணீரும் சிரிப்புமாக என் வாழ்க்கை 
இருப்பதே நான் வேண்டுவது.'
- Kahlil Gibran
('I would not exchange the sorrows of my heart for the joys of
the multitude. And I would not have the tears that sadness
makes to flow from my every part turn into laughter.
I would that my life remain a tear and a smile.')

'கனவொன்று கைவசம் இருந்தால்
இறுகப் பற்றிக் கொள்ளுங்கள் அதை,
ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.’
-Carol Burnett
('When you have a dream, you've got to grab it
and never let it go.')

’நடக்கச் சென்ற ஓர் புள்ளியே
கோடு என்பது.’
-Paul Klee
('A line is a dot that went for a walk.')

'இயற்கை நமக்கு வெளிப்படுத்தியிருப்பதில்
ஒரு சதவீதத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட
இன்னும் நாம் அறிந்துகொள்ளவில்லை.’
- Einstein
('We still do not know one thousandth of one percent
of what nature has revealed to us.')

><><