Sunday, May 20, 2018

அவள் - கவிதைகள்

489
தரிசிக்க, வேண்டும்
தினம் ஒரு பறவை
தினம் ஒரு மலர்
தின்மும் நீ.
><><

490.
உன் பேரைச் சொன்னதும் 
பூங்காவின் புஷ்பங்கள் 
ஒதுங்கி வழிகாட்டின
உன் இடத்துக்கு.
><><

491
எதுவென்றாலும் நீ வேண்டும்.
நீயென்றால் எதுவும் வேண்டாம்.
><><

492
என்ன வைத்திருக்கிறாய்
உன் பார்வையில்,
படும் இடமெல்லாம்
பளிச்சிடுகிறதே!
><><

493
புலரவில்லை இன்னும் பொழுது..
புலர்ந்துவிட்டாய் என் மனதில்.
><><

494
இதயத்தின் திறவுகோலை 
என்னிடம் தந்துவிட்டு
எங்கோ மாயமாகி விடுகிறாய்.
><><

495
என்னுடன் உன்னைப் பங்கிட்டு
சைபரானாய்.
><><

496
நீ ஏதோ பேசுகிறாய் என்
நினைவு நழுவுகிறது 
உதடு பிரியும் அழகுக்கு 
உவமை தேடி...
><><

497
நீ தொலைவில்.
நான் நினைவில்.
><><

498
வெற்றிடம் தேடுகிறேன் மனதில்
மற்றவர்களையும் குடியமர்த்த.
><><

Wednesday, May 16, 2018

காரணம் ஆயிரம்... (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 125

சொல்லிக் கொண்டேயிருந்தான் சுந்தர்.  ஃபங்ஷன் முடிந்து சாப்பாட்டுக்காக காத்திருந்த உறவினர், நண்பர்கள் காது கொடுத்தனர். பார்த்துக் கொண்டேயிருந்தார் சாத்வீகன். 

“...இத்தனை வருஷம் ஆச்சு. கணேசன் இன்னும் சொந்த வீடு கட்டாமல்... நேற்று கல்யாண வீட்டில் எல்லாரும் சந்திச்சபோது கேட்டேன் என்ன காரணம்னு. கடன் வாங்கறது பிடிக்காதாம் அவனுக்கு. சொன்னான். நாமெல்லாம் லோன் வாங்கி வீடு கட்டலையா? இதெல்லாம் ஒரு காரணமா? இத்தனை வருஷம் வேலை பார்த்தும் இன்னும் சொந்தமா ஒரு வீடு கட்டலைன்னா என்ன மதிப்பு இருக்கும்? இப்ப கட்டினால் அவங்கப்பா, அம்மாவுக்கு வயசான காலத்தில எத்தனை சௌகரியமா இருக்கும்! கையில எப்ப காசு சேர்ந்து.. அதுவரை அவங்க நல்லா இருக்கணும். அப்ப வேறே செலவு வந்து நின்னா என்ன பண்ணுவான்? எம். எஸ்சி வரை படிச்சு என்ன, கொஞ்சம் கூட விவரமே இல்லே.. ”

அதை ஆமோதித்து சில குரல்கள், ’அதானே என்ன இவன் இப்படி..’ என எழுமுன் சாத்வீகன் எழுந்து சுந்தரைத் தள்ளிக் கொண்டு போனார் அப்புறமாக.

"உட்கார்,’ என்றார், ”நம்ம கணேசன் வீடு கட்டாததற்குக் காரணங்கள்... ஒண்ணு, அவனுக்கு இப்போது ஒரு முக்கியமான பெரிய செலவு இருக்கு. ரெண்டு. இப்ப அவன் வாடகை வீட்டில் இருந்தாலும் பெற்றோரோடு இருக்க வசதியா இருக்கு, அதே வசதியில் வீடு கட்ட நிறைய ஆகும். மூணு. சொந்த ஊரில் அதைக் கட்ட ஆசை. அந்தப் பக்கம் டிரான்ஸ்ஃபர் ஆகிறப்ப கட்டினா பார்த்து சிக்கனமா கட்டலாம். நாலு. ஊர்ப்பக்கம் அவன் வாங்கிப் போட்டிருக்கிற மனை ரொம்பத் தள்ளியிருக்கு. ஆள் புழக்கம் வர சில வருஷமாகும். அஞ்சு...”

பன்னிரண்டு காரணம் சொன்னார். “இன்னும் இருக்கலாம். நீ ஒரு பொது இடத்தில வெச்சு திடீர்னு அப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறப்ப அவன் அப்ப தோணின ஒரு பதிலை சொல்றான். அந்த இடத்தின் சூழ்நிலையில் எல்லார் முன்னாலும் அவனால் எல்லா காரணத்தையும் சொல்ல முடியணும்னு எதிர்பார்க்கிறது சரியா? இடம் பொருள் ஏவல் பார்த்தல்லவா கேட்கணும்? ஒரு வேளை நீ அவனிடம் தனியாக கேட்டிருந்தால் அவன் விலாவாரியா சொல்லியிருக்கலாம். பொதுவாக யார் எதைசெய்தாலும் அதற்கு ஒரு காரணம்தான் இருக்கும்னு நாமாக நினைத்துக் கொள்கிறோம். அது அவர்கள் சொல்லும் ஒரு காரணம், அவ்வளவுதான். எல்லா காரணங்களும் எப்போதும் நம்மிடம் சொல்லக் கூடியவையாகவும் இருக்காது.  அப்படி நாம் எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. நபர் எப்படிப்பட்டவர் என்று மட்டுமே பார்க்கணும். சராசரி விவரமுள்ள ஒருவர் ஒரு விஷயத்தை செய்யவோ செய்யாமலிருக்கவோ சரியான, அவருக்கேயான காரணங்கள் இருக்கும். அதை நம்மிடம் அவங்க சொல்ல விரும்பலாம், விரும்பாமலுமிருக்கலாம். ஏதோ ஓரிடத்தில் சூழ்நிலைக்கேற்ப அவங்க சொல்கிறதை வைத்து அவர்களை மற்றவர் முன் விமரிசிப்பது என்பது நம்மையும் ஏமாற்றுவதோடு அவரையும் சங்கடப் படுத்தும். அது தேவையில்லைங்கிறது என் கருத்து.”

