Wednesday, February 17, 2016

யோசிக்க வேண்டியது... (நிமிடக் கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 100.

”ஒரு பெரிய பிரசினை! நல்ல வேளை, வராமலே போய்விட்டது,” என்றபடியே வந்தார் சாமிநாதன்.

”என்ன அது?” வினவினார் சாத்வீகன்.

”என்னோடமுன்னாள் மேலதிகாரி, ராமநாதன்னு பேர். அவரு நேத்து நம்ம ஊரில ஒரு கல்யாணத்துக்கு வர்றதா போன வாரம் போன் பண்ணியிருந்தார்.   கோயம்பத்தூர்லேயிருந்து பஸ்ல வரேன்னாரு. நானும் ரொம்ப சந்தோஷமா அவர்ட்ட நான் பஸ் ஸ்டாண்ட் வந்து உங்களை பிக் அப் பண்ணி வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திடறேன்னு சொன்னேன். காலையில  நாலு மணிக்கு வரும்,  பஸ்  ஊரை நெருங்கறப்ப  நான் போன் பண்ணறேன், நீங்க புறப்பட்டு வந்தால் போதும், வீணாக முன்னாடியே வந்து காத்திருக்க வேணாமேன்னாரு. அப்படியே செஞ்சுடறேன்னேன். என்ன ஆச்சு தெரியுமா?”

”என்ன ஆச்சு?”

”மறக்காம செல் போனை கிட்ட வெச்சிட்டுதான் படுத்தேன். போன் வரலே. நான் முழிச்சு பார்க்கிறப்ப மணி அஞ்சு. போனை எடுத்து பார்த்தா சார்ஜ் சுத்தமா இல்லே. ஐயோ அவர் கூப்பிட்டிருப்பாரே, வேணுமின்னே  செல்லை நான் எடுக்கலேன்னோ, ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சிருந்தேன்னோ நினைச்சிருப்பாரேன்னு பதறிப் போச்சு.  உடனே அதுக்கு உயிரூட்டி அவரை செல்லில் கூப்பிட்டால் பஸ் லேட், அவர் இன்னும் கூப்பிடலே, அப்பதான் ஊரை நெருங்கிட்டிருக்கு!  அப்பாடான்னு ஆச்சு. பஸ் மட்டும் லேட் ஆகலேன்னா  எத்தனை ஈசியா எத்தனை பெரிய மிஸண்டர்ஸ்டாண்டிங் ஆகியிருக்கும்! அவர் என்னிடம் கேட்கவும் மாட்டார். நான் சொன்னால் அதை நம்பவும் மாட்டார்.”

அதை அப்படியே ஆமோதித்தார் சாத்வீகன்.

இவரும் விடாமல் அதிலிருந்து தப்பித்தது பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார் ரொம்ப உற்சாகமாக. "பெரிய இக்கட்டிலேர்ந்து காப்பாத்தினதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லணும்.”

”கண்டிப்பா.” என்றார் சாத்வீகன். “இன்னொரு விஷயமும் செய்யலாமே  நீங்க?  அவர் மட்டும் நாலு மணிக்கு போன் பண்ணியிருந்தால் செல் சார்ஜ் இல்லாம இருந்தது தெரியாமல், உங்களைத் தப்பாய்ப் புரிஞ்சிட்டிருப்பாருன்னு சொன்னீங்கல்ல? இப்ப, இதே மாதிரி சந்தர்ப்பங்களில் நாமும் இப்படி சிலரை தப்பா நினச்சிட்டிருக்கலாமோ? அதைப் பத்தி கவனமா உடனே யோசிச்சு பார்க்கணும் இல்லையா? பஸ் லேட்டா வந்தது மாதிரி எல்லா சந்தர்ப்பங்களிலேயும் ஏதேனும் நடந்து அது தவிர்க்கப் பட்டிருக்க முடியாது இல்லையா?”

