அன்புடன் ஒரு நிமிடம் - 107
ஒரு முறை. இரு முறை. இதோ பதினெட்டு…
ஊஹூம், கார் ஸ்டார்ட் ஆகிற வழியைக் காணோம்!
உதட்டைப் பிதுக்கிக் கொண்டு கௌதம். பார்த்துக்கொண்டு எல்லாரும். சாத்வீகனும்.
எல்லாருமாக சின்னதா ஒரு பயணம், பக்கத்து ஊர் முருகன் கோவிலுக்கு கிளம்புகையில் கார் மக்கர்.
அப்புறம் மெக்கானிக்கை வரவழைத்து ஒருவழியாக கார் ஸ்டார்ட் ஆக ரெண்டு மணி நேரம் ஆகிவிட்டது.
"பேட்டரி டவுன் சார். இடையிடையே வண்டியை ஸ்டார்ட் பண்ணிவிட்டிருந்தா இப்படி ஆகியிருக்காது,” என்று சொல்லிவிட்டுப் போனார்.
”அஞ்சு நிமிஷம் தானே ஆகும், இதுகூட முடியலேன்னா நமக்கே கொஞ்சம்...” மெல்ல சொன்னார் இவர்.
’ஆமாப்பா, வெட்கமாத்தான் இருக்கு. இனிமேல் மறக்காம இதை ரெகுலரா பண்ணிடணும்.”
மத்தியானம். டயரி எழுதிக் கொண்டிருந்த கௌதமிடம் வந்தார் சாத்வீகன். ”தினமும் தவறாம எழுதிடுவே போலிருக்கே?”
”ஆமா. எதை மறந்தாலும்!’
”அப்படியா, என்னென்ன எழுதுவே?”
”அன்றைக்கு நடந்த முக்கியமான நிகழ்வுகள், சந்தித்த நபர்கள், படித்த நல்ல விஷயம் இப்படி..”
”திரும்ப எடுத்து படிப்பதுண்டா?”
”அடிக்கடி.”
”நல்ல பழக்கம்..” என்று போய்விட்டார்.
மறு நாள்.
அதேபோல டயரி எழுதும்போது இவர் வந்தார்.
”பர்சனல்தான், இருந்தாலும் நேத்திக்கு நீ என்னென்ன எழுதினேன்னு தெரிஞ்சுக்க ஒரு ஆசை. சொல்லலாமில்லையோ?”
”அதுக்கென்னப்பா… ” ஒவ்வொன்றாக படித்தார் கௌதம்.
”எல்லா முக்கியமான, ருசிகரமான, நல்ல விஷயமும் எழுதியிருக்கே… ஆனா நேற்று அந்த கார் ஸ்டார்ட் ஆகாதது… அடிக்கடி ஸ்டார்ட் பண்ணி வைக்காததால பேட்டரி பாதித்தது… பாடம் கற்றுக்கொண்டது... அதை எழுதலியே?”
”ஆமா எழுதலே. அது .. அது...”
”அந்த அனுபவத்தை, அதில தெரிஞ்சுக்கிட்டதை எழுதியிருக்கணும். அப்படி போன தடவை இதே விஷயம் நடந்தப்ப அதை உன் டயரியில் எழுதியிருந்தால் நேற்று அப்படி நடந்திருக்காது இல்லையா? நமக்கு நிறையவே அனுபவங்கள் கிடைக்குது. அதில் சில அருமையான பாடங்களும். ஆனால் அதை நாம டயரியிலோ அல்லது வேறெதிலுமோ எழுதி வெக்கிறதில்லே. அனுபவங்களில் கிடைத்த ரசனைகளை குறித்து வைப்பது எத்தனை நல்ல விஷயமோ அதைவிட நல்ல, முக்கியமான விஷயம் அதில் கிடைத்த பாடங்களை எழுதி வைப்பது!”
”ரைட்டா சொன்னீங்கப்பா.”
(’அமுதம்’ மார்ச் 2015 இதழில் வெளியானது)
6 comments:
நல்ல சிந்தனை. அருமை சார்.
உண்மை
அருமை
அருமையான அழகான யதார்த்தமான கருத்தைச் சொல்லும் கதை!! வாழ்த்துகள் பாராட்டுகள்
கே பி ஜனா அவர்களுக்கு,
நீங்கள் நாகர்கோவில் என்பதை உங்கள் தளத்திலிருந்து அறிந்து கொண்டேன். நானும் நாகர்கோவில்தான். பிறந்து வளர்ந்து படித்தது எல்லாமே அங்குதான். அருகில் இருக்கும் கிராமத்திலிருந்து....இப்போது சென்னையில்.
கீதா
அருமை! நல்லதொரு பாடம்! வாழ்த்துக்கள்!
நல்லதொரு பாடம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!