அன்புடன் ஒரு நிமிடம் - 110
”நீ இந்த ரூமிலேயே படுத்துக்க. அதோ அந்தக் கட்டில்.” என்றார் சாத்வீகன்.
தலையாட்டினான் சிவா. அவரது நண்பரின் பேரன். அவருக்கு வெளியூரில் ஒரு வேலை. பத்து நாளைக்கு அவனை நண்பரின் வீட்டில் விட்டுச் சென்றார்.
”தாத்தா ரொம்ப ஜோவியல். உனக்கு போரே அடிக்காது,” என்று அவனிடமும், ”இந்தப் பயல் சுத்த சோம்பேறி, கொஞ்சம் நீதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்,” என்று இவரிடம் தனியாகவும் சொல்லிப் போனார்.
மறு நாள் காலை எட்டு முப்பது. அப்போதுதான் எழுந்துவந்தான் சிவா. உடனே சாத்வீகன் வந்து அவனின் படுக்கை விரிப்பை மடிப்பதைப் பார்த்தான். அவரின் படுக்கை விரிப்பு ஏற்கெனவே அழகாய் இரண்டாக மடித்து வைக்கப் பட்டிருந்தது.
”தாத்தா, இப்படிக் கொடுங்க. நானே மடிச்சு...”
”இல்லேப்பா, இது கஷ்டம்..”
”என்ன கஷ்டம்? நான் பண்றேனே... நான் தூங்கிய ஷீட்டை நான்தானே மடிக்கணும்?'
"இல்லேப்பா, இதை நான் எப்படி மடிப்பேன்னா.. வாரத்தில ஏழு நாள் இல்லையா, முதல் நாள் இரண்டா மடிப்பேன். மறு நாள் அதையும் இரண்டாக, அதாவது மூணு முறை மடிப்பேன். அடுத்த நாள் நாலு. இப்படி ஏழாம் நாள் ஏழு மடிப்பு வரும்.”
”அப்படியா, சரி, நானும் அப்படியே மடிச்சிடறேன்,” என்றான்.
ஆறாவது நாளன்று அவனால அதற்கு மேல் அழுத்தி மடிக்க முடியாமல் திணறுவதைப் பார்த்த அவர், ”என்னப்பா கஷ்டமா இருக்கா?” அதே நேரம் அவரது ஷீட் துளி பிசிறு இல்லாமல் மடிக்கப்பட்டு கம்பீரமாக வீற்றிருந்தது.
”ஆமா கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.’
அதை வாங்கி இன்னும் இலகுவாகவும் லாவகமாகவும் மடித்துக் காட்டினார். ”முதல் நாள் ஜஸ்ட் ரெண்டாக மடிக்கும்போதே நான் அந்த மடிப்பை நல்ல அழுத்தமாக மடித்து அந்த இடத்தை நல்ல நீவிக் கொடுத்து... இப்படி ஒவ்வொரு நாளும் அந்த ஃபோல்டை அழுத்தமாக செய்வதால் கடைசிவரை எனக்கு எளிதாய் இருக்கிறது. வாழ்க்கையில் நமக்கு வயது ஏற ஏற பொறுப்பு அதிகரிச்சுட்டே போகும்.ரெண்டாக மடிக்கும் காலத்திலிருந்து ஏழாக மடிக்கும் காலம் வரும்.அப்போது நாம் கஷ்டத்தைக் கண்டு துவளாமல் இருக்க ரெண்டாக மடிக்கும்போதே அதை நன்றாக மடிக்க பழகிக்கொண்டு விடணும். வாழ்க்கையில் பொறுப்பு அதிகரித்துக் கொண்டே போகிறதால, நாம் பொறுப்பை ஏற்க, எல்லா தளத்திலும் எல்லா விதத்திலும் பழகிக்கொள்வது நல்லதுதானே?”.
அவன் அப்படியே யோசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தால் அந்த கருத்தை நல்லவே உள்வாங்கிக் கொண்டுவிட்டான் என்றே தோன்றியது இவருக்கு. மறுவாரம் அவனது தாத்தா நன்றி சொல்லியபோது அது நிச்சயமானது.
(’அமுதம்’ ஏப்.2015 இதழில் வெளியானது)
3 comments:
நல்ல பகிர்வு.
அருமையான அறிவுரை! நல்லதொரு கதை! நன்றி!
அருமையான சிந்தனை...
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!