”ஆமாம் ஆமாம்,” என்றவர் யோசிக்க ஆரம்பித்தார்.
(’அமுதம்’ ஜன.2015 இதழில் வெளியானது)

Friday, February 12, 2016

நல்லதா நாலு வார்த்தை... 65


'நாம் கட்டும் சுவர்கள் நிறைய; 
பாலங்களோ போதா.'
<>
- Isaac Newton
('We build too many walls and not enough bridges.')


’வெற்றி பெற்றனரா தோல்வியுற்றனரா 
ஒரு பெற்றோர் என்பதை
என்ன நடக்கிறது பேரப் பிள்ளைகளுக்கு 
என்பதறிந்த பின்னரே சொல்ல முடியும் 
என்றொருவர் சொல்லக் கேட்டேன்.’
<>
- Richard Strout
(’I once heard somebody say that you can't tell whether a parent has
been a success or failure till you find out what happens to the grand children.’)



'ஆனந்தத்தின் முதல் செய்முறை: 
கடந்த காலத்தின் மேல் 
அளவற்ற சிந்தனையைத் தவிர்க்கவும்.'
<>
- Andre Maurois
('The first recipe for happiness is : avoid too lengthy meditation on the past.')


'வளைய முடிகிற இதயங்கள் 
வரம் பெற்றவை; 
ஒரு நாளும் அவை 
ஒடிக்கப்படா.'
<>
- Albert Camus
('Blessed are the hearts that can bend; they shall never be broken.')


'பத்தாயிரம் நட்சத்திரங்களுக்கு
எப்படி நடனமாடக்கூடாது 
என்று சொல்லித் தருவதைவிட
பறவை ஒன்றிடமிருந்து 
பாடுவது எப்படி என்று கற்றுக் கொள்வேன்.'
<>
- E. E. Cummings
( 'I'd rather learn from one bird how to sing than teach
10000 stars how not to dance.')


'கல்யாணம் என்பது நம்
கடைசி மிகச் சிறந்த
வளர்வதற்கான வாய்ப்பு.'
<>
- Joseph Barth
('Marriage is our last, best chance to grow up.')


'உள்ளுக்குள் நாம் சாதிப்பது
வெளி நிஜத்தை மாற்றிடும்.'
<>
- Plutarch.
('What we achieve inwardly will change outer reality.)

><<>><

Monday, February 8, 2016

அவள் - கவிதைகள்

253
ஒளிந்திருக்கிறது உன் 
பார்வையில் ஒரு புன்னகை,
புன்னகையில் ஒரு பார்வை.

254
என்னை நானாக 
வைத்திருக்க 
எனக்கென அமைந்தவள் நீ.

255
வாழ்க்கைத் திரையின்
எல்லா ஃப்ரேமிலும்
நீ இருக்கிறாய்.

256
உன் பின்னாலேயே 
சென்ற என் பார்வை
வரவேயில்லை திரும்ப என்
கண்ணுக்கு.


257
என்னமோ இருக்குது
அந்தக் கண்களில்,
இன்னும் கண்டுபிடிக்க
முடியவில்லை.

258
தவமிருக்கிறேன்
என் மேல் விழுந்த உன் பார்வையை
தக்கவைத்துக் கொள்ள.

259
எத்தனையோ அற்புதங்கள்
என்னைச் சுற்றி
எல்லாவற்றுக்கும் மேலாக
நீ.


><><><

Saturday, February 6, 2016

ஆற அமர...(நிமிடக் கதை)