><><
('அமுதம்' செப்.2015 இதழில் வெளியானது)

Sunday, May 6, 2018

நல்லதா நாலு வார்த்தை...89

’உங்கள் செயலே தன்னை 
விளக்கிக் கொள்ளுகிறதென்றால்
விலக்கிவிடாதீர்கள் அதை குறுக்கிட்டு.’
<>
Henry J Kaiser
('If your work speaks for itself, don't interrupt.')
 

'கல்வியின் வேர்கள் 
கசப்பானவை, ஆனால்
கனி இனிப்பானது.'
<>
-Aristotle
('The roots of education are bitter,
but the fruit is sweet.')
 

'முள்ளளவு அனுபவம்
முழுக்காடளவு எச்சரிக்கைக்கு சமம்.'
<>
- James Russell Lowell
('One thorn of experience is 
worth a whole wilderness of warning.')
 

'ஓ, எத்தகைய சிக்கலான வலையைப் 
பின்னுகிறார்கள் பெற்றோர்,
தங்கள் பிள்ளைகளை ஒன்றுமறியாதவரென
எண்ணும்போது.' 
<>
- Ogden Nash
('Oh, what a tangled web do parents weave
when they think that their children are naive.')
 

’நாணமுறும் ஒரே பிராணி மனிதனே - அல்லது 
நாணமுறவேண்டிய.’
<>
-Mark Twain
('Man is the only animal that blushes - or needs to.') 

’அவசரப் படுவதற்கு 
அவகாசமில்லை எனக்கு.’
<>
- John Wesley
(’I have no time to be in a hurry.’) 

’ஆனால் ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் வருகிறது, 
மனிதர்களோடு மனிதராக வாழ்ந்திடவா வேண்டாமா 
என்பதைத் தீர்மானிக்க வேண்டிய ஒரு நேரம் 
- அதாவது முட்டாள்களோடு முட்டாளாகவா 
அல்லது தனியே ஒரு முட்டாளாகவா?’ 
<>
- Thornton Wilder
('But there comes a moment in everybody's life when he must
decide whether he'll live among the human beings
or not - a fool among fools or a fool alone.')
 

'அன்பற்ற வாழ்க்கை, 
மலரும் கனியுமற்ற 
மரம் போன்றது.'
<>
-Khalil Gibran
('Life without love is like a tree without
blossoms or fruit.')
 

’மாபெரும் நம்பிக்கைகள் 
மாபெரும் மனிதர்களை 
உருவாக்குகின்றன.’
<>
-Thomas Fuller
(’Great hopes make great men.’)
 

'நாம் உயிரோடு இருக்கும் காலத்தை விட
செத்துப்போய் இருக்கும் காலம் அதிகமாயிருக்கும் 
என்று காட்டுகின்றன புதிய ஆராய்ச்சிகள்.’ 
<>
-Zig Ziglar
('New research shows that you will be dead
longer than you will be alive.')
 
><><

Friday, May 4, 2018

அவள் - (கவிதைகள்)

481
அருகே அருகே வருகிறாய்...
எங்கோ எங்கோ போகிறேன்!
><><

482
என்ன சாப்பிட்டேன்?
நினைவில்லை
என்ன பேசினோம்?
ஒவ்வொரு வார்த்தையும்.

483
நினைந்துன்னை
தொடர்ந்து தும்ம வைத்து
மறந்திடாமலென்னை 
நினைக்கவும் வைத்தேன்.

484.

அது வெறும் பனை வெல்லம்
நீயோ என் கற்பனை வெல்லம்!

485
அழகிழந்து போனதென் இதயம் உன்
அளவிழந்த அன்பின் முன்.

486
ஹரிதாஸ் படம்
மூணு வருஷம் ஓடியதாம்.
என் மனசில் 
எத்தனையோ வருஷமாக
உன் படம்..

487
கொட்டிக் கிடக்கின்றன
உன்னைச் சுற்றிலும்
ஆச்சரியக் குறிகள்!!!

488
தினமும் புதிதாய்ப் பிறக்கிறாய்
என் இதயத்தில்.

489
தரிசிக்க, வேண்டும்
தினம் ஒரு பறவை
தினம் ஒரு மலர்
தின்மும் நீ.

490.
உன் பேரைச் சொன்னதும் 
பூங்காவின் புஷ்பங்கள் 
ஒதுங்கி வழிகாட்டின
உன் இடத்துக்கு.
><><