அன்புடன் ஒரு நிமிடம் - 100.
”ஒரு பெரிய பிரசினை! நல்ல வேளை, வராமலே போய்விட்டது,” என்றபடியே வந்தார் சாமிநாதன்.
”என்ன அது?” வினவினார் சாத்வீகன்.
”என்னோடமுன்னாள் மேலதிகாரி, ராமநாதன்னு பேர். அவரு நேத்து நம்ம ஊரில ஒரு கல்யாணத்துக்கு வர்றதா போன வாரம் போன் பண்ணியிருந்தார். கோயம்பத்தூர்லேயிருந்து பஸ்ல வரேன்னாரு. நானும் ரொம்ப சந்தோஷமா அவர்ட்ட நான் பஸ் ஸ்டாண்ட் வந்து உங்களை பிக் அப் பண்ணி வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திடறேன்னு சொன்னேன். காலையில நாலு மணிக்கு வரும், பஸ் ஊரை நெருங்கறப்ப நான் போன் பண்ணறேன், நீங்க புறப்பட்டு வந்தால் போதும், வீணாக முன்னாடியே வந்து காத்திருக்க வேணாமேன்னாரு. அப்படியே செஞ்சுடறேன்னேன். என்ன ஆச்சு தெரியுமா?”
”என்ன ஆச்சு?”
”மறக்காம செல் போனை கிட்ட வெச்சிட்டுதான் படுத்தேன். போன் வரலே. நான் முழிச்சு பார்க்கிறப்ப மணி அஞ்சு. போனை எடுத்து பார்த்தா சார்ஜ் சுத்தமா இல்லே. ஐயோ அவர் கூப்பிட்டிருப்பாரே, வேணுமின்னே செல்லை நான் எடுக்கலேன்னோ, ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சிருந்தேன்னோ நினைச்சிருப்பாரேன்னு பதறிப் போச்சு. உடனே அதுக்கு உயிரூட்டி அவரை செல்லில் கூப்பிட்டால் பஸ் லேட், அவர் இன்னும் கூப்பிடலே, அப்பதான் ஊரை நெருங்கிட்டிருக்கு! அப்பாடான்னு ஆச்சு. பஸ் மட்டும் லேட் ஆகலேன்னா எத்தனை ஈசியா எத்தனை பெரிய மிஸண்டர்ஸ்டாண்டிங் ஆகியிருக்கும்! அவர் என்னிடம் கேட்கவும் மாட்டார். நான் சொன்னால் அதை நம்பவும் மாட்டார்.”
அதை அப்படியே ஆமோதித்தார் சாத்வீகன்.
இவரும் விடாமல் அதிலிருந்து தப்பித்தது பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார் ரொம்ப உற்சாகமாக. "பெரிய இக்கட்டிலேர்ந்து காப்பாத்தினதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லணும்.”
”கண்டிப்பா.” என்றார் சாத்வீகன். “இன்னொரு விஷயமும் செய்யலாமே நீங்க? அவர் மட்டும் நாலு மணிக்கு போன் பண்ணியிருந்தால் செல் சார்ஜ் இல்லாம இருந்தது தெரியாமல், உங்களைத் தப்பாய்ப் புரிஞ்சிட்டிருப்பாருன்னு சொன்னீங்கல்ல? இப்ப, இதே மாதிரி சந்தர்ப்பங்களில் நாமும் இப்படி சிலரை தப்பா நினச்சிட்டிருக்கலாமோ? அதைப் பத்தி கவனமா உடனே யோசிச்சு பார்க்கணும் இல்லையா? பஸ் லேட்டா வந்தது மாதிரி எல்லா சந்தர்ப்பங்களிலேயும் ஏதேனும் நடந்து அது தவிர்க்கப் பட்டிருக்க முடியாது இல்லையா?”
”ஆமாம் ஆமாம்,” என்றவர் யோசிக்க ஆரம்பித்தார்.
(’அமுதம்’ ஜன.2015 இதழில் வெளியானது)
2 comments:
ஒவ்வொருவரும் தனக்குள் இவ்வாறு யோசித்துப் பார்க்கப் பார்க்கத்தான் பல உண்மைகள் புலப்படக்கூடும். மற்றவரைப்பற்றிய நம் தவறான எண்ணங்கள் மறையவும் கூடும். நல்ல கருத்துள்ள ஆக்கம்.
//(’அமுதம்’ ஜன.2015 இதழில் வெளியானது)//
பாராட்டுகள் + வாழ்த்துகள்.
நல்லதோர் அறிவுரை.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!