அன்புடன் ஒரு நிமிடம் - 99

ஒரு ஞாயிறு மாலை. கிஷோர் வீட்டில் நுழைந்த ராகவ் முதலில் கவனித்தது அதைத்தான். 
மிகமிக உற்சாகமாக இருந்தான் அவன். பாடிக்கொண்டே லேப்டாப்பில் டைப் அடித்தான் ஆடிக்கொண்டே நடந்தான்.
“யாழினி?”
“கோவிலுக்கு.”
”என்ன உற்சாகம் பொங்கி வழியுது?”
”பொங்காதா பின்னே? கழிஞ்ச நாலு  ஞாயித்துகிழமையும் ஏதாவது ஒரு இஷ்யூ வந்து எங்களுக்குள்ளே ஒரே சண்டை.”
”ஓஹோ?”
”போன வாரம் ஒரு கல்யாணத்துக்கு புறப்பட்டோம். அவ ஃப்ரண்ட் தங்கைக்கு.  நான் புறப்பட கொஞ்சம் லேட். உடனே அவள் சினேகிதிகள் விஷயத்தில் எப்பவும் நான் அவளை மதிக்காமல் இருக்கிறேன்னு ஒரு பிடி பிடிச்சாளே பார்க்கணும். அன்னிக்கு முழுதும் அப்புறம் சண்டைதான்  நடந்தது. முந்தின வாரம் என் மானேஜர் வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு பரிசளிக்க ஒரு வெள்ளி சிமிழ் வாங்கிட்டு வந்தேன், அதைப் பார்த்திட்டு  நான் எப்பவும் ஊதாரித்தனமான செலவு செய்யறதைப் பத்தி அவள் அடுக்க, அவளோட வீண் செலவுகளை நான் சொல்ல, மணிக்கணக்கா விவாதம் ஒரு பட்டி மன்ற ரேஞ்சுக்கு... அதுக்கு முந்தின வாரம் டிராயிங் வகுப்பில் சேர்த்து விடச் சொன்னாள். உனக்கு இப்ப இருக்கிற நேர நெருக்கடியில் இது தேவையா இப்பன்னேன். அவ்வளவுதான். அவள் சொல்லுகிற எந்த விஷயத்தையுமே நான் பெரிசா எடுத்துக்கிறதில்லைங்கிறதைப் பத்தி பெருசா ஒரு ஆர்க்யுமெண்ட் அன்னிக்கு பூரா.  அதுக்கு முந்தின வாரம் இன்னொரு பிரசினை.. அதில பயங்கர சண்டை...”
”ஒஹோ?”
 ”ஆக இந்த வாரம்தான் எந்த இஷ்யூவும்இல்லே. அதனால சண்டை வர சான்ஸ் இல்லாம போச்சு. அதைக் கொண்டாடறேன் அதான் இந்த ஜாலி. நானும் சரி அவளும் சரி ஜாலியான மற்ற விஷயங்களைப் பத்தி பேசிட்டு இன்னிக்கு பொழுதை இண்ட்ரஸ்டிங்கா கழிக்கறோம்.
இதைவிட உபயோகமா இன்றைய பொழுதைக் கழிக்க முடியுமா சொல்லுங்க, பார்க்கலாம்.”
”முடியும்,” என்றார் அழுத்தமாக.
தொடர்ந்தார்.  ”போன வாரங்களிலும் சரி இந்த வாரமும் சரி எதை செய்யக் கூடாதோ அதையே நீங்க செய்யறீங்க.”
அவரை விசித்திரமாகப் பார்த்தான்
”எப்பவுமே ஒரு பிரசினையில ரெண்டுபேரும் ஈடுபடும்போது அதைப்பற்றிய  இருவர் அபிப்பிராயங்களையும் அழுத்தியோ ஒருத்தர் மற்றவரைக் குற்றம் சொல்லியோ கோதாவில இறங்ககூடாது. அந்த சமயத்தில் நம் உணர்வுகள் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. அந்த சமயத்தில் ஒருத்தரை ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிப் போவதும் விட்டுக் கொடுப்பதும்தான் முக்கியம். அதுக்குத்தான் முயலணும்.” 
”அது சரிதான், ஆனா இன்னிக்கு என்ன?”
”இன்னிக்கு, அதாவது எந்த பிரசினையும் கிளம்பாத இந்த மாதிரி நாளில்தான் நீங்க ரெண்டு பேரும் ஆர அமர உட்கார்ந்து  நீங்க ஒருத்தரைப் பத்தி மற்றவர் சொல்லும் அந்த மனக் குறைகளை எடுத்து நிதானமாக அலசிப் பார்க்கவேண்டும். ஏன்னா இப்ப உணர்ச்சி வசப்பட சான்ஸ் கொஞ்சமும்  இல்லை. அவங்கவங்க தரப்பை எடுத்து சொல்லி அமைதியாக பேசலாம்,  வாதாடலாம். பொறுமையா இருவரும் கேட்டு முடிவுகளை எடுக்கலாம்.  அவளோட செலவுகள் நியாயமானவைன்னு அவள் நிரூபிக்கலாம். உனக்கு அதில் திருப்தி ஏற்பட்டு நெடு நாள் தப்பபிப்பிராயம் நீங்கலாம். அவள் சினேகிதிகள் விஷயங்களில் நீ இன்னும் கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்வதாக தீர்மானிப்பதில் அவளுக்கொரு நெடு நாள் குறை தீரலாம்.”
”இப்படி ஒண்ணு இருக்கா?’ யோசித்தான்.
(’அமுதம்’ ஜனவரி 2015 இதழில் வெளியானது)

