Wednesday, November 9, 2016

முதல் தேவை.. (நிமிடக்கதை)


அன்புடன் ஒரு நிமிடம் - 109

"நாளைக்கு லீவு சொல்லிரு," என்றான் வினோத் தியாகுவிடம் போனில்.
என்ன விஷயம் என்று  மறு நாள் அவனிடம் சொன்னான். "காரை மாத்திடலாம்னு... பெரிய கார் எடுக்கலாம்னு இருக்கேன். இந்தா பிராச்சர்ஸ்.  செலெக்ட் பண்ணிரலாம் எதுன்னு...” நாலைந்து பிரம்மாண்டமான ரகங்கள் அதில் வித விதமாக...
கொஞ்ச நேரம் ஒவ்வொன்றாகப் பார்த்து ஒன்றை தேர்ந்தெடுத்தார்கள்.
”ஆமா, பணம் எல்லாம் ரெடி பண்ணிட்டியாக்கும்?’
”ஒ! மாடியில விசாலமா ஒரு ரூம் கட்டணும்னு வெச்சிருந்தேன், அதை அப்புறம் பார்த்துக்கலாம்னு... என்னைச் சுத்தி எல்லாரும் அது இதுன்னு அமர்க்களப் படுத்தறாங்க. நாங்க எத்தனை நாளைக்குத்தான் இந்த சின்ன காரையே...”
”ரைட். வாங்கிட வேண்டியதுதான். ஆனா ஒரே ஒரு விஷயம் எனக்கு உதைக்குது. போன வாரம் சொல்லிட்டிருந்தியே ஆபீசில ஏதோ டெஸ்டுக்கு படிக்கணும்னு... அப்புறம் பையன் படிப்பில கூடவே இருந்து கொஞ்சம் கவனம் செலுத்தணும்னு... அது ஞாபகம் வந்தது.”
”அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?”
”ஒண்ணே ஒண்ணுதான். கார் வந்து நின்னிரும் வீட்டில. அடுத்த அஞ்சு வருஷத்தில அதை நீ எத்தனை முறை உபயோகிப்பேங்கிறதுதான்...  சொல்லேன்.”
இது என்ன திடீர்னு ஒரு கேள்வியைத் தூக்கிப் போடறான் இவன்! யோசித்தான் வினோத். “டெஸ்டு, பையன் படிப்புன்னு இருக்கிறதால அடுத்த நாலைஞ்சு வருஷத்தில அதை எடுத்திட்டு டூர் போகிறது கம்மியாத்தானிருக்கும். ரொம்ப எல்லாம் உபயோகிக்க முடியாதுதான்.”
”அதைத்தான் சொல்ல வந்தேன். ஹவ் மச் யு நீட் இட் - அதை வெச்சு தீர்மானி. ஆசைப்பட்டதை வாங்கிட்டோம்கிற சந்தோஷம் கொஞ்ச நாள் இருக்கும்.  நம்மகிட்டயும் பெரிய கார் இருக்குங்கிற திருப்தி இன்னும் கொஞ்ச நாளைக்கு. அதுக்கப்புறம்? உபயோகிக்கிறதைப் பொறுத்துத்தானே திருப்தியும் சந்தோஷமும்? யோசி”
யோசித்தான். சரிதான்..
”அதே சமயம் அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் இதை வாங்கினால் உன் தேவைகள் அப்ப அதிகமா இருக்கலாம். அந்த அளவுக்கு இதை உபயோகிக்கலாம். என்ன நான் சொல்றது?” 
மௌனமாக தலையாட்டினான். 
”பேசாமல் அந்த மாடி அறையைக் கட்டு. இப்ப அமைதியா தனிமையா உட்கார்ந்து டெஸ்டுக்கு படிக்கவும் சரி, பையனுக்கு உதவியா பக்கத்தில அமர்த்தி சொல்லிக் கொடுக்கவும் சரி, அட்டகாசமா உபயோகப்படும்!”
ரைட் என்று சிரித்தான் வினோத்.
('அமுதம்’ ஏப்-2015 இதழில் வெளியானது)

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

ராமலக்ஷ்மி said...

எதார்த்தத்தை எடுத்துரைத்து முடிவெடுக்க வைத்த விதம் அருமை.

கோமதி அரசு said...

நல்ல யோசனை.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல யதார்த்தமான எண்ணத்தை எடுத்துரைக்கும் விதத்தில் கதை அருமை சார்

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!