அன்புடன் ஒரு நிமிடம் - 122
”நீங்க வேணா பாருங்களேன்!” என்றாள் ஜனனி.
”அதெப்படி நடக்கும்?” வாசு ஆச்சரியத்துடன்.
”பரசுவிடம் கேட்டுட்டியா, எதுக்கும் ஒரு தடவைக்கு ரெண்டுதடவை சொல்லி சம்மதம் வாங்கிடு இப்பவே. இல்லேன்னா அங்கே வந்து கத்தப் போறான் அதெல்லாம் முடியாதுன்னு...”
”அதெல்லாம் என் வேலை, நான் பார்த்துக்கறேன்.”
இவருக்கு சுத்தமாக நம்பிக்கையில்லை. ஜனனிக்கு பாண்டிச்சேரி வரை போய் டாக்டரைப் பார்க்கணும். அவருக்கு நேரமில்லை. ”அதுக்கென்ன பரசு இருக்கானே, அவனை அழைத்துப் போகிறேன்,” என்றாள்.
”ஞாயிறு மட்டும்தான் அவனுக்கு... வருவானாக்கும்?”
”என்னோட மெடிகல் விஷயம்! எப்படி வராமல்?” என்றவள் உடனே அவனை மொபைலில் கூப்பிட்டு கேட்டாள்.
”போய் பார்த்துவிட்டு உடனே வந்திடலாம்டா..”
”சரிம்மா.”
அதற்கு சம்மதித்ததே பெரிசு. இப்ப என்னவென்றால் இவள் இன்னும் மூணு ப்ரோகிராமை அதனோடு அடுக்குகிறாள். அங்கேயிருக்கிற தன் சித்தி வீட்டுக்கு மகனோடு போகணுமாம்; ரொம்ப நாளா தேடிட்டிருந்த நாலு புத்தகங்களை வாங்கணுமாம்; பீச்சுக்குப் போய் கடலை ரசிக்கணுமாம். சரிதான் மொத்த பிளானும் கேன்சலாகப் போகுது! நான் வரலேன்னு பிரதான விஷயத்திலிருந்தே ஒதுங்கப் போறான்! அவர் பயந்தார்.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கிளம்பினார்கள்.
ராத்திரி பத்து மணிபோல திரும்ப வந்தார்கள். பரசு முணுமுணுக்கவில்லை, அலுத்துக் கொள்ளவில்லை.
”எப்படி ஜனனி, எப்படி அத்தனை வேலைக்கும் சம்மதிச்சு..போகிறபோதே திட்ட ஆரம்பித்திருப்பானே?” அவளிடம் தனியே கேட்டார்.
”நான் சொன்னால் தானே?”
ஆச்சரியமானார்.
”முதல்ல சொல்லவேயில்லையா? அது இன்னும் கஷ்டமாச்சே...”
”அதனால தான் கஷ்டமாகலே. டாக்டர் விஷயம் முடிஞ்சதும் சொன்னேன், பக்கத்தில உன் பாட்டி வீடு இருக்கு, நம்மை அவங்க பார்த்து வருஷமாச்சு... போனால் சந்தோஷப்படுவாள் என்றேன். அதுக்கென்ன போகலாம்னு சொன்னான். பாட்டி வீடு இத்தனை ஜாலியா இருக்கும்னு அவன் நினைக்கலே. அங்கே அவனுக்கு போரடிக்கலே. அங்கிருந்து வந்தபோது எனக்கு ரொம்ப நாளா கிடைக்காமலிருந்த புக்ஸ் பத்தி சொன்னேன். இங்கே பார்க்க நினைக்கிறியான்னான். உனக்கு ஒண்ணும் கஷ்டமில்லையேன்னு கேட்டேன். பரவாயில்லே, ரொம்ப நாளா தேடறே இல்லையான்னு வந்தான். அப்புறம் புக்ஸ் வாங்கி முடிச்சபின் இவ்வளவுதூரம் வந்துட்டோம், பீச்சில் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாம்னு தோணுதுன்னேன். உனக்கு கஷ்டமில்லேன்னா... சரி வந்து தொலைன்னு சிரிச்சிட்டே அழைச்சிட்டுப் போனான்.”
“நல்ல வழிதான். முதலிலேயே சொன்னால் அவனுக்கு மலைப்பா இருக்கும். பெரிய விஷயமா தெரியும். போய்விட்டு ஒவ்வொரு விஷயமா பார்த்துப் பார்த்து சொல்லும்போது அவனுக்கு கஷ்டமாத் தெரியாது....”
”அப்படி மட்டும் நினைச்சு இதை செய்யலே நான். அங்கே வந்து கேட்கிறப்ப அவன் சம்மதிக்கலேன்னா அதை ஏத்துக்கவும் தயாராக இருந்துகொண்டுதான் இப்படி செய்தேன். அதுதானே நியாயமும் கூட?”
“நிச்சயமா.'
><><><
( 'அமுதம்' ஆகஸ்ட் 2015 இதழில் வெளியானது )