Thursday, February 4, 2016

நல்லதா நாலு வார்த்தை... 64



வீ ழான் ஒருபோதும் எனில் மனிதன் 
தெய்வம் ஆகிவிடுவான்; 
விழைவிலான் ஒருபோதும் எனில் அவன்
விலங்கு ஆகிவிடுவான்.’
<>
- Mackenzie King
(’Were man never to fall, he would be a God;
were he never to aspire, he would be a brute.’)


’என்ன இதெல்லாம் 
என்றறிந்து கொள்ளுமளவுக்கு
நீண்டதாக இல்லை வாழ்நாள்.’
<>
- Doug Larson
(”A lifetime isn't nearly long enough to figure out what it's all about.’)


உங்களை நம்புங்கள்.
தெரியுமென நீங்கள் நினைப்பதைவிட அதிகம் 
தெரியும் உங்களுக்கு.’
<>
- Benjamin Spock
(”Trust yourself, you know more than you think you do.’)


'அன்பின்றி வாழ்ந்திருக்கிறார்கள் 
ஆயிரமாயிரம் பேர், 
ஆனால் ஆருமில்லை நீரின்றி.’
<>
- W.H.Auden
('Thousands have lived without love, not one without water,')


'சும்மா வாழ்வது மட்டும் போதாது. ..
கதிரொளியும் சுதந்திரமும் 
சிறு மலரொன்றும் வேண்டும் 
ஒரு மனிதனுக்கு.'
<>
- Hans Christian Anderson
('Just living is not enough... one must have sunshine, freedom and a little flower.')


'இரக்கமும் பரிவும் உலகில்
எத்தனை குறைவு என்பதை
துன்பத்தில் வீழ்ந்திட்டபோதே 
புரிந்துகொள்கிறான் ஒருவன்.'
<>
-Nellie Bly
('It is only after one is in trouble that one realizes
how little sympathy and kindness there are in the world.')


’ஓர் உணர்வு தனக்கான எண்ணத்தையும் 
அந்த எண்ணம் வார்த்தைகளையும் 
கண்டு கொள்வதே கவிதை.’
<>
- Robert Frost
(”Poetry is when an emotion has found its thought
and the thought has found words.’)

><><><

Wednesday, February 3, 2016

அவள் - (கவிதைகள்)

246
உறைந்து ஜீரோ டிகிரிக்குப் 
போய்விடத் தெரிந்தேன்
இப்படியா குளிர வைப்பது 
உன் பார்வை?

247
தேடப் பிடிக்கிறது எனக்கு
தேடவைக்கப் பிடிக்கிறது உனக்கு.

248
அளித்திடும் உன் ஒரு புன்னகை
அகன்றிடும் அந்நாளின் தனிமை.

249
முன்னூறு கவிதை 
கேட்கிறது உன்
புன்னகை மட்டுமே.

250
தலை சாய்த்து நீ
புன்னகைக்கையில்
அலை சாய்ந்து
இழுத்துச்செல்லும்
மணல் போல நான்.

251
ஒரு நீ.
இந்த உலகம்.

252
சற்று முன் உன்னைப் பார்த்ததால்
வானவில் வண்ணமற்று...

